கட்டுரைகள் காணொளிகள் 

தமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்

Loading

இந்த மாதம் 4ஆம் தேதி (04-09-2018) மாலை ஓர் ஆய்வுரையில் கலந்துகொண்டேன். சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் அது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Media Forum சார்பாக கோம்பை அன்வரின் முயற்சி இது. ஜெர்மனியைச் சேர்ந்த டார்ஸ்டன் சாச்சர் (Torsten Tschacher) ‘Extraordinary Translations’ and ‘Loathsome Commentaries’: Early Quranic Translations in the Tamil World எனும் தலைப்பில் உரையாற்றினார். முஸ்லிம் பண்பாடுகள் மற்றும் சமூகங்களுக்கான பெர்லின் கல்லூரியில் (Berlin Graduate School Muslim Cultures and Societies) இளநிலைப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் அவர்.

தான் எழுதத் திட்டமிட்டிருக்கும் ஒரு நூலுக்காக ஏதேனுமொரு ஆய்வுப்பொருளைத் தெரிவுசெய்ய வேண்டிய சூழலில், எல்லோரும் செய்வதைப் போன்று வழமையான ஒன்றாக அது இருக்கக் கூடாதென டார்ஸ்டன் எண்ணியிருக்கிறார். சிறுவயதில் இந்தியா வந்த அனுபவம் இருந்தததாலும், குறிப்பாக தமிழ்நாடு அவருக்குப் பிடித்துப் போனதாலும், அது தொடர்பாக தனது ஆய்வுத் தலைப்பை அமைத்துக் கொண்டாலென்ன என்று எழுந்த சிந்தனையின் படியே அவர் தமிழ் முஸ்லிம்களின் ஆரம்பகால இலக்கியப் பங்களிப்புகள் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளார்.

ஆரம்பகாலத் தமிழ் முஸ்லிம் இலக்கியம் எனும்போது, திருக்குர்ஆனுக்கான தமிழ் மொழிபெயர்ப்புகளுக்கு அதில் ஒரு முக்கிய இடம் இருக்கிறது. அவை குறித்த மற்றொரு சுவாரஸ்யமான அம்சம், அவற்றின் எழுத்து வடிவம் தொடர்பானது. எழுதப்பட்ட உள்ளடக்கம் தமிழில் இருந்தாலும், அவற்றின் வரிவடிவமோ அறபு மொழியாக இருந்துள்ளது. ஏறக்குறைய முற்றாக வழக்கொழிந்துவிட்ட அம்மொழிவழக்கு இன்று ‘அறபுத் தமிழ்’ அல்லது ‘அர்வி’ (Arwi) என்று அறியப்படுகிறது. அறபுத் தமிழ் பற்றி தைக்கா ஷுஐபு ஆலிம் செய்துள்ள விரிவான ஆய்வு முக்கியமானது.

தமிழ் இலக்கியம் பற்றிச் செய்யப்படும் ஆய்வுகளில் பொதுவாகவே திருக்குர்ஆன் தமிழாக்கங்கள் பொருட்டாகக் கொள்ளப்படுவதில்லை. ‘பழங்காசு’ ப. சீனிவாசன் இது பற்றி தொகுத்துள்ள ஒரு சிறு நூலை மட்டுமே (‘அல்குர்ஆன்: தமிழ் மொழிபெயர்ப்புகளும் விரிவுரைகளும்’) இங்கு விதிவிலக்காகச் சொல்லமுடியும். சீனிவாசனும் அன்றைய நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

அறேபியாவில் இஸ்லாம் தோன்றிய குறுகிய காலத்திற்குள்ளாகவே (கி.பி. 738) தமிழகத்தில் அது அறிமுகமாகிவிட்டது. எனினும், அதிலிருந்து ஆயிரமாண்டுகள் கடந்த நிலையில், ஒப்பீட்டளவில் மிகத் தாமதமாகத்தான் திருக்குர்ஆன் தமிழுக்கு வந்தது (உருது மொழிபெயர்ப்பு பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் செய்யப்பட்டிருப்பதை இதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்). இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான் முழுமையான அளவில் திருக்குர்ஆனுக்கு தமிழ் மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன எனப் பொதுவாக நம்பப்பட்டாலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே அவை வரத்தொடங்கிவிட்டன என்பதே டார்ஸ்டனின் வாதம். உரையின் பிற்பகுதியில் அவர் அதை நிறுவிக் காட்டினார்.

அக்காலப்பிரிவை அடுத்து வந்த பலருக்கும் அவ்வாறு மொழிபெயர்ப்புகள் இருந்திருக்கின்றன என்பதே தெரியவில்லை. அல்லது தெரிந்திருந்தாலும், அவற்றின் ‘தரம்’ பற்றி தீவிரமான கேள்விகள் எழுப்பப்பட்டு விவாதங்கள் நடந்துள்ளன. அவை ‘மோசமான மொழிபெயர்ப்புகள்’ என்ற ஒரு மனப்பதிவு எங்கிருந்து வந்தது என்பதை டார்ஸ்டன் விளக்கினார். அதேபோல், பெரும்பாலும் ‘சீர்திருத்தவாத’ நோக்கம் கொண்டவர்களாலேயே ஆரம்பத்தில் திருக்குர்ஆன் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டது என மற்றொரு அபிப்பிராயம் நிலவுகிறது. அந்த வகையில், உரையின் போக்கு ‘முஸ்லிம் சீர்திருத்தவாதி’ பா. தாவூத் ஷா நோக்கித் திரும்பியது.

தாவூத் ஷா (1885-1969)

தாவூத் ஷா மெட்ராஸ் பிரசிடென்சி கல்லூரியில் 1909-12 காலப்பகுதியில் மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுடன், உ.வே. சாமிநாத ஐயரின் கீழ் படித்தவர். தேசியவாதப் போக்கு கொண்ட ஒரு மேட்டுக்குடிப் பின்னணியில் வளர்க்கப்பட்டவர். அவர் 1917ல் துணை மாஜிஸ்ட்ரேட்டாக நியமனம் பெற்றார். மிகவும் வெற்றிகரமாகத் தொடங்கிய தாவூத் ஷாவின் தொழில் வாழ்க்கை, காந்தி ஒத்துழையாமை இயக்கத்திற்கென அழைப்பு விடுத்தபோது தனது பதவியை விட்டு அவர் விலகியதோடு (1921) முடிவுக்கு வந்தது. 1920கள் முதல் 1930கள் வரை அவர் காங்கிரசின் தீவிர ஆதரவாளராகத் திகழ்ந்தார். 1922ல் அவர் செய்த ஒரு காரியம், அப்போதிருந்து அவருடைய வாழ்வின் இறுதிவரை தீராத தொந்தரவுதரும் ஒன்றாக மாறிப்போனது.

‘வோகிங் இஸ்லாமிக் மிஷன்’ என்ற அஹமதிய்யாஅமைப்பின் (காதியானி பிரிவு) சார்பில் லண்டனிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த Islamic Review என்ற இதழின் ஆசிரியராக இருந்த காஜா கமாலுத்தீன் என்பவர், தன்னோடு வந்து துணையாசிரியராகப் பணியாற்றும்படி கூறி தாவூத் ஷாவை லண்டனுக்கு அழைத்துச் சென்றார் (1922). முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் சீர்திருத்தப் பணியில் ஈடுபட வேண்டுமென்ற தாவூத் ஷாவின் எண்ணம் வலுவடைந்தது இக்காலகட்டத்தில்தான். வாழ்நாள் முழுக்க அவருடைய எதிரிகளால் அவர் ‘காதியானி’ எனத் தூற்றப்படுவதற்கும் அதுவே காரணமாகிப் போனது.

பிறகு 1923ல், ‘தாருல் இஸ்லாம்’ என்ற பெயரில் சொந்தமாக ஒரு இதழைத் தொடங்கினார். தாம் திருக்குர்ஆனை மொழிபெயர்க்க எண்ணியிருப்பதாக அதில் அறிவிப்புச் செய்தார் (1924).

தமிழ்நாட்டில் இஸ்லாம் பரவத் தொடங்கி இன்றோடு சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அறிஞர்கள் (உலமா) ஏராளமானோர் இருந்தபோதும், இன்றைக்குவரை யாரும் நம் வேதமாம் குர்ஆன் ஷரீஃபின் மூலத்தை மட்டுமேனும் கூட ஒரு தமிழறிஞரின் உதவியோடு திருத்தமான தமிழில் ஆக்கவில்லை. இப்போது கூட அப்படியொரு முயற்சி எங்கும் நடப்பதாக நாம் கேள்விப்படவில்லை. கிறித்தவர்கள் தங்கள் விவிலியத்தை பள்ளிக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது ஆகிய மொழிகளுக்கு பெயர்த்திருக்கின்றனர். முஸ்லிம்கள் அதிலிருந்து பாடம்படிக்க வேண்டும். தமிழறிந்த முஸ்லிம்களுக்குக் கற்பிப்பதற்குத் தேவைப்படும் (திருக்குர்ஆனுக்கான) தமிழ் மொழிபெயர்ப்பை யாரும் தயாரிக்கவில்லை. (தாவூத் ஷா, தாருல் இஸ்லாம், ஏப்ரல் 1924, பக்.150-151)

திருக்குர்ஆனைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமென்ற உந்துதல் தனக்கு வந்ததற்கான காரணத்தை தாவூத் ஷா இப்படி முன்வைத்தார். இதைத் தொடர்ந்து ஒரு கொந்தளிப்புத் தோன்றியது. பலர் அவரை விமர்சிக்க ஆரம்பித்தார்கள், பலர் அவருக்கு ஆதரவாக வாதிட்டார்கள். ஆதரித்தவர்களின் எண்ணம், “திருக்குர்ஆனுக்கு தமிழில் இதுவரை மொழிபெயர்ப்பு எதுவும் இல்லாத காரணத்தால், கண்டிப்பாக அப்படியொன்று நமக்குத் தேவைதான்” என்பதாக இருந்தது. அதுவரை திருக்குர்ஆனுக்கு தமிழில் மொழிபெயர்ப்புகள் இல்லை என்பது உண்மைதானா? எனில், ஏன் அந்த நிலை?

