கட்டுரைகள் 

ஈமானும் ஈமானிய அனுபவங்களும்

Loading

ஈமான் என்பது வெறும் வார்த்தைகளை சடங்குத்தனமாக உச்சரிப்பதோ குருட்டுத்தனமாகப் பின்பற்றும் நம்பிக்கையோ அல்ல. ஈமான் என்ற வார்த்தைக்கு நம்பிக்கைகொள்வது, ஏற்றுக்கொள்வது என்று பொருள். அது அல்லாஹ்வை அவனுடைய அத்தனை பண்புகளுடனும் முழுமையாக ஏற்றுக் கொள்வது, அவனுடைய விதியை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அதில் திருப்தியடைவது.

தாய்தந்தையரின் நம்பிக்கையை ஆராயாமல் அப்படியே பின்பற்றுவதும் ஈமான்தான். ஆனால் அது இஸ்லாம் விரும்பும் உயிரோட்டமான ஈமானாக இருக்காது. அப்படிப்பட்ட ஈமான் மனிதனின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவனுடைய நம்பிக்கையும் வாழ்க்கையும் வேறுவேறு திசையில்தான் இருக்கும். உண்மையான ஈமான் மறைவான இறைவனை மனிதனின் கண்முன்னால் நிறுத்துகிறது. ஈமான் என்பது இறைவனை அறிவதும் அவனைக் கண்டடைவதுமாகும். இறைவனுடைய படைப்புகளின்மூலம் அவனைக் கண்டடையும் மனிதன் முழுமையான மாற்றத்திற்கு உள்ளாகிறான். அது அவனது சிந்தனைகளை, பண்புகளை மாற்றுகிறது. அவனைப் புத்தம்புது மனிதனாக ஆக்குகிறது.

ஈமான் அதிகரிக்கிறது, குறையவும் செய்கிறது. நம்பிக்கையாளர்களுனுடனான சகவாசம் ஈமானை அதிகரிக்கிறது. அதற்கு மாறானவர்களின் சகவாசம் அதனைக் குறைக்கிறது. இறைவாக்குறுதி நிறைவேறுவதைக் காணும்போது, இறைவனின் பராமரிப்பை, அவனது மறைமுகமான உதவியை உணரும்போது ஈமான் அதிகரிக்கிறது. ஷைத்தானின் ஊசலாட்டங்களுக்கு இரையாகி அவற்றுக்குப் பின்னால் செல்லும்போது ஈமான் குறைகிறது.

ஈமான் என்பது வெற்று நம்பிக்கையல்ல. அது செயல்வடிவம் பெறும்போதுதான் மனிதனுக்குள் செயல்படத் தொடங்குகிறது. அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்நிலைக்குக் கொண்டு செல்கிறது. அது தொடர்ந்து மனிதனுக்குள் செயல்பட்டுக் கொண்டேயிருக்கும், அவனைப் பலப்படுத்திக் கொண்டேயிருக்கும் ஒரு மாபெரும் சக்தி.

மனிதனின் நம்பிக்கையும் வாழ்வும் ஒரே திசையில் பயணிக்கும்போது அவன் அற்புதங்களைக் காண்கிறான். அந்த அற்புதங்கள் அவனது நம்பிக்கையை வலுப்படுத்தும் ஊட்டமாக அமைந்துவிடுகின்றன. அவன் யாராலும் அசைக்கமுடியாத அளவு உறுதியான ஈமானைப் பெற்றவனாகிவிடுகிறான்.

“யார் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறாரோ அவருக்கு அவன் ஒரு வழியை ஏற்படுத்துவான். அவர் நினைத்துப் பார்க்காத புறத்திலிருந்து அவருக்கு அவன் வாழ்வாதாரம் வழங்குவான். யார் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருக்கிறாரோ அவருக்கு அவனே போதுமானவன்.” (65:2,3)

ஈமான் என்பது வாழ்க்கையோடு தொடர்பு அற்ற வெற்று நம்பிக்கை அல்ல. அது நம்பிக்கையாளனின் வாழ்க்கையில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தக்கூடியது. அவனது வாழ்க்கையின் போக்கையே மாற்றக்கூடியது. அது அவனது ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் வெளிப்படக்கூடியது.

