தீண்டாமையைக் கற்பிக்கும் கடவுளை மாற்றுவோம்!
[நாகை மாவட்டம் குடவாசல் கிராமத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனர், அம்பேத்கர் மாணவர் இளைஞர் பேரவை தலைவர் டி.எம். மணி ஆற்றிய உரை]
அன்பார்ந்த சகோதரர்களே! தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து நான் நீண்ட காலமாக தொண்டு செய்து வருகின்றேன். பேரறிஞர் அம்பேத்கர் அவர்களை நன்றாக புரிந்துகொண்ட காலம்தொட்டு, நான் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். இதனால், பெரும் துன்பங்களையும் அவமானங்களையும் அடைந்து இருக்கிறேன். என் கைகளில் விலங்குகளைப் பூட்டி வீதியில் நாயைப் போல் இழுத்துச் சென்று இருக்கிறார்கள்.
சிறைக் கூடங்களில் தனிமையில் வைத்தும், விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியும் என்னை அவமானப்படுத்தியும் இருக்கிறார்கள்.
என்னோடு சேர்ந்து இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள சகோதர்களும் இதுபோன்ற சிரமங்களை அனுபவித்துள்ளார்கள். சிலர் தங்களின் இன்னுயிரையும் தியாகம் செய்திருக்கின்றனர். வீதியிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இன்னும் சிலர் கல்லூரிப் படிப்பையும் உத்தியோக வாய்ப்பையும் இழந்திருக்கிறார்கள். பெண்கள் அவமானப்படுத்தப்பட்டும், சொத்துகள் சூறையாடப்பட்டும், வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டும் சொல்லொணாக் கொடுமைகளெல்லாம் அனுபவித்த பிறகு நன்றாக யோசித்து என் அனுபவத்தின் மூலமாக நான் கற்றறிந்த சில கருத்துகளை உங்கள் முன் வைக்கிறேன்.
மிக அண்மைக் காலமாக இஸ்லாம் பற்றிய கருத்தரங்குகளில் கலந்துகொண்டு, இஸ்லாம் மார்க்கமே தீண்டாமைக்குத் தீர்வு என்பதாகப் பேசிவருகிறேன். இந்த எனது கருத்து எனக்கு மட்டும் சொந்தமான கருத்தல்ல.
“இந்துவாக இருக்காதீர்கள். இந்துக் கடவுள்களை வணங்காதீர்கள். இந்து சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்காதீர்கள். இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள். நான் பிறக்கும்போது இந்துவாகப் பிறந்துவிட்டேன். இது என் குற்றமில்லை. ஆனால் நான் சாகும்போது இந்துவாக சாகமாட்டேன்” என்றெல்லாம் அண்ணல் அம்பேத்கர் பேசியிருக்கிறார். “இன இழிவு நீங்க இஸ்லாம் ஒன்றே தீர்வு” என்றுரைத்தார் தந்தை பெரியார். இவர்களின் கொள்கையையே நான் இவ்வளவு கொடும் துயர்களுக்குப் பிறகு பேசியும் எழுதியும் வருகிறேன்.
மேற்சொன்ன இரண்டு மேதைகளும் தங்கள் சமூக சிந்தனையால், கற்ற கல்வியால் தக்க ஆதாரங்களோடு இத்தகைய கருத்துகளைச் சொன்னார்கள். ஆனால், அவர்களின் அறிவார்ந்த கருத்துகளைப் படித்தபொழுதெல்லாம் எனக்கு இந்தக் கொள்கையின் முக்கியத்துவம் தெரியவில்லை.
நான் முன்பு துன்பங்களையெல்லாம் அனுபவித்தும், பல குடும்பங்கள் நாசமானபோதும் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. ஆம், மது உற்பத்தி செய்வோர், மது விற்பனை செய்வோர், மது அருந்துவோர் ஆகியோருக்குத் துணை போகாமை, வரதட்சணை ஒழிப்பு, மூடப்பழக்க வழக்க ஒழிப்பு, பெண் அடிமை ஒழித்தல், விதவைத் திருமணம், கலப்புத் திருமணம் போன்ற சீர்திருத்தக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பொது ஒழுக்கம் தவறாமல் ஒரு பெரிய இயக்கத்தை நடத்தி எண்ணற்ற தியாகங்களைச் செய்த பின்பும் எவ்வித முன்னேற்றமும் காண முடியவில்லை.