தென் தமிழ்நாட்டில் இஸ்லாம் பரவத் தொடங்கி நூற்றாண்டுகள் பல கடந்திருந்தாலும் திருக்குர்ஆன், ஹதீஸ் முதலிய சமயப் பிரதிகள் எதுவும் தமிழுக்குப் பெயர்க்கப்படாமைக்குக் காரணம் என்ன?… இஸ்லாமிய சமயப் பிரதிகள் அனைத்தையும் தமிழில் பிரசுரம் செய்தால், எல்லோர் கண்களும் திறந்துகொள்ளும்; மாறாக அவ்வாறு பிரசுரம் செய்யாவிட்டால், பாமர முஸ்லிம்கள் மீது கடிவாளமிட்டு அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ளலாம் என்ற சூழ்ச்சிகரமான எண்ணத்தில் அவர்கள் (சமய அறிஞர்கள்) இருக்கிறார்கள் என்பது மட்டுமே காரணம். “இல்லை, அது மட்டும் காரணமாக இருக்க முடியாது” என்று நாம் சொல்வோமெனில், பிறகு “இஸ்லாமிய நூல்களை இனிய தமிழுக்கு மொழிபெயர்க்கும் திறன் அவர்களிடம் இல்லை” என்றாவது சொல்லவேண்டி வரும். இவை இரண்டுமல்லாத வேறு காரணங்கள் எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. (ஷெய்கப்பா, தாருல் இஸ்லாம், டிசம்பர் 1925, பக். 552)

அதுவரை தமிழில் ஏன் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் வெளிவரவில்லை என்பதற்கு தாவூத் ஷாவின் ஆதரவாளர்கள் முன்வைத்த காரணம் இதுபோல இருந்தது. இதையடுத்து, தாவூத் ஷா 1924ல் தனது மொழிபெயர்ப்பின் முதல் இரண்டு தொகுதிகளை குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து வெளியிட்டார். பிறகு, தனது மொழிபெயர்ப்புப் பணிக்காக நிதி திரட்டும் எண்ணத்தில் மலேசியா-சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டார். அன்றைய காலத்தில் தமிழ் முஸ்லிம்களின் செல்வம் அங்குதான் செறிந்திருந்தது.

தாவூத் ஷா திருக்குர்ஆனை தமிழுக்கு மொழிபெயர்க்கும் விசயம், தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமில்லாமல் பரவலான மக்களின் கவனயீர்ப்பையும் பெறும்படி சில நிகழ்வுகள் இப்பயணத்தில் நடந்தேறின. அச்சமயத்தில் முக்கியமான தமிழ் ஊடகமாகத் திகழ்ந்த —இன்றும் வெளிவந்துகொண்டிருக்கிற— ‘தமிழ் நேசன்’ நாளிதழில் நரசிம்ம ஐயங்கார் என்பவர் இம்மொழிபெயர்ப்புப் பணியைச் சிலாகித்து இப்படி எழுதினார்:

இது போன்ற ஓர் அற்புதமான திருக்குர்ஆன் மொழிபெயர்ப்போ விரிவுரையோ நம் தாய்மொழியாம் தமிழில் இதுவரை வெளிவந்ததில்லை. தமிழுலகு திருக்குர்ஆனைப் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக அருந்தியாகங்கள் பல செய்து இவர் ஆற்றும் இத்தொண்டுக்கு தமிழ் மக்கள் என்ன கைம்மாறு செய்துவிட முடியும்? (நரசிம்ம ஐயங்காரின் மேற்கோள். தாருல் இஸ்லாம், மே 1925, பக். 233)

‘திருக்குர்ஆனுக்கு அதுவரை தமிழில் மொழிபெயர்ப்புகள் எதுவும் இல்லை’ என பல்லாயிரக் கணக்கானோர் படிக்கும் ஒரு நாளிதழிலேயே எழுதிப் பரப்பப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. சற்று முன்னர் குறிப்பிட்டதுபோல், மிக சுவாரஸ்யமான சில சம்பவங்கள் சிங்கப்பூரில் நிகழ்ந்தன. தாவூத் ஷாவின் எதிர்ப்பாளர்களும் ஆதரவாளர்களும் சிங்கப்பூரில் வைத்து ஒரு அறிக்கைப் போரில் மோதிக் கொண்டார்கள். மாறி மாறித் துண்டறிக்கைகளை வெளியிட்டுப் பரப்பினார்கள். ஒரு கட்டத்தில் விவகாரம் முற்றி, தாவூத் ஷாவின் ஆதரவாளர்களில் இருவர் நீதிமன்றத்தை நாடும் நிலை தோன்றியது. “இன்ன துண்டறிக்கை எங்களை காஃபிர்கள் எனப் பழிக்கிறது” என்று நீதிமன்றத்திடம் அவர்கள் முறையிட்டார்கள். “புண்பட்ட எங்களுக்கு நீதி வேண்டும்” என்று அவதூறு வழக்குத் தொடர்ந்தார்கள். இவ்வாறே அவ்விவகாரம் நீதிமன்றப் படியேறியது.

சர்ச்சைக்குரிய அத்துண்டறிக்கையை வெளியிட்டவரின் சார்பாக வாதாடிய வழக்குரைஞர், “சொல்லப்பட்ட விசயம் உண்மைதான் என்பதால், அது அவதூறு என்ற வகையில் வராது” எனச் சாதித்தார். அதாவது, தாவூத் ஷாவும் அவரின் ஆதரவாளர்களும் செய்த காரியங்கள்தான் இஸ்லாமியச் சட்டப்படி அவர்களை காஃபிர்களாக்கி இருக்கிறது என்று வாதிட்டார். இங்கு சுவாரஸ்யம் என்னவென்றால், ஒரு பிரிட்டிஷ் வழக்குரைஞர் ஒரு பிரிட்டிஷ் நீதிபதியிடம் இஸ்லாமிய மத விவகாரம் தொடர்பாக வாதிட்டுக் கொண்டிருந்தார். கொள்ளை அழகு!

‘தாவூத் ஷா ஒரு காஃபிர்’ என்பதற்கு அவ்வழக்குரைஞர் முன்வைத்த காரணமென்ன தெரியுமா? “அவர் திருக்குர்ஆனை மொழிபெயர்த்திருக்கிறார்” என்பதுதான்.

வழக்குரைஞர்: …குறிப்பாக கவனிக்க வேண்டியது என்னவெனில், தாவூத் ஷா குர்ஆனுக்கான தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டிருக்கிறார்.

நீதிபதி: அறபு அல்லாத வேறொரு மொழிக்கு குர்ஆனை மொழிபெயர்ப்பது பாவமாகக் கருதப்படுமா?

வழக்குரைஞர்: ஆம், நானறிந்த வரையில் “அவ்வாறு செய்வது தடைசெய்யப்பட்ட ஒன்றுதான்”.

(மேற்கோள் இடம்பெற்ற நூல்: பஷீர் A. மல்லல், Trial of Muslim Libel Case, Singapore, 1928, பக். 19)

வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதியின் தீர்ப்பு கீழ்வருமாறு அமைந்தது:

முஹம்மதியர்களில் 73 பிரிவுகள் இருந்தாலும் அவை அனைத்துமே இஸ்லாத்தின் வட்டத்திற்குள் அமைந்தவைதான் என்பதேகூட இஸ்லாமிய நம்பிக்கையின் விசாலத்தன்மையைக் குறிப்பதுடன், இவ்வழக்கில் முன்வைக்கப்படும் வாதம் எந்தளவு தூரம் இஸ்லாத்திற்கு அந்நியமானது என்பதையும் உணர்த்துகிறது… குர்ஆனை அறபு மொழியில் எழுதுவதற்கு மட்டுமே அனுமதியுண்டு, எனவே ஒருவர் வேறொரு மொழிக்கு குர்ஆனை மொழிபெயர்ப்பதால் காஃபிராகி விடுகிறார் என்று வாதிடப்படுகிறது. இவ்வாறு குர்ஆனின் அறிவை அறபு மொழியைப் புரிந்துகொள்வோருக்கு மட்டுமெனக் குறுக்குவது காரண காரிய அடிப்படையில் பார்த்தால் அபத்தமாகத் தெரிகிறது. (மேற்கோள் இடம்பெற்ற நூல்: பஷீர் A. மல்லல், Trial of Muslim Libel Case, Singapore, 1928, பக்.171)

ஆ.கா. அப்துல் அப்துல் ஹமீது பாக்கவி வெளியிட்ட திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பின் முதல் தொகுதியின் தலைப்புப் பக்கம். (மதராஸ் 1926)

களத்தை தாவூத் ஷாவிடமே முழுமையாக விட்டுக்கொடுத்துவிட முடியாது என்பதை தாமதமாக உணர்ந்துகொண்ட மரபார்ந்த அறிஞர்களில் சிலர் தாமும் திருக்குர்ஆனை தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்கள். அதில் முக்கியமானவர் ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி. அவர் தனது மொழிபெயர்ப்பை 1926ல் தொடங்கி 1943ல் நிறைவு செய்தார். இவரின் மொழிபெயர்ப்பையே ‘முழுமையான அளவில் தமிழில் வெளிவந்த முதல் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு’ எனப் பலரும் கருதி வருகிறார்கள். இதன் முதல் பதிப்பை டார்ஸ்டன் பிரிட்டிஷ் நூலகத்தில் கண்டிருக்கிறார். அதில் யாரோ தமிழில் குறிப்புகள் எழுதியிருக்கிறார்கள் (கீழுள்ள படத்தைப் பார்க்கவும்).

