ஃபல்லூஜா – மினாரத்களின் நகரம் மயான பூமியான கதை
ஒரு காலத்தில் மினாரத்களின் நகரம் என்று பெருமையோடு அழைக்கப்பட்ட ஈராக்கின் ஃபல்லூஜா நகரம்,அமெரிக்க ஆக்கிரமிப்பின் பின்னர் பெரும் யுத்தங்களுக்கும் அழிவுகளுக்குமுரிய செய்தியாகி வருவது பெரும் துரதிர்ஷ்டமே. ஐஸ்ஐஸின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நகரத்தை மீளக் கைப்பற்றுவதற்கு ஈராக்கிய இராணுவம் கடந்த திங்கட்கிழமை (2016-05-30) முன்னெடுத்த இராணுவ நடவடிக்கையே இந்த நகரத்தின் பெயர் மீண்டும் உலக மீடியாக்களின் செய்திகளில் தலைப்புச் செய்தியாக மாறியிருப்பதற்குக் காரணமாகும்.
ஃபல்லூஜா ஏன் முக்கியத்துவம் பெறுகிறது.?
அமெரிக்காவின் ஒருதலைபட்சமான ஈராக்கிய ஆக்கிரமிப்பு 2003 இல் ஆரம்பித்த போது, சதாம் விடமாட்டார்; ஈராக் இலகுவில் சரணடையாது என்ற அனைத்து வீரவசனங்களையும் தாண்டி , ஈராக்கின் தலைநகரான பக்தாத், சதாமின் பிறப்பிடமான திக்ரித் நகரம் உட்பட முழு ஈராக்கும் வெறும் இரண்டு மாதங்களுக்குள் ஆக்கிரமிப்புப் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏன், அமெரிக்க படைகள் கூட இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதைப் போலவே, வெற்றிகளிப்பில் இருந்த ஆக்கிரமிப்புப் படைகளுக்கு ஃபல்லூஜா என்ற பெயரில் அதிர்ச்சி வைத்தியம் கூடிய சீக்கிரம் வரும் என்றும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லைதான் .
ஆக்கிரமிப்புப் படைகள் ஈராக்கின் ஒவ்வொரு நகரையும் கைப்பற்றிகொண்டு முன்னேறியபோது, முழு உலக மீடியாக்களும் பெரும் ஆரவாரத்தோடு செய்தி வெளியிட்டுக்கொண்டு இருந்தபோது, ஃபல்லூஜா நகரை வந்தடைந்தனர் அமெரிக்க துருப்புக்கள். நகரை கைப்பற்றியவுடன் அங்குள்ள ஒரு பாடசாலையில் அவர்கள் வெற்றிக்களிப்பில் தங்கியிருந்த போது, இதையெல்லாம் சட்டை செய்யாமல் நீங்கள் எல்லாம் எங்களுக்கு பெரிய பருப்பு கிடையாது, எங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டும் பாடசாலையில் இருந்து வெளியேறுங்கள் இல்லாவிட்டால் இந்த பாடசாலை உங்களுக்கு சவக்கிடங்காக மாறும் என்று சவால் விட்டவர்கள் இந்த ஃபல்லூஜா மக்கள். அதற்கு இணங்க மறுத்த அமெரிக்கர்களை ஆர்ப்பாட்டம் செய்து அடித்து விரட்டியவர்கள். (அந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்).
ஈராக்கை ஆக்கிரமித்த முடித்த பின் ஈராக்கின் இராணுவத்தை கலைத்ததுதான் அமெரிக்கர்கள் செய்த முதல் வேலை (முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதை போல தாங்கள் ஈராக்கில் செய்த பெரிய தவறு என்று தற்போது அவர்கள் கருத்து தெரிவித்துவருவது வேறுவிடயம்). முழு இராணுவமும் கலைக்கப்பட்டு ஈராக்கின் பாதுகாப்பு ஆக்கிரமிப்பு படைகளின் கைகளுக்கு சென்ற பின்னர் கொலைகள், ஆட்கடத்தல், கற்பழிப்புகள் என்று ஆக்கிரமிப்பு படைகளின் அட்டகாசங்கள் அதிகரிக்க தொடங்கின.
ஏற்கனவே வெறும் கையால் அமெரிக்கர்களை எதிர்த்து கசப்பான அனுபவம் பெற்றிருந்த ஃபல்லூஜா மக்கள் இவர்களின் அட்டகாசங்களையும், ஏன் முழு ஆக்கிரமிப்பையும் எதிர்க்கத் துணிந்தார்கள், ஆனால் இந்த முறை ஆயுதங்களுடன்!!
ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், கண்ணி வெடித்தாக்குதல்கள் என்று சிறிது சிறிதாக ஆரம்பித்த எதிர்ப்புப் போராட்டம் சரியாக ஆக்கிரமிப்பு ஆரம்பித்த ஒருவருட நிறைவு விழாவை பெருமிதத்துடன் கொண்டாடிக் கொண்டிருந்த நாளில் Blackwater படைப்பிரிவை சார்ந்த நான்கு அமெரிக்கர்கள் கடத்தி கொலை செய்து, ஃபல்லூஜாவின் நுழைவாயிலில் இருக்கும் பாலத்தில் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டனர் ஃபல்லூஜா வாசிகள். இந்த புகைப்படங்கள் உலகெங்கும் வெளியாகி அமெரிக்கர்களின் முகத்தில் கரியை பூசியதும், இதற்கு பழிவாங்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு விமானப்படை மற்றும் அமெரிக்க மரைன்களின் (US Marines) உதவியுடன் ஒரு முழு அளவிலான யுத்தத்தை ஃபல்லூஜாவில் நடத்தி முடித்தனர் அமெரிக்க படையினர். இருந்தாலும் தங்களது நோக்கம் முழுமையாக நிறைவு பெறவில்லை என்பதால் தொடர்ந்தும் ஃபல்லூஜாவில் நிலைகொண்டு இருப்பது தமது படைகளுக்கு மேலதிக உயிர் இழப்புக்களை ஏற்படுத்தும் என்று தீர்மானித்த அமெரிக்க கட்டளைத் தளபதி, சரியாக ஈராக்கை கைப்பற்றிய ஒரு வருடத்தில் (2004-06-01) ஃபல்லூஜாவின் பாதுகாப்பை ஈராக்கிய பொலிசாரிடமும் சில கோத்திர தலைவர்களிடமும் ஒப்படைத்துவிட்டு விட்டு தமது படைகளை திரும்ப பெற்றுக் கொள்கிறார்.
தம்மை திரும்பப் பெறவைத்து அவமானத்தை ஏற்படுத்திய ஃபல்லூஜாவை பழி தீர்த்தே ஆகுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு சரியான தருணம் வரும்வரை எதிர்பார்த்திருந்த அமெரிக்கப் படைகள், ஆறு மாதங்களில் மீண்டும் ஃபல்லூஜாவில் பெரும் யுத்தத்திற்கு முகம் கொடுக்கின்றனர். அந்த யுத்தம், வியட்னாம் யுத்தத்திற்கு பிறகு அமெரிக்கர்கள் சந்தித்த மிகப்பெரும் யுத்தம் !!
ஈராக்கிய போலிசாரிடமும் உள்ளூர் கோத்திர தலைமைகளிடம் கையளித்துவிட்டு வெளியேறிய பிறகு அபு முஸ்அப் அல் ஸர்காவியின் தலைமையிலான ஈராக்கிய அல்காயிதாவின் (AQI) கோட்டையாகிப் போனது ஃபல்லூஜா. தாம் வெளியேறினாலும் தமக்கு எதிரான தாக்குதல்கள் உக்கிரமடையக் காரணம் ஃபல்லூஜாவில் நடைபெறும் திட்டங்கள்தான் என்று முடிவெடுத்து, ஒரு முழு யுத்தத்திற்கு தயாராயினர் அமெரிக்க துருப்புக்கள். இதற்கு உதவியாக பிரிட்டிஷ் துருப்புக்களும் வரவழைக்கப்பட்டு நீண்ட கலந்துரையாடலின் பின்னர், ஒன்றில் ஸர்காவி தலைமையிலான அல்காயிதாவை அழிப்பது , இல்லாவிட்டால் முழு ஃபல்லூஜாவையும் அழித்து சாம்பல் மேடாக்குவது என்ற ஒரு கொலைவெறி முடிவுக்கு வந்திருந்தனர் ஆக்கிரமிப்பு துருப்புக்கள்.
இந்த நாசகார திட்டங்கள் எதுவும் அறியாத மூன்றரை லட்சம் ஃபல்லூஜா மக்கள் தூங்கிக்கொண்டு இருந்த ஒரு நடுநிசி இரவில் தொடங்கப்பட்டது அமெரிக்கர்களின் அதிரடி ஒபரேஷன். விடியும் போது இரண்டில் ஒன்று நடந்திருக்கவேண்டும் என்பதற்காக அந்த ஒபெரசனுக்கு அவர்கள் வைத்திருந்த பெயர் ‘ஒபெரசன் அல்-பஜ்ர்’.
