தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 2)

Loading

[சையித் குதுப் எழுதிய ‘அல்கசாயிஸ் அல்தசவ்வுர் அல்இஸ்லாமி வ முகாவிமதுஹு’ என்ற அறபு புத்தகத்தை மொழிபெயர்த்து ‘இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ என்ற பெயரில் மெய்ப்பொருள் தளத்தில் தொடராக வெளியிட்டு வருகிறோம். அதில் பதினைந்தாம்  பகுதி கீழே.]

இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மையான “அனைத்தையும் தழுவியது” என்பதன் வடிவங்களில் மற்றுமொரு வடிவம் அது இறைவனைக்குறித்து, அவனது தனித்தன்மைகள் மற்றும் பண்புகளைக்குறித்து இந்தக் கண்ணோட்டத்தின் முதல் உண்மை, அடிப்படையான உண்மை என்ற அளவில் பேசுகிறது. அதேபோன்று வணக்க வழிபாட்டின் எதார்த்தம், அதன் தனித்தன்மைகள், பண்புகள் ஆகியவை குறித்தும் பேசுகிறது. பிரபஞ்சம், மனிதன், வாழ்க்கை ஆகியவற்றில் வெளிப்படும் உண்மையைக்குறித்தும் பேசுகிறது. பிரபஞ்சத்தின் எதார்த்தம், மனிதனின் எதார்த்தம் மற்றும் வாழ்வின் எதார்த்தம் குறித்தும் பேசுகிறது. அவற்றின் இயல்புநிலை, வளர்ச்சி, பண்புகள், சூழல்கள் மற்றும் அவற்றுக்கும் மாபெரும் சக்தியான இறைவனுக்கும் இடையேயான தொடர்புகள் குறித்தும் பேசுகிறது.

ஒரே கண்ணோட்டத்தில் இந்த உண்மைகளிடையே தொடர்பை ஏற்படுத்துகிறது. மனித இயல்போடு, அவனது சிந்தனையோடு, அவனது உணர்வோடு, ஒட்டுமொத்த மனிதனோடு மிக எளிதாக உரையாடுகின்றது.

இவ்வாறு அனைத்தையும் தழுவிய இந்த கண்ணோட்டம் உள்ளடக்கிய உண்மைகள் ஒன்றிணைந்து பரிபூரண, அனைத்தையும் உள்ளடக்கிய வடிவத்தையும் விரிவான விளக்கத்தையும் பெறுகிறது. அது வேறு எதனிடமிருந்தும் எதையும் ஏற்றுக்கொள்ளாது. ஏனெனில் அது அனைத்தையும் உள்ளடக்கியது, துல்லியமானது, ஆழமானது, மற்ற எல்லாவற்றையும்விட ஒத்திசைவும் பரிபூரணரத்துவமும் உடையது.

வரலாற்றில் இஸ்லாமிய மெய்யியலாளர்கள் என்று அறியப்பட்டவர்கள் கிரேக்க மெய்யியலின் சில சொல்லாடல்களை -குறிப்பாக அரிஸ்டாட்டிலின் மற்றும் கிருஸ்தவ இறையியலின் சொல்லாடல்களை- இரவலாகப் பெற்று அவற்றை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் புகுத்தியதே இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சீர்குலைவும் குழப்பமும் ஏற்படக் காரணமாக அமைந்தது.

அனைத்தையும் தழுவிய விசாலமான, துல்லியமான, ஆழமான இந்தக் கண்ணோட்டம் தனக்கு அந்நியமான எதையும் ஏற்றுக்கொள்ளாது. ஒவ்வொரு சொல்லாடலுக்கும் ஒரு குறிப்பிட்ட வரலாறு உண்டு. அவை தம் வரலாற்றிலிருந்து குறிப்பிட்ட வகையான தாக்கத்தைப் பெறுகின்றன. அவற்றின் சூழல், வரலாறு ஆகியவற்றிலிருந்து நீக்கி புதிய ஒன்றோடு அவற்றை இணைத்துவிட முடியாது. இஸ்லாமியக் கண்ணோட்டத்திற்கென்று அதன் இயல்போடு, சூழல்களோடு, வரலாற்றோடு ஒத்துப்போகக்கூடிய தனித்துவமான சொல்லாடல்கள் இருக்கின்றன. இது துல்லியமான வெளிப்படையாகும். இதற்கு நுணுக்கமான உணர்வு அவசியமாகிறது. அதனைக்கொண்டே இந்தக் கண்ணோட்டத்தின் தேட்டங்கள் புரிந்துகொள்ளப்படுகின்றன.