திருக்குர்ஆனின் 2:51 ஆம் வசனத்திற்கு யாரோ எழுதியிருக்கும் குறிப்புகள். (பிரிட்டிஷ் நூலகம், 14173.c.20)

மேலுள்ள படத்தில், வலது பக்கம் முழுவதும் அப்படியே காலியாக விடப்பட்டிருப்பதைக் காணலாம். ஒருவேளை, அங்கு அறபு மூல வாசகங்களை அச்சிடத் திட்டமிட்டிருந்த நிலையில், அவசர அவசரமாக வெளியிட்ட காரணத்தால் நேரமில்லாமல் அப்படியே பதிப்பித்திருக்கலாம். திருக்குர்ஆனை தமிழில் மொழிபெயர்த்தமைக்காக யார் தாவூத் ஷாவைப் பழித்தார்களோ அவர்களே இறுதியில் அவரோடு போட்டி போட்டுக்கொண்டு மொழிபெயர்ப்பு வேலையில் இறங்கியது தெரிகிறது.

ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி

தாவூத் ஷாவைப் போலவே ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவியும் தன்னுடைய மொழிபெயர்ப்பு வேலைகளுக்காக புரவலர்களைத் தேடிக் கண்டடைந்தார். இவர் மலேசியாவுக்குப் பதில் ஹைதராபாத்துக்குச் சென்றார், நிஜாமிடம் நிதியுதவி வேண்டி. ஔரங்காபாத்திலிருந்த வக்ஃபிலிருந்து அவருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. அப்துல் ஹமீது பாக்கவி ஹைதராபாத்தில் வைத்து அபுல் அஃலா மௌதூதியைச் சந்தித்தார். திருக்குர்ஆனை மொழிபெயர்ப்பதில் கொண்ட ஆர்வ மிகுதியால் மௌதூதி, ‘தர்ஜுமானுல் குர்ஆன்’ என்ற பெயரில் ஒரு பருவ இதழையே நடத்திவந்தார் என்பது இங்கு கவனிக்கத் தக்கது. அதன் ஒரு வெளியீட்டில் அப்துல் ஹமீது பாக்கவி பற்றி ஒரு சிறு தலையங்கம் கூட எழுதியிருக்கிறார்.

தமிழ் மொழி திருக்குர்ஆனின் மொழியிலிருந்து முற்றாக வேறுபட்டது. அது மட்டுமின்றி, இஸ்லாமிய இலக்கியங்களும் அதில் மிக மிகக் குறைவு. திருக்குர்ஆனின் ஒரு வார்த்தைகூட தமிழில் பயன்பாட்டில் இல்லை என்பதோடு, இஸ்லாமிய மார்க்கத்தின் மிகச் சாதாரண சொற்கள் கூட இம்மொழியில் இல்லை. இம்மொழி பேசும் தென்னிந்திய முஸ்லிம்களில் பெரும்பாலோர் மார்க்க அறிவின் விசயத்தில் முற்றும் அறிவற்றோராகவே இருக்கிறார்கள். தமிழில் அதிகபட்சமாக அவர்கள் அறிந்த இலக்கியமென்பது ‘தாஸ்தானே அமீர் ஹம்ஸா’ போன்ற முக்கியத்துவமற்ற பிரதிகள் மட்டுமே. எனவே, திருக்குர்ஆனின் அர்த்தங்களை இது போன்ற ஒரு மொழியில் விளக்குவதென்பது மிகவும் கடினமானது. அறிவுள்ள எவரும் இதை ஊகித்துக்கொள்ள முடியும். (மௌதூதி, தர்ஜுமானுல் குர்ஆன், 9(6) (ஹிஜ்ரி 1355): பக்.2)

இதில் மௌதூதி கூறியுள்ள அனைத்தும் பிழைதான் என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை. எனினும் இங்கு கவனிக்க வேண்டியது மௌதூதி, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, தாவூத் ஷா என அனைவருமே ஒரே விதமான வாதங்களையே முன்வைத்தார்கள். அவற்றைச் சுருக்கமாக இப்படிக் கூறலாம்:

  1. திருக்குர்ஆனுக்கு அதுவரை மொழிபெயர்ப்புகள் இல்லை என்ற விசயமே, மக்கள் இஸ்லாம் பற்றிய அறியாமையில் இருக்கிறார்கள் என்பதன் அறிகுறிதான்.
  2. ஏன் அந்த நிலையெனில், மத அறிஞர்கள் அறிவை தமக்கு மட்டுமாக வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்; பரவுவதை விரும்பவில்லை.
  3. அச்சுத்துறை போன்றவற்றில் அறிமுகமாகியுள்ள புதிய தொழிநுட்ப வாய்ப்புகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட ஒவ்வொருவரும் திருக்குர்ஆனை நேரடியாக வாசிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.

இதை டார்ஸ்டன் ‘சீர்திருத்தவாதக் கதையாடல்’ என்று அழைத்தார். முஸ்லிம்கள் தங்கள் மார்க்கத்தைக் குறித்து அறியாதவர்களாக இருந்தார்கள் என இக்கதையாடல் கோரினாலும், யதார்த்தத்தைக் கவனித்தால் அது உண்மையல்ல என்பது தெரியவரும்.

முன்னர் குறிப்பிட்ட சிங்கப்பூர் அவதூறு வழக்குக்குத் திரும்புவோம். பிரிட்டிஷ் வழக்குரைஞர்கள் என்ன வாதித்தார்கள் என்பது இங்கு முக்கியமல்ல. அச்சமயம் வேலூரில் படித்துவிட்டு சிங்கப்பூரில் உள்ள மதரஸாவில் கற்பித்துவந்த ஒரு அறிஞர் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டு தாவூத் ஷாவின் மொழிபெயர்ப்பு தொடர்பாக கருத்துரைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். அவர் அதுவரை அந்த மொழிபெயர்ப்பைப் பார்த்திருக்கவில்லை. நீதிமன்றத்தில் வைத்து அதைக்காட்டி, அது என்ன கொள்கையைப் போதிக்கிறது என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இது சுன்னத் ஜமாஅத் கொள்கைக்கு மாற்றமானதைப் போதிக்கிறது” எனப் பதிலளித்தார். என்ன வகையில் மாறுபடுகிறது எனக் கேட்டதற்கு, சில அத்தியாயங்களின் தொடக்கத்தில் வரும் தனியெழுத்துகளுக்கு (எ.கா. இரண்டாவது அத்தியாயமான அல்பகறாவின் தொடக்கத்தில் வரும் ‘அலிஃப் லாம் மீம்’) இது அர்த்தம் சொல்ல முயல்கிறது; ஆனால், இறைவனுக்கு மட்டுமே அவற்றின் அர்த்தம் தெரியும் என்பதுதான் சுன்னத் ஜமாஅத்தின் நிலைப்பாடு என்று அவர் பதிலளித்தார். இஸ்லாமிய வரலாற்றில் காலம்காலமாக அவ்வெழுத்துகளுக்கு அர்த்தம் கூற பலரும் முயன்றிருக்கிறார்கள், இதுவொன்றும் புதிதல்ல என்பதை நாம் மனதிலிருத்த வேண்டும். தாவூத் ஷாவின் மொழிபெயர்ப்பு ஆட்சேபகரமானதா எனக் கேட்டதற்கு, தனியெழுத்துகளுக்கு அர்த்தம் கூற முற்பட்டதைத் தவிர வேறெந்த ஆட்சேபகரமான கூறுகளும் அதில் இல்லை என அவர் பதிலளித்தார்.

இங்கு சுவாரஸ்யம் என்னவென்றால், ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவியும் கூட தனது மொழிபெயர்ப்பின் முதற் பதிப்பில் அவ்வெழுத்துகளை மொழிபெயர்த்திருந்தார். ஆனால், பிற்காலத்தில் அவை அடைப்புக்குறிக்குள் அச்சிடப்பட்டன. இது அத்துணை பெரிய விவகாரம் இல்லையென்றாலும் பல்வேறு குழுக்கள் இது போன்ற விவகாரங்களை முன்வைத்து மோதிக் கொண்டார்கள்.

