கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

ஹஜ்ஜும் ஜிஹாதும்

Loading

[மெல்லினம் வெளியீடாகப் பிரசுரிக்கப்பட்ட ‘மக்கா படுகொலைகள் (1987): பின்னணியும் ஹரமைனின் எதிர்காலமும்’ என்ற நூலின் ‘ஹஜ் பற்றிய குர்ஆனிய கண்ணோட்டம்’ அத்தியாயத்தின் ஒரு பகுதி]

நேர்வழிநின்ற கலீஃபாக்களின் (குலஃபாயே ராஷிதீன்) காலத்திற்குப் பிறகு முஸ்லிம் வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக குர்ஆன் மற்றும் இறைத்தூதரின் வழிமுறையைவிட்டு விலகிச்செல்ல ஆரம்பித்துவிட்டது என்றாலும், கடந்த சுமார் 200 வருடங்களாகத்தான் குஃப்ரு சக்திகள் முஸ்லிம்களை அடிபணிய வைத்துள்ளன.

இறையச்சமில்லா ஆட்சிக்கு எதிரான முதல் எதிர்ப்புப் போராட்டத்தை இஸ்லாத்தின் மாபெரும் வீரத்தியாகியும் இறைத்தூதரின்(ஸல்) பேரருமான இமாம் ஹுசைன் (ரழி) அவர்கள் நிகழ்த்திக்காட்டி உதாரணம் படைத்தார்கள். ஹிஜ்ரி 681ல் இமாம் ஹுசைன் (ரழி) கூஃபாவுக்குக் கிளம்பிச் செல்லுமுன், ஹஜ்ஜுக்காக மதீனாவிலிருந்து மக்கா சென்றார். (எனினும், அதனை அவர் நிறைவு செய்யவில்லை.) அவர் யஸீதின் படைகளுக்கெதிராக நடத்திய போராட்டம், அன்றுமுதல் முஸ்லிம்களுக்கு நிரந்தர முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது.

முஸ்லிம்கள் சமீபகால வரலாற்றில் ஐரோப்பியக் காலனித்துவத்தின் தலைமையிலான குஃப்ரு சக்திகளை எதிர்கொண்டுள்ளனர். ஐரோப்பியர்கள் கொள்ளைக்காகவும் சுரண்டலுக்காகவும் படையெடுப்புகளை நடத்தி முஸ்லிம் பூமிகளுக்கு வந்திறங்கியபோது, முஸ்லிம்கள் வலுவின்றிப் பிரிந்து கிடந்ததைக் கண்டனர். சீர்கெட்ட ஆட்சியாளர்களின் கீழ் இயங்கிய முஸ்லிம் படைகளால் ஐரோப்பியப் பீரங்கிகளுக்கோ, சூழ்ச்சிகளுக்கோ சற்றும் ஈடுகொடுக்க முடியவில்லை. அதற்காக, முஸ்லிம்கள் மேற்கத்தியக் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடவே இல்லை என்று அர்த்தமில்லை. இந்த எதிர்ப்புப் போராட்டம் ஆட்சியாளர்களின் தரப்பிலிருந்து வரவில்லை, அவ்வளவுதான். பெரும்பாலும் மார்க்க அறிஞர்களும் (உலமா) இன்னபிற புரட்சிகர முஸ்லிம்களுமே அதனை முன்னின்று நடத்தினர். காலனியாதிக்கத்துக்கு எதிராக உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பெற்ற சமூகத்தின் எதிர்ப்புப் போராட்டத்தை அணி திரட்டியதிலும், ஒருங்கிணைத்ததிலும் ஹஜ் ஒரு மிக முக்கியப் பங்கு வகித்தது.

