இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 3)
[சையித் குதுப் எழுதிய ‘அல்கசாயிஸ் அல்தசவ்வுர் அல்இஸ்லாமி வ முகாவிமதுஹு’ என்ற அறபு புத்தகத்தை மொழிபெயர்த்து ‘இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ என்ற பெயரில் மெய்ப்பொருள் தளத்தில் தொடராக வெளியிட்டு வருகிறோம். அதில் பதினாறாம் பகுதி கீழே.]
மனிதர்கள் வாழ்கின்ற பிரபஞ்சத்தைக்குறித்து, அதன் தனித்தன்மைகள் குறித்து, அது படைப்பாளனுடன் கொண்டுள்ள தொடர்பைக்குறித்து, படைப்பாளனின் இருப்பிற்கு அது எவ்வாறு சான்றாக இருக்கின்றது என்பதைக்குறித்து, அல்லாஹ்வின் கட்டளையைக்கொண்டு அது எவ்வாறு அவர்களுக்காக வசப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக்குறித்து இந்தக் கண்ணோட்டம் அவர்களுக்கு எடுத்துரைக்கிறது. அது அவர்களின் இயல்பும் அறிவும் புரிந்துகொள்ளும் நடையில் எடுத்துரைக்கிறது. அவர்கள் எதார்த்த வாழ்வில் அவற்றை அப்படியே காண்பார்கள். அதனை அறிந்துகொள்வதற்கு அதன் இரகசியங்களை உணர்ந்துகொள்வதற்கு அதனோடு சரியான அணுகுமுறையை மேற்கொள்வதற்கு அது அவர்களை அழைக்கின்றது.
“அவனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் அமைத்தான். உங்கள் உணவிற்காக வானிலிருந்து மழை பொழியச் செய்து அதன்மூலம் கனிவகைகளை வெளிப்படுத்துகிறான். எனவே நீங்கள் அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு இணையாக எதனையும் ஆக்காதீர்கள்.” (2:22)
“அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவனே வானங்களையும் பூமியையும் படைத்தான். இருள்களையும் ஒளியையும் உண்டாக்கினான். இருந்தும் சத்தியத்தை நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு இணையாக மற்றவற்றை ஆக்குகிறார்கள்.” (6:1)
“அல்லாஹ்தான் உயர்ந்த வானங்களை நீங்கள் பார்க்கும் தூண்களின்றி படைத்தான். பின்னர் அவன் தன் கண்ணியத்திற்கேற்ப அரியணையின் மீது உயர்ந்துவிட்டான். அவன் தன் படைப்புகளின் பயன்பாட்டிற்காக சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தித் தந்துள்ளான். சூரியன், சந்திரன் என ஒவ்வொன்றும் அல்லாஹ் அறிந்த குறிப்பிட்ட காலகட்டம்வரை இயங்கிக் கொண்டிருக்கும். வானங்களிலும் பூமியிலும் தான் நாடியபடி அவன் கட்டளையிடுகிறான். நீங்கள் மறுமைநாளில் உங்கள் இறைவனின் சந்திப்பை உறுதியாக நம்ப வேண்டும் என்பதற்காக அவன் சான்றுகளை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அவனே பூமியை விரித்தான். அது மக்களைக் கொண்டு ஆட்டம் காணாமல் இருப்பதற்காக அதில் உறுதியான மலைகளை ஏற்படுத்தினான். ஒவ்வொரு தாவர வகைகளிலும் உயிரினங்களிலும் அவன் ஆண், பெண் என இருவகைகளை ஏற்படுத்தியுள்ளான். இரவால் பகலைப் போர்த்துகிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஏராளமான சான்றுகளும் ஆதாரங்களும் இருக்கின்றன.
பூமியில் அருகருகே பல பகுதிகள் இருக்கின்றன. அதில் திராட்சைத் தோட்டங்களும் வயல்களும் ஒரே மூலத்திலிருந்து வந்த ஒன்றுபட்ட பேரீச்சை மரங்களும் தனித்தனியான பேரீச்சை மரங்களும் காணப்படுகின்றன. இந்த தோட்டங்கள், வயல்கள் அனைத்திற்கும் ஒரே வகையான தண்ணீர்தான் பாய்ச்சப்படுகிறது. ஆனால் சுவையிலும் பயனளிப்பதிலும் சிலவற்றை சிலவற்றைவிட சிறப்பித்துள்ளோம். நிச்சயமாக இதில் விளங்கிக்கொள்ளும் மக்களுக்கு சான்றுகளும் ஆதாரங்களும் இருக்கின்றன. ஏனெனில் அவர்கள்தாம் இதிலிருந்து படிப்பினை பெறுவார்கள்.” (13:2-4)
“அவனே உங்களுக்காக மேகத்திலிருந்து மழையை இறக்கினான். அந்த நீரிலிருந்தே நீங்கள் பருகுகிறீர்கள்; உங்கள் கால்நடைகளுக்கும் புகட்டுகிறீர்கள். அந்த நீரிலிருந்து உங்கள் கால்நடைகள் உண்ணும் செடிகொடிகளும் வளர்கின்றன. அந்த நீரைக்கொண்டு நீங்கள் உண்ணும் பயிர்களையும் ஆலிவ், மாதுளை, பேரீச்சை, திராட்சை இன்னும் எல்லாவகையான விளைச்சல்களையும் அல்லாஹ் உங்களுக்காக முளைக்கச் செய்கிறான். அந்த நீரிலும் அதிலிருந்து விளையக்கூடியவையிலும் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு சான்றுகள் இருக்கின்றன. அவன் இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் உங்களுக்குப் பயன்படும்படி அமைத்துத் தந்துள்ளான். நட்சத்திரங்களையும் அவன் உங்களுக்காக வசப்படுத்தித் தந்துள்ளான். இவையனைத்தையும் அவன் உங்களுக்காக வசப்படுத்தித் தந்துள்ளதில் அறிவைப் பயன்படுத்தும் மக்களுக்கு தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன.