சர்ச்சைக்குக் காரணமாக அமைந்த துண்டறிக்கையில் இடம்பெற்றிருந்த ஒரு வாசகம்தான், திருக்குர்ஆனை மொழிபெயர்ப்பதற்கு அனுமதியுண்டா என்ற விவாதத்தைக் கிளப்பியது:

நம்முடைய வேதமாம் திருக்குர்ஆனை அறபு அல்லாத எழுத்துகளில் எழுதுவது தடுக்கப்பட்ட ஒன்றாகும்… நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால்… நம்முடைய விரிவுரைகள் அறபுத் தமிழில் இருக்கிற காரணத்தால், தமிழர்கள் தமிழ் எழுத்துகளைக் கொண்டு நம்முடைய மார்க்கத்தை இழிவுபடுத்துவதற்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது. (சிங்கப்பூரைச் சேர்ந்த ஜே. முஹம்மது இஸ்மாயில் என்பவரால் 20 மே 1926 அன்று வெளியிடப்பட்ட துண்டறிக்கை, மேற்கோள் இடம்பெற்ற நூல்: பஷீர் A. மல்லல், Trial of Muslim Libel Case, Singapore, 1926, பக். 6)

இதன் அடிப்படையில்தான் பிரிட்டிஷ் வழக்குரைஞர்கள், திருக்குர்ஆனை மொழிபெயர்ப்பது அனுமதிக்கப்பட்டதா என்று நீதிமன்றத்தில் விவாதித்தார்கள். ஆனால், இதில் பேசப்படும் விசயமே வேறு. திருக்குர்ஆனை தமிழுக்கு மொழிபெயர்க்கக் கூடாது என்று அது சொல்லவில்லை. மாறாக, அவ்வாறு மொழிபெயர்க்கும்போது தமிழ் எழுத்துகளுக்குப் பதிலாக அறபு எழுத்துகளில் அதைப் பிரசுரிக்கும்படி மட்டுமே கூறுகிறது. இதன் மூலம், முஸ்லிம் அல்லாதவர்கள் அதைப் படித்து இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வாய்ப்பு இல்லாமல் போகும் என்பதே அதன் தர்க்கம்.

1920களில் இந்த விவாதம் நடப்பதற்கு வெகு முன்பே, திருக்குர்ஆன் —பகுதியாகவோ முழுமையாகவோ— தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. இவ்வாறு, ‘முதலாவது’ மொழிபெயர்ப்புக்கு முன்பே வெளிவந்திருந்த மொழிபெயர்ப்புகள் சிலவற்றின் ஒரு பட்டியலைக் கீழே பார்க்கலாம்:

  • 1874/75: பேருவளையைச் சேர்ந்த ஷெய்க் முஸ்தஃபா, ஃபத்ஹ் அர்ரஹ்மான் ஃபீ தர்ஜுமத் தஃப்சீர் அல்குர்ஆன், அத்தியாயங்கள் 46-114; அறபு எழுத்துகளில் பிரசுரமானது, பம்பாய்.
  • 1878-1883: ஹபீப் முஹம்மது இப்னு சதக் முஹம்மது இப்ராஹீம் அல்காஹிரி, ஃபுதுஹாத் அர்ரஹ்மானிய்யா ஃபீ தஃப்சீர் கலாம் அர்ரப்பானிய்யா, முழுமையானது, அறபு எழுத்துகளில் பிரசுரமானது, பம்பாய்.
  • 1880/81 (இரண்டாம் பதிப்பு 1911): நூஹ் இப்னு அப்துல் காதிர் அல்காஹிரி, ஃபத்ஹ் அல்கரீம் ஃபீ தஃப்சீர் அல்குர்ஆன் அல்அழீம், முழுமையானது, அறபு எழுத்துகளில் பிரசுரமானது, பம்பாய்.
  • 1886/87: நூஹ் இப்னு அப்துல் காதிர் அல்காஹிரி, ஃபத்ஹ் அல்கரீம், அத்தியாயங்கள் 1-4, அறபு எழுத்துகளில் பிரசுரமானது, ?
  • 1897: சுலைமான் இப்னு முஹம்மது அஸ்ஸைலானி, ரஹ்மத் அல்மன்னான் அலா அல்முத்தஅல்லிமீன் அல்வில்தான், அத்தியாயங்கள் 1 மற்றும் 78-114, அறபு எழுத்துகளில் பிரசுரமானது, கொழும்பு.
  • 1910/11: அப்துல் அஸீஸ் மற்றும் அப்துல் குத்தூஸ், தஃப்சீர் சூரத் யாசீன், அத்தியாயம் 36, அறபு எழுத்துகளில் பிரசுரமானது, மதராஸ்.
  • 1911: ஜீலானி ஃபக்கீர் இப்னு மன்னா முஹம்மது அல்காதிரி அல்ஷத்தாரி, கலாம் அல்ஆலா தர்ஜுமத் ஃகம்சத் அஜ்ஸா, அத்தியாயங்கள் 46-114, அறபு எழுத்துகளில் பிரசுரமானது, மதராஸ்.
  • 1912/13: காதிர்முஹ்யித்தீன் ஆலிம் சாஹிப், குர்ஆன் ஷரீஃப் தமிழ் தஃப்ஸீர்: இதில் அம்ம ஜுஸ்உ தர்ஜுமா முழுதும், தஃப்சீர் முதற்பங்கும் அடங்கியிருக்கிறது, அத்தியாயங்கள் 1 மற்றும் 78-114, தமிழ் எழுத்துகளில் பிரசுரமானது, மதராஸ்.
  • 1915: அ. முஹம்மது தாஹிர் சாஹிபு, The Holy Quran (முதல் பாகம்): பரிசுத்த வேதமாகிய குர்ஆன் ஷரீஃப்: முதலாவது அலிஃப் லாம் மீம் ஜுஸ்உ மட்டும், அத்தியாயங்கள் 1-2, தமிழ் எழுத்துகளில் பிரசுரமானது, தஞ்சாவூர்.
  • 1917: ஷைகு மீரான் முஹ்யித்தீன் சாஹிபு, யாசீன் சூரத்தின் தர்ஜுமா, அத்தியாயம் 36, தமிழ் எழுத்துகளில் பிரசுரமானது, மதராஸ்.
  • 1917/18: முஹம்மது புர்ஹானுத்தீன் இப்னு யூசுஃப் சாஹிபு, தஃப்சீர் அல்குர்ஆன் பி அஹ்சன் அல்புர்ஹான், 1 மற்றும் 78-114, அறபு எழுத்துகளில் பிரசுரமானது, மதராஸ்.

மேலே பச்சை வண்ணத்தில் கொடுக்கப்பட்டிருப்பவை முழுமையான மொழிபெயர்ப்புகள்; மற்றவை பகுதியளவிலானவை. சிவப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டிருப்பவை தமிழ் எழுத்துகளில் பிரசுரமான மொழிபெயர்ப்புகள்; மற்றவை அறபு எழுத்துகளில் பிரசுரமானவை.

எனவே, தாவூத் ஷாவுக்கு முன்னர் யாரும் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகளில் தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தவில்லை எனும் வாதம் அடிபட்டுப் போகிறது.

மேலே கொடுக்கப்பட்ட பட்டியல் இன்று ஏன் ஒட்டுமொத்தமாக மறக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றியே டார்ஸ்டன் இதன் பிறகு பேசினார். அதற்கு முன்பாக, இந்த ஆரம்பகால மொழிபெயர்ப்புகள் பற்றி சுவாரஸ்யமான சில குறிப்புகளை விவரித்தார்.

பிரிட்டிஷ் நூலகத்தில் பாதுகாக்கப்படும் (14507.e.4) ஃபுதுஹாத் அர்ரஹ்மானிய்யா ஃபீ தஃப்சீர் கலாம் அர்ரப்பானிய்யா (பம்பாய், ஹிஜ்ரி 1296) பிரதி.

திருக்குர்ஆனுக்கான முழுமையான தமிழ் மொழிபெயர்ப்புகளில் முதலாவதான ஃபுதுஹாத் அர்ரஹ்மானிய்யா ஃபீ தஃப்சீர் கலாம் அர்ரப்பானிய்யாவை எடுத்துக் கொள்வோம். சாதாரண மக்கள் பரவலாக இதை வாங்கிப் படித்திருப்பார்களெனத் தோன்றவில்லை. மிகவும் விலை கூடிய பதிப்பாகத் தெரிகிறது. பிரிட்டிஷ் நூலகத்தைத் தவிர வேறெங்கும் என்னால் இதைப் பார்க்க முடியவில்லை என்று டார்ஸ்டன் குறிப்பிட்டார்.

இந்நூலின் பிரசுரப் பணி நடந்து முடிய ஐந்து ஆண்டுகள் பிடித்திருப்பதாகத் தெரிகிறது. ஒவ்வொரு பக்கமாக கைகளால் எழுதி லித்தோகிராஃபி முறையில் பதிப்பிக்க வேண்டியிருந்தது. தலைப்புப் பக்கத்தில் 1878 என்றும், கடைசிப் பக்கத்தில் 1883 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் நேர்த்தியான பதிப்பு. ஒரு அடிக்கும் அதிகமான நீளத்தில், மிகவும் தடிமனாக, தோல் அட்டையுடன் பிரமிக்கத்தக்க வகையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. நூலைத் திறந்து பார்த்தால் அதன் அழகில் அசந்து போவோம்.

ஃபுதுஹாத் அர்ரஹ்மானிய்யா ஃபீ தஃப்சீர் கலாம் அர்ரப்பானிய்யா (பம்பாய், ஹிஜ்ரி 1296), பக்.622

தடிமனான எழுத்துகளில் உள்ள வரிகளெல்லாம் அறபு மூல வசனங்கள். அவற்றுக்கு நடுவே உள்ள வரிகளில் அவற்றுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு அறபு எழுத்துகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.