இன்றுவரை,
- பொதுக் குளத்தில் குளிக்க முடியாத நிலை.
- தேநீர் விடுதிகளில் தனி இடம்.
- தனி டபராசெட்.
- கோயிலுக்குள் செல்ல முடியாத நிலை.
- மருத்துவமனையில் நோயாளிகளுக்குத் தனி வரிசை.
- பொதுச் சாலைகளை மற்ற சாதிகளைப் போல் பயன்படுத்த முடியாத நிலை.
- சவரக் கடையில் சவரம் செய்ய, முடிவெட்ட இயலாத நிலை.
- இவற்றையெல்லாம் எதிர்த்தால், போலீஸில் புகார் அளித்தால் வேலை கொடுக்க மறுப்பது.
- கடைகளில் பொருள்கள் கொடுக்க மறுத்தல்.
- நிலங்களுக்கு நீர்விட மறுத்தல்.
போன்ற கொடுமைகள் குறையாத காரணத்தால் அந்த மாமேதைகளான அம்பேத்கரும் பெரியாரும் சொன்னதைப் பற்றி சிந்தித்து இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படைத் தத்துவத்தையும், இஸ்லாமிய சமூகத்தின் உயர்வுகளையும் அறிந்து ‘இஸ்லாம் ஒன்றே தீர்வு’ என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.
இங்கு கூடியிருக்கிற சகோதர்கள் நான் சொல்வதிலே எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை அறிந்து தங்கள் கருத்துகளை இறுதியாக என்னிடத்தில் கூறலாம் அல்லது விவாதிக்கலாம். ஏனெனில், உங்களுக்குப் பதில் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்தக் கருத்தரங்கிற்கு நான் வருவதை அறிந்து, என்னைச் சார்ந்த தீண்டப்படாத வகுப்பைச் சேர்ந்த சில சகோதரர்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். இன்னும் சில இந்துச் சகோதர்களை விசாரித்தபோது, தமது முதலாளிகளோடு வந்திருப்பதாகவும், தாமும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்தாம் என்றும் சொன்னார்கள். சில முஸ்லிம் நண்பர்களோடு தாழ்த்தப்பட்ட சகோதரர்களும், தாழ்த்தப்பட்ட சகோதரர்களோடு முஸ்லிம் நண்பர்களும் ஒருவரையொருவர் கலந்து இந்தக் கருத்தரங்கைப் பற்றி சொல்லி அழைத்து வந்திருக்கிறீர்கள் என்பதை நான் விசாரித்து தெரிந்துகொண்டேன்.
ஆக மொத்தத்தில் பாதி பேருக்கும் மேல் முஸ்லிம்களும் மீதம் பேர் தீண்டப்படாத வகுப்பினரும், ஒருசிலர் வேறு வகுப்பினரும் ஏறத்தாழ ஐநூறு பேருக்கு மேல் கூடியிருக்கிறீர்கள்.
உங்களை இந்து என்றும், முஸ்லிம் என்றும் இரண்டாகப் பிரிக்கலாம். அல்லது பணக்காரர் என்றும், ஏழை என்றும் இரண்டாகப் பார்க்கலாம். அல்லது படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று பிரிக்கலாம். அல்லது அரசு ஊழியர், அரசு ஊழியர் அல்லாதோர் என்றுகூட பார்க்கலாம். உங்களைப் பார்ப்பவர்களின் எண்ணங்களைப் பொறுத்தது அது.
ஆனால் உங்களுக்குள்ளே எவ்வித பேதமும் இல்லாமல் இங்கு போடப்பட்டுள்ள நாற்காலிகளில் சமத்துவமாக அமர்ந்திருப்பதிலும் சரி, மதியம் உணவு அருந்தியபோது, அவரவர்களுக்குக் கிடைத்த இடத்தில் அமர்ந்து உண்டதையும் சரி, உங்களை எந்த வகையிலும் பிரித்துப் பார்க்க முடியாத நிலையில் சமத்துவமாக சகோதரத்துவத்துடன் நடந்துகொண்டீர்கள்.