அவன் பூமியில் படைத்த பல்வேறு நிறங்களுடையவற்றை அவன் உங்களுக்கு வசப்படுத்தித்தந்துள்ளான். நிச்சயமாக அவற்றில் படிப்பினை பெறக்கூடிய மக்களுக்கு தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன. அவனே உங்களின் பயன்பாட்டிற்காக கடலை வசப்படுத்தித் தந்துள்ளான். நீங்கள் அதிலிருந்து பிடிக்கும் மீன்களிலிருந்து மிருதுவான புத்தம்புது இறைச்சியை உண்கிறீர்கள். அதிலிருந்து உங்களின் பெண்கள் அலங்காரத்திற்காக அணியும் முத்து, பவளம் போன்ற ஆபரணங்களை எடுக்கின்றீர்கள். கடல் அலைகளைக் கிழித்துக் கொண்டு கப்பல்கள் செல்வதை நீர் காண்பீர். அல்லாஹ்வின் அருளைத் தேடியும் அவன் உங்களுக்கு அளித்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துவதற்காகவும் அவன் ஒருவனையே வணங்குவதற்காகவும் நீங்கள் அந்த கப்பல்களில் பயணம் செய்கிறீர்கள்.
பூமி உங்களைக்கொண்டு ஆட்டம் கண்டு சரிந்துவிடாமல் இருக்க அவன் அதில் உறுதியான மலைகளை ஊன்றி ஆறுகளையும் நீங்கள் செல்வதற்கான வழிகளையும் ஏற்படுத்தியுள்ளான். நீங்கள் பகலில் பயணம்செய்யும்போது பாதைகளை அறிவதற்காக வெளிப்படையான அடையாளங்களையும் வானத்தில் நட்சத்திரங்களையும் அவன் ஏற்படுத்தியுள்ளான். இவற்றையெல்லாம் படைத்தவன் எதையும் படைக்காதவனுக்குச் சமமாவானா? எல்லாவற்றையும் படைத்த அல்லாஹ்வின் மகத்துவத்தை, அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளவில்லையா என்ன?” (16:10-17)
“வானங்களும் பூமியும் இணைந்திருந்தன. நாம்தாம் அவற்றைப் பிரித்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் நீரிலிருந்தே நாம் உருவாக்கினோம் என்பதையும் நிராகரிப்பாளர்கள் கவனிக்கவில்லையா? அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்களா? பூமி அதிலுள்ளவர்களைக் கொண்டு ஆட்டம் கண்டுவிடாமல் இருப்பதற்காக நாம் அதில் உறுதியான மலைகளை ஏற்படுத்தியுள்ளோம். அவர்கள் தாங்கள் விரும்பும் இடத்திற்குச் செல்லும்பொருட்டு அதில் விசாலமான பாதைகளையும் ஏற்படுத்தியுள்ளோம். நாம் வானத்தை பாதுகாப்பான கூரையாக அமைத்துள்ளோம். ஆயினும் வானத்தில் இருக்கும் சான்றுகளைக் கொண்டு படிப்பினை பெறாமல் புறக்கணித்துக் கொண்டிருக்கிறார்கள். அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் தன் குறிப்பிட்ட வட்டப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதைவிட்டு நகர்ந்துவிடுவதுமில்லை, வழிமாறுவதுமில்லை.” (21:30-32)
“அல்லாஹ் உங்களின் பயன்பாட்டிற்காக பூமியிலுள்ள அனைத்தையும் வசப்படுத்தித் தந்துள்ளதை நீர் பார்க்கவில்லையா? அவன் கப்பலை உங்களுக்காக வசப்படுத்தித் தந்துள்ளான். அது அவனுடைய கட்டளையால் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்தை நோக்கி கடலில் செல்கிறது. வானத்தை -அவனுடைய அனுமதியுடன் தவிர– பூமியின்மீது விழுந்துவிடாமல் தடுத்து வைத்துள்ளான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களின்மீது மிகுந்த பரிவுடையவனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றான்.” (22:65)