இந்தோ-பாகிஸ்தானில் ரேபரேலியைச் சேர்ந்த சையித் அஹ்மது தலைமையேற்று நடத்திய குறுகியகால ஜிஹாது இயக்கம் அசலில், அவர் 1822-23ல் ஹஜ்ஜுக்குச் சென்றுவந்த பிறகே துவக்கப்பட்டது. பிரிட்டிஷ் காலனியவாதிகள், இந்து மற்றும் சீக்கிய நிலப்பற்று வெறியர்கள் ஆகியோரின் கைகளில் சிக்குண்ட இந்திய முஸ்லிம்களினதும், இஸ்லாத்தினதும் அவலநிலை பற்றி சையித் அஹ்மது மக்காவில் வைத்து சகமுஸ்லிம்களோடு கலந்துரையாடியதாக நம்பப்படுகிறது. அவர் ஹஜ்ஜிலிருந்து திரும்பியதும் ஜிஹாது இயக்கத்தை ஒருங்கமைத்தார். அதில் ஷா வலியுல்லாஹ்வின் (இ. 1762) பேரர் ஷா இஸ்மாயீல் போன்ற பிற மேன்மையான ஆளுமைகளும் இணைந்து கொண்டனர். சையித் அஹ்மது, ஷா இஸ்மாயீல் இருவரும் 1831ல் (இன்றைய பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலுள்ள) பாலகோட்டில் சீக்கியருக்கு எதிரானவொரு போரில் வீரமரணம் அடைந்தனர்.

எனினும், சையித் அஹ்மதின் பின்பற்றாளர்கள் பிரிட்டிஷ் காலனியவாதிகளுக்கு எதிராக தங்களது ஜிஹாதைத் தொடர்ந்து நடத்திவந்தனர். 1890 வரையிலும் கூட எல்லைப்புற மாகாணத்தின் பல பகுதிகளில் அவர்களது நடவடிக்கைகள் தொடர்ந்திருந்ததாகத் தகவல்கள் உள்ளன.

சையித் அஹ்மது ஷஹீதின் ஜிஹாது இயக்கத்துக்கு முன்னரே, பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வங்காளத்தில் ஷரீஅத்துல்லாஹ் ஓர் இயக்கத்தைத் துவக்கியிருந்தார். அவரது இயக்கத்திலும் ஹஜ் ஒரு முக்கியப் பங்கு வகித்தது. 1782ல் ஹஜ்ஜுக்குச் சென்ற ஷரீஅத்துல்லாஹ், 1802 வரை மக்காவில் தங்கியிருந்தார். அக்காலகட்டத்தில் அவர் ஷாஃபியீ ஷெய்கு ஒருவரின் சீடரானார். அவர் பிறகு வங்காளத்துக்குத் திரும்பியதும் ஃபறாயிதி இயக்கத்தைத் தோற்றுவித்தார். இந்தியாவிலிருந்து பிரிட்டிஷாரை ஒழித்துக்கட்டுவதே அதன் முக்கியத் தேட்டமாக இருந்தது. ‘ஏனெனில், இந்தியா இனியும் ஒரு தாருல் இஸ்லாம் (இஸ்லாம் கோலோச்சும் பூமி) அல்ல; அது ஒரு தாருல் ஹர்ப் (யுத்த பூமி) நிலைக்கு மாறி விட்டிருந்தது.’

முஸ்லிம்கள் மீது பிரிட்டிஷார் தங்களது அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்குத் துணைபுரிந்து, சந்தேகமின்றி, பிரிட்டிஷ் ஆதரவைப் பெற்றுக்கொண்ட அப்பகுதியின் நிலப்பிரபுக்களை எதிர்த்தும் ஷரீஅத்துல்லாஹ்வின் இயக்கம் செயல்பட்டது. அவரது மரணத்துக்குப் பின், அவருடைய மகன் தாதுமியான் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார். இன்றும்கூட இவ்வியக்கத்தின் பின்பற்றாளர்களை வங்காளத்தின் சில பகுதிகளில் காணலாம்.

பின்பு, இவ்வியக்கங்கள் 1857ல் முதல் விடுதலைப் போராக வளர்ச்சி கண்டன. அது பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான இந்தியக் கலகம் என்று பொருத்தமற்ற வகையில் பெயரிட்டு அழைக்கப்படுகிறது. உண்மையில், ஏராளமான மார்க்க அறிஞர்கள் 1857 கிளர்ச்சியில் பங்கெடுத்தனர். அவர்களில் பலர் ஷா வலியுல்லாஹ், சையித் அஹ்மது, ஷா அப்துல் அஸீஸ், ஷா இஸ்மாயில், ஷரீஅத்துல்லாஹ் ஆகியோரின் வழித்தோன்றல்களும் சீடர்களுமே. 1857 கிளர்ச்சியின் தோல்விக்குப் பிறகு, மௌலானா மஹ்மூதுல் ஹசன் (இ. 1921) பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்திற்காக மக்காவிலிருந்து ஃபத்வா ஒன்றை வேண்டிப்பெற்றார். அவர் மக்காவிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த வழியில் கைதுசெயப்பட்டு, மால்டாவில் பல்லாண்டு காலம் சிறைவைக்கப்பட்டார். இவ்வாறாக மீண்டும், இந்தோ-பாகிஸ்தான் துணைக்கண்டத்தில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராக நடத்தப்பெற்ற போராட்ட இயக்கங்களுக்கு மக்காவும், ஹஜ்ஜும்தான் குவிமையங்களாக விளங்கின.