திருக்குர்ஆன் நம்பிக்கையாளர்களின் பண்புகளை படம்பிடித்துக் காட்டுகிறது. அவர்கள் எந்தக் காலகட்டத்தில் எந்த இடத்தில் வாழ்ந்தாலும் ஒரே மாதிரியானவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களின் சிந்தனையும் கவலையும் செயல்பாடுகளும் நோக்கங்களும் ஒன்றுபோலவே இருக்கும். திருக்குர்ஆன் வரைந்து காட்டும் சித்திரத்தைக் கொண்டு நம்பிக்கையாளர்களையும் நம்பிக்கையாளர்களைப் போன்று காட்டிக்கொள்பவர்களையும் மற்றவர்களையும் மிக எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம்.

நம்பிக்கையாளர்கள் தங்களின் நம்பிக்கையில் மேலும் மேலும் வலுப்பட்டுக்கொண்டே செல்வதற்கு அவர்களின் ஈமானிய அனுபவங்கள் முதன்மையான காரணிகளாக இருக்கின்றன. அவர்கள் உணரும் ஈமானிய அனுபவங்கள் இறைவனுக்கும் அவர்களுக்குமான தொடர்பை உறுதிப்படுத்திக்கொண்டே செல்கின்றன. அவர்கள் என்றும் அறுபடாத உறுதியான, பலமான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்கிறார்கள். அந்த நம்பிக்கையை தர்க்கங்களால் அலங்கார வார்த்தைகளால் தகர்த்துவிட முடியாது.

ஈமானிய அனுபவங்கள் என்று நான் குறிப்பிடுவது இறைவனின் உதவியை, அருகாமையை, தோழமையை, கண்காணிப்பை, பராமரிப்பை ஆற்றலை, அவன் அமைத்த நியதிகளை நம்பிக்கையாளன் உணர்வதாகும். அவன் எந்த நிலையிலும் உதவியின்றி கைவிடப்படமாட்டான். அவன் எதிர்பாராத, அறியாத புறத்திலிருந்து அவனுக்கு உதவிகள் வந்துகொண்டேயிருக்கும். இக்கட்டான, சிரமமான சூழலில்கூட வெளியேறுவதற்கு மிக இலகுவான வழியை அவன் பெறுவான். இறைசார்ந்த வாழ்க்கையில் மட்டுமே இத்தகைய அனுபவங்கள் சாத்தியமாகும்.

இயல்பாகவே சத்தியம் மிகத் தெளிவானது. பெரிய விளக்கங்கள் நுணுக்கமான தர்க்கங்கள் எல்லாம் அதற்குத் தேவையில்லை. இல்லாத ஒன்றை நிரூபிப்பதற்குத்தான் மெனக்கெட வேண்டும். சத்தியமோ தெளிந்த நீரோடைபோன்று நம் முன்னால் இருக்கிறது. பிறகு ஏன் பெரும்பாலோர் அதனைக் கண்டும் காணாமல் செல்கிறார்கள்?

சத்தியத்தின் மீது ஆர்வம் இல்லாமல் இருப்பதும் அதனை ஏற்றுக் கொள்ளும் வலிமையில்லாமல் இருப்பதும் அதனைவிட்டு விலகிச் செல்வதற்கான முதன்மையான காரணிகள் என்கிறார் செய்யித் குதுப். வாழ்க்கை என்பது வெறுமனே அனுபவித்தல் மட்டுமே என்று எண்ணுவோர் சத்தியத்தைக் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். அவர்களின் கவலையெல்லாம் எப்படியெல்லாம் வாழ்க்கையை அனுபவிப்பது? அதற்கான வழிவகைகள் என்னென்ன? என்பதாகத்தான் இருக்கும்.

சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் வலிமை என்பது ஒருவன் தன் இச்சைகளுக்கு அடிமையாகாமல் இருப்பதைக் குறிக்கும். தான் அனுபவித்துக் கொண்டிருக்கும் சொகுசான, அமைதியான வாழ்வு கெட்டு விடுமோ என்று அஞ்சுவோர் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் வலிமையில்லாதவர்களாவர். அவர்களைப் பொறுத்தவரை சத்தியம் அவர்களிடமிருந்து எதையும் வேண்டக்கூடாது, எதையும் பறிக்கக் கூடாது.

ஈமான் என்பது வெறுமனே சத்தியத்தை அறிதல் மட்டுமல்ல. அறிதல் மட்டும் அதற்குப் போதுமானதல்ல. அது உள்ளத்தின் செயல்பாடு. அதற்காக எதையும் இழக்கத் தயார் என்று உள்ளம் உறுதியாக எண்ணும்போது அந்த அறிதல் ஈமானாக உருமாற்றமடைகிறது. அதனை வெளிப்படையாகப் பிரகடனம் செய்கிறது.

முஸ்லிம்கள் இஸ்லாத்தை முறையாகப் பின்பற்றும்வரை அவர்களுக்கு இறைவனின் உதவியும் பாதுகாப்பும் உண்டு. அவர்களை யாராலும் வெல்ல முடியாது. அவர்கள் சிறுபான்மையினராக, பலமற்றவர்களாக இருந்தாலும் அவர்களிடம் இருக்கும் சத்தியம் பலமானது, அனைத்தையும் மிகைக்கக்கூடியது. வரலாறுநெடுகிலும் அவர்கள் பெரும்பாலான இடங்களில் சிறுபான்மையினராகத்தான் இருந்திருக்கிறார்கள். இஸ்லாத்தைக் கைவிட்ட சமயங்களில்தான் அவர்கள் ஒடுக்கப்பட்டுள்ளார்கள்.

தனி மனிதராகத் தம் அழைப்புப் பணியைத் தொடங்கிய நபியவர்களுக்கு “உமக்கு அருளப்படுவதை எடுத்துரைப்பீராக. மனிதர்களின் தீங்குகளிலிருந்து அல்லாஹ் உம்மைப் பாதுகாப்பான்” என்றது திருக்குர்ஆன். நாலாபுறமும் எதிரிகளால் சூழப்பட்ட அந்தப் பகுதியில்தான் நபியவர்கள் பதிமூன்று வருடங்கள் தம் பணியைத் தொடர்ந்தார்கள். அவர்களின் பணியைத் தடுப்பதற்கு, அவர்களைக் கொலைசெய்வதற்கு எதிரிகள் தீட்டிய அத்தனை சதித்திட்டங்களையும் இறைவன் ஒன்றுமில்லாமல் ஆக்கினான். இறைவன் அளித்த பாதுகாப்பைத் தாண்டி அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆச்சரியமான வகையில் தூதருக்கு வழங்கப்பட்ட மார்க்கம் முழு உலகையும் சென்றடைந்தது.

நாம் பாதுகாக்கப்படுவது படை பலத்தினாலோ பெரும் எண்ணிக்கையினாலோ அல்ல, நம்மிடம் இருக்கும் சத்தியத்தினால், நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையினால். “உண்மையில் நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் நீங்களே மேலோங்கி நிற்பீர்கள்” என்கிறது திருக்குர்ஆன்.

வெளிப்படையான காரணிகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால் அவற்றைவிட அதிகமாக இஸ்லாம் கற்றுத்தந்த மறைமுகமான காரணிகள் கவனத்தில் கொள்ளப்படவும் பேணப்படவும் வேண்டும். நம்முடைய பார்வையும் இறைநம்பிக்கையற்றவர்களின் பார்வையும் வேறுவேறு. அவையிரண்டும் ஒருபோதும் ஒரு புள்ளியில் ஒன்றிணையாது. அவர்களின் குறுகிய பார்வையை நாம் பின்பற்ற ஆரம்பித்துவிட்டால் இவ்வுலகம் மறுவுலகம் என ஈருலகையும் நாம் இழந்துவிடுவோம்.

Related posts

Leave a Comment