இதில் மொத்தம் பதினைந்தாயிரம் அமெரிக்க, பிரிடிஷ் துருப்புக்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இவர்களில் ஈராக்கில் நிலைகொண்டிருந்த அத்தனை படையணிகளுக்கும் மேலதிகமாக நேவி சீல் (SEAL) எனப்படும் அமெரிக்காவின் அதிசிறப்பு படைப்பிரிவும் Black Watch எனப்படும் பிரிடிஷ் சிறப்புப் பிரிவும் தருவிக்கப்பட்டு, முழு அளவிலான விமானப்படையின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது யுத்தம். ஏற்கனவே குறிப்பிட்டவாறு அமெரிக்க துருப்புக்கள் வியட்னாம் யுத்தத்திற்கு பிறகு பெரும் சேதங்களை சந்தித்த போர்க் களம் என்றால் அது ஃபல்லூஜா தான். இந்த யுத்தத்தின் மூலம் ஃபல்லூஜாவை மீளக் கைப்பற்ற எடுத்த காலம் முழு ஈராக்கை கைப்பற்றுவதற்கு எடுத்த காலத்தை விட அதிகமாகும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நீடித்த இந்தப் போரில் ஃபல்லூஜாவின் குடியிருப்புகள், பாடசாலைகள், பள்ளிவாசல்கள், வியாபர ஸ்தலங்கள் உட்பட அனைத்து உட்கட்டமைப்புக்களும் அழித்தொழிக்கப்பட்டன. சுடுகாட்டை விட மோசமானது அழகிய வானுயர்ந்த மினாரத்களின் நகரம். ஆறாயிரத்திற்கும் மேலான பீரங்கித் தாக்குதல்களுக்கும் , ஆயிரக்கணக்கில் விமானத்தாக்குதல்களுக்கும் ஒரு சிறிய நகரம் தாக்குபிடிப்பது என்பது சாத்தியமே இல்லை அல்லவா. இதைவிடக் கொடுமை , வீசப்பட்ட குண்டுகளில் தடைசெய்யப்பட்ட வெள்ளை பொஸ்பரஸ் இராசாயனங்களும் கலந்து இருந்ததுதான். இது உண்மையில் தெளிவான யுத்தக் குற்றமாகும். இந்த யுத்தத்தில் எத்தனை ஆயிரம்பேர் கொல்லப்பட்டார்கள் என்றும் எத்தனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காயம்பட்டனர் என்றும் சரியான தகவல்கள் இதுவரை இல்லை.
சாம்பல் மேடாகிய ஃபல்லூஜாவை மீளக் கைப்பற்றிய சிறிது காலத்ததின் பின்னர் ஈராக்கிய அல்காயிதாவின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் பலர் தொடராக கைது செய்யப்பட்டனர். ஆனாலும் அபு முஸ்அப் அல்-ஸர்காவி தப்பியிருந்தார். ஸர்காவியை தேடும் படலம் ஆரம்பித்ததது. அவரின் தலைக்கு அமெரிக்கர்கள் விதித்த விலை, ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்.
என்றாலும், ஃபல்லூஜா யுத்தத்தின் பின்னர் அமெரிக்கத் துருப்புக்கள் மீதான தாக்குதல்களும் அதிகரிக்க தொடங்கின. ஸர்காவியின் நடமாட்டம் பெரும்பாலும் ஃபல்லூஜாவை சுற்றியே இருந்தது. எனவே அவரை தேடும்படலங்களும் அதைச் சுற்றியே இருந்தாலும், இரண்டு வருடங்கள் கழித்து ஈராக்கின் வடக்கில் உள்ள தியாலா மாகாணத்தின் பகூபா நகருக்கு அருகாமையில் உள்ள ஒரு இரகசிய பதுங்கு குழி ஒன்றில் தமக்கு நெருக்கமான சிலருடன் இரகசிய கூட்டம் ஒன்றை நடத்திக்கொண்டு இருக்கும் போது அந்த இடத்தை துல்லியமாக மோப்பம் பிடித்த அமெரிக்க உளவுத்துறை, அவர் எந்தவகையிலும் தப்பிவிடக்கூடாது என்று தங்களது அதி சிறந்த விமானத்தையும், ‘பங்கர் பஸ்டர்’ எனப்படும் மலைகளை ஊடுருவித்தாக்கும் குண்டுகள் மூலம் ஸர்காவியின் கதையை முடித்து வைத்தது.
