கருப்புப் பண ஒழிப்பு: மக்கள் விரோத மோடி அரசின் முட்டாள் சாகசம் – பிரபாத் பட்நாயக்
[டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தின் முன்னாள் பொருளாதாரத் துறை பேராசிரியரும் பன்னூலாசிரியருமான திரு. பிரபாத் பட்நாயக் அவர்கள் ‘தி சிட்டிசன்‘ இணைய இதழுக்காக எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பை கீழே பகிர்கிறோம். தமிழாக்கம்: ‘ஃபிரண்ட்லைன்’ பத்திரிக்கையின் ஆசிரியர், விஜயசங்கர் ராமச்சந்திரன்.]
நவம்பர் 8 இரவு 8 மணிக்கு தேசிய தொலைக்காட்சிகளில் தோன்றிய நரேந்திர மோடி அந்நாளின் நள்ளிரவிலிருந்து, அதாவது வெறும் நான்கு மணி நேரத்தில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் சட்ட ரீதியான தகுதியை இழக்கும் என்று அறிவித்தார். இந்த வினோதமான முடிவு ‘கருப்புப் பணத்தை’ தாக்கும் என்று நியாயப்படுத்தினார். அது மட்டுமின்றி ‘பயங்கரவாதிகள்’ பயன்படுத்தும் போலி ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகாமல் போய்விடுமென்றும் கூறினார். அரசாங்கத்தை உற்சாகமாக ஆதரித்துவரும் சில தரப்பினர் மோடியின் இந்த முடிவு ‘பயங்கரவாதத்தின் மீது தொடுக்கப்பட்ட துல்லியத் தாக்குதல்’ என்பது வரை பேசிவிட்டனர்.
கள்ள நோட்டுகள் பற்றி பிறகு பேசுகிறேன். முதலில் குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியே வழக்கத்திற்கு மாறாகப் பாராட்டியிருக்கும் ‘கருப்புப் பண’ விவகாரத்தை முதலில் பார்க்காலாம். ஆயிரம், ஐநூறு ரூபாய் தாள்களை மதிப்பிழக்கச் செய்த மத்திய அரசின் நடவடிக்கை ‘கருப்புப் பணத்தின்’ மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்கிற வாதம், ‘கருப்புப் பணத்தின்’ தன்மை குறித்து கொஞ்சம் கூடப் புரிதல் இல்லாமல் முன்வைக்கப்படும் ஒன்று. நிதானமில்லாமல் எளிமைப்படுத்தப்படும் கருத்தும் கூட.
‘கருப்புப் பணம்’ என்பது டிரங்குப் பெட்டிகளிலும், தலையணை உறைகளுக்குள்ளும் கற்றை கற்றையாக ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் என்கிற உள்ளார்ந்த புரிதலிலிருந்து வரும் கருத்து அது. 500, 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்தால் அதிக எண்ணிக்கையிலான பழைய நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றை ஒப்படைத்துவிட்டு, புதிய நோட்டுகளைப் பெறும் பரிவர்த்தனைக்காக வங்கிகளுக்கு செல்வார்களாம்; அவர்கள் மீது வங்கிகளுக்கு சந்தேகம் ஏற்பபட்ட உடன் வரி நிர்வாக அதிகாரிகளுக்கு வங்கிகள் புகார் தெரிவிக்குமாம்; உடனே அவர்கள் குற்றவாளிகளைப் பிடித்து விடுவார்கள் என்றெல்லாம் இந்த அனுமானங்கள் இப்படியான புரிதலிருந்து வருகின்றன. இப்படி ‘கருப்புப் பணம்’ வெளிச்சத்திற்கு வரும்போது, எதிர்காலத்தில் தவறுகள் நடக்காது என்று சொல்கிறது அந்த அனுமானம்.
‘கருப்புப் பணம்’ உண்மையிலேயே நோட்டுகளாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று வைத்துக் கொண்டாலும், இந்த வாதத்தின் இரண்டாவது பகுதி அர்த்தமற்றதுதான். ஒருவர் கணக்கில் வராத 20 கோடிகளை 500, 1000 ரூபாய் நோட்டுகளாக வைத்திருக்கிறாரென்றால், அவர் புதிய நோட்டுகளைப் பெறுவதற்காக 20 கோடியையும் எடுத்துக்கொண்டு வங்கிக்குச் செல்லமாட்டார். (எப்படியிருந்தாலும் அவர் அப்படிச் செய்ய அனுமதிக்கப்படவும் மாட்டார்). அதற்கு பதிலாக, அவர் பல அடிமைகளிடம் சிறு தொகைகளைக் கொடுத்து வங்கிகளுக்கு அனுப்பி வைப்பார். இறுதிக் கெடு தேதியான டிசம்பர் 30-க்குப் முன் இப்படி பல நாட்கள் செய்வார்.