திருக்குர்னின் 112வது அத்தியாயத்தின் முதல் வசனம்.

சிறிய அறபு எழுத்துகளில் கொடுக்கப்பட்டிருக்கும் தமிழ் மொழிபெயர்ப்பு இப்படி வருகிறது: நாயனைத் தொட்டும் கேட்டவர்களுக்குச் சொல்லும்: அவன் அல்லாஹ் ஒருவன்தான்.

தாளின் வலப்பக்கத்தில் விரிவுரைக் குறிப்புகள் இரண்டு பத்திகளாக (column) அச்சிடப்பட்டுள்ளன. ஒன்றில் ழாஹிர் விளக்கமும் (வெளிப்படையான அர்த்தம்), மற்றதில் பாத்தின் விளக்கமும் (மறைமுக அர்த்தம்) தரப்பட்டுள்ளன.

மற்றொரு முழுமையான மொழிபெயர்ப்பான தஃப்சீர் ஃபத்ஹ் அல்கரீமைப் பார்க்கலாம். இதை எழுதிய காயல்பட்டிணத்தைச் சேர்ந்த நூஹ் இப்னு அப்துல் காதிர் அல்காஹிரி மிக முக்கியமான ஓர் அறிஞர். இது சற்று வேறு முறையில் பதிப்பிக்கப்பட்டிருப்பதை நம்மால் கவனிக்க முடியும்.

நூஹ் இப்னு அப்துல் காதிர் அல்காஹிரி, தஃப்சீர் ஃபத்ஹ் அல்கரீம் (பம்பாய், ஹிஜ்ரி 1329), முதல் தொகுதி, பக்.5

இது முந்தையதைக் காட்டிலும் விலை மலிவான பதிப்பாகத் தெரிகிறது. இப்போது கூட இதன் பிரதிகள் தமிழ்நாட்டில் சில இடங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலுள்ள படத்தில் தரப்பட்டிருக்கும் பக்கம் அதன் இரண்டாம் பதிப்பிலிருந்து எடுக்கப்பட்டது. இதன் லே அவுட் முந்தையதைக் காட்டிலும் எளிமையாகக் காட்சியளிக்கிறது. தடிமனான எழுத்துகளில் இருப்பது திருக்குர்ஆனின் மூல வாசகங்கள். அதைத் தொட்டடுத்து அவற்றுக்கான அர்த்தங்கள் தமிழில் அறபு எழுத்துகளைப் பயன்படுத்தித் தரப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு கீழுள்ள படத்தைப் பார்க்கவும்.

‘மாலிக்கி யவ்மித் தீன்’ என்ற வசனம் ‘கூலி கொடுக்கிற நாளன்னக்கி ராஜன்’ என மொழிபெயர்க்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. இதையடுத்து ‘அறிந்து கொள்’ என்ற வார்த்தையும் அதைத் தொடர்ந்து மேலதிக விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.

கீழுள்ள படத்தில் இருப்பது கொழும்பில் வெளியிடப்பட்ட மொழிபெயர்ப்பு. இது குறிப்பாக குழந்தைகளுக்கென்றே வெளியிடப்பட்டிருக்கிறது. சிறு சிறு பாடங்கள், ஒவ்வொரு அத்தியாயத்திற்குமான சொல் அட்டவணை போன்ற பல சுவாரஸ்யமான அம்சங்களுடன் இது பதிப்பிக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

சுலைமான் இப்னு முஹம்மது அஸ்ஸைலானி, ரஹ்மத் அல்மன்னான் அலா அல்முத்தஅல்லிமீன் அல்வில்தான் (கொள்ளுப்பிட்டிய [கொழும்பு] ஹிஜ்ரி 1315)
முதன் முதலாக தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தி வெளிவந்த திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பின் தலைப்புப் பக்கம் கீழே படத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் வெளியீட்டிற்கு நிறைய செலவாகியிருக்குமெனத் தெரிகிறது. பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு என பல வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உள்ளே கஅபாவின் படம்கூட அச்சிடப்பட்டிருக்கிறது.

காதிர்முஹ்யித்தீன் ஆலிம் சாஹிப், குர்ஆன் ஷரீஃப் தமிழ் தஃப்ஸீர் (மதராஸ், ஹிஜ்ரி 1331)

இந்த ஆரம்பகால மொழிபெயர்ப்புகளை உற்று நோக்கினால் சில விசயங்கள் புலப்படுகின்றன. புவியியல் ரீதியில் இவை பல்வேறு பிரதேசங்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக அமைந்துள்ளன. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கிழக்கு இலங்கைப் பிரதேசம் இதில் விதிவிலக்கு. கீழுள்ள படத்தில் தரப்பட்டுள்ள சிவப்புப் புள்ளிகள் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் அச்சிடப்பட்ட இடங்களைக் குறிக்கின்றன. மஞ்சள் புள்ளிகள் அவற்றை மொழிபெயர்த்த அறிஞர்கள் பிறந்த ஊர்களைக் குறிக்கின்றன.

மார்க்க அறிஞர்கள் அறிவைத் தனியுடைமையாக்கிக் கொள்வோராகவும், அது பரவுவதைத் தடுப்போராகவும் இருந்தார்கள் என தாவூத் ஷா போன்றோர் வாதிட்டதுக்கு மாற்றமாக, இம்மொழிபெயர்ப்புகளைச் செய்தவர்கள் அனைவரும் விதிவிலக்கின்றி நன்கு தேர்ச்சிபெற்ற மார்க்க அறிஞர்களாகவே (உலமா) இருந்துள்ளார்கள். உதாரணத்திற்கு, ஃபத்ஹ் அல்கரீமின் ஆசிரியர் நூஹ் இப்னு அப்துல் காதிர் அல்காஹிரியை எடுத்துக் கொண்டால் அவர் அறபுக் கவிதைகள், ஹதீஸ், வாழ்க்கை வரலாறுகள் என ஏராளாமானவற்றைத் தமிழில் ஆக்கியிருக்கிறார். ஷாதுலிய்யா சூஃபி அமைப்பில் உறுப்பினராக இருந்த அவர் அந்த சூஃபி அமைப்பின் நிறுவனரைப் பற்றியும், அறபு நாட்டில் வசித்த தனது சொந்த சூஃபி ஆசானைப் பற்றியும் கூட வாழ்க்கை வரலாறுகளைத் தமிழில் எழுதியிருக்கிறார்.

அதேபோல், 1920களில் சூஃபி மரபுகளெல்லாம் பிற்போக்கானவையாக, இறுக்கமானவையாக, அறிவு முன்னேற்றத்துக்கு எதிரானவையாகப் பார்க்கப்பட்டு விமர்சிக்கப்பட்டன. ஆனால், இந்த ஆரம்பகால திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பைச் செய்தவர்கள் எல்லாம் பெரும்பாலும் காதிரிய்யா, ஷாதுலிய்யா, ஷத்தாரிய்யா போன்ற சூஃபி மரபைச் சேர்ந்தவர்கள் மத்தியிலிருந்தே வந்திருப்பதைக் காணலாம். 

இவற்றில் ஒரேயொரு மொழிபெயர்ப்பை மட்டுமே சீர்திருத்தவாத முகாமைச் சேர்ந்தது எனச் சொல்ல முடியும். காவிரி டெல்டா பிரதேசமான தஞ்சாவூரைச் சேர்ந்த வழுத்தூரிலிருந்து வந்த மொழிபெயர்ப்பு அது. பெரும்பாலான சீர்திருத்தவாத இயக்கங்கள் காவிரி டெல்டா பகுதிகளில் இருந்தே வந்துள்ளன என்பது நம் கவனத்திற்குரியது. தாவூத் ஷா காலத்திற்கு முன்பே, முதல் உலகப் போர் காலகட்டத்திலேயே சீர்திருத்தவாதக் கண்ணோட்டத்தை ஆதரிக்கும் பல்வேறு அமைப்புகள் அங்கிருந்த சிறுநகரங்களில் உருவாக்கப்பட்டிருந்தன என்பது இதற்குக் காரணமாக இருக்கலாம்.

