திராவிட சாஹிப்களும் பிராமண மௌலானாக்களும்
இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிந்தைய முஸ்லிம்களின் அரசியல் உருவாக்கங்கள் பற்றி அறிவதற்கு நாம் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான நூல்களுள் ஒன்று ‘Dravidian Sahibs and Brahmin Maulanas’ என்றால் அது மிகையாகாது. 1930 இலிருந்து 1967 வரையான காலகட்டத்தில் தமிழக அரசியல் சூழலில் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் அரசியல் அசைவியக்கங்களைப் புரிந்துகொள்வதே இந்நூலின் கருப்பொருளாகும். இந்நூலின் முக்கியத்துவமே இது வழக்கமான அரசியல் வரலாற்று நூல்கள் பேசுவதுபோல நிகழ்வுகளைத் தொகுக்காமல், அவற்றை எந்தச் சட்டகத்தின் வழி புரிந்துகொள்வது என்ற கோட்பாட்டுப் பார்வையையும் வழங்குகிறது. இப்பொருளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள ஜே.பி.பி. மோரே போன்றோர் எழுதிய நூல்களைப் பார்வையிடுவோர் இதைப் புரிந்துகொள்ளலாம்.
வழக்கமாக காலனிய காலகட்டம் மற்றும் சுதந்திரத்திற்குப் பின்னரான அரசியல் சூழலில் முஸ்லிம்களை அவர்களது மத அடையாளம் சார்ந்து மட்டுமே அடையாளம் கண்டு, தேசிய அளவில் அவர்களை ஒரே அரசியல் திணையைச் சேர்ந்தவர்களாக கற்பனை செய்வதே பொதுவான போக்காக இருக்கும். ஆனால் அப்துல் காதர் ஃபக்ரி இப்பொதுப்போக்கை பிரச்சினைக்குள்ளாக்குகிறார். இந்தியத் துணைக்கண்டம் முழுக்க இருந்த முஸ்லிம்களை ஒரே திணையைச் சேர்ந்தவர்களாகவும், முஸ்லிம் அல்லாத பல்வேறு சாதியினரையும் இந்துக்களாகவும் தொகுத்து அவர்களுக்கிடையில் ஒற்றுமையை வலியுறுத்துதல் என்பதே மதச்சார்பற்ற இந்திய தேசியத்தின் அதிகாரப்பூர்வ அரசியல் பார்வையாக இருந்தது. ஆக, இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் எல்லோரும் இந்த மதச்சார்பற்ற தேசியத்தை முன்னிறுத்தும் காங்கிரஸில் இருப்பதே அவர்களுக்கு நலன் பயப்பதாகும், முக்கியமாக தங்களது மதம் சார்ந்த அடையாளத்தை முன்னிறுத்தக்கூடாது, அவ்வாறு செய்வது பிரிவினைவாதமாகும் என்று சொல்லப்பட்டது. காங்கிரஸை நிபந்தனையின்றி ஆதரிப்பவர்கள் மட்டுமே ‘தேசியவாத முஸ்லிம்களாக’ அங்கீகரிக்கப்பட்டார்கள். பிரிவினைக் களங்கம் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்ததால் அவர்களது மதம் சார்ந்த அடையாளத்தை முன்னிறுத்திக் கேட்கப்படும் எந்தவொரு கோரிக்கையும் வகுப்புவாதமாகவும் பிரிவினைவாதமாகவும் பார்க்கப்பட்டது.
இந்த நிலையில்தான், தென்னகத்தில் திராவிட இயக்கம் தேசிய அளவிலான அரசியல் விவாதங்களை ஊடறுத்து ஒரு புதிய விவாதத்தை முன்வைத்தது. தேசிய அளவிலான ‘இந்து’ என்ற திணை உண்மையில் வட இந்தியாவைச் சேர்ந்த இந்தி பேசும் பார்ப்பன-பனியா உயர்சாதியினரின் மேலாதிக்கத்தை பிற பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் மீது செலுத்துவதற்கான அரசியலாகும் என்ற விமர்சனத்தோடு முன்வந்தது திராவிட இயக்கம். இது முஸ்லிம்களுக்கு ஒரு மூச்சுவிடும் வெளியை ஏற்படுத்திக் கொடுத்தது. ஏனெனில் இதற்கு முன் முஸ்லிம்கள் தங்களது மத அடையாளத்தின் காரணமாக பிற பார்ப்பன-பனியா சாதிகள் பொருளியல் மற்றும் கலாச்சார வளங்களை அடைந்துகொள்வது போன்று இவர்களால் அடைந்துகொள்ள முடியவில்லை. இவ்வாறு தங்களது மத அடையாளத்தின் காரணமாக தங்களுக்கு மறுக்கப்படும் சமூக, அரசியல், பொருளாதார பங்கை அவர்களது மத அடையாளத்தை முன்னிறுத்தியும் கேட்கமுடியாது. ஏனெனில் பிரிவினைக்குப்பின் முஸ்லிம் அடையாளத்தை முன்னிறுத்தி வளங்களுக்கான தங்களது கோரிக்கையை வைப்பது தேச விரோதமாகக் குற்றப்படுத்தப்பட்டது. இவ்வாறு மதவாத இந்து தேசியமும் சரி, மதச்சார்பற்ற இந்திய தேசியமும் சரி, முஸ்லிம்களின் அரசியல் விழைவுகளை பிரிவினைவாதம், மதவாதம் மற்றும் வகுப்புவாதம் என்று குற்றப்படுத்தின.