“நாம் உங்களுக்கு மேலே அடுக்கடுக்காக ஏழு வானங்களை அமைத்துள்ளோம். நம்முடைய படைப்புகளைவிட்டும் நாம் கவனமற்றவர்களாக இல்லை. நாம் தேவையான அளவோடு வானத்திலிருந்து மழையை இறக்குகின்றோம். அதன்மூலம் பூமியில் தாவரங்களை முளைக்கச் செய்கின்றோம். அவற்றைப் போக்குவதற்கும் நாம் ஆற்றல் பெற்றவர்களாவோம். அந்த நீரைக்கொண்டு நாம் உங்களுக்கு பேரீச்சை, திராட்சை போன்ற தோட்டங்களையும் ஏற்படுத்தினோம். அவற்றில் உங்களுக்கு பலவிதமான வடிவங்களுடைய, நிறங்களுடைய பழங்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் உண்ணவும் செய்கிறீர்கள்.”(23:17-19)
“நீர் பார்க்கவில்லையா, அல்லாஹ்தான் மேகங்களை இழுத்துவந்து பின்னர் அவற்றை ஒன்றோடொன்று சேர்த்து அடுக்கடுக்காக குவியலாக்குகின்றான். மேகத்திலிருந்து மழை வெளிப்படுவதை நீர் காண்கிறீர். அவன் வானத்திலிருந்து, மலைபோன்ற மேகத்திலிருந்து ஆலங்கட்டிகளைப் பொழியச்செய்கிறான். அந்த ஆலங்கட்டிகளை தான் நாடிய அடியார்களின்மீது விழச் செய்கிறான். தான் நாடிய அடியார்களைவிட்டும் திருப்பி விடுகிறான். மேகத்திலிருந்து வரக்கூடிய மின்னலின் வெளிச்சம் பார்வைகளைப் பறிக்கப் பார்க்கின்றது. அல்லாஹ் இரவையும் பகலையும் மாறிமாறி வரச்செய்கிறான். இவ்வாறு மாறிமாறி வரச் செய்வதில் அகப்பார்வையுடையோருக்கு அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துரைக்கக்கூடிய சான்றுகள் இருக்கின்றன.” (24:43-44)
“தூதரே! அல்லாஹ் பூமியின்மீது நிழலை பரப்பும்போது அவனுடைய படைப்பின் அடையாளங்களை நீர் பார்க்கவில்லையா? அவன் நாடியிருந்தால் அதனை அசைவற்றதாக ஒரே நிலையில் வைத்திருப்பான். பின்னர் நாம் சூரியனை அதற்கு ஆதாரமாக ஆக்கியுள்ளோம். பின்னர் சூரியன் உயர்வதற்கேற்ப நாம் நிழலை கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துக் கொள்கின்றோம். அல்லாஹ் உங்களுக்கு இரவை ஆடையாகவும் தூக்கத்தை ஓய்வாகவும் பகலை வேலை செய்யும் நேரமாகவும் ஆக்கியுள்ளான். அவனே காற்றுகளை மழையைக் கொண்டு நற்செய்தி கூறக்கூடியதாக அனுப்பி வைக்கிறான். அது அல்லாஹ் தன் அடியார்களின்மீது பொழியும் அருட்கொடைகளில் உள்ளவையாகும். அவன் வானத்திலிருந்து தூய்மையான மழை நீரை இறக்குகிறான். இறக்கப்பட்ட அந்த மழை நீரைக் கொண்டு வறண்ட பூமியில் பலவகையான தாவரங்களை முளைக்கச் செய்கிறான். அந்த நீரைக் கொண்டு அவன் படைத்த கால்நடைகளுக்கும் ஏராளமான மனிதர்களுக்கும் நீர் புகட்டுகிறான்.” (25:45-49)
“உயிரற்ற பூமி அவர்களுக்கு ஒரு சான்றாகும். நாமே அதனை உயிர்ப்பித்து அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்கள் உண்கிறார்கள். அதில் நாம் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை உருவாக்கினோம். அதில் நீருற்றுகளையும் பொங்கி ஓடச் செய்தோம், அதன் கனிகளை அவர்கள் உண்பதற்காக. அவர்களின் கரங்கள் அதனை உருவாக்கவில்லை. அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா? பூமி முளைக்கச் செய்கின்றவற்றையும் அவர்களையும் அவர்கள் அறியாதவற்றையும் என எல்லாவற்றையும் இணைகளாகப் படைத்தவன் மிகவும் தூய்மையானவன்.
இரவும் அவர்களுக்கு ஒரு சான்றாகும். நாம் அதிலிருந்து பகலை இழுத்து இரவைக் கொண்டுவந்து பகலின் வெளிச்சத்தை போக்கி விடுகின்றோம். மனிதர்கள் இருளில் நுழைந்துவிடுகிறார்கள். சூரியன் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அது அதனை மீறாது. இது யாவற்றையும் மிகைத்த, அனைத்தையும் அறிந்த அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட விதியாகும்.