ஸர்காவியின் மறைவின் பின்னர் கட்டுக்கோப்பை இழந்த ஈராக்கிய அல்காயிதா, தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களை நோக்கி தமது அதிருப்தியையும் அட்டகாசங்களையும் வெளிக்காட்ட தொடங்கினர். ஸர்காவியின் காலத்தில் அல்காயிதாவின் ஆதரவுக் கோட்டையாக இருந்த ஃபல்லூஜா மக்கள், இந்த முறை அல்காயிதாவின் அட்டகாசங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஃபல்லூஜாவை விட்டு அவர்களை அடித்து விரட்டுவது என்றும் தீர்மானித்தனர். ஆனாலும் இதை செய்வதற்குப் பகரமாக, ஈராக்கிய அரசாங்கத்திடம் இருந்து ஒரு ஒப்பந்தத்தை எதிர்பார்த்தனர்.
ஈராக்கில் பெரிய பரப்பளவை கொண்ட மாகாணம் அன்பார் மாகாணமாகும். பெரும்பலாலும் பாலைவன தரையமைப்பை கொண்டிருந்தாலும் யூப்ரடீஸ் நதி இந்த மாகாணத்தின் குறுக்கு வெட்டாக ஓடுவதால் விவசாயத்திற்கும் பிரபல்யமானது. இந்த மாகாணத்தின் மேற்கில் சிரியா மற்றும் ஜோர்டானும், தெற்கில் சவூதி அரேபியாவும், கிழக்கு பக்கம் பக்தாதும் , ஷியா முஸ்லிம்களின் முக்கியத்துவம் மிக்க கர்பலா மற்றும் நஜஃப் மாகாணமும் எல்லைகளாக அமைந்திருகின்றன. அமைவிட ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாகாணத்தில் பெரும்பான்மை மக்கள் சுன்னி முஸ்லிம்களாவர்.
இந்த மாகாணத்தின் தலைநகர் ரமாதி என்றாலும் ஃபல்லூஜாவும் முக்கியமானவோர் நகரமாகும். அமெரிக்க ஆக்கிரமிப்பின் பின்னர், ஆக்கிரமிப்புப் படைகளுக்கும் தொடர்ந்து வந்த ஈராக்கிய அரசுகளின் ஒடுக்குமுறை கொள்கைகளுக்கும் எதிராக கிளர்ச்சி செய்துவந்ததால் அன்பார் மாகாணம் ஒருவகையில் அல்காயிதாவின் கோட்டையாகிப் போயிருந்தது.
இதனால் பல யுத்தங்களையும் அழிவுகளையும் அடிக்கடி எதிர்கொள்ளவேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டதால், ஃபல்லூஜா போன்ற நகரவாசிகள் ஒரு ஆழமான பொருளாதார, வாழ்வாதார சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வந்தனர். பொருளாதார நிலைமைகள் மிக மோசமாக இருந்தபோதும், ஸர்காவி உயிரோடு இருக்கும்வரை ஈராக்கிய அல்காயிதாவுக்கான ஆதரவு கணிசமாக இந்த மாகாணத்தில் தொடர்ந்தும் இருந்தது. இதற்கு முக்கிய காரணம் சுன்னிகள் மீதான நூரி அல்-மாலிக்கியின் ஈராக்கிய ஷியா சார்பு அரசாங்கத்தின் மோசமான இன ஒதுக்கல் மற்றும் பாகுபாட்டுக் கொள்கைகளும், மற்றும் அரசின் அனுசரணையில் இயங்கும் பல ஷியா துணை இராணுவக்குழுக்களின் (மிலிஷியா) அட்டகாசங்களுமேயாகும்.*
ஆனால், ஸர்காவியின் மரணத்தின் பின்னர் வந்த எந்தவொரு அல்காயிதா தலைவர்களும் உள்ளூர் மக்களின் ஆதரவை பெற்றிருக்கவில்லை. மேலும் இவர்களின் அட்டகாசங்களும் அதிகரித்து கொண்டு வந்தது. இதனால் மக்களுக்கும் இவர்களுக்கும் இடையிலான முறுகல் அதிகரித்தது. அதாவது ஃபல்லூஜா மக்கள் பாக்குவெட்டிக்குள் அகப்பட்ட பாக்கை போல இருபக்கமும் நெருக்கடிக்குள் உள்ளானார்கள். பொறுக்க முடியாமல், ஒரு கட்டத்தில் ஃபல்லூஜா உட்பட முழு அன்பார் மாகாணத்தின் மக்களும் அல்காயிதாவுக்கு எதிராக கிளர்ந்து எழுந்தனர். இந்த எழுச்சி “அன்பார் எழுச்சி “ அல்லது அரபியில் சுருக்கமாக “சஹ்வா” என்று அழைக்கப்படுகிறது.
