ஞான்வாபி மஸ்ஜித் – கிணற்றுக்குள் பூதம்!
பாபர் மசூதியுடன் எதுவும் முடிந்துவிடவில்லை. நிஜத்தில் பாபர் மசூதி பலவித வரிசை மாற்றங்களுக்கும், பெருக்கல் சாத்தியங்களுக்கும் அரசியல் இந்துத்துவத்தை இட்டுச் சென்றிருக்கிறது. இப்போது சந்திக்கு இழுத்து விடப்பட்டுள்ள ஞான்வாபி மசூதி – வாரணாசி காசி விசுவநாதர் ஆலயத்திற்கு அருகமையில் உள்ள இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமாகும். காசி விசுவநாதர் ஆலயத்தின் நிர்வாகத்தை அரசு 1983 முதல் தன்வசம் எடுத்துக்கொண்டு நடத்தி வருகிறது. அதற்கு முன்பாக இருந்த மடாதிபதிகளில் ஒருவரான சுவாமி ராஜேந்திரா என்பவர் இந்த விவகாரம் பற்றிப் பேசும்போது, (இன்கே பாஸ் ராம் நஹீ ரஹங்கே.. யே பெரோஜ்கார் ஹோ ஜாயேங்கே) ‘இவர்களுக்கு (இந்துத்துவர்கள்) ராம் இல்லாது போனால், வேலை வெட்டி இல்லாதவர்களாக ஆகிவிடுவார்கள்’ என்றார். மேலும் விவரமாகப் பேசுகையில், “இப்போது புதியதொரு வேலையைத் துவக்க ஒரு தளம் (ராமர் கோவில் மூலம்) அவர்களுக்குக் கிடைத்துள்ளது” என்றார்.
ஆக, பாபர் மசூதி – இராம ஜென்ம பூமி பிரச்சினையை இந்துத்துவம் தனக்கான நீல அச்சுப்படியாக (blue print) மாற்றிக் கொண்டுவிட்டது. மத வெறுப்பைத் தூண்டி குளிர்காயும் இதுபோன்ற விவகாரங்களுக்கு பாபர் மசூதி பிரச்சினை ஒரு பரிந்துரைக்கப்பட்ட வகை மாதிரியை (prescribed pattern) உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. இந்த வகைமாதிரி வெறுமனே தீவிர இந்துத்துவ இயக்கங்களோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. இந்த தேசத்தின் சட்ட, நீதி, நிர்வாக அமைப்புகள் அனைத்தின் பரிந்துரையாகவே இந்த வேலைத் திட்டம் வெளிப்படுகிறது. ஞான்வாபி மசூதி விவகாரம் இந்த நாட்டின் பிரதமரின் சொந்த தொகுதியில் கிளப்பி விடப்பட்டுள்ள ஒரு இந்து – முஸ்லிம் மோதல் பிரச்சினை. அமைதியையும் சட்டம் ஒழுங்கையும் காப்பாற்றுவதையே குறிநோக்கமாகக் கொண்ட அரசிற்கு, அந்த பொறுப்பு தலைமை அமைச்சரின் தொகுதியில் சற்றுக்கூடுதலாகவே இருக்கும். ஆனால் அப்படியெல்லாம் எதிர்பார்ப்பது இங்கே முட்டாள்தனம்.
பிரதமர் மோடி 2019 மார்ச் 8ம் நாள் காசி விசுவநாதர் ஆலய பெருந்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டித் துவக்கி வைத்தபோது, ‘இந்தத் திட்டம், சுற்றியிருக்கும் கட்டடங்களின் பிடியைவிட்டும் சிவபெருமானை விடுவித்து விட்டது’ என்று மார்தட்டிக் கொண்டார். மேலும் இந்த நாள் சிவனுக்கு விடுதலை நாள் என்றும் பீற்றிக் கொள்ளத் தவறவில்லை. ஆக, சர்வ வல்லமை பொருந்திய கடவுளைக்கூட நாம்தான் காப்பாற்றுகிறோம் என்று பெருமை அடித்துக்கொள்வதில் இவர்களுக்குக் கூச்ச நாச்சமே இல்லை. இந்த இடத்தில் இவர்கள் நம்பிக்கையாளர் என்ற தகுதியையும் இழந்து விட்டார்கள். அதிலும் ஒருபடி மேலே போய் இந்தப் புனிதத் தலத்தை அபகரிக்க எதிரிகள் திட்டம் தீட்டினர். பலமுறை இதன் மீது அவர்கள் தாக்குதல் தொடுத்துள்ளனர் என்ற வன்ம வார்த்தைகளையும் உதிர்க்கத் தவறவில்லை.