இத்தகு ஜிஹாது நடவடிக்கைகள், இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தானவை அல்ல. அதேபோல், தங்கள் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு மக்காவையும் ஹஜ்ஜையும் வலியுறுத்தும் வழக்கமும் அவர்களுக்கு மட்டுமே உரிய தனிப்பண்பு அல்ல. காவ்கசஸின் இமாம் ஷாமில், அல்ஜீரியாவைச் சேர்ந்த அமீர் அப்துல் காதிர், லிபியாவின் முஹம்மது இப்னு அலீ சனூசி ஆகியோரும் கூட மக்காவின் பக்கமே மீண்டு, ஹஜ் சமயத்தில் நிகழும் உம்மத்தின் மாபெரும் சம்மேளனத்திலிருந்து பயன்பெற்றனர்.

1827ல் முல்லா முஹம்மது என்பாரின் போதனைகளிலிருந்து ஜிஹாது இயக்கம் ஒன்று தீப்பிழம்பாக உருவெடுத்தது. அது காவ்கசஸில் ஜார் மன்னர்களை எதிர்த்துப் போரிட்டது. இதில், முல்லா முஹம்மதின் மார்க்கப் பாடசாலையில் படித்த இறையியல் மாணவர்கள் இருவர் —காஸி முஹம்மது, ஷாமில்— மிகவும் பிரபலமடைந்தனர். 1828ல் ஷாமில் ஹஜ்ஜுக்கு சென்றார். அங்கே வந்திருந்த, அல்ஜீரியாவைச் சேர்ந்த அமீர் அப்துல் காதிரை அவர் மக்காவில் வைத்துச் சந்தித்தார். இந்த வருங்கால இஸ்லாமிய விடுதலைப் போராட்ட நாயகர்கள் இருவரும் ஹஜ்ஜின்போது மக்காவில் வைத்துத் தங்களது போர்களைத் திட்டமிட்டனர். அப்துல் காதிர் அல்ஜீரியாவில் பிரெஞ்சுக்கு எதிராகவும், இமாம் ஷாமில் காவ்கசஸில் ஜார் மன்னர்களுக்கு எதிராகவும் போராடினர்.

வடஆப்பிரிக்காவில் முஹம்மது இப்னு அலீ சனூசி தலைமையேற்று நடத்திய இயக்கம், உண்மையில் மக்காவில்தான் உருவெடுத்தது. சனூசி வழியமைப்பு என்பதாக பின்னாட்களில் அழைக்கப்பெற்ற அது, அசலில் அஹ்மது இப்னு இத்ரீஸ் (இ. 1837) தோற்றுவித்த இத்ரீஸி வழியமைப்பின் ஒரு கிளையாகவே உருவானது. மொராக்கோவைச் சேர்ந்தவரும் முஹம்மது நபிகளாரின் —அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்!— வழித்தோன்றலுமான இத்ரீஸ், முன்னதாக மக்காவில் குடியேறியிருந்தார். அப்போது அவர் நிறுவிய தரீக்கா முஹம்மதியா சிறிதுகாலம் அசீர் மாகாணத்தில் அரசியல் அதிகாரம் பெற்றுத்திகழ்ந்தது.

இந்தத் தரீக்காவே மூவேறு புதிய இயக்கங்களைப் பெற்றெடுத்தது: றாஷிதியா, அமீர்கானியா மற்றும் சனூசியா. றாஷிதியா தரீக்கா அல்ஜீரியாவின் வட்டத்துக்குள்ளேயே நின்றுவிட்டது. எனினும், அமீர்கானியாவும், சனூசியாவும் பிற பகுதிகளுக்குப் பரவின. அமீர்கானியாவின் செல்வாக்கு சூடானிலும், நூபியாவிலும் பரவிய அதேவேளை, சனூசியாவின் பரவல் பூமத்தியரேகை ஆப்பிரிக்காவிலும், லிபியா மற்றும் எகிப்திலும் முன்னேற்றம் கண்டது.