இந்த எழுச்சித் திட்டத்தில் பல சுன்னி கோத்திரங்கள் இணைந்துகொண்டன. ஆரம்பத்தில் ஃபல்லூஜாவில் ஏற்பட்ட எழுச்சியாக இருந்தாலும் பின்னர் மோசூல், திக்ரித் என்று பரவி ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் உறுப்பினர்கள் வரை இணைந்து விட்டனர். எங்கே இந்த மக்கள் எழுச்சியின் விளைவாக எல்லா சுன்னி பிராந்தியங்களும் தங்களின் கட்டுப்பாட்டை விட்டு போய்விடுமோ என்ற அச்சத்தில், மக்களை கவர்வதற்காக ‘ஈராக்கிய அல்காயிதா’ என்ற தமது பெயரை ‘ஈராக்கிய இஸ்லாமிய தேசம்’ (Islamic State of Iraq) என்று மாற்றும் அளவுக்கு அல்காயிதாவின் தலைவர்கள் நெருக்குதலுக்கு ஆளாயினர்.
எனினும் இந்த எழுச்சியின் பிரதிபலனாக அமெரிக்கர்களிடமும் , ஈராக்கிய அரசிடமும் இங்குள்ள கோத்திரத் தலைவர்கள் சில கறாரான நிபந்தனைகளை விட்டிருந்தனர். அதாவது சஹ்வா உறுப்பினர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவேண்டும்; சிறிது காலத்தின் பின்னர் இவர்கள் ஈராக்கிய இராணுவத்தில் இணைக்கப்பட்டு அவ்வந்த மாகாணத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு உரிய சம்பளமும் வழங்கப்படவேண்டும் என்பதே அவற்றுள் முக்கியமானதொரு நிபந்தனையாகும். இந்த நிபந்தனைகளுக்கு நியாயமான காரணங்களும் இருந்தன. அதாவது அமெரிக்கர்களால் கலைக்கப்பட்ட முன்னாள் ஈராக்கிய இராணுவ வீரர்களுக்கு அதன் மூலம் மீண்டும் வேலைவாய்ப்பு கிடைப்பதால், இது ஒருவகையில் சமூகத்தில் இருக்கும் வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வாக இருப்பதுடன், இந்த வீரர்கள் தத்தமது பகுதிகளில் பணிக்கு அமர்த்தப்படுவதால், அல்காயிதா மற்றும் ஷியா மிலிஷியாக்களின் அட்டகாசங்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும் என்பதுடன், தூர நோக்கில் இதுவொரு நல்லிணக்க அரசியல் வழிமுறையாகவும் இருக்கும் என்பதே அந்த எதிர்பார்ப்பாகும்.
இந்த நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டாலும் மாலிக்கி அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. கிட்டத்தட்ட ஒரு இலட்சம் சுன்னி இளைஞர்களின் கையில் ஆயுதம் கிடைப்பதுடன் அவர்கள் இராணுவத்திற்குள் உள்வாங்கப்பட்டால் , இராணுவத்தில் பெரும்பான்மையினராகப் போய்விடுவதுடன் இது எதிர்காலத்தில் தமது அரசுக்கு பெரும் சவாலாக மாறிவிடும் என்றும், இதனால் தங்களின் ஒருதலைபட்சமான நலன்களை செயல்படுத்தமுடியாமல் போய்விடும் என்ற உட்பிரிவுவாத நோக்கமே, அவற்றை அவர்கள் ஏற்றுக்கொள்ளாததற்குரிய முக்கிய காரணமாகும். அதாவது அல்காயிதாவில் இணைந்தாலும் பரவாயில்லை, இவர்கள் இராணுவத்திற்குள் உள்வாங்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கமேயாகும்.