முதலில் இந்தக் கண்ணோட்டம் மனிதர்களுக்கு அவர்களின் இறைவனைக் குறித்து துல்லியமாக, முழுமையாக அறிமுகப்படுத்துகிறது. அவனது பண்புகளைக் குறித்து, அவனது தனித்தன்மைகளைக் குறித்து பிரபஞ்சத்திலும் மனிதர்களிலும் இன்னும் படைப்புகள் அனைத்திலும் காணப்படும் அவனது சான்றுகள்குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கிறது. திருக்குர்ஆனின் பெரும்பகுதி இவ்வாறு எடுத்துரைப்பதிலேயே நிறைவடைகிறது. அது இறைவனின் இருப்பை மனித மனதில் மிகத் தெளிவாக, துல்லியமாக, ஆழமாக பதிய வைக்கிறது. மனித மனம் அதன் அத்தனை பகுதிகளையும் உள்வாங்கிக் கொள்கிறது. அது அதனோடு வலுவாக இணைக்கப்பட்டு வாழ்கிறது. அதைவிட்டு வெருண்டோடுவதுமில்லை, அலட்சியமாக இருந்துவிடுவதுமில்லை. ஏனெனில் அதிலுள்ள ஆற்றலும் தெளிவும் எப்போதும் மனித மனதை எதிர்கொள்கிறது. அதில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

“படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் அளவிலாக் கருணையாளன்; இணையிலாக் கிருபையாளன்; தீர்ப்பு நாளின் அதிபதி.” (1:2-4)

“அல்லாஹ்தான் வணக்கத்திற்குத் தகுதியான உண்மையான இறைவன். அவனைத்தவிர வேறு யாரும் இல்லை. அவன் மரணமோ குறைகளோ அற்ற, முழுமையான வாழ்க்கையைப் பெற்ற நித்திய ஜீவன். தனித்து நிற்பவன். படைப்புகள் அனைத்தையும் விட்டும் தேவையற்றவன். சிறு தூக்கமோ பெரும் தூக்கமோ அவனைப் பீடிக்காது. வானங்களிலும் பூமியிலும் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. அவனுடைய அனுமதியைப் பெற்றே தவிர அவனிடம் யாரும் பரிந்துரை செய்ய முடியாது. கடந்த காலத்தில் நிகழ்ந்த, எதிர்காலத்தில் நிகழப்போகின்ற அனைத்தையும் அவன் அறிவான். அவனுடைய அறிவிலிருந்து யாரும் எதையும் அறிந்துகொள்ள முடியாது. ஆயினும் அவன் தான் நாடியவர்களுக்குக் கற்றுக் கொடுத்தவற்றைத்தவிர. அவனுடைய குர்ஸீ பரப்பளவில் வானங்களையும் பூமியையும்விட விலாசமானது. அவையிரண்டையும் பாதுகாப்பது அவனுக்குக் கடினமானதல்ல. அவன்  மிக உயர்ந்தவன். மிகப்பெரியவன்.” (2:255)

“அல்லாஹ்தான் வணக்கத்திற்குத் தகுதியானவன். அவனைத்தவிர வேறுயாரும் இல்லை. மரணமோ குறைகளோ அற்ற முழுமையான வாழ்க்கையைப் பெற்ற நித்திய ஜீவன். தனித்து நிற்பவன். படைப்புகள் அனைத்தையும் விட்டும் தேவையற்றவன். தூதரே! உண்மையான செய்திகளையும் நீதிமிக்க சட்டங்களையும் உள்ளடக்கிய குர்ஆனை நாம் உம்மீது இறக்கியுள்ளோம். அது முந்தைய இறைவேதங்களை உண்மைப்படுத்துகிறது. அவனே தவ்ராத்தையும் இன்ஜீலையும் அருளினான். இந்த இறைவேதங்கள் அனைத்தும் மக்களுக்கு வழிகாட்டியாக இருந்தன. சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து அறிவிக்கக்கூடிய, வழிகேட்டிலிருந்து நேர்வழியைத் தெளிவுபடுத்தக்கூடியவற்றையும் அவன்  அருளினான். அல்லாஹ் உமக்கு அருளிய வசனங்களை நிராகரிப்பவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன்.  தண்டிக்கக்கூடியவன். வானத்திலோ பூமியிலோ அல்லாஹ்வுக்கு எதுவும் மறைவாக இல்லை. அவனே உங்கள் அன்னையரின் வயிற்றில் தான் நாடியவாறு உங்களை வடிவமைக்கிறான். அவனைத்தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. அவன் யாவற்றையும் மிகைத்தவன்; ஞானம்மிக்கவன்.” (3:2-6)