இந்தப் பேச்சுக்குச் சொந்தக்காரர் இத்தனை வருடங்களாக அவர்கள் ‘ஓரஞ்சார மனிதர்கள்’ (fringe elements) என்று சொல்லி ஒதுங்கிக்கொள்ளும் சங்பரிவாரங்களின் காமா சோமா ஆசாமிகளல்ல. இந்நாட்டின் குடிமக்களின் ஒற்றுமையையும் சகோதரத்துவத்துவத்தையும் இணக்கத்தையும் எப்பாடுபட்டாவது கட்டிக் காப்பாற்ற உறுதியெடுத்துக் கொண்ட பிரதம மந்திரி. ஆக, இந்து – முஸ்லிம் மத துவேஷத்தை யாரோ விளங்காத சில வீணர்கள் தொடர்ந்து உசுப்பி விடுகிறார்கள் என்பதெல்லாம் பழங்கதை. இன்றைக்கு அந்த நிலையெல்லாம் கடந்து சக சமய வெறுப்பும் கடவுள் நம்பிக்கையும் அரசியல் வெற்றிகளுக்கான கருவிகளாக மாற்றப்பட்டுவிட்டன. நாம் சொல்வது எள்ளளவும் மிகைப்படுத்தப்பட்டதல்ல. இதே பிரதமர் 2017 பிப்ரவரி மாதம் கோவையில் உரையாற்றும் போது, “காசியிலிருந்து கோயம்புத்தூர் வரை சிவபெருமான் எங்குமிருக்கிறார்” என்று இந்துத்துவத்தின் முடிவற்ற போருக்குப் பரணி பாடவும் தயங்கவில்லை.
பிரதமர் அலுவலகம் தொடங்கி இந்த வகைமாதிரியில் ஒவ்வொரு அதிகார மையமும் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாத்திரத்தை கச்சிதமாகச் செயல்படுத்துகின்றன. முஸ்லிம் மன்னர்களால் அபகரிக்கப்பட்டவை என்ற புகாரில் நீண்ட பட்டியலிடப்பட்ட வழிபாட்டுத் தலங்களின் சர்ச்சைகளை முன்வைத்து இரண்டு மதப் பிரிவினரிடையே இடையறாத மோதல் நடப்பது இந்த நாட்டிற்கு பெருங்கேடாக அமையும் என்ற அச்சத்தில் வருங்கால தலைவலிகளைத் தடுத்து நிறுத்த நரசிம்ம ராவ் அரசு 1991ம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி, பாபர்மசூதி நீங்கலாக இனி எல்லா வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆகஸ்ட் 15ல் இருந்த அதே நிலையிலேயே தொடர வேண்டும். அதில் எந்த உரிமை மாற்றத்தையும் யாரும் கோர முடியாது என்று உறுதிபடுத்தியது. அயோத்தி விவகாரத்தின் இறுதித் தீர்ப்புரையில் இந்தச் சட்டத்தை இந்திய மதச்சார்பின்மையின் சான்றாவணமாக சிலாகித்த நீதிபதிகள், “எந்த ஒரு குழுவினரும் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதன் மூலமாக வரலாற்றுத் தவறுகளை சரிசெய்து விட முடியாது. கடந்தகால சம்பவங்களையும் அநீதிகளையும், நிகழ்கால – எதிர்காலத்தின் மீதான ஒடுக்குதல் கருவிகளாகப் பயன்படுத்த முடியாது என்பதற்காகவே நாடாளுமன்றம் இந்தச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது” என்றும், இனி எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் அடையாளங்களும் மாற்றப்படக் கூடாது என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களின் வாயிலாகச் சுட்டிக்காட்டியிருந்தனர்.