தங்களது இராணுவ வீரர்கள் மீதான தாக்குதல்கள் குறையக் கூடும் என்ற எண்ணமே இந்த திட்டத்திற்கு அமெரிக்கர்கள் ஆதரவு வழங்கியதற்கு முக்கிய காரணமாகும். இந்த நோக்கத்தை அறிந்திருந்தாலும், தங்களது சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் இராணுவத்தில் கடமையாற்றுவது, தமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்ற நோக்கத்தில் இதை ஒரு win-win தீர்வாகவே கோத்திர தலைவர்கள் பார்த்தனர்.
அமெரிக்கர்களின் நெருக்குதல் காரணமாக நிபந்தனைகள் சிலவற்றுக்கு ஈராக்கிய அரசாங்கம் ஆரம்பத்தில் சம்மதித்திருந்தது. எழுச்சியின் பின்னர் அல்காயிதாவின் தாக்குதல் வலிமை குறைவடைய துவங்குகிறது. பலர் அல்காயிதாவில் இருந்து விலகி சஹ்வாவில் இணைந்து கொள்கின்றனர்.
பாதுகாப்பு நிலவரங்கள் ஓரளவு சுமூகமான நிலையை அடைந்தாலும், இதன் பிரதிபலனாக சுன்னிகளின் அரசியல் நல்லிணக்கம், ஈராக்கிய அரசாங்கம் மற்றும் இராணுவத்தில் உள்வாங்கப்படுதல் போன்ற எந்த எதிர்பார்ப்பையும் மாலிக்கி அரசாங்கம் நிறைவேற்றல்லை. இந்த நிலையில் ஈராக்கில் இருந்து தமது துருப்புக்களை திரும்பப் பெறப் போவதாக ஒபாமா அறிவிக்கிறார். இந்த அறிவிப்பின் பின்னணியில் அமெரிக்கர்களுக்கு ஒரு திட்டமும் மாலிக்கி அரசாங்கத்திற்கு இன்னொரு திட்டமும் இருக்கிறது. இரண்டும் வெவ்வேறு திட்டங்கள் என்றாலும் இவை இரண்டும் நரித்தனமான நயவஞ்சகத் திட்டங்கள்.
ஈராக்கில் இருந்து தமது துருப்புக்களை இரண்டு வருடத்திற்குள் திரும்பப் பெறப் போவதாகவும் 2011 டிசம்பர் மாதம் எந்தவொரு அமெரிக்க துருப்புக்களும் ஈராக் மண்ணில் தரித்து நிற்காது எனவும் ஒபாமா பகிரங்கரமாக அறிவிக்கிறார். அமெரிக்க துருப்புக்களை ஈராக்கில் இருந்து திரும்பப் பெறுவதற்கு பல காரணங்கள் இருந்தன. ஈராக்கில் அதிகரித்துவந்த அமெரிக்க இராணுவ இழப்புகளும், ஈராக்கில் படைகளை பராமரிப்பதற்குரிய செலவினம் ஆகியவை அதிகரித்து பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதும் முக்கியமான காரணங்கள்.
இதனிடையே எண்ணை வளத்திற்காக ஆக்கிரமிக்கப்பட்ட ஈராக்கில் இருந்து முற்றுமுழுதாக வெளியேறினால் ஈராக்கிய விவகாரங்களில் தமக்கு செல்வாக்கு செலுத்த முடியாமலே போய்விடும் என்பதால், தமது துருப்புக்கள் வெளியேறினாலும் ஏதாவது ஒரு வகையில் ஈராக் தம்மிடம் தொடர்ந்தும் தங்கியிருக்க வேண்டிய நிலையில் வைத்திருப்பதையே ஒபாமா நிர்வாகம் விரும்பியது. இதற்குத் தோதான விடயங்களாக அது சட்ட ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளை பயன்படுத்திக் கொள்ள முனைந்தது. அதாவது ஈராக்கின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுமேயானால், ஏனைய அரபு நாடுகளைப் போல பாதுகாப்பு கவசத்திற்காக ஈராக் தொடர்ந்தும் அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகும் என்பதே அமெரிக்கா பாதுகாப்பு ஆலோசகர்களின் கணிப்பாக இருந்தது. இதற்கு அவர்களுக்கு இருந்த ஒரே தெரிவு அல்காயிதா போன்ற தீவிரவாத குழுக்களின் செயல்பாடுகளை ஈராக்கில் தொடர அனுமதித்தல். எனினும் இது எந்தவகையிலும் தாம் வெளியேறும் வரை தமது துருப்புக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்ககூடாது என்பதிலும் கவனமாக இருந்தனர்.