சனூசியா வழியமைப்பை நிறுவியவர், முஹம்மது இப்னு அலீ அஸ்-ஸனூசி (இ. 1859). அவர் அல்ஜீரியாவைச் சேர்ந்தவர். எனினும் மக்காவில் குடியேறி அங்கு அஹ்மது இப்னு இத்ரீஸின் சீடரானார். சனூசியா வழியமைப்பு ஒரு செயல்வீரர்கள் இயக்கம். அது சூஃபித்துவத் தொடக்கம் கொண்டிருந்தபோதிலும், தற்காப்புக் கலையை பெரிதும் வலியுறுத்தியது; மேலும், விவசாயத்திலும் வணிகத்திலும் ஈடுபடுமாறும் தனது பின்பற்றாளர்களை அது ஊக்குவித்தது. இந்த சனூசியா வழியமைப்புதான் பிற்காலத்தில் பூமத்திய ரேகை ஆப்பிரிக்காவில் பிரெஞ்சு காலனியாதிக்கத்தையும், லிபியாவில் இத்தாலியரையும், எகிப்தில் பிரிட்டிஷாரையும் எதிர்த்துப் போர்செய்தது.

இவ்வனைத்து இயக்கங்களுக்கும் இடையில் பல பொதுவான பண்புகளைக் காணமுடிகிறது: அவை அனைத்தும் வரலாற்றில் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் தோன்றியவை. அவை அனைத்துமே ஹஜ்ஜுடனும் மக்காவுடனும் தொடர்பு கொண்டிருந்தவை. அவை தோன்றிய காலகட்டம், இஸ்லாமியப் நிலங்கள்மீது காலனியாதிக்கத் தாக்குதல் தொடுக்கப்பட்ட காலகட்டமாக இருந்தது. அதற்கு முன்பிருந்தே முஸ்லிம்களின் ஆட்சியதிகாரம் வீழ்ச்சியுறத் துவங்கியிருந்த போதிலும், இவ்வாறு குஃப்ரு சக்திகள் ஒருசேர முஸ்லிம்கள் மீது படையெடுத்து அவர்களை அடிபணியவைத்து, அவர்களின் பூமிகளை ஆக்கிரமித்திருக்கும் சூழலை முஸ்லிம்கள் அதுவரை சந்தித்ததில்லை.

சலாஹுத்தீன் பாலஸ்தீனைச் சுற்றியிருந்த அரசுகளின் ஆட்சியாளர்களை ‘கவனித்த’ பிறகே, சிலுவைப் படையினரின் ஜெரூசல ஆக்கிரமிப்பை (1099-1187) அகற்றினார். இவ்வாட்சியாளர்கள் எல்லாம் தங்களுக்கிடையே நிலவிய சில்லறைச் சண்டை சச்சரவுகளுக்காக சிலுவைப் படையினரோடு சேர்ந்துகொண்டு, ஒருவருக்கெதிராக ஒருவர் சதிசெய்வதில் ஈடுபட்டு, முஸ்லிம்களை அடிமைத்தளையிலேயே வைப்பதற்குத் துணைபுரிந்து கொண்டிருந்தவர்கள். மற்றொரு விதிவிலக்கான நிகழ்ச்சி, 1492ல் கத்தோலிக அரசர்களிடம் கிராணடாவின் வீழ்ச்சி. எனினும் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய உஸ்மானிய கிலாஃபத், இந்த வீழ்ச்சியை ஓரளவு ஈடுகட்டிவிட்டது.

முஸ்லிம்கள் குஃப்ரின் ஒருங்கமைந்த சக்தியை எதிர்கொள்ள நேர்ந்த போதெல்லாம், அதற்கெதிராக ஜிஹாது இயக்கத்தைத் துவக்குவதே அவர்களின் தன்னியல்பான எதிர்நடவடிக்கையாக இருந்திருக்கிறது. அவை அனைத்திலும் ஹஜ்ஜுதான் அவர்களின் திட்டங்களில் மையப்பங்கு வகித்திருக்கிறது. ஏனெனில், முஸ்லிம்கள் எப்போதும் ஹஜ்ஜை அரசியல் இயல்புகொண்ட செயல்பாடாகவே விளங்கி வைத்திருந்தனர். ஹஜ்ஜில் மட்டும்தான் முழு உம்மத்தும் அதன் நுண்மாதிரி வடிவில் பிரதிநிதித்துவம் பெறுகிறது. அந்த எளிய கனசதுரக் கஅபா, அல்லாஹ்வின் இல்லம் என்ற வகையில் இஸ்லாத்தில் நித்தியத் தன்மையையும் நிலைத்தன்மையையும் குறித்து நிற்கிறது. இந்தக் கஅபாவையே முஸ்லிம்கள் தங்களது அன்றாடத் தொழுகைகளில் முன்னோக்குகின்றனர் என்பது மட்டுமின்றி, தமது சோதனைக் காலங்களில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் அருளையும் வேண்டும்பொழுதும் இந்தக் கஅபாவின் பக்கமே இயல்பாகத் திரும்புகின்றனர்.