ஆனால், இந்தியச் சட்டங்களில் எப்போதும் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு, வாரணாசியில் இருந்த விஷ்வேஸ்வரர் ஆலயத்தை இடித்துத்தான் அவுரங்கசீப் ஞான்வாபி மசூதியைக் கட்டினார் என்று விஇப மனுதாக்கல் செய்தது. அப்போது இராம ஜென்ம பூமியில் தீவிரமாகத் தன்னை இணைத்துக் கொண்டிருந்த பாஜக ஞான்வாபி மசூதி விவகாரத்தில் விஇபவின் கோரிக்கையை ஏற்கவில்லை. இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஏழாண்டுகளுக்குப் பிறகு வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ன்படி மனுவைத் தள்ளுபடி செய்தது. இருப்பினும் விஇப தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மறு விசாரணைக்கு உத்தரவிட்டது. மசூதி நிர்வாகத்தினரான அஞ்சுமன் இன்திஜாமியா மஸ்ஜித் இதனை எதிர்த்து வழக்காடி இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்றது.
22 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கில் 1991ல் ஆஜரான வழக்குரைஞர், மசூதி இருக்கும் இடத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக (விக்கிரமாதித்தன் காலத்தில் இருந்து) ஒரு கோவில் இருந்தது எனவும் அதனைக் கண்டறிய தொல்லியல் ஆய்வுக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கோரினார். இதனைத் தொடர்ந்து 2021 ஏப்ரல் 8ல் தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிட்டதுடன், மசூதி இருந்த இடத்தில் கோவில் இருந்ததா என்பதைக் கண்டறிய ஐந்து நபர் குழுவை நியமித்தது. இவையனைத்தும் 1991ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் என்பது குறித்து மாண்பமை நீதிமன்றம் கிஞ்சிற்றும் கவலைப்படவே இல்லை. பாபர் மசூதிக்குள் திருட்டுத்தனமாக பாலராமன் சிலையை வைத்தபோதும், இதே ஓரங்க நாடகத்தைத்தான் இந்த நாட்டின் நீதி அமைப்புகள் நடத்திக் காட்டின. சட்டத்திற்குப் புறம்பான குற்றச் செயல்களுக்கு சட்ட அங்கீகாரத்தையும் பாதுகாப்பையும் வழங்கும் அநீதியைத்தான் இந்த நாட்டின் நீதிமான்கள் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து செலுத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் இந்த வகைமாதிரியின் அடுத்தடுத்த நகர்வுகளாக, 1996ம் ஆண்டு மகா சிவராத்திரி பூஜையை முன்வைத்து மசூதி வளாகத்தில் இந்துக்கள் பெருந்திரளாக கூட விஇப அழைப்பு விடுத்தது. ஆனால் அதை யாரும் சட்டை செய்யாததால் அவர்களின் எண்ணம் பிசுபிசுத்துப் போனது. 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் கோவிலின் தலைமை நிர்வாகியான SK பாண்டே என்பவர் ஒரு சிவலிங்கத்தை எடுத்து வந்து மசூதி வளாகத்துக்குள் வீசியதால், அப்போது மாவட்ட நீதிபதியாக இருந்த பத்தே பஹதூர் அந்த நிர்வாகியைப் பதவிநீக்கம் செய்து பதட்டத்தைத் தணித்ததாக முன்னாள் மகந்துகளில் ஒருவரான ராஜேஷ் திவாரி தெரிவிக்கிறார். இதற்கிடையில் பிரதமர் மோடி தனது 600 கோடி ரூபாய் மதிப்பிலான காசி விசுவநாதர் ஆலய பெருந்திட்ட வளாகப் பணிகளை முடுக்கிவிட்டார். இதையே காரணங்காட்டி மசூதிக்கு அருகமை இடங்கள் பெருந்திட்ட வளாக எல்லைக்குள் கொண்டுவரப்பட்டன. இப்பணிகளில் ஈடுபட்டிருந்த அரசு ஒப்பந்ததாரர் ஒருவர் 2018 அக்டோபர் 25 அன்று மசூதியின் வடக்குபுற சுற்றுச்சுவரை இடித்துத் தரைமட்டமாக்கினார். இந்த அடாவடிச் செயலைக் கண்டித்து பெருங்கூட்டம் கூடியதால், மாவட்ட நிர்வாகம் இரவோடிரவாக சுற்றுச்சுவரைக் கட்டிக் கொடுத்து பிரச்சினையை முடித்து வைத்தது.