உண்மையில் பார்த்தால் இந்த தொடர் முயற்சி கூட அவருக்குத் தேவைப்படாது. பழைய நோட்டுகளுக்குப் பதில் கமிஷனை எடுத்துக் கொண்டு புது நோட்டுகள் தருவதாகக் கூறி பல தரகர்கள் விரைவில் வருவார்கள். இப்படி ‘கருப்புச் செயல்பாட்டாளர்கள்’ பழைய ‘கருப்புப் பண’ நோட்டுகளை பரிவர்த்தனை செய்து புதிய நோட்டுகளைப் பெறும்போது, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்வதால் பதுக்கப்பட்டிருக்கும் பணக்குவியல் வெளிவந்து விடும் என்று ‘நிபுணர்கள்’ பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முன்வைக்கும் வாதம் பொருளற்றது.
அதை விட முக்கியமானது, ‘கருப்புப் பணம்’ என்ற இந்த கருத்தாக்கமே அபத்தமானது. ‘கருப்புப் பணம்’ என்று சொல்லும்போதே நம் மனக்கண்ணில் தோன்றும் பிம்பம் வெளிப்படையாக வங்கி வைப்புத் தொகையாக இருக்கும் பணமல்ல; தலையணை உறைகளுக்குள்ளோ அல்லது மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்ட பெட்டிகளுக்குள்ளோ பதுக்கப்பட்டிருக்கும் கற்றை கற்றையான நோட்டுகள்தான் நினைவுக்கு வரும். உண்மையில் பார்த்தால், ‘கருப்புப் பணம்’ என்று நாம் சொல்லும்போது, கள்ளக்கடத்தல், போதைமருந்து விற்பனை, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதம் சப்ளை செய்வது போன்ற முழுமையான சட்டவிரோதச் செயல்களையோ அல்லது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையோ, அல்லது வரி செலுத்துவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் அறிவிக்கப்படாமல் நடக்கும் செயல்பாடுகளையோ தான் குறிக்கிறோம்.
சான்றாக, நூறு டன் உலோகத்தை தோண்டி எடுத்துவிட்டு, வரியைக் குறைப்பதற்காக 80 டன்களைக் கணக்கில் காட்டுவதை நாம் ‘கருப்புப் பண’ உற்பத்தியாகக் கொள்கிறோம். அதே போல், 100 டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துவிட்டு, 80 டாலர் மதிப்புள்ள பொருட்களையே ஏற்றுமதி செய்வதாகக் கணக்கில் காட்டுவதும், மீதமுள்ள 20 டாலர்களை சட்டவிரோதமாக ஸ்விட்சர்லாந்து நாட்டு வங்கியில் போட்டு வைப்பதும் ‘கருப்புப் பண’ உற்பத்திக்கு மற்றொரு சான்றாகும். அல்லது, ரூபாயை ஹவாலா முறையில் அன்னிய கரன்சியாக மாற்றி அயல் நாட்டு வங்கிகளில் பதுக்குவதும் ‘கருப்புப் பண’ உற்பத்திதான். சுருக்கமாகச் சொன்னால், ‘கருப்புப் பணம்’ என்பது பலவகையான அறிவிக்கப்படாத நடவடிக்கைகளையே குறிக்கும்.
‘கருப்புப் பணம்’ என்பது ஒரு இருப்பைக் குறிப்பதல்ல, ஓட்டத்தைக் குறிப்பது என்பதுதான் இதன் பொருள். ‘கருப்புச் செயல்பாடுகள்’ அவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபத்தை தருபவை; பணத்தைக் குவித்து வைத்திருப்பது லாபம் தராது. வர்த்தகச் செயல்பாடுகள் என்பதற்கு மார்க்ஸ் சொல்லியிருப்பது ‘கருப்புச் செயல்பாடுகளுக்கும்’ பொருந்தும். அதாவது, பணத்தை சுற்றில் விடுவதால்தான் லாபம் ஈட்ட முடியுமேயொழிய, பதுக்கி வைப்பதினால் அல்ல; ‘கஞ்சன்’ முன்னதைச் செய்வான், முதலாளி பின்னதைச் செய்வான். வர்த்தகப் பணம் குறைந்த அல்லது நீண்டகாலத்திற்கு இருப்பாக வைக்கப்படும் என்பது உண்மைதான் (உதாரணமாக, மூலதனம்-பண்டம்-மூலதனம் என்கிற சுழற்சியில்); ஆனால் இது ‘வெள்ளை நடவடிக்கைகளுக்கு’ (வர்த்தகம்) பொருந்தும் அளவிற்கு ‘கருப்பு நடவடிக்கைகளுக்கும்’ பொருந்தும்.