இவ்வாரம்பகால மொழிபெயர்ப்புகளின் மற்றொரு பொதுப்பண்பு, இவை சமூகத்தில் சாதாரண மக்களின் தரப்பிலிருந்து வெளிவந்தவையல்ல. மேட்டுக்குடி புரவலர்களின் ஆதரவுகள் இவற்றுக்கு இருந்தன. உதாரணமாக மேலே குறிப்பிடப்பட்ட கொழும்பிலிருந்து வந்த மொழிபெயர்ப்பை எடுத்துக்கொண்டால், அதற்கு உதவியது மிகப்பெரும் செல்வந்தரும் பிரபல கட்டட ஒப்பந்ததாரருமான வாப்புச்சி மரைக்காயர் பாஸ் என்பவராவார். கொழும்பில் அமைந்துள்ள இலங்கை தேசிய அருங்காட்சியகத்தை கட்டியது இவர்தான். நூலாசிரியர் அதன் முன்னுரையில், வாப்புச்சி மரைக்காயர் தன்னை அணுகி பள்ளிக் குழந்தைகளுக்குப் பயன்படும் வகையில் திருக்குர்ஆனுக்கு ஒரு மொழிபெயர்ப்பைக் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தியதாகக் குறிப்பிடுகிறார். இம்மொழிபெயர்ப்பை திறனாய்வு செய்து நற்சான்றிதழ் அளித்த சையது முஹம்மது பின் அஹ்மது (எ) மாப்பிள்ளை லெப்பை என்பவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களிலேயே மிகப்பெரிய தமிழ் இஸ்லாமிய அறிஞராவார். அது மட்டுமின்றி, திருக்குர்ஆனை மிகப் பரவலாக மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டுமென்ற நோக்கத்திலேயே தாம் இந்த மொழிபெயர்ப்பை வெளியிடுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வகையில் பார்த்தால், தாவூத் ஷா போன்ற சீர்திருத்தவாதிகள் மரபார்ந்த அறிஞர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் அடிப்படையிலேயே வலுவற்றவையாகின்றன. அம்மொழிபெயர்ப்புகள் பலவற்றிலும் உள்ள குறிப்புகள் அக்குற்றச்சாட்டுகளைப் பொய்ப்பிப்பவையாகவே அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, கீழுள்ள பத்தியைப் பாருங்கள்:

காயல்பட்டிணத்தைச் சேர்ந்த அறிஞர் சதக் முஹம்மது இப்ராஹீம் சாஹிபு லெப்பையின் மகன் ஹபீப் முஹம்மது கூறுவதாவது: இதுவரை தமிழில் இது போன்று திருக்குர்ஆனுக்கு விரிவுரை எதுவும் இல்லாத காரணத்தால், அத்தகைய விரிவுரையைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் தம்முடைய திருக்குர்ஆன் விரிவுரைத் தாகத்தைத் தணிக்கக் கூடியோர் யாரும் இல்லாததைக் கண்டு, அத்தகைய ஒரு விரிவுரையை ஆக்கித் தருவதற்கான அறிவு இல்லாத என்னிடத்தில் வந்து, அப்படியொன்றை ஆக்கித் தரும்படி மன்றாடினார்கள். மனிதருள் சிறந்தவறும், மகத்துவம் பொருந்திய உண்மையைத் தரிசித்தவர்களுமான நபிமார்களுக்கெல்லாம் தலைவரும் ஆனவரின் பரிந்துரையின் பேரிலும் —இறைவன் தனது அருளையும் அமைதியையும் அவருக்கு அருள்வானாக— அவருடைய உயர் கலீஃபாக்கள், குதுபுகள், மகான்கள் ஆகியோரின் பரிந்துரையின் பேரிலும், அத்தகைய ஒன்றை எப்படித் தொகுப்பது என்பதை இறைவன் எனக்கு வெளிப்படுத்தினான். ஒரு விடையைப் போல் அந்த மகான்களிடமிருந்து எனக்கு ஒரு சமிக்ஞை வந்ததும், அவர்களின் ஆசீர்வாதங்களின் உதவியால் நான் அதை (விரிவுரையை) வார்த்தைகளாக உருவாக்கி, ‘ஃபுதுஹாத் அர்ரஹ்மானிய்யா ஃபீ தஃப்சீர் கலாம் அர்ரப்பானிய்யா’ என்று அதற்குப் பெயரிட்டேன்… (ஹபீப் முஹம்மது, ஃபுதுஹாத் அர்ரஹ்மானிய்யா ஃபீ தஃப்சீர் கலாம் அர்ரப்பானிய்யா, பம்பாய், ஹிஜ்ரி 1296, பக். i)

இதில் அவர் மிகத் தெளிவாகவே, மக்கள் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பை வாசிக்க விரும்பியதாகவும், அதற்காகவே தாம் அதை மொழிபெயர்த்ததாகவும் குறிப்பிடுவதைப் பார்க்கலாம். முழுமையான அளவில் வெளிவந்த திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகளாக இவை இருந்தாலும், அதற்கு முன்னர் குறிப்பான கருத்துகளை விளக்குவதற்காக திருக்குர்ஆன் வசனங்களை மொழிபெயர்க்கும் நீண்ட நெடியதொரு மரபின் தொடர்ச்சியிலேயே இவை வருவதைப் புரிந்துகொள்வது கடினமில்லை. இதற்கு உதாரணமாகக் கீழுள்ளவற்றைக் கூறலாம்.

… — கோலமுடன்    [665]

அர்றஹ்மான் என்ற்’ உலகில் அனைவர்க்கும் ஷபாஅத்தில் ஒரு

குறை பகரா-க் கிருபை தருங் கோமானே — இறைவன் உன்னை  [666]

நின்று தெரிசிப்பவர்க்கு நிர்றகீம் எனும் பழைய

நன்றி-க் கிருபை தரு’ நல்லோனே-ய் — என்றும் உயர்  [667]

ஏவல் உறு மாலிக்கி யௌமித்தீன் என்ற்’ அடியார்க்க்’

ஆவல் உறுங் கூலி கொடுத்த்’ ஆள்பவனே — …   [668]

(தக்கலை பீர்முஹம்மது, ஞானப்புகழ்ச்சி)

மேலே கொடுக்கப்பட்ட அடிகள், பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபல தமிழ் சூஃபிக் கவிஞர் தக்கலை பீரப்பா எழுதிய ஞானப்புகழ்ச்சி நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. அல்லாஹ்வைத் துதிக்கும் நோக்கில் அவர் எழுதிய இப்பாடல்களில் அவர் திருக்குர்ஆனின் ஃபாத்திஹா அத்தியாயத்தின் வசனங்களைக் குறிப்பிட்டு, அவற்றின் மொழிபெயர்ப்புகளையும் வழங்கியிருக்கிறார்.

அதே போல், பின்னர் வந்த உரைநடை நூல்களிலும் கூட இது போல் திருக்குர்ஆன் வசனங்கள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளதைப் பார்க்க முடியும்.

மூல வசனமும் (சிவப்பு) அதற்கான தமிழ் மொழிபெயர்ப்பு அல்லது விரிவுரையும் (நீலம்) மஹ்மூத் பின் முஹம்மது லெப்பையின் ‘இஸாம் அல்ஃபவாயித் ஃபீ நிஸாம் அல்அகாயித் (கி.பி. 1730) நூலில் இடம்பெற்றுள்ளது.

இது போன்ற நூல்களில் திருக்குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் குறிப்பிட்டு அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளையும் வழங்குவது மிக இயல்பான நடைமுறையாக இருந்து வந்துள்ளது. எனவே, திருக்குர்ஆன் வசனங்களை தமிழுக்கு மொழிபெயர்க்கக் கூடாது என எந்தவொரு தடையும் இருந்ததாகத் தெரியவில்லை.

எனினும், முழுமையான முறையில் திருக்குர்ஆனுக்கான தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடுவது மட்டுமே அதுவரை நடந்திராத ஒன்றாக இருந்துள்ளது. இதற்குப் பல காரணங்கள் இருந்திருக்கலாம். அவற்றில் தனது அபிப்பிராயமென டார்ஸ்டன் குறிப்பிட்டது சாரத்தில் இவ்வாறு இருந்தது: அதாவது, குறிப்பிட்ட விசயங்களை விளக்குவதற்காகவும் எந்த அடிப்படையில் அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டுமென்பதை தெளிவுபடுத்துவதற்காகவும் தேவைப்படும் திருக்குர்ஆன் வசனங்களை மொழிபெயர்த்துக் கொடுக்கலாம். எனினும், திருக்குர்ஆன் வசனங்களுக்குச் சொந்தமாகப் பொருள்கொள்ளவும் அதை முன்வைத்து வாதிடவும் முயல்வதென்றால் மூலத்தை அதன் மொழியிலேயே அணுகி அறிவதுதான் பொருத்தமாக இருக்கும். எனவே, சாதாரண மக்களுக்கு அது தேவையில்லை என்று நினைத்திருக்கலாம்.

எனினும், இந்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறியதுடன் இறுதியில் திருக்குர்ஆனுக்கு தமிழில் முழுமையான மொழிபெயர்ப்புகள் வரத் தொடங்கியதற்குக் காரணங்களாக அமைந்த தொழில்நுட்பம், கருத்துரு, சித்தாந்தம் என்ற மட்டங்களில் அமைந்த காரணிகளை டார்ஸ்டன் விளக்கிப் பேசினார்.

தொழில்நுட்பமென அவர் குறிப்பிட்டது அச்சுத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பானது. திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகளை வெளியிட முனைந்தவர்கள் எல்லோரும் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில குறிப்பிட்ட முடிவுகளுக்கு வர வேண்டியிருந்தது. மொழிபெயர்ப்புடன் அறபு மூல வசனங்களையும் சேர்த்து அச்சிட வேண்டுமா, மூலம்-மொழிபெயர்ப்பு இரண்டையும் அறபு எழுத்துகளிலேயே அச்சிடுவதா இல்லை அறபு-தமிழ் இரண்டின் எழுத்துகளையும் பயன்படுத்துவதா, மூலத்தையும் மொழிபெயர்ப்பையும் அடுத்தடுத்த வரிகளில் அச்சிடுவதா அல்லது எழுத்துரு மற்றும் அதன் அளவில் மட்டும் வேறுபடுத்தி ஒரே வரியில் அச்சிடுவதா போன்ற கேள்விகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வெகு ஆரம்பக் கட்டத்தில் மொழிபெயர்ப்புக்கும் அறபு எழுத்துகளையே பயன்படுத்துவது நடைமுறையில் அதிக வசதியாக இருந்துள்ளது. ஏனெனில், தமிழ் எழுத்துகளில் அதை அச்சிட வேண்டுமென்றால் அன்றைக்கிருந்த தொழில்நுட்பத்தில் அதை இரண்டு சுற்றுகளாக அச்சிட வேண்டியிருந்தது. இப்படி பல்வேறு காரணங்களும் இவ்விவகாரத்தில் பங்காற்றியுள்ளன.