நாம் சந்திரனுக்கு ஒவ்வொரு இரவும் ஒரு நிலையை நிர்ணயித்துள்ளோம். அது சிறியதாகத் தொடங்கி பின்னர் பெரிதாகி பின்னர் காய்ந்த பேரீச்ச மட்டையைப்போன்று சிறியதாகி விடுகிறது. சூரியன், சந்திரன், இரவு, பகல் ஆகியவற்றின் சான்றுகள் அல்லாஹ் ஏற்படுத்திய நிர்ணயமாகும். அவை தமக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறாது. சூரியன் தனது செல்லுமிடத்தை மாற்றி சந்திரனைப் பிடிக்க முடியாது. இரவு பகலை முந்த முடியாது. கட்டுப்படுத்தப்பட்டுள்ள இந்த படைப்பினங்கள் அனைத்தும் அல்லாஹ் நிர்ணயித்த வட்டப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றன.” (36:33-40)
தூதரே! இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “பூமியை இரண்டு நாள்களில் படைத்த அல்லாஹ்வை ஏன் நிராகரிக்கிறீர்கள்? அவனுக்கு இணைகளை ஏற்படுத்தி ஏன் அவனைத்தவிர மற்றவர்களை வணங்குகிறீர்கள்? அவன் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனாவான். அது ஆட்டம் காணாமல் இருப்பதற்காக அதற்கு மேலே உறுதியான மலைகளையும் அமைத்துள்ளான். அதில் முந்தைய இரண்டு நாட்களையும் முழுமைப்படுத்தி சரியாக நான்கு நாட்களில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்குத் தேவையான உணவுகளை நிர்ணயித்தான். இதுகுறித்து கேட்க நாடுபவர்களுக்கு விடை இதுதான். பின்னர் அல்லாஹ் வானத்தை படைப்பதன்பால் கவனம் செலுத்தினான். அப்போது அது புகையாக இருந்தது. அவன் வானத்திடமும் பூமியிடமும் கூறினான்: “விரும்பியோ விரும்பாமலோ என் கட்டளைக்குக் கட்டுப்படுங்கள்.” அவை கூறின: “நாங்கள் விரும்பியே உனக்குக் கட்டுப்பட்டோம்.” வானங்களை இருநாட்களில் படைத்தான். அத்தோடு வானங்களையும் பூமியையும் ஆறுநாட்களில் படைப்பது நிறைவுபெற்றது. ஒவ்வொரு வானத்திற்கும் அதற்கு நிர்ணயிக்கப்பட்டதையும் அதற்குரிய கட்டளையையும் அவன் அறிவித்தான். அருகிலுள்ள வானத்தை நாம் நட்சத்திரங்களால் அலங்கரித்துள்ளோம். திருட்டுத்தனமாக ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்பதைவிட்டும் அதனைப் பாதுகாத்துள்ளோம். இவையனைத்தும் யாவற்றையும் மிகைத்த, தன் படைப்புகளைக்குறித்து நன்கறிந்தவனின் நிர்ணயமாகும்.” (41:9-12)
“அவர்கள் தங்களுக்கு மேலுள்ள வானத்தைக்குறித்து சிந்திக்கவில்லையா? நாம் எவ்வாறு அதனைப் படைத்து அதில் நட்சத்திரங்களை வைத்து அழகுபடுத்தியுள்ளோம் என்பதை! அதில் குறை ஏற்படுத்தக்கூடிய எந்தப் பிளவும் இல்லையே! பூமியை வசிப்பதற்கு ஏற்றவாறு நாம் விரித்துள்ளோம். அது ஆட்டம் காணாமல் இருக்கும்பொருட்டு அதில் உறுதியான மலைகளை ஏற்படுத்தினோம். அதில் ஒவ்வொரு வகையான தாவரங்களையும் மரங்களையும் அழகிய தோற்றத்தில் முளைக்கச் செய்தோம். இவையனைத்தையும் நாம் படைத்தது தன் இறைவனின் பக்கம் திரும்பக்கூடிய ஒவ்வொரு அடியானுக்கும் சான்றாகவும் நினைவூட்டலாகவும் இருக்கும் பொருட்டேயாகும். நாம் வானத்திலிருந்து ஏராளமான பயன்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய நீரை இறக்குகின்றோம். அந்த நீரைக் கொண்டு தோட்டங்களையும் தானியங்களையும் அடுக்கடுக்கான குலைகள் கொண்ட உயர்ந்த பேரீச்சை மரங்களையும் முளைக்கச் செய்தோம். அது அடியார்களுக்கு வாழ்வாதாரமாக அமையும் பொருட்டேயாகும். அந்த நீரைக் கொண்டு நாம் செடிகொடிகளற்ற வறண்ட பூமியை உயிர்த்தெழச் செய்கின்றோம். அந்த நீரைக் கொண்டு நாம் வறண்ட பூமியை உயிர்த்தெழச் செய்வதைப்போன்றே இறந்தவர்களை உயிர்ப்பிக்கின்றோம்.” (50:6-11)
அது வாழ்க்கைகுறித்தும் உயிரினங்கள்குறித்தும் அவர்களிடம் பேசுகிறது. அவற்றின் மூலத்தையும் தனித்தன்மைகளையும் அவர்கள் அறியவேண்டிய அளவுக்கு அறிமுகப்படுத்துகிறது. அவர்களுக்கும் அவையனைத்திற்குமிடையே அல்லாஹ்வை வணங்குவதில் இருக்கின்ற தொடர்பையும் எடுத்துரைக்கிறது. இந்த உயிரினங்களில் பலவற்றை அவன் அவர்களின் பயன்பாட்டிற்காக வசப்படுத்தித் தந்து அவர்கள்மீது பொழிந்த அருட்கொடைகளையும் நினைவூட்டுகிறது.
“உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் நாம் நீரிலிருந்தே உருவாக்கினோம்.” (21:30)
“அல்லாஹ் ஒவ்வொரு உயிரினத்தையும் நீரால் படைத்துள்ளான். அவற்றில் சில தம் வயிற்றால் ஊர்ந்து செல்கின்றன. சில இரு கால்களால் நடந்து செல்கின்றன. இன்னும் சில நான்கு கால்களால் நடந்து செல்கின்றன. தான் நாடுவதை அல்லாஹ் படைக்கிறான்.” (24:45)
“பூமியில் ஊர்ந்து செல்லும் பிராணிகளும் தமது இரு இறக்கைகளால் பறந்து செல்லும் பறவைகளும் உங்களைப்போன்ற இனங்கள்தாம். நாம் பதிவேட்டில் குறிப்பிடாமல் எந்த ஒன்றையும் விட்டுவைக்கவில்லை.” (6:38)
“பூமியிலுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் உணவளிப்பது அல்லாஹ்வின் கடமையாகும். அவற்றின் தங்குமிடத்தையும் அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். அனைத்தும் ஒரு தெளிவான பதிவேட்டில் உள்ளது.” (11:6)
“எத்தனையோ உயிரினங்கள் இருக்கின்றன. அவை தம் உணவைச் சுமந்துகொண்டு திரிவதில்லை. அல்லாஹ்தான் அவற்றுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியேற்பவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.” (29:60)
“நீர் பூமியை தாவரங்களற்ற வறண்ட பூமியாக காண்கிறீர். நாம் அதன்மீது மழை பொழியச் செய்தவுடன் செடிகொடிகள் செழித்து வளர்கின்றன. பார்ப்பதற்கு அழகான பலவகையான தாவரங்களை அது முளைக்கச் செய்கிறது.” (22:5)
“அவன் இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை வெளிப்படுத்துகிறான். பூமி வறண்டபின்னரும் அதில் மழை பொழியச் செய்து அதனை உயிர்ப்பிக்கிறான். வறண்ட பூமி மழையைக் கொண்டு உயிர்ப்பிக்கப்படுவதைப்போலவே உங்களின் அடக்கத்தலங்களிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தப்படுவீர்கள்.” (30:19)
“உயிரற்ற பூமி அவர்களுக்கு ஒரு சான்றாகும். நாமே அதனை உயிர்ப்பித்து அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்கள் உண்கிறார்கள். அதில் நாம் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை உருவாக்கினோம். அதில் நீருற்றுகளையும் பொங்கி ஓடச் செய்தோம், அதன் கனிகளை அவர்கள் உண்பதற்காக. அவர்களின் கரங்கள் அதனை உருவாக்கவிலைலை. அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா? பூமி முளைக்கச் செய்கின்றவற்றையும் அவர்களையும் அவர்கள் அறியாதவற்றையும் என எல்லாவற்றையும் இணைகளாகப் படைத்தவன் மிகவும் தூய்மையானவன்.” (36:33-36)
“அல்லாஹ்வே வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவன் உங்களிலிருந்து உங்களுக்கு இணைகளை ஏற்படுத்தியுள்ளான். உங்களுக்காக கால்நடைகளையும் -அவை பெருகும்பொருட்டு- இணைகளாகப் படைத்துள்ளான். அவனுடைய படைப்புகளில் எதுவும் அவனுக்கு நிகர் இல்லை. அவன் செவியேற்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.” (42:11)