அதனால்தான், ‘கருப்புப் பணம்’ இருப்பாக வைக்கப்படும் என்றும், ‘வெள்ளைப் பணம்’ சுற்றில் விடப்படும் என்றும் அவற்றின் தனித்தன்மையை வரையறுப்பதற்கு ஆதாரமே இல்லை. எல்லாப் பணமும் சில இடைவெளிகளுக்குப் பிறகு சுற்றி வருகிறது; ‘கருப்புச் செயல்பாடாக’ இருந்தாலும் ‘வெள்ளைச் செயல்பாடாக’ இருந்தாலும் இதுதான் உண்மை. ஆகவேதான், ‘கருப்புப் பணத்தை’ வெளியே கொண்டுவருவதன் சாரம் ‘கருப்பு நடவடிக்கைகளை’ தேடிக் கண்டுபிடிப்பதில் இருக்கின்றதேயொழிய, இருப்பாக வைத்திருக்கும் பணத்தைத் தாக்குவதில் அல்ல. இதற்கு, நேர்மையான, முறையான, சிரமம் மிகுந்த புலனாய்வு தேவைப்படுகிறது.
கணினிகளின் காலத்திற்கு முன்பேயே, முனைப்புக் கூடிய புலனாய்வின் வாயிலாக எந்தவொரு வரி ஏய்ப்பாளரையும் பிடித்துவிடுவார்கள் என்ற பெருமை பிரிட்டிஷ் அரசின் உள்நாட்டு வருவாய்ச் சேவை அமைப்புக்கு இருந்தது. இந்தியாவை விட சிறியநாடு பிரிட்டன் என்பது உண்மைதான். ஆனால் இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு, அதன் அளவிற்கும் தேவைக்கும் ஏற்றதுபோல் அதிகமான அலுவலர்களை கொண்ட அமைப்பை உருவாக்கலாம். இதை நாம் செய்துவிட்டால், பொறுமையும், திறமையும் நிறைந்த வரி நிர்வாக அமைப்பை ஏற்படுத்திவிட்டாலே உள்நாட்டிலிருக்கும் ‘கருப்புப் பணத்தையாவது’ வெளிக் கொண்டுவர முடியும்.
ஆனால், ஒரு கணிசமான அளவு ‘கருப்புச் செயல்பாடுகள்’ அயல்நாட்டிலிருக்கும் வங்கிகள் மூலமாகத்தான் நடைபெறுகின்றன. உள்நாட்டில் இருப்பதை விட இந்தச் செயல்படுகளின் அளவு மிக அதிகம் என்று சிலர் கூறுவார்கள். தேர்தலுக்கு முன் நரேந்திர மோடியும் ‘கருப்புப் பணத்தை’ வெளிநாட்டிலிருந்து ‘திரும்பக் கொண்டு வருவதைப்’ பற்றிதான் பேசினார். பெரும்பாலான ‘கருப்புப் பணம்’ வெளிநாட்டில் இருக்கிறது என்பதை சூசகமாக உணர்த்தினாலும், அவரும் ‘கருப்புப் பணம்’ என்பது ஒரு வீச்சிலமைந்த செயல்பாடுகளைக் குறிப்பது என்றில்லாமல், ஒரு பதுக்கிவைக்கப்பட்ட குவியல் என்ற அப்பாவித்தனமான புரிதலில்தான் இருந்தார். ‘கருப்பு நடவடிக்கைகளுக்கு’ பெரும் மூலாதாரமாக அன்னிய வங்கிகள் இருக்கும்போது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்வது சாமானிய மக்களுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்துமேயன்றி, அத்தகைய கருப்பு நடவடிக்கைகளை ஒழிக்க உதவாது.
ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்வது இந்தியாவில் இது முதல் முறையல்ல. ஜனவரி 1946-இல், 1,000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டன. 1978-இல் மொரார்ஜி தேசாய் அரசாங்கம் 1,000, 5,000, 10,000 ரூபாய் நோட்டுகள் ஜனவரி 16 நள்ளிரவிலிருந்து செல்லாது என்று அறிவித்தது. 1978-லும் (1946லும் கூட) இது பொதுமக்களை பாதிக்கவில்லை. ஏனெனில், அவர்களில் மிகப்பெரும்பாலானோர் அந்த நோட்டுகளை வைத்திருக்கவில்லை. ஏன், பார்த்ததுகூட இல்லை. (1978இல் கூட 1,000 ரூபாய் என்பது ஒரு பெருந்தொகை; சாமானியர்கள் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பார்த்தது இல்லை).
மொரார்ஜி அரசின் நடவடிக்கை பொதுமக்களை பாதிக்கவில்லை; ‘கருப்புப் பணம்’ என்கிற தீமையையும் ஒழிக்கவில்லை. மோடி அரசின் நடவடிக்கையும் அதேபோல் பயனற்றதாகப் போகும்; அதே நேரத்தில் பொதுமக்களின் வாழ்க்கையையும் கடுமையாகப் பாதிக்கும் என்கிற பக்க விளைவும் இருக்கும்.
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்வது ‘கருப்புப் பணத்தை’ கட்டுபடுத்துகிறதோ இல்லையோ, இந்த நடவடிக்கை பணத்தை ரொக்கமாகப் பயன்படுத்தும் பொருளாதார அமைப்பிலிருந்து மாறிச்செல்லும் நீண்டகால விளைவினை ஏற்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் வழி நடத்தப் பெறாத, கணக்கில் வராத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் என்று சிலர் வாதிடுகிறார்கள். அன்னிய வங்கிகளின் நிதியுதவியுடன் நடைபெறும் ‘கருப்பு நடவடிக்கைகள்’ இந்த ரொக்கமில்லாத இந்தியாவின் பார்வையிலிருந்து தப்பித்து விடும் என்பது ஒரு புறமிருக்க, ரொக்கமில்லாத இந்தியா என்பதே, ஒரு கிரெடிட் கார்டு வாங்குவதற்கும், வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கும் ஒரு சாமானியன் படும்பாட்டினை அறியாத மேல்தட்டு வர்க்கத்தின் பகல் கனவுதான்.
‘எல்லைக்கு அப்பால்’ அச்சிடப்படும் போலி நோட்டுகளின் சுழற்சியைத் தடுப்பதன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்க முடியுமென்றும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. புதிய நோட்டுகளை அச்சடிக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் கள்ள நோட்டு உற்பத்தியை தடுக்கும் என்கிற அனுமானத்திலிருந்துதான் இந்த வாதம் எழுகிறது. அப்படியே இருந்தால் கூட போலிகளை உருவாக்க முடியாத வகையிலான புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்தும் இந்தப் பணியை படிப்படியாக, யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் செய்திருக்கலாம். இப்படித்தான், பழைய நோட்டுகளை மாற்றி புதியவற்றை அறிமுகப்படுத்தும் பணி இதுவரை நடந்து வந்திருக்கிறது. நவம்பர் 8 இரவிலேயே பனிச்சரிவு போல் கள்ள நோட்டுகள் வந்து குவியும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கக் கூடிய நிலை இல்லையே?! மக்களின் பாதுகாப்பு உணர்வின் மீதும், சவுகரியங்கள் மீதும் அதிரடியான ஆச்சரியமூட்டக்கூடிய பெரும் தாக்குதலை ஏன் அரசாங்கம் அந்த இரவில் தவிர்க்கவில்லை.?
மோடி அரசின் இந்த நடவடிக்கை, நவீன இந்தியாவின் வரலாற்றில் முன்னெப்போதும் நடந்ததில்லை. பெரும்பணக்காரர்கள் வைத்திருக்கும் நோட்டுகளை மட்டும் மதிப்பிழக்கச் செய்து, பிறரின் நோட்டுகளுக்கு விலக்கு அளித்த பிரிட்டிஷ் அரசாங்கம் கூட மோடி அரசை விட மக்களின் உணர்வுகளுக்கு அதிகம் மதிப்பளித்திருக்கிறது. இந்த அவசர நடவடிக்கை, அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அமுல்படுத்தும் வகையில் மோடி எடுத்துவரும் ஏராளமான பிற நடவடிக்கைகளை போன்றதுதான். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இது மக்களுக்கு எதிரானது.