‘பிரிவினைவாத எதிர்ப்பு மசோதா’: பிரான்ஸில் சட்டப்பூர்வமாகும் இஸ்லாமோ ஃபோபியா
பிரான்ஸின் செனட் அவையில் கொண்டுவரப்பட்டுள்ள ’பிரிவினைவாத எதிர்ப்பு’ மசோதா அந்நாடு முழுக்க பெரும் சர்ச்சைக்கும் விவாதங்களுக்கும் இட்டுச்சென்றுள்ளது. இந்தச் சட்ட வரைவானது இஸ்லாமோ ஃபோபியாவை சட்டப்பூர்வமாக்குவதாக மனித உரிமை ஆர்வலர்களும் முஸ்லிம்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், அரசோ ”இஸ்லாமியப் பிரிவினைவாதத்துக்கு” எதிரான மசோதா என்பதாக இதை முன்வைத்து வருகிறது.
பிரான்ஸ் நாடு 2004ல் ஹிஜாப், டர்பன் உள்ளிட்ட மத அடையாளங்களை பள்ளிக்கூடங்களில் தடை செய்தபோதும், 2011ல் முகத்திரை அணிவதைத் தடை செய்தபோதும், 2016ம் ஆண்டு பல பகுதிகளில் புர்கினி (முழு உடலையும் மூடும் வகையிலான நீச்சல் உடை) தடை செய்யப்பட்டபோதும் இதேபோன்ற விவாதங்கள் மேலெழுந்தன. பிரான்ஸின் மதச்சார்பின்மை எந்த அளவு மூர்க்கமாக மதக் குறியீடுகளைக்கூட ஒடுக்குகிறது என்பது அப்போது பெரிதும் பேசப்பட்டது.
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சார்லி ஹெப்டோ தாக்குதல் மற்றும் சாமூவேல் பாடி எனும் ஆசிரியர் கொலை ஆகியவற்றைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் பேசுகையில், “இஸ்லாமிய மதம் இன்றைக்கு சிக்கலில் இருக்கிறது” என்றும் “வெளிநாட்டு அழுத்தத்திலிருந்து இஸ்லாத்தை விடுவிக்கவேண்டும்” என்றும் கூறினார். அது மட்டுமின்றி, “நாம் இஸ்லாமியப் பிரிவினைவாதத்தை சமாளிக்கவேண்டியிருக்கிறது” என்றும் கூறி சர்ச்சையைக் கிளப்பினார். இதற்கு உலகெங்கிலும் கண்டனங்கள் எழுந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அவரின் அரசுதான் இப்போது மேற்குறிப்பிட்ட பிரிவினைவாத எதிர்ப்பு மசோதாவைக் கொண்டு வந்துள்ளது.
அதன்படி, அரசு அதிகாரிகளுக்கு அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக இணையவழியில் வெறுப்புப் பேச்சுகளைப் பகிர்வோர் சுமார் மூன்றாண்டுகள் சிறைவைக்கப்படுவார்கள் என்றும் சுமார் 55,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 40,35,792 ரூபாய்) வரை அபராதம் விதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதைவிடவும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படவும் அந்தச் சட்ட வரைவு இடமளிக்கிறது என்கிறார்கள்.
பலதார மணம் ஏற்கனவே பல சட்டங்களின் மூலம் அந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளபோதிலும், மேற்கூறிய மசோதா பலதார மணத்தையும் கட்டாயத் திருமணத்தையும் கற்புச் சான்றிதழ் வழங்குவதையும் தடை செய்வதாகக் கூறுகிறது.