“அவன்தான் வானத்திலிருந்து போதுமான அளவு நீரை இறக்கினான். அதனைக்கொண்டு செடிகொடிகளற்ற வறண்ட பூமியை அவன் உயிர்ப்பிக்கின்றான். செடிகொடிகற்ற அந்த வறண்ட பூமியை அல்லாஹ் உயிர்ப்பித்ததுபோன்றே மறுமைநாளில் மீண்டும் உங்களை உயிர்ப்பிப்பான். நீங்கள் பயணம் செய்வதற்காக கப்பல்களையும் கால்நடைகளையும் அவன் உங்களுக்கு ஆக்கித் தந்துள்ளான். இவையனைத்தையும் அவன் உங்களுக்காக ஏற்படுத்தித் தந்துள்ளான். அது நீங்கள் அவற்றின்மீது பயணம் செய்து அவற்றை வசப்படுத்தித்தந்த அல்லாஹ்வை உள்ளத்தால் நினைவுகூர்ந்து நாவால் பின்வருமாறு கூறுவதற்காகத்தான்: “எங்களுக்கு இந்த வாகனத்தை வசப்படுத்தித் தந்தவன் மிகவும் தூய்மையானவன். அவன் எங்களுக்கு அதனை வசப்படுத்தித்தந்திராவிட்டால் நாங்கள் அதற்கு சக்திபெற்றிருக்க மாட்டோம். நாங்கள் எங்கள் இறைவனின் பக்கமே திரும்பிச் செல்பவர்களாக இருக்கின்றோம்.” (43:11-14)
“மனிதன் தான் உண்ணுகின்ற உணவைப் பார்க்கட்டும், அது எவ்வாறு கிடைத்தது என்று. அது, நாம் வானத்திலிருந்து மழை பொழியச் செய்கின்றோம். பின்னர் பூமியைப் பிளந்தோம். அது பிளந்துவிடுகிறது. அதில் நாம் கோதுமை, கடுகு போன்ற தானியங்களையும் திராட்சையையும் தீவனமாக அமையும்பொருட்டு பச்சைக் காய்கறிகளையும் ஆலிவ் மற்றும் பேரீச்சை மரங்களையும் அடர்ந்த மரங்களுடைய தோட்டங்களையும் பழங்களையும் உங்கள் கால்நடைகள் மேயக்கூடியதையும் அவன் முளையச் செய்தான், உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிக்கும்பொருட்டு.” (80:24-32)
“மிக உயர்வான உம் இறைவனின் பெயரைப் போற்றுவீராக. அவனே மனிதனைச் செம்மையாகப் படைத்தான். அவனே நிர்ணயித்து வழிகாட்டினான். அவனே மேய்ச்சல் பயிர்களையும் வெளியாக்கினான். பின்னர் அவற்றை கருத்த குப்பைக் கூளங்களாக்கினான்.” (87:1-5)
“வானங்களிலும் பூமியிலும் உள்ள உயிரினங்களும் வானவர்களும் அல்லாஹ்வுக்கே சிரம்பணிகிறார்கள். அவர்கள் ஆணவம் கொள்வதில்லை. அவர்கள் தமக்கு மேலேயுள்ள இறைவனை அஞ்சி தங்களுக்கு இடப்படும் கட்டளைக்கேற்ப செயல்படுகிறார்கள்.” (16:50)
“வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களும் தம் இறக்கைகளை விரித்தவாறு பறவைகளும் அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டிருப்பதை நீர் காணவில்லையா? ஒவ்வொன்றும் தம் தொழுகையையும் புகழ்ந்திடும் முறையையும் அறிந்தேயுள்ளன. அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.” (24:41)
அது மனிதனைக்குறித்து அதிகமாகப் பேசுகிறது. அவனது மூலம், தோற்றம், இயல்பு, தனித்தன்மைகள், இந்தப் பிரபஞ்சத்தில் அவனது நிலை, அவன் படைக்கப்பட்டதன் நோக்கம், அவன் தன் இறைவனுக்கு அடிமையாக இருப்பதன் தேட்டங்கள், அவனது பலம் மற்றும் பலவீனம், அவன் நிறைவேற்ற வேண்டிய பணிகள் மற்றும் அவனது வாழ்க்கையோடு தொடர்புடைய சிறிய மற்றும் பெரிய விசயங்கள் என அத்தனை விசயங்களையும் குறித்துப் பேசுகிறது. இங்கு நாம் இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மையான ‘அனைத்தையும் தழுவியது’ என்பதைக்குறித்தே பேச விரும்புகிறோம். இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் அடிப்படைகளைப்பற்றி அல்ல. அவற்றைக்குறித்து இரண்டாம் பாகத்தில் விரிவாகக் காண்போம். மனிதனின் எதார்த்த நிலை குறித்து வந்துள்ள சில வசனங்களை மட்டும் இங்கு குறிப்பிடுகின்றோம். இதுகுறித்து இந்த புத்தகத்தின் இரண்டாம் பாகத்தில் விரிவாகப் பேசலாம்.