அந்த நேரத்தில் நான் முன்னைய பகுதியில் குறிப்பிட்டவாறு அல்காயிதா இயக்கம் ‘ஈராக்கிய இஸ்லாமிய தேசம்’ (Islamic state of Iraq- ISI) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வந்தது. அந்த இயக்கத்திற்கு அபூ அய்யூப் அல் மஸ்ரி தலைவராகவும், அபூ ஓமர் அல் பக்தாதி துணைத் தலைவராகவும் செயல்பட்டு வந்தனர். இதே நேரம் தீவிரவாத செயல்களுக்காக அமெரிக்கத் துருப்புக்களால் கைது செய்யப்பட்டு மிகவும் ஆபத்தானவர்கள் என்று கருதப்பட்டு குவாண்டனமோ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவர்கள் தவிர ஏனைய ஆயிரக்கணக்கான கைதிகள் பூக்கா சிறையிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்குள் அல்காயிதாவின் இரண்டாம் மட்ட தலைவர்களாக இருந்த அபூ பக்கர் அல் பக்தாதி, அபூ சுலைமான் அல் நாசர் போன்றோரும் இருந்தனர். அல்காயிதா கைதிகளுக்கு கடுமையான நடைமுறைகளை அமுல்படுத்தும் அமெரிக்க அதிகாரிகள் இந்த இருவருக்கும் சிறைச்சாலைக்குள் சுதந்திரமாக நடமாடுவதற்கும் ஏனைய கைதிகளை சந்திப்பதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்திருந்தனர். இது முற்றிலும் மாறுபட்ட விசித்திரமான நடைமுறையாகும்.
இதேநேரம், தலைவரான அல் மஸ்ரியும் ஓமர் பக்தாதியும் கைது செய்யப்படவில்லை. ISI இன் அமெரிக்க துருப்புக்கள் மீதான தாக்குதல்களை குறைந்திருந்தாலும் நிறுத்தப்படவில்லை என்பது அமெரிக்கர்களுக்கு பெரும் தலையிடியாக இருந்தது். தாம் வெளியேறும் முன்னர் எப்படியும் இவர்களை முடித்துவிடுவது என்று இவர்களை தேடியலைந்த அமெரிக்க துருப்புக்கள், தமது வெளியேற்றத்திற்கு சரியாக ஒருவருடத்திற்கு முன்னர் திக்ரித் நகரில் ஒரு இரகசிய அறையில் இருவரும் ஒன்றாக தங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டு, அதே இடத்தில் வைத்து இருவரையும் உயிருடன் கைது செய்தனர். ஈராக்கிய இஸ்லாமிய தேசம் தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிந்திருந்த தலைவரையும் துணைத் தலைவரையும் கைது செய்த அமெரிக்கர்கள் அவர்களை விசாரித்து அவர்களின் முழு வலைப்பின்னலையும் உடைத்தெறிந்து இருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல் அதே இரவே அவர்களை இன்னொமொரு இடத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்துவிட்டுப் போயிருந்தார்கள்.
தாம் ஈராக்கை விட்டு வெளியேறிய பிறகும் ஈராக்கிய இஸ்லாமிய தேசம் தமது விருப்பப்படி தொடர்ந்தும் இயங்கவேண்டும் என்பதுடன் இதன் காரணமாக ஈராக் தேசிய பாதுகாப்பு விடயத்தில் தொடர்ந்தும் தம்மில் தங்கியிருப்பதுடன், ஈராக்கிய விவகாரத்தில் தொடர்ந்தும் மூக்கை நுழைத்துக்கொண்டு இருக்கமுடியும் என்ற திட்டம் அமெரிக்கர்களிடம் இருந்தமையினால் மஸ்ரியையும் ஓமரையும் விசாரிக்காமல் கொலை செய்தமை ஆச்சரியம் இல்லை.