குர்ஆனிலுள்ள அல்லாஹ் சுப்ஹா னஹு வ தஆலாவுடைய கட்டளைகளின் அடிப்படையிலும், இறைத்தூதரின் —அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்!— வாழ்வுதாரண அடிப்படையிலும் இந்த உம்மத் இறையில்லத்தின் (பைத்துல்லாஹ்) வரலாற்றுப் பாத்திரத்தையும், ஹஜ்ஜின் பாத்திரத்தையும் நன்கு விளங்கி வைத்திருந்தது. ஹரமைனை இன்று ஆக்கிரமித்திருப்போர் ஹஜ்ஜின் இந்த பரந்துபட்ட பாத்திரத்தை எவ்வளவு வெறுத்தபோதிலும், முஸ்லிம்கள் ஹஜ்ஜின் உண்மை அம்சங்களை விளங்குவதும் அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலாவின் கட்டளைக்கேற்ப அதன் அசல் பாத்திரத்தை மீட்பதும் அவர்கள்மீது கடமையாகும்.

இன்றும்கூட இஸ்லாமிய உலகு குஃப்ரின் ஒருங்கமைந்த சக்தியை எதிர்கொண்டே வருகிறது. இந்தக் குஃப்ரு சக்திகள், தாங்கள் இஸ்லாத்தோடு சுமூகமாக வாழவிரும்புவதாகச் செய்து கொண்டிருந்த பாசாங்கு எல்லாம், ஈரானிய இஸ்லாமியப் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு உதிர்ந்துவிட்டன. வாஷிங்டன், மாஸ்கோ, பாரிஸ், லண்டன், டெல் அவீவ், புதுதில்லி போன்ற குஃப்ரின் அதிகார மையங்களிலிருந்து வெளியிடப்படும் அறிக்கைகளே அவர்களின் உண்மை நோக்கங்களை உறுதிப்படுத்தப் போதுமானவை. காலனித்துவம் தோன்றிய காலத்தில் போன்றே, இன்றும் இஸ்லாமிய உலகு தனது வளங்களைத் திரட்டி கொடிய சக்திகளை போரிட்டுத் தோற்கடிக்கவேண்டிய அவசியம் உள்ளது. இதுகுறித்து குர்ஆனில் வரும் அல்லாஹ்வின் கட்டளைகள் தெள்ளத்தெளிவாகப் பேசுகின்றன:

அவன்தான் தன் தூதரை நேர்வழியுடனும் சத்திய மார்க்கத்துடனும் அனுப்பிவைத்தான் —அவன் அதைக்கொண்டு மற்ற மார்க்கங்களை மிகைக்கச் செய்வதற்காக! இது இணைவைப்பவர்களுக்கு எத்துணை வெறுப்பாக இருப்பினும் சரியே! (9:33, 61:9)

(இதே கட்டளை, சிறிது மாறுபட்ட வடிவில் 48:28ல் மீண்டும் வருகிறது).

இஸ்லாமிய உலகின் அரசுகள் பலவும் இதே குஃப்ரு சக்திகளுக்கு அடிபணிந்து கிடக்கும் சூழலில், நிச்சயமாக இக்கட்டளையை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. அது மட்டுமின்றி, இஸ்லாத்தின் புனிதத்தலங்கள் இத்தகைய அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்குமெனில் —இன்று சவூதுக் குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதுபோல் இருக்குமெனில்— யதார்த்தத்தில் அவை குஃப்ரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே பொருள், அத்தகு கட்டுப்பாடு நேரடியாக இல்லாவிட்டாலும்கூட.

(தமிழில்: உவைஸ் அஹமது)

Related posts

Leave a Comment