“தூதரே! நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே, நீதான் ஆட்சியதிகாரத்திற்கு அதிபதியாக இருக்கின்றாய். உன் படைப்புகளில் நீ நாடியவர்களுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்குகின்றாய். நீ நாடியவர்களிடமிருந்து அதனைப் பறித்து விடுகின்றாய். அவர்களில் நீ நாடியவர்களை கண்ணியப்படுத்துகின்றாய். நீ நாடியவர்களை இழிவுபடுத்துகின்றாய். இவையனைத்திலும் உன்னுடைய நீதியும் நோக்கமும் அடங்கியுள்ளது. உன் கைவசம்தான் நன்மைகள் அனைத்தும் உள்ளன. நீ எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாவாய். நீ பகலில் இரவைப் புகுத்துகின்றாய். இரவில் பகலைப் புகுத்துகின்றாய். நீ இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறாய். உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை வெளிப்படுத்துகிறாய். நீ நாடியவர்களுக்கு கணக்கின்றி தாராளமாக வழங்குகின்றாய்.” (3:26,27)

“தூதரே! அவர்களிடம் கேட்பீராக: “வானங்களிலும் பூமியிலும் அவையிரண்டிற்கு இடையிலும் ஆட்சியதிகாரம் யாருடையது? நீர் கூறுவீராக: அதிகாரம் முழுவதும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் அடியார்கள்மீது கருணைபுரிவதை தன்மீது விதித்துக் கொண்டான். அவர்கள் அனைவரையும் மறுமைநாளில் ஒன்றுதிரட்டுவான். அந்த நாள் வருவதில் எந்த சந்தேகமும் இல்லை. அல்லாஹ்வை நிராகரித்து அழிவுக்கான காரணிகளைத்தேடி தங்களுக்குத் தாங்களே இழப்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.

இரவில் மறைந்து வசிப்பவை அல்லது பகலில் வெளிப்பட்டு அசைபவை என எல்லாவற்றின் அதிகாரமும் அல்லாஹ்விடமே உள்ளது. நீங்கள் பேசுவதை அவன் செவியேற்கக்கூடியவன். உங்களின் செயல்களை அவன் நன்கறிந்தவன். தூதரே! இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நான் அல்லாஹ்வைத்தவிர மற்றவர்களை பொறுப்பாளர்களாக, உதவியாளர்களாக ஆக்கிக் கொள்வதா? அவன்தான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தான். அவன் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு உணவளிக்கிறான். அவனைத்தவிர வேறு யாரும் உணவளிப்பதில்லை. அவன் தன் அடியார்களைவிட்டும் தேவையற்றவன். அடியார்கள் அவன்பால் தேவையுடையவர்கள்.” தூதரே! நீர் கூறுவீராக: “இந்த சமூகத்தில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்களில் முதலாமவனாக இருக்க வேண்டும் என்று என் இறைவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான். அவனுடன் மற்றவர்களை இணையாக்குபவர்களுடன் சேர்ந்துவிடக்கூடாது என்று என் இறைவன் என்னைத் தடுத்துள்ளான்.

தூதரே! நீர் கூறுவீராக: “நான் என் இறைவனின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டால் அல்லது அவன் கட்டளையிட்ட விசயத்திற்கு கீழ்ப்படிய மறுத்தால் மறுமைநாளில் அவன் என்னைக் கடுமையாக வேதனை செய்வான். மறுமைநாளில் அல்லாஹ் யாரைவிட்டும் இந்த வேதனையை அகற்றிவிடுவானோ அவனுடைய அருளால் அவர் வெற்றி பெற்றுவிட்டார். வேதனையிலிருந்து கிடைக்கும் இந்த விடுதலையே மிகப் பெரிய வெற்றியாகும்.

மனிதனே! அல்லாஹ் உனக்கு ஏதேனும் துன்பம் அளித்தால் அவனைத்தவிர யாராலும் அதனைப் போக்க முடியாது. அவன் உனக்கு ஏதேனும் நன்மை அளித்தால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது. அவன் எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது. அவன் யாவற்றையும் மிகைத்தவன்; ஞானம்மிக்கவன்; அனைத்தையும் அறிந்தவன்.