இதுபோக பல விதிமுறைகள் சிவில் உரிமைகளை நேரடியாகப் பறிப்பதற்கு ஏதுவாக மசோதாவில் இடம்பெற்றுள்ளன. Home Schooling வழியாகக் கற்கும் மாணவர்களைப் பாதிக்கும் வகையில் சில அம்சங்கள் அதில் உள்ளன. 2024/25 பள்ளி ஆண்டிலிருந்து அரசு அனுமதி பெற்ற பிறகே Home Schooling நடத்தவேண்டும் என்று கூறுகிறது அரசு கொண்டு வந்துள்ள சட்ட வரைவு. இதனால் ஏறக்குறைய 62,000 சிறுவர்-சிறுமியர் பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சமய நிறுவனங்களுக்கு நிதியளிப்பதும் நன்கொடை வழங்குவதும் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது. இதனால் அப்படியான நிறுவனங்களின் நிதி விவகாரங்கள் முழுமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். முன்னதாகவே பிரான்ஸ் அரசு பல்வேறு முஸ்லிம் அமைப்புகளையும் பள்ளிவாசல்களையும் தீவிரக் குழுக்களோடு தொடர்பிருப்பதாகக் கூறி காலிசெய்துவிட்ட நிலையில், அரசின் இந்தத் தலையீடு இஸ்லாமிய நிறுவனங்களை மேலும் பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
18 வயதுக்குக் குறைவாக உள்ள பெண்கள் யாரும் ஹிஜாப் அணியக்கூடாது என்கிறது இம்மசோதா. அது மட்டுமல்ல, பள்ளிக்கூடங்களுக்குத் தம் பிள்ளைகளை அழைத்துச் செல்லும்போது தாயும் ஹிஜாப் அணியக்கூடாதாம். என்னவொரு ’அறிவுப்பூர்வமான’ சட்டம்!
ரிம் சாரா அலான் எனும் பிரஞ்சு சட்டவியல் அறிஞர், மதச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதே மதச்சார்பின்மையின் குறிக்கோள். ஆனால், அதுவே மதம் சார்ந்த வெளிப்பாடுகளை இலக்காக்கும் கருவியாகிவிட்டது என்கிறார். அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இந்தப் பிரிவினைவாத எதிர்ப்பு மசோதா மீது தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமானது பெருமளவில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதுடன், அடிப்படை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் பிரஞ்சு அரசு தக்க அடித்தளம் ஏதுமின்றி தீவிரப்போக்கைக் கட்டுப்படுத்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு சட்ட விதிமுறைகளை மக்கள் மீது திணிக்கிறது என்றும் அம்னெஸ்டி அமைப்பைச் சார்ந்த மேக்ரோ பெரோலினி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவிலேயே பிரான்ஸில்தான் முஸ்லிம் மக்கள் தொகை அதிகம். சுமார் 57 லட்சம் பேர் அங்கே வசிக்கின்றனர். அந்த வகையில் அங்குள்ள முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள்கூட தங்கள் சுதந்திரத்திலும் உரிமைகளிலும் இம்மசோதா குறுக்கிடுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தால் அது படுமோசமான விளைவுகளை பிரான்ஸின் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்துவதோடு, அவர்கள் மீது வெறுப்பும் ஒடுக்குமுறையும் மேலும் அதிகரிக்கும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தற்சமயம் இந்தப் பிரிவினைவாத எதிர்ப்பு மசோதாவுக்கு செனட் கமிட்டியின் ஏற்பு கிடைத்துள்ளது. பிரஞ்சு பாராளுமன்ற தேசிய அவையின் ஏற்புக்காக அது காத்திருக்கிறது. பிரான்ஸில் எதிர்வரும் 2022ம் ஆண்டு தேர்தல் வருவதால் அதை மனங்கொண்டு இச்சட்டத்தைக் கொண்டு வருகிறது மேக்ரோனின் அரசு. இதன் மூலம் தீவிர வலதுசாரிகளிடையேயும் இடதுசாரிகளில் ஒரு பிரிவினரிடமும் மேக்ரோனுக்கு ஆதரவு பெருகும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இதுகுறித்து பேராசிரியர் ஜான் போவன் கூறுகையில், மதச்சார்பின்மையில் தீவிரக் கண்டிப்புக் காட்டும் இடதுசாரிகளில் ஒரு குறிப்பிட்ட பிரிவு இதை ஆதரிக்கிறது. இம்மசோதா சில மதச்சார்பின்மைவாதிகள் மற்றும் தீவிர வலதுசாரிகளின் ஆதரவையும் மேக்ரோனுக்குப் பெற்றுத்தரக்கூடும் என்று குறிப்பிடுகிறார்.
[…] வழங்குவதாக உறுதியளித்தாலும், அது நடைமுறையில் எப்படி இருக்கிறது என்பதுதான் […]
[…] எதிரான ஒடுக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவந்தபோதும் மேக்ரோனின் பக்கம் […]