இதனை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்ற மசூதி நிர்வாகமும், ஜீதேந்திர வியாஸ் என்கிற இந்து தலைவரும் மாவட்ட நிர்வாகத்தின் இதுபோன்ற அடாவடிச் செயல்கள், அமைதியையும் நல்லிணக்கச் சூழலையும் கடுமையாகப் பாதிக்கும் என்பதால் பெருந்திட்ட வளாகப் பணிகளை நீதிமன்றம் மேற்பார்வையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அருண் மிஷ்ரா, வினித் சரண் என்ற இரு நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் இந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டது. இவ்வளவும் இந்தியத் துணைப் படைகளின் கண்காணிப்பில் இருக்கும் ஒரு வழிபாட்டுத் தலத்தில் நிகழ்த்தப்படுகிறது என்பதையே நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். காசி விசுவநாதர் ஆலய பெருந்திட்ட வளாகத்தை முன்வைத்து, கோவில், மசூதி சுற்று வட்டாரங்களில் இருந்த பல்வேறு கட்டடங்கள், குறுகிய தெருக்கள் கையகப்படுத்தப்பட்டு மசூதி தனித்து விடப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு தொடங்கி உபி அரசு, மசூதியைச் சுற்றிலும் ஏறத்தாழ 45,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி விட்டது. இப்போது வெட்ட வெளியில் ஞான்வாபி மசூதி அம்போவென்று நிறுத்தப்பட்டுள்ளதாக மசூதியின் செயலாளர் சையத் யாசீன் தெரிவித்துள்ளார். மேலும், “பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்னால் மசூதியைச் சுற்றிலும் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, பாபரி மஸ்ஜித் மட்டும் அம்போவென விடப்பட்டதையும் அவர் ஒப்பிட்டுக் காட்டுகிறார். (கேரவான் 27.4.2019)
விஸ்வநாத் தம் (VishwanathDham) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பெருந்திட்ட வளாகத்திற்காக அரசு வெளியிட்டுள்ள வீடியோ வரைபடத்தில் ஒரு பெரிய மைதானம், கலாச்சார நூலகம், பக்தர்களுக்கான கடைகள், கோவில் ஊழியர்களுக்கான அலுவலகங்கள் என அனைத்தும் தெளிவாகக் குறியிடப்பட்டுள்ள நிலையில், ஞான்வாபி மசூதி இருக்கிற அடையாளமே அதிலில்லை. எனவே அரசின் நோக்கம் இதில் தெளிவாக வெளிப்படுகிறது.
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக மார்ச் 2019ல் உள்ளூர் இந்துக்களில் சிலர் மசூதி வெளிப்புறச் சுவற்றிற்கு அடியில் ஒரு நந்தியைப் புதைத்து வைக்கும் சதி வேலையில் கையும் களவுமாகப் பிடிபட்டனர். இந்தக் குதர்க்கமான செயல்திட்டங்களின் நீட்சிதான் மசூதியில் சிவலிங்கம் இருப்பதாகவும், அதற்காக அந்தப் பகுதியை மூடி முத்திரையிட்டு பாதுகாக்கும் நீதிமன்ற முடிவாகவும் வந்தடைந்திருக்கிறது. அதிகாரம், அதுவும் பெரும்பான்மைவாத அரசின் அதிகாரம் முடிவெடுத்துவிட்டால் பள்ளிவாசலின் தடாகத்தில் அல்ல, அங்கே தொழுபவர்களின் வாயிலிருந்தும் லிங்கங்களை எடுக்கலாம்.