இது நடந்து கொண்டிருக்கும் காலப்பகுதியில், இராக்கிய சுன்னி மக்களின் தேசிய அரசியல் நலன்களை ஓரங்கட்டும் செயல்பாடுகளை முன்னெடுத்து வந்த பிரதமர் நூரி அல் மாலிக்கியின் அரசாங்கம் ஈராக்கின் சுன்னி மக்கள் மீது மோசமான குழுநிலைவாத ஒடுக்குமுறைகளை அரங்கேற்றுவதில் முன்னுரிமை கொடுத்து வந்தது. சுன்னிகளின் பாதுகாப்பு தொடர்பாக சஹ்வா திட்டத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாமல் அதற்கு முற்றிலும் மாற்றமாக ஆயுதம் தாங்கிய ஷியா மிலிஷியாக்களின் ஆட்கடத்தல், இரகசியக் கொலைகள், தடுத்துவைத்து சித்திரவதை செய்தல் போன்ற அட்டகாசங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் ஆசீர்வாதம் வழங்கிவந்தது. பல மர்மக் கொலைகளுக்கு பின்னனியில் இருந்த அல் பத்ர் மிலிஷியாவின் தலைவர் ஹாதி அல் அமிரி போன்ற கடும்போக்குவாத நபர்களை கூட அமைச்சர்களாக நியமித்தார் நூரி அல் மாலிக்கி. இதுபோன்ற அரச நடவடிக்கைகள் சுன்னிகள் மத்தியில் அச்சத்தையும் நம்பிக்கையீனத்தையும் தோற்றுவித்தத்துடன் ஈராக்கில் ஷியா-சுன்னி என்ற பிரிவினையை மேலும் அதிகரித்தது.
ஈராக்கின் நிலைமை இப்படி மோசமாகிக்கொண்டு இருக்கும் வேளையில் , எமக்கு சர்வாதிகார ஆட்சிகள் வேண்டாம் ஜனநாயக உரிமைகள் வேண்டும் என்ற கோஷத்துடன் ‘அரபு வசந்தப் புரட்சி’ துனீசியா, எகிப்து, லிபியா என்று பரவுகிறது. முழு உலகத்தின் கவனமும் இந்த நாடுகளில் குவிந்திருந்த நிலையில், மாலிக்கி அரசினால் ஒடுக்கப்பட்டு இருந்த சுன்னி மக்களும் ஈராக்கின் அனைத்து இன மக்களும் பங்களிப்பு செய்யும் வகையிலான முறையில் அரசியல் யாப்பு மாற்றப்படவேண்டும் எனவும் தமக்குரிய ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் ஃபல்லூஜா நகரில் பெரும் ஆர்பாட்டாத்தில் ஈடுபடுகிறார்கள். பல மாதங்கள் நீடித்த இந்த ஆர்ப்பாட்டம் எந்தவொரு சர்வதேச ஊடகத்தின் கவனத்தையும் ஈர்க்கவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
இந்த நிலையில், ஈராக்கில் இருந்து முழுமையாக அமெரிக்கா தனது துருப்புக்களை திரும்பப் பெற்றிருந்தது. இதற்காக ஒரு விழாவொன்று வெள்ளை மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த விழாவுக்கு பிரதம அதிதியாக ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கி வரவழைக்கப்பட்டு இருந்தார். விழா நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது பக்தாத்தில் இருந்து மாலிக்கிக்கு அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று வருகிறது. தொலைபேசியின் அடுத்த முனையில் பதட்டத்தோடு இருந்தவர் ஈராக் பாதுகாப்பு அமைச்சர்.
(தொடரும்)
குறிப்புகள்
* இதில் மற்றொரு முக்கியமான விடயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது ஸர்காவி தலைமையிலான அல்காயிதாவினர் ஷியாக்களின் பள்ளிவாசல்களிலும் பொதுமக்கள் திரளாகக் கூடும் பொதுவிடங்களிலும் ஓய்வொழிச்சலின்றி கார் குண்டுவெடிப்புகளை நடத்தி தினம்தினம் பல நூறு பேரைக் கொன்றொழித்து வந்தனர். இதன் மூலம் சுன்னி மக்கள் மீதான ஷியாக்களின் பகைமையை தீவிரப்படுத்த வேண்டும் என்பதுதான் ஸர்காவியின் நோக்கம். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் சுன்னி மக்கள் அனைவரும் எளிதாகத் தமக்குப் பின்னால் அணிதிரண்டு விடுவர் என்பது ஸர்காவியின் திட்டம். நடந்ததும் அதுவே. இவ்வாறு ஷியா-சுன்னி பிளவு திட்டமிட்டே கூர்மைப்படுத்தப்பட்டது என்ற பார்வையை தொலைத்துவிட்டு இந்நிகழ்வுகளை அணுகும்போது முற்றிலும் பிழையான, அழிவுகரமான நிலைப்பாட்டுக்கே அது நம்மை இட்டுச் செல்லும். (தொகுப்பாசிரியர்)