தூதரே! இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “நான் உண்மையாளன் என்பதற்கு யாருடைய சாட்சி மிகப் பெரியதாக இருக்கும்?” நீர் கூறுவீராக: “நான் உண்மையாளன் என்பதற்கு அல்லாஹ்வின் சாட்சியமே பெரியதாக இருக்கும். எனக்கும் உங்களுக்குமிடையே அவனே சாட்சியாளனாக இருக்கின்றான். நான் உங்களிடம் கொண்டுவந்ததையும் நீங்கள் அதனை நிராகரிப்பீர்கள் என்பதையும் அவன் அறிவான். நான் உங்களை அச்சமூட்டுவதற்காக, மனிதர்கள், ஜின்கள் அனைவரையும் அச்சமூட்டுவதற்காக அல்லாஹ் எனக்கு இந்த குர்ஆனை வஹியாக அறிவித்துள்ளான். இணைவைப்பாளர்களே! அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களும் இருக்கின்றார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” தூதரே! நீர் கூறுவீராக: “நீங்கள் ஏற்றுக் கொண்டதற்கு நான் சாட்சி கூறமாட்டேன். அல்லாஹ் ஒருவனே. அவனுக்கு யாதொரு இணையுமில்லை. நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கும் அனைத்தையும்விட்டும் நான் விலகிவிட்டேன்.” (6:12-19)

“ஒவ்வொரு பெண்ணும் தன் வயிற்றில் சுமப்பதையும் கர்ப்பப்பை சுருங்கி விரிவதையும் என ஒவ்வொன்றையும் அல்லாஹ் அறிகிறான். ஒவ்வொன்றும் ஒரு அளவோடுதான் அவனிடம் இருக்கின்றது. அவன் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிகிறான். அவன் மகத்தானவன்; மிக உயர்ந்தவன். அவன் மறைவானதையும் இரகசியமானதையும் அறிகிறான். நீங்கள் வெளிப்படையாகப் பேசினாலும் இரகசியமாகப் பேசினாலும் அவனுக்கு ஒன்றுதான்; இரவின் இருளில் மக்களின் பார்வையைவிட்டு மறைந்திருப்பவனும் பகலின் வெளிச்சத்தில் தன் செயல்களால் வெளிப்படையானவனும் அவனுக்கு ஒன்றுதான்.

மனிதனின்மீது பின்தொடர்ந்து வரக்கூடிய அவனுடைய வானவர்கள் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு மனிதனைப் பாதுகாக்கிறார்கள். ஒரு சமூகம் தாங்கள் இருக்கும் நல்ல நிலையிலிருந்து தாங்களாகவே மாற்றிக்கொள்ளாதவரை அல்லாஹ்வும் அதன் நிலையை மாற்ற மாட்டான். அவன் ஒரு சமூகத்தை அழிக்க நாடினால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது. அவனைத்தவிர உங்களுக்கு வேறு பொறுப்பாளன் இல்லை.  அவனே உங்களுக்கு மின்னலைக் காட்டுகிறான். அது தன் அச்சத்தையும் ஆர்வத்தையும் உங்களுக்கு ஏற்படுத்துகிறது. அவனே நீர் நிறைந்த கனமான மேகங்களை உருவாக்குகிறான். இடிமுழக்கம் தன் இறைவனைப் புகழ்வதுடன் அவனது தூய்மையையும் பறைசாற்றுகிறது. வானவர்கள் அச்சத்தினாலும் கண்ணியத்தினாலும் தங்கள் இறைவனைப் புகழ்கிறார்கள். அவன் தான் நாடிய படைப்புகள்மீது பொசுக்கக்கூடிய இடியை அனுப்பி அவற்றை அழித்துவிடுகிறான். நிராகரிப்பாளர்கள் அல்லாஹ் ஒருவனே என்பதில் தர்க்கம் புரிகிறார்கள். அல்லாஹ் வல்லமைமிக்கவன். தன் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டவர்களைத் தண்டிப்பதில் கடுமையானவன்.

ஓரிறைக்கொள்கையின் பக்கம் விடுக்கப்படும் அழைப்பு அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. இதில் எவருக்கும் பங்கு இல்லை. இணைவைப்பாளர்கள் அழைக்கும் சிலைகள் அவர்களுக்கு எந்தப் பதிலையும் அளிக்காது. இதற்கு உதாரணம், தாகித்த மனிதன் தண்ணீரை நோக்கி கையை நீட்டிக் கொண்டு அது தன் வாய்க்குள் சென்றுவிடும் என்று எண்ணுவதைப் போன்றதாகும். அது ஒருபோதும் அவனுடைய வாய்க்குள் செல்லாது. நிராகரிப்பாளர்கள் சிலைகள் அழைப்பது வீணானதாகவும் சத்தியத்தைவிட்டுத் தூரமானதாகவும் இருக்கின்றது. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே சிரம்பணிந்து கட்டுப்படுகின்றன. படைப்பினங்கள் அனைத்தின் நிழல்களும் பகலின் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் அவனுக்கே கட்டுப்படுகின்றன.