கீழுள்ள படம் காலவரிசையில் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் அச்சிடப்பட்டுவந்த முறையில் ஏற்பட்ட மாற்றங்களைச் சித்தரிக்கிறது.

படத்தின் வலது கோடியில் இடம்பெற்றிருக்கும் சீர்திருத்தவாத மொழிபெயர்ப்புப் பதிப்பில், அறபு மூல வசனங்கள் முழுமையாகத் தவிர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதை மக்கள் அவ்வளவு ஆரோக்கியமான ஒன்றாகப் பார்க்கவில்லை, வரவேற்கவில்லை.

அதேபோல் இந்த ஆரம்பகாலப் பதிப்புகளில் நம் கவனத்தைக் கவரும் இன்னொரு அம்சம், இன்றிருப்பது போன்ற நிறுத்தற்குறிகள் (புள்ளி, காற்புள்ளி, அரைப்புள்ளி, அடைப்புக்குறி etc.) எதுவும் அவற்றில் பயன்படுத்தப்படவில்லை. உதாரணமாக, நாம் இன்று திருக்குர்ஆனை மொழிபெயர்க்கும்போது ஒரு கோர்வையாக வர வேண்டுமென்பதற்காக மூலத்தில் இடம்பெறாத சிற்சில வார்த்தைகளைச் சேர்த்து எழுதும்போது அவற்றை அடைப்புக்குறிக்குள் இட்டு எழுதுவது வழக்கம். அதுபோன்ற எதையும் இந்த ஆரம்பகால ஆக்கங்களில் பார்க்க முடியாது.

அடுத்தது கருத்துரு மட்டத்தில் நிகழ்ந்த மாற்றங்கள். ஆரம்பகால மொழிபெயர்ப்புகள் எல்லாம் தம்மை ‘தஃப்சீர்’ (விரிவுரை) என்றே அழைத்துக் கொண்டன. இதற்குக் காரணமென்ன? இரண்டும் வெவ்வேறானவைபோல் தோன்றினாலும் அன்றிருந்த கருத்துரு அளவில் அவை முற்றிலும் வெவ்வேறானவை அல்ல. சில ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகளிலும் வேறு அறபு நூல்களிலும் ‘மொழிபெயர்ப்பு’ என்பதைக் குறிக்க தமிழில் ‘உரை’ என்றும், அறபியில் ‘தர்ஜுமா’ என்றும் குறிக்கும் வழக்கம் இருந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

அது மட்டுமின்றி, ‘திருக்குர்ஆனை யாராலும் மொழிபெயர்க்க முடியாது, அதன் அர்த்தங்களை விளக்க மட்டுமே முடியும்’ என்ற கருத்தும் வலுவாக நிலவி வந்துள்ளது, இன்றும் நிலவி வருகிறது. அவ்வாக்கங்கள் ‘தஃப்சீர்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டதற்கு இக்கருத்துருவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ‘மொழிபெயர்ப்பு’ என்ற வார்த்தை தொல்காப்பியம் காலம் முதலே தமிழில் பயன்பாட்டில் இருந்தாலும், நாம் இன்று புரிந்துகொள்கிற படியான நன்கு வரையறுக்கப்பட்ட அர்த்தத்தில் அன்று அது பயன்படுத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது. தமிழ்ச் சூழலில் மிகவும் பிற்காலத்தில்தான் இவ்விரு பதங்களுக்குமான வித்தியாசம் நன்கு நிலைபெறத் தொடங்கியது.

தாவூத் ஷாவின் விசயத்தில் இதற்கு ஒரு முக்கியத்துவம் இருந்தது. கீழுள்ள பத்தியைக் கவனியுங்கள்:

தம்மிடமுள்ளதுதான் சுன்னத் ஜமாஅத்தால் அங்கீகரிக்கப்பட்ட தஃப்சீர் (விரிவுரை) எனச் சிலர் வாதிடுகிறார்கள். நாம் ஆராய்ச்சி செய்த வகையில், 27 கோடி பேர்களைக் கொண்டசுன்னத் ஜமாஅத் தமக்குள் ஒன்றுபட்டு, அங்கீகரிக்கப்பட்ட ஒரு தஃப்சீர் என இதுநாள்வரை எந்த ஒன்றையும் முன்வைத்ததாகத் தெரியவில்லை. “இதுதான் அங்கீகரிக்கப்பட்ட தஃப்சீர்”, “அதுதான் அங்கீகரிக்கப்பட்ட தஃப்சீர்” என ஒவ்வொருவரும் கூறுவதற்கும்; அதை மற்றவர்கள் மறுப்பதற்கும் முடிவே இல்லை.

நமது தமிழ் மொழிபெயர்ப்பை நாம் ஏதேனுமொரு பாடாவதி தஃப்சீரின் அடிப்படையில் அமைத்துக் கொள்வோமென்று இப்போதும்கூட சிலர் கனவு காண்கிறார்கள். உலகிலுள்ள சுன்னத் ஜமாஅத் சமுதாயம் ஆதாரபூர்வமானதென்று ஏற்றுக்கொண்டிருக்கும் எந்தவொரு தஃப்சீரையும் நாம் பின்பற்றவில்லை.

(தாவூத் ஷா, தாருல் இஸ்லாம், ஏப்ரல் 1924, பக்.149)

ஒருவகையில், தாவூத் ஷாவின் இக்கூற்றுதான் மக்களை அவருக்கு எதிராகத் திருப்பிவிட்டது எனச் சொல்லலாம். ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்த விரிவுரையையும் பின்பற்றாமல் தன்னுடைய சொந்தப் புத்தியைப் பின்பற்றப் போவதாக தாவூத் ஷா சொன்னதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும், அக்கூற்றில் உண்மையில்லை என்பது அவருக்கும் தெரியும், எல்லோருக்கும் தெரியும். அதாவது, 1920களில் அவர் செய்த திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு அப்படியே வார்த்தைக்கு வார்த்தை ஏற்கனவே வெளிவந்திருந்த ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பைப் பின்பற்றி அமைந்திருந்தது. அதை இயற்றியது மௌலவி முஹம்மது அலி என்ற ஓர் அஹமதிய்யா அறிஞர்.

கடைசியாக, சித்தாந்த மட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள். ஆரம்பத்தில் தமிழ்நாட்டிலிருந்த ஒவ்வொரு மதக் குழுவிடத்திலும் அததற்கேயுரிய சமயப் பிரதிகள் இருந்தன. அவர்களைத் தவிர யாரும் அதைப் படிப்பது எளிதல்ல. ஒரு இலக்கண அறிஞர் இப்படிச் சொன்னதாகக் கூட குறிப்பு உண்டு: “எந்தவொரு சைவரும் (சமணர்களின்) சீவக சிந்தாமணியைப் படிக்கக் கூடாது.” வைணவர்கள் தமக்குரிய மணிப்பிரவாளங்களையும், சைவர்கள் தமது சைவ சித்தாந்தங்களையும் வைத்திருந்தார்கள். இதே பின்னணியில்தான் முஸ்லிம்களும் தங்கள் நூல்களை அறபுத் தமிழில் அமைத்ததன் வழியாக மற்றவர்கள் அவற்றை அணுகுவதைச் சிரமமாக்கி வைத்திருந்தார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை இது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை.

அதன் பிறகு பிராட்டஸ்டண்டுகள் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். ஒவ்வொருவரும் புனிதப் பிரதியை வாசிக்க முடிய வேண்டும் என்பதே அவர்களின் சித்தாந்தம். கத்தோலிக்கர்கள் அதுவரை விவிலியத்தை மொழிபெயர்க்கவில்லை என்பது பிராட்டஸ்டண்டுகள் அவர்கள் மீது வைத்த முக்கியக் குற்றச்சாட்டுகளில் ஒன்று. அது முழு உண்மையல்ல என்றாலும், விவிலியத்தை வாசித்து விளங்கி எடுத்துரைப்பது அறிஞர்களின் பணி என்பதாகவே அதுவரை சுருக்கிப் பார்க்கப்பட்டு வந்ததை மறுக்க முடியாது. அவர்களின் வருகைக்குப் பிறகே, தமிழில் முன்வைக்கப்படும் எதுவாக இருந்தாலும் அது தமிழறிந்த அனைவருக்கும் புரியும் வகையில் எளிய மொழியில் உரைநடைப் பாணியில் அமைய வேண்டுமென்ற கருத்து வலுப்பெறத் தொடங்கியது. இதன் பிறகே அறபுத் தமிழில் அமைந்த முந்தைய மொழிபெயர்ப்புகள் எல்லாம் பிரச்சினைக்குரியவையாகத் தெரிய ஆரம்பித்தன.

ஒவ்வொரு குழுவும் தமது புனிதப் பிரதிகளை தமக்காக மட்டுமே வைத்திருந்த அப்பின்னணியில்தான், முதன் முதலில் தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தி வெளிவந்த திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் “எச்சரிக்கை: இக்கிதாபை காபிரானவர்கள் கைகளில் நின்றுங் காப்பது ஒவ்வொரு முஸ்லிமானவர்கள் பேரிலும் பொருத்தக் காரியமாயிருக்கும்” என்ற வாசகம் இடம்பெற்றிருந்ததைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் டார்ஸ்டன் (கீழுள்ள படத்தைப் பார்க்கவும்).