“நாம் மனிதனை தட்டினால் சப்தமுண்டாகும் காய்ந்த களிமண்ணிலிருந்து படைத்தோம். ஆதமைப் படைப்பதற்கு முன்னரே ஜின்களின் தந்தையை கடும் வெப்பமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம். தூதரே! உம் இறைவன் வானவர்களிடமும் அவர்களுடன் இருந்த இப்லீஸிடமும் பின்வருமாறு கூறியதை நினைவுகூர்வீராக: “தட்டினால் சப்தமுண்டாகும் காய்ந்த கருப்புக் களிமண்ணிலிருந்து நான் மனிதனைப் படைக்கப் போகின்றேன். நான் அவரை செம்மையாகப் படைத்து வடிவம்கொடுத்து முழுமையாக்கியவுடன் நீங்கள் அவருக்குச் சிரம்பணிய வேண்டும். வானவர்கள் அனைவரும் அவருக்குச் சிரம் பணிந்தார்கள். ஆனால் இப்லீஸ் ஆதமுக்குச் சிரம்பணியாமல் தன்னைத் தடுத்துக் கொண்டான்.” (15:26-31)
“நாம் மனிதனை களிமண்ணின் சாரத்திலிருந்து படைத்தோம். பின்னர் அவனை விந்துத் துளியாக்கி ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்தோம். பின்னர் கருவறையில் தங்கிய விந்தை இரத்தக்கட்டியாக ஆக்குகின்றோம். பின்னர் அந்த இரத்தக்கட்டியை சதைப்பிண்டமாக ஆக்கி அந்த சதைப்பிண்டத்தை உறுதியான எலும்புகளாக ஆக்குகின்றோம். அந்த எலும்புகளின்மீது சதையைப் போர்த்துகின்றோம். பின்பு அதில் ஆன்மாவை ஊதி, அதற்கு உயிரளித்து அதனை வேறொரு படைப்பாக படைக்கின்றோம். பாக்கியம் பொருந்திய அல்லாஹ் மிகச்சிறந்த படைப்பாளனாவான். பின்னர் குறிப்பிட்ட நிலைகளைக் கடந்தபிறகு உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தவணை நிறைவடைந்தவுடன் நீங்கள் மரணிக்கிறீர்கள். மரணித்தபிறகு நீங்கள் உலகில் செய்த செயல்களுக்குக் கூலி வழங்கப்படுவதற்காக மறுமைநாளில் உங்களின் அடக்கத்தலங்களிலிருந்து எழுப்பப்படுவீர்கள்.” (23:12-16)
“நான் ஜின்களையும் மனிதர்களையும் என்னை மட்டுமே வணங்குவதற்காகவே படைத்துள்ளேன். நான் அவர்களிடம் உணவையோ அவர்கள் எனக்கு உணவளிக்க வேண்டும் என்றோ விரும்பவில்லை. நிச்சயமாக அல்லாஹ்வே தன் அடியார்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கக்கூடியவன்; வல்லமைமிக்கவன்.” (51:56-58)
“உம் இறைவன் வானவர்களுடன் பின்வருமாறு உரையாடியதை நினைவுகூர்வீராக: “நான் பூமியில் ஒரு பிரதிநிதியை ஏற்படுத்தப் போகின்றேன்” என்று அவன் வானவர்களிடம் கூறியபோது, “நாங்களோ உன்னைப் புகழ்ந்து உன் தூய்மையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும்போது பூமியில் குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்தக்கூடிய மக்களையா நீ ஏற்படுத்தப் போகின்றாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் அறிவேன்” என்று கூறினான்.” (2:30)
“நாம் ஆதமின் மக்களைக் கண்ணியப்படுத்தியுள்ளோம். அவர்களின் பயன்பாட்டிற்காக நீர் மற்றும் நிலத்திலுள்ள அனைத்தையும் நாம் வசப்படுத்தித் தந்துள்ளோம். தூய்மையானவற்றிலிருந்து அவர்களுக்கு வழங்கியுள்ளோம். நாம் படைத்த படைப்பினங்கள் பலவற்றைவிடவும் நாம் அவர்களை சிறப்பித்துள்ளோம்” (17:70)
நாம் அவர்களிடம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் சொர்க்கத்திலிருந்து பூமியில் இறங்கிவிடுங்கள். என் தூதர்களின் மூலமாக உங்களிடம் வழிகாட்டுதல் வந்தால், யார் என் தூதர்களின்மீது நம்பிக்கைகொண்டு, அந்த வழிகாட்டுதலைப் பின்பற்றுவார்களோ அவர்கள் மறுமையில் அச்சப்பட மாட்டார்கள்; உலகில் இழந்தவற்றை எண்ணி கவலைப்படவும் மாட்டார்கள். நம் வசனங்களை பொய் எனக்கூறி மறுப்பவர்கள்தாம் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள்.” (2:38,39)
“காலத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக மனிதன் நஷ்டத்திலும் அழிவிலும் இருக்கின்றான். ஆயினும் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு, நற்செயல்கள் புரிந்து ஒருவருக்கொருவர் சத்தியத்தைக்கொண்டும் சத்தியத்தில் பொறுமையாக நிலைத்திருக்கும்படியும் அறிவுரை கூறியவர்களைத்தவிர.” (103:1-3)