தூதரே! நிராகரிப்பாளர்களிடம் நீர் கேட்பீராக: “வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? அவையிரண்டையும் நிர்வகிப்பவன் யார்?” தூதரே! நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் அவையிரண்டையும் படைத்தான். அவனே அவையிரண்டையும் நிர்வகிக்கின்றான்.” தூதரே! நீர் அவர்களிடம் கேட்பீராக: “அல்லாஹ்வைத்தவிர உங்களுக்கு எதுவும் செய்ய இயலாதவற்றையா நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டீர்கள்? அவை தங்களுக்குக்கூட பலனளிக்கவோ தங்களைவிட்டுத் தீங்கினை அகற்றவோ சக்திபெறாது. தூதரே! நீர் அவர்களிடம் கேட்பீராக: “பார்வையில்லாத நிராகரிப்பாளனும் பார்வையுடைய நேர்வழிபெற்ற நம்பிக்கையாளனும் சமமாவார்களா? அல்லது நிராகரிப்பு என்னும் இருள்களும் ஈமான் என்னும் ஒளியும் சமமாக முடியுமா? அல்லது நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்திக் கொண்டீர்களே, அவை அல்லாஹ் படைத்ததைப்போன்று படைத்தனவா? அதனால் அல்லாஹ்வின் படைப்பும் அவற்றின் படைப்பும் அவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டனவா? தூதரே! நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் எல்லாவற்றையும் படைத்தவன்; படைப்பில் அவனுக்கு யாதொரு இணையுமில்லை; அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன்; அனைவரையும் அடக்கியாள்பவன்.” (13:8-16)

“வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அவனிடம் உள்ளவர்கள் அவனை வணங்குவதைவிட்டு கர்வம் கொள்வதுமில்லை; களைத்துப்போவதுமில்லை. அவர்கள் இரவும் பகலும் சோர்வடையாமல் அவனைப் புகழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். மாறாக இணைவைப்பாளர்கள் பூமியிலிருந்து வேறு தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவற்றால் இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியாது.  வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத்தவிர வேறு தெய்வங்கள் இருந்தால் ஆட்சியதிகாரம் சீர்கெட்டுப் போயிருக்கும். அரியணையின் அதிபதியான அல்லாஹ் அவர்கள் புனைந்துகூறும் இணைகளைவிட்டும் தூய்மையானவன். அவன் ஏற்படுத்திய விதியைக்குறித்து எவரும் கேட்க முடியாது. ஆனால் அவன் தன் அடியார்களின் செயல்களைக்குறித்து கேள்வி கேட்பான்.” (21:19-23)

“வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் அல்லாஹ்வின் தூய்மையைப் பறைசாற்றுகின்றன. அவன் யாவற்றையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. அவன் தான் நாடியவர்களை உயிர்ப்பிக்கிறான், தான் நாடியவர்களை மரணிக்கச் செய்கிறான். அவன் எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவன். அவன் முதலும் முடிவுமானவன். அவன் வெளிப்படையானவனும் மறைவானவனுமாவான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அவன் அரியணையின்மீது தன் கண்ணியத்திற்கேற்ப உயர்ந்து விட்டான். பூமியில் நுழையக்கூடியவற்றையும் அதிலிருந்து வெளிப்படக்கூடியவற்றையும் வானத்திலிருந்து இறங்கக்கூடியவற்றையும் அதன்பால் ஏறக்கூடியவற்றையும் அவன் அறிகிறான். நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடேனேயே இருக்கின்றான். நீங்கள் செய்யும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. நீங்கள் செய்பவற்றை அவன் பார்க்கக்கூடியவன். வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. அவன் பக்கமே விவகாரங்கள் திரும்புகின்றன. அவன் இரவை பகலில் பிரவேசிக்கச் செய்கிறான். பகலை இரவின்மீது பிரவேசிக்கச் செய்கிறான். அவன் அடியார்களின் உள்ளங்களில் உள்ளவற்றையும் நன்கறிந்தவன்.” (57:1-6)

Related posts

Leave a Comment