இதற்குமுன் வெளிவந்த திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் எதிலும் இப்படியொரு எச்சரிக்கை வாசகம் இடம்பெறாததற்கு, அவை அறபுத் தமிழில் அமைந்திருந்ததால் முஸ்லிம் அல்லாதவர்கள் அதைத் தொடுவார்கள் என்ற பிரச்சினையே அதுவரை எழவில்லை என்பதே காரணம். தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்புகள் வெளிவரும்போதே அப்பிரச்சினை எழுந்தது.

“தூய்மையானவர்களைத் தவிர இதை யாரும் தொடமாட்டார்கள்” என்ற திருக்குர்ஆன் வசனத்தின் அடியாகப் பிறக்கும் சில சட்ட அம்சங்களுக்கு இதிலுள்ள பங்கு பற்றி டார்ஸ்டன் எதுவும் குறிப்பிடவில்லை. முஸ்லிம் அல்லாதவர்கள் என்றில்லை, முஸ்லிம்களிலேயே கூட ‘வுளு’ எனும் இஸ்லாமியச் சடங்குமுறைத் தூய்மை நிலையில் இல்லாதவர்கள் திருக்குர்ஆனைத் தொடக்கூடாது எனும் அபிப்பிராயமே அன்று மேலோங்கியிருந்தது (இன்றும் சில மரபுவாத வட்டாரங்களில் மேலோங்கியுள்ளது). பெருமளவு இது திருக்குர்ஆனைத் தொடுவதற்குத் தேவையான ‘தூய்மை’ தொடர்பான விவகாரம்தானே தவிர, மற்றோரிடமிருந்து திருக்குர்ஆனை மறைக்க வேண்டுமெனும் நோக்கம் இதில் இருந்ததாகக் கூறுவது அத்துணை பொருத்தமில்லை.

வழுத்தூரிலிருந்து வெளிவந்த சீர்திருத்தவாத மொழிபெயர்ப்புதான் முதன்முதலில் இந்து வாசகர்களை மனதில் கொண்டு செய்யப்பட்ட ஆக்கமாக அமைந்தது. அதன் முன்னுரையில் இடம்பெற்றுள்ள கீழுள்ள பத்தியை வாசியுங்கள்.

ஒருவர் சுத்தத் தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதினால், முஸ்லிம்களில் பெரும்பாலோர் அதை சரிவரப் புரிந்துகொள்ள மாட்டார்கள். அதற்குப் பதிலாக ஒருவர் அறபு வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதினால், இந்துக்களில் ஒருவர்கூட அதைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். எனவே, முஸ்லிம்களால் புரிந்துகொள்ள முடியாத தமிழ் வார்த்தைகளை குறிப்புகள் பிரிவில் அவற்றுக்கு இணையான அறபு வார்த்தைகளைக் கொண்டும்; இந்துக்களால் புரிந்துகொள்ள முடியாத அறபு வார்த்தைகளை தமிழ் வார்த்தைகளைக் கொண்டும் விளக்கியிருக்கிறோம். ஏனெனில், அவர்கள் இறைவைனைத் தேடும் பட்சத்தில், இதைப் புரிந்துகொள்வதன் வழியாக நேர்வழியைக் கண்டுகொள்ளக் கூடும். (முஹம்மது தாஹிர், The Holy Quran (முதல் தொகுதி), தஞ்சாவூர், 1915, பக். ii-iii)

அதேபோல், தாவூத் ஷா தனது மொழிபெயர்ப்பை விளம்பரப்படுத்திக் கொண்டிருந்த காலப்பிரிவில், நரசிம்ம ஐயங்கார் கீழ்வருமாறு கூறியதாக தாருல் இஸ்லாம் இதழில் எழுதப்பட்டது. இந்து-முஸ்லிம் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டுவந்த, கிலாஃபத் இயக்கம் நடந்துகொண்டிருந்த காலம் அது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

இத்தகைய போதனைகள் தற்காலத்தில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு அவசியமானவை. இந்து-முஸ்லிம் ஒற்றுமை பற்றி ஒருவர் கரடிபோல் கத்தினாலும், பரஸ்பரம் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதுடன், ஆழ்ந்த அன்போடு ஒருவரோடொருவர் நெருக்கமாக உரையாடி, நட்புறவை ஏற்படுத்திக்கொள்ளாத வரை ஒற்றுமைக்கு வழியேதும் இல்லை. (நரசிம்ம ஐயங்காரின் மேற்கோள், தாருல் இஸ்லாம், மே 1925, பக். 234-235)

எனவே, இந்த காலக்கட்டத்தில் மற்றவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்பதில் மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியிருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்த இக்கருத்து, பிறகு தாவூத் ஷாவை எதிர்த்தவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவியின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பைப் பாராட்டி வேலூர் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் மதரசாவின் அறிஞர்கள் இப்படி எழுதினார்கள்:

வழக்கிலில்லாத கடின பதங்களின்றித் தெளிவான எளிய, இனிய தமிழ் நடையில் இம்மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது. இதனை ஓதச் செவியுறும் எவரும், “இது ஒரு மொழிபெயர்ப்பன்று. புதிதாக தமிழில் எழுதப்பட்ட ஒரு நூலே” என்று கருதக் கூடியவாறு தமிழ் மொழியிலேயே, இது ஓர் அற்புதமான நூதன நடையில் அமைந்துள்ளது. நீண்ட விரிவான குறிப்புகளும் விரிவுரைகளும் இன்றியே திருக்குர்ஆனின் கருத்துகளை அந்நிய மதத்தினரும் இதன் மூலம் எளிதில் அறிந்துகொள்ளலாம். (ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவியின் ‘தர்ஜுமத்துல் குர்ஆன் பி அல்த்தஃபில் பயான்’ என்ற மொழிபெயர்ப்பைப் பாராட்டி ஓர் அறிஞர்களின் குழு 1946ல் வழங்கிய அணிந்துரை)

முஸ்லிமல்லாத மக்களிடமிருந்து திருக்குர்ஆனை அப்புறப்படுத்தி வைக்க வேண்டுமென்ற ஆரம்பகால நிலைப்பாட்டிலிருந்து, இறுதியில் அவர்களும் அதை அணுகுவதை எளிதாக்க வேண்டுமென்கிற இந்நிலைப்பாட்டிற்கு தமிழ் முஸ்லிம்கள் படிப்படியாக மாறி வந்துள்ளதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

அறபுத் தமிழில் அமைந்த முந்தைய மொழிபெயர்ப்புகள் மீது பெரும்பாலும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பெரிய ஆர்வம் இருக்கவில்லை. திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகளை மற்றவர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணத்திற்குப் பின்னால் பின்வரும்படியான ஒரு காரணம் இருந்திருக்கக் கூடிய வாய்ப்பை எளிதில் மறுத்துவிட முடியாது. அதாவது, இஸ்லாத்தின் எதிரிகளின் கரங்களில் இம்மொழிபெயர்ப்புகள் கிடைத்தால், அவர்கள் திருக்குர்ஆனைப் பொய்ப்பிக்க அவற்றைப் பயன்படுத்தக் கூடும் என்கிற அச்சம். முதற்பார்வையில் இது அடிப்படையற்ற ஓர் அச்சமாகத் தெரிந்தாலும், ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரஸ்வதி கூட அத்தகைய நோக்கத்தில் திருக்குர்ஆனின் சில வசனங்களை விளக்கி எழுதியுள்ளார். அது போன்ற சூழ்நிலைகளை அன்றைய தமிழ் முஸ்லிம்கள் தவிர்க்க விரும்பியிருக்க வாய்ப்புள்ளது. எனினும், இருபதாம் நூற்றாண்டில் மாறிய காலத்தின் மாறிய தேவைகளுக்கு ஏற்ப மரபார்ந்த அறிஞர்கள்கூட தமது பழைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்கள்.

இன்று சர்வசாதாரணமாகக் கிடைக்கும் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள், மேலே விவரித்தபடியான ஒரு வரலாற்றுப் பயணத்தைக் கடந்தே நம்மிடம் வந்து சேர்ந்திருப்பதை விரிவாக அறிந்துகொள்ள டார்ஸ்டனின் ஆய்வுரை உதவியதில் மனநிறைவு.

குறிப்பு

இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட மேற்கோள்களின் மூல வாசகங்கள் எனக்குக் கிடைக்காததால், டார்ஸ்டன் தனது உரையில் பயன்படுத்திய ஆங்கில வடிவத்திலிருந்தே அவற்றை மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன். அவை மூல வாசகங்களிலிருந்து விலகி அமைவதைத் தவிர்க்க முடியாது. மூல வாசகங்கள் கிடைக்கும் பட்சத்தில் கட்டுரையை இற்றைப்படுத்திக் கொள்ளலாம்.

அதே போல், ஓரிரு குறிப்புகளைத் தவிர கட்டுரையில் என் கருத்துகள் எதையும் பெரிதாகக் குறிப்பிடவில்லை. உரையின் உள்ளடக்கத்தைப் பதிவுசெய்வதோடு நிறுத்திக் கொண்டேன்.

Related posts

One Thought to “தமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்”

  1. […] உரையை சகோதரர் உவைஸ் விரிவான கட்டுரையாக எழுதி […]

Leave a Comment