“நாமே மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் தோன்றுவதையும் நாம் அறிவோம். அவனது பிடரி நரம்பைவிட நாம் அவனுக்குச் சமீபமாக இருக்கின்றோம்.” (50:16)
“நாம் மனிதனைக் கஷ்டத்தில் படைத்துள்ளோம்.” (90:4)
“நாம் ஒருதுளி விந்திலிருந்து மனிதனைப் படைத்தோம் என்பதை அவன் கவனிக்கவில்லையா? அவ்வாறிருந்தும் அவன் வெளிப்படையாகத் தர்க்கம் புரிபவனாக இருக்கின்றான்.” (36:77)
“மனிதன் அதிகம் தர்க்கம் புரிபவனாக இருக்கின்றான்.” (18:54)
“நிச்சயமாக மனிதன் பேராசைக்காரனாக படைக்கப்பட்டுள்ளான். அவனுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டுவிட்டால் அதிகம் பதற்றமடைபவனாக இருக்கின்றான். அவனுக்கு ஏதேனும் மகிழ்ச்சி -செல்வமோ செழிப்போ- ஏற்பட்டுவிட்டால் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் அதிகம் தடுத்து வைத்துக்கொள்பவனாக இருக்கின்றான். ஆயினும் தொழுகையாளிகளைத்தவிர. அவர்கள் அத்தகைய மோசமான பண்புகளைவிட்டுத் தூய்மையானவர்களாவர்.” (70:19-22)
“அல்லாஹ் உங்கள்மீதுள்ள பாரத்தை குறைக்கவே விரும்புகிறான். ஏனெனில் மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.” (4:28)
“மனிதனுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் நின்றவாறும், அமர்ந்தவாறும் படுத்தவாறும் நம்மை அழைக்கிறான். ஆனால் அவனது துன்பத்தை நாம் அவனைவிட்டும் நீக்கிவிட்டால் தனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு நம்மை அழைக்காதவனைப்போன்று ஆகிவிடுகிறான். இவ்வாறு வரம்புமீறும் மக்களுக்கு அவர்களின் செயல்கள் அழகாக்கப்பட்டுள்ளன.” (10:12)
“நாம் மனிதனுக்கு நம்மிடமிருந்து ஏதேனும் அருளை வழங்கி பின்னர் அதனை அவனிடமிருந்து பறித்துக்கொண்டால் அவன் நம்பிக்கை இழந்து, நன்றிகெட்டவனாகிவிடுகிறான். அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பிறகு அவனுக்கு நாம் அருள்புரிந்தால் ‘எல்லா துன்பங்களும் என்னைவிட்டு நீங்கிவிட்டன’ என்று அவன் கூறுகிறான். அவன் பூரிப்பில் திளைத்தவனாகவும் கர்வம்கொண்டவனாகவும் ஆகிவிடுகிறான்.” (11:9)
“நன்மையை வேண்டி பிரார்த்திப்பதுபோல மனிதன் தீமையை வேண்டி பிரார்த்திக்கிறான். மனிதன் மிகவும் அவசரக்காரனாக இருக்கின்றான்.” (17:11)
“மனிதன் வரம்பு மீறுகிறான், தன்னைத் தேவையற்றவன் என்று அவன் கருதியதால்.” (96:6,7)
“ஆன்மாவின்மீதும் அதனைச் செம்மையாக உருவாக்கியவன்மீதும் சத்தியமாக, அவன் அதன் தீமையையும் நன்மையையும் அதற்கு உணர்த்தினான். அதைத் தூய்மைப்படுத்தியவர் வெற்றியடைந்து விட்டார். அதைக் களங்கப்படுத்தியவர் தோல்வியடைந்துவிட்டார்.” (91:7-10)
“நாம் மனிதனை மிக அழகிய வடிவில் படைத்தோம். பின்னர் அவனது தீய செயல்களினால் அவனைத் தாழ்ந்தவர்களில் மிகவும் தாழ்ந்தவனாக ஆக்கினோம், ஆயினும் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களைத்தவிர.” (95:4-6)
இவ்வாறு இந்த அடிப்படையைச் சுற்றிக் காணப்படும் பல்வேறுவகையான குர்ஆனிய வசனங்களிலிருந்து மனிதன் அதன் விளக்கத்தையும் வரம்பையும் அறிந்துகொள்கிறான். அது இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் பரிபூரணமான, அனைத்தையும் தழுவிய அடிப்படையாக இருக்கின்றது. அது அனைத்தையும் அறிந்த உறுதியான ஒரே மூலமான இறைவனிடமிருந்தே தன் அடித்தளத்தைப் பெற்றுக்கொண்டது. யூகங்களையும் புராணங்களையும் அடிப்படையாகக் கொண்ட வேறு எல்லா வகையான மூலங்களைவிட்டும் அது தேவையற்றது.
Assalamu alaikum
இந்த புத்தகத்தின் இரண்டாம் பாகத்தின் மொழிபெயர்ப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் இன்ஷா அல்லாஹ்