இந்த நிலையில், பெரும்பான்மை மதவாத அடையாளத்தையும், மதச்சார்பற்ற இந்திய அடையாளத்தையும் விலக்கி தமிழகத்தின் பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசியல் திணையாக திராவிட அடையாளம் மேலெழுந்தது. இவர்கள் தமிழக முஸ்லிம்களை இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்துக்குச் சரிசமமாக திராவிட இனத்தைச் சேர்ந்த ஒரு சமூகக்குழுமமாகக் கருதினார்கள். இந்தியா முழுக்கவுள்ள கிறித்தவர் மற்றும் முஸ்லிமல்லாத எல்லாச் சமூகங்களையும் இந்துக்களாகக் கற்பித்து முஸ்லிம்களை எதிர்க்கச்சொன்னது இந்து தேசியவாதம். இந்துக்களையும் முஸ்லிம்களையும் இருவேறு சமூகங்களாகப் பிரித்து இரு சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது மதச்சார்பற்ற தேசியம். ஆனால் திராவிட இயக்கமோ பார்ப்பன-பனியாக்களை விலக்கிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மொழி மற்றும் மதச்சிறுபான்மையினரின் ஐக்கியத்தை வலியுறுத்தியது. இங்கு முஸ்லிம்கள் பிற சமூகங்கள் போலவே தங்களது அடையாளத்தை முன்னிறுத்தி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வாய்ப்பை பெற்றார்கள். அவர்களது கோரிக்கை தேச விரோதம், பிரிவினைவாதம் என்று குற்றப்படுத்தப்படாத நிலை ஏற்பட்டது.
பிரிவினைக் களங்கம் முஸ்லிம்களின் மீது சுமத்தப்பட்டிருந்த அழுத்தத்தால் முஸ்லிம் லீக், திராவிட முன்னேற்ற கழகம் தனிநாடு கோரிக்கையை கைவிடும் வரை அதனோடு கூட்டணி வைக்கவில்லை. அது திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு மாநில சுயாட்சி கேட்டபொழுதுதான் முஸ்லிம் லீக் திமுகவுடனான கூட்டணிக்கு அணியமானது. இதுகுறித்த ஒரு சுவையான தகவலும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு எதிராக அண்ணாவின் திமுகவுடன் காயிதே மில்லத்தின் முஸ்லிம் லீக்கும் ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் தேர்தல் கூட்டணி அமைத்தன. இக்கூட்டணியை விமர்சித்து காங்கிரஸ் வைத்திருந்த பதாகையிலிருந்தே இப்புத்தகத்தின் பெயர் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அண்ணாவும் ராஜாஜியும் நாட்டுப்பிரிவினைக்கு காரணமான முஸ்லிம் தேச விரோதக் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தேச விடுதலைக்குப் போராடிய கட்சியான காங்கிரஸை எதிர்க்கிறார்கள் என்னும் அரசியல் கருத்து வெளிப்படும் வகையில் அண்ணாவை ‘திராவிட சாஹிப்’ என்றும், ராஜாஜியை ‘பிராமண மௌலானா’ என்றும் விளித்து வரவேற்கும் தொனியில் பகடி செய்திருந்தார்கள் காங்கிரஸ் கட்சியினர். இன்று பகுஜன் அமைப்புகளையும் தலைவர்களையும் ‘முல்லா முலாயம்’ போன்ற பெயர்களை வைத்து அவர்களை முஸ்லிம் பிரிவினைவாதத்தை ஆதரிப்பவர்களாகச் சித்தரிக்கும் பாஜகவின் முன்னோடி அக்காலத்தைய காங்கிரஸாக இருந்திருக்கிறது. ஏனெனில் தேசியக் கட்சிகளின் இயல்பு அப்படி.
அப்துல் காதர் ஃபக்ரி இந்நூலை தனது தேர்ந்த கோட்பாட்டுக் கல்வியுடன் சேர்த்து ஆக்கியிருக்கிறார். தேசியம், அது அதிகாரப்பூர்வப்படுத்தும் சொல்லாடல்கள், சில அடையாளங்களை வெளித்தள்ளியும், சில அடையாளங்களை உட்கவர்ந்து ஒடுக்கியும் மற்றும் சில அடையாளங்களுக்கு தனிச்சிறப்பு செய்யும் அதன் பண்பு மற்றும் தேசியத்தின் மேலாண்மையை எதிர்த்த அரசியல் உருவாக்கங்கள், அதனோடு முஸ்லிம்கள் எத்தகைய இயங்கியல் உறவை மேற்கொண்டார்கள் என்பதையெல்லாம் மிகுந்த நுட்பமாக ஆராய்ந்து கண்டறிந்திருக்கிறார் ஃபக்ரி. இந்நூல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியத் தேசியம், திராவிடம், தமிழ்முஸ்லிம் அரசியல் அனுபவம் குறித்து வாசிக்க நினைப்பவர்கள் இந்நூலை கட்டாயம் படிக்க வேண்டும். மேலும் இந்நூல் தமிழ்ச்சூழலில், குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் விவாதிக்கப்பட வேண்டியதும் அத்தியாவசியமாகும்.
(நன்றி: சமூக உயிரோட்டம்)