இப்போது நம் முன்னுள்ள பிரச்சினை மன்னர் அவுரங்கசீப் கோவிலை இடித்து மசூதியை கட்டினாரா இல்லையா என்பதாக இருக்க முடியுமா? அல்லது ஜனநாயக மக்களாட்சிப் பிரதிநிதிகளான நாம் மசூதியை இடித்து கோவிலாக மாற்றப் போகிறோம் என்பதா? Banaras Reconstructed என்ற பெருநூலை எழுதிய மாதுரி தேசாய், “அவுரங்கசீப்பின் முரண்பாடான கொள்கை முடிவுகள் அவரது தனிப்பட்ட, அரசியல் நிர்ப்பந்தங்களைச் சார்ந்ததாக இருந்ததே ஒழிய, மத மாச்சரியத்தால் விளைந்தவையாகச் சொல்ல முடியாது” என்று வரைகிறார். இதைவைத்து அவுரங்கசீப்பையோ வேறு எந்த மன்னரையோ நாம் சரிகாண மாட்டோம். நம்மைப் பொறுத்தவரை, அவுரங்கசீப் ஒரு இடைக்கால எதேச்சதிகார அரசர். அவரைத் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர் நம்மைப் பிரித்தாண்டு வளங்களைச் சுரண்டிக் கொழுத்த வல்லூறுகள். இவர்களை வரிக்கு வரி அடியொற்றியா நம்மை நாமே இம்சித்து, பிரித்தாண்டு, வஞ்சித்து வாழப் போகிறோம்?
அப்படித்தான் வாழப்போகிறோம் என்றால், ஞான்வாபி மசூதியைத் தொடர்ந்து தாஜ்மஹால், ஷாஹி ஈத்காஹ், மத்தியப் பிரதேசத்தின் கமால் மௌலா மசூதி, டெல்லியின் குவ்வத்துல் இஸ்லாம் மசூதி, நவாப் அலி மசூதி என்று ஒரு பெரும் பட்டியலே படையெடுத்து நிற்கிறது. இதெல்லாம் ஒரு வேலைதிட்டம் என்று அரசு ஏற்றுக்கொளவதால்தான், ஜனநாயக அமைவனங்கள் வரிசைகட்டி வக்காலத்து வாங்குகின்றன. இந்துத்துவ அமைப்புகளின் பேரில் பழியைத் தூக்கிப் போட்டுவிட்டு இங்கே எத்தனை பத்திரிகைகள், ஊடகங்கள், அரசு அதிகாரிகள், சமுதாயப் பிரபலங்கள் மதவெறியர்களாக அலைகிறார்கள். எத்தனை பெரிய வன்மத்தை வளர்த்து விடுகிறார்கள் என்று இங்கே யாருக்கும் புரியவில்லை.
உதாரணத்திற்கு, தாஜ்மஹால் சிவன் கோவில் என்ற பஞ்சாயத்திற்கு முடிந்தளவு வேப்பிலை அடிக்க முடிவெடுத்து விட்ட விகடன், ஓக்கின் கூற்றுப்படி முகலாயர்களின் வருகைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தாஜ்மஹால் கட்டப்பட்டது மட்டுமல்ல, “தாஜ்மஹால் என்பது பண்டைய இந்துப் பெயரான தேஜோமஹாலயாவின் பிரபலமான தவறான உச்சரிப்பு என்பதைத் தனது ஆராய்ச்சியில் தெரிவிக்கிறார் என்கிறது. இந்த வன்ம அமைப்பின் பின்புலத்தில்தான் ஞான்வாபி மசூதி தடாகத்தில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதையும், உடன் அந்த இடம் சீல் வைக்கப்பட்டு நீதிமன்ற கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையும் நாம் பார்க்க வேண்டி உள்ளது.
பாபர் மசூதி ஒரு வன்முறைக் கூட்டத்தினரால் மட்டும் இடித்துத் தரை மட்டமாக்கப்படவில்லை.. இப்போது எழுப்பப்படும் ராமர் கோவிலும் அவர்களால் மட்டும் அங்கே எழும்பவில்லை.. சந்துகளில் சிந்து பாடுகிற பலபேர் இதற்கெல்லாம் ஒத்து ஊதிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை யோசியுங்கள். பெரும்பான்மை செல்லங்கொஞ்சுதல் (minority appeasement என்பதெல்லாம் போலித்தனமானது) என்பதற்கு ஆட்பட்ட கள்ள மௌனம்தான் பல அரசியல் கட்சிகளின் நடைமுறையாக இருக்கிறது. கேட்டால் இந்துத்துவம்தான் எல்லா அநியாயத்துக்கும் காரணம், நாட்டை அவர்களே குட்டிச்சுவராக ஆக்கிவிட்டார்கள் என்று சுலபமாகத் தப்பித்துக் கொள்வார்கள்.