ஆனால் உங்களுக்கு அப்பால் இருக்கிற ஓர் உயர்சாதி இந்து உங்களை எப்படிப் பார்ப்பார்? எப்படி நடந்துகொள்வார்? என கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அவர்களுடைய பார்வையில் நீங்கள் இருவகையினரே. ஒருசாரார் தீண்டத் தகுந்தவர்களாகவும், மற்ற சாரார் என்னைப் போன்றோர் தீண்டத் தகாதவர்களாகவும்தான் பார்க்க முடியும். ஏனென்றால், இந்து மதம் எங்களை அந்த நிலைக்குத் தள்ளி வைத்துள்ளது.
வேற்றுமைகளின் பிறப்பிடம்
இந்துக்களுக்கு உள்ளே பல வேற்றுமைகள் உள்ளன. கடவுளின் தலையிலே பிறந்தவர்கள் ஒரு பிரிவினராகவும், கடவுளின் தோளிலே பிறந்தவன் ஒரு பிரிவாகவும், கடவுளின் தொடையிலே பிறந்தவன் ஒரு பிரிவாகவும், காலில் பிறந்தவன் ஒரு பிரிவாகவும் பாகுபாடு இருக்கிறது.
காலிலே பிறந்தவனை விட தொடையிலே பிறந்தவனை உயர்ந்தவன் என்றும், தொடையிலே பிறந்தவனை விட தோளிலே பிறந்தவன் உயர்ந்தவன் என்றும், தோளிலே பிறந்தவனை விட தலையிலே பிறந்தவன் உயர்ந்தவன் என்றும் கடவுளின் பெயரால் பாகுபாடு கற்பிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கடவுளின் பெயரால் அவரவர்களுக்கான தொழிலும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
கடவுளின் தலையிலே பிறந்த பிராமணன், கடவுளிடம் பேசவும், கற்பகத்தினுள் செல்லவும் தகுதி உடையவன் என்றும்; அடுத்து தோளிலே பிறந்த சத்ரியன் அரசாளத் தகுதி உடையவன் என்றும்; தொடையிலே பிறந்த வைசியன் வியாபாரம், விவசாயம் செய்யத் தகுதி உள்ளவன் என்றும்; காலிலே பிறந்த சூத்திரன் ஏனையோருக்கு கருமங்கள் செய்யப் படைக்கப்பட்டவன் என்றும் இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அதே சமயத்தில், தலையிலே பிறந்த பிராமணன் சத்ரியனாவதற்கும், தோளிலே பிறந்த சத்ரியன் பிராமணன் ஆவதற்கும், வசிட்டர், விசுவாமித்திரர் காலம் தொட்டு இன்று சங்கரமட சங்கராச்சாரிகள், சாமியார்மட ஆதினங்கள் வரை விட்டுக் கொடுத்தும், தொட்டுக் கொடுத்தும் உறவாடிவருகிறார்கள். மற்றொரு பிரிவாகிய வைசியர்கள் வியாபாரமும் விவசாயமும் மட்டுமின்றி அரசியல் முதல் ஆன்மிகம் வரை அனைத்திலும் கோலோச்சி வருகிறார்கள்.
இந்து வேதங்களில் தீண்டத்தகாதோராகச் சொல்லப்படும் சூத்திரர்கள் தீண்டத் தகுந்தவர்களாகவும் மேற்சொன்ன அனைவரும் எந்தத் தொழிலையும் செய்யலாம்; எந்த இடத்துக்கும் போகலாம்; அரசியலில் எந்த தொகுதியிலும் போட்டியிடலாம் என்பதோடு, அரசியலில் முக்கிய பங்குகள் வகிக்கின்ற அளவுக்கு மாற்றம் நிகழ்ந்து இருக்கின்றன.
ஆனால் கடவுளின் காலிலோ, தலையிலோ, தொழிலோ, தொடையிலோ பிறக்காத சண்டாளர்களாக, வர்ணமற்றோராக இந்துக்களால் (பார்ப்பனர்களால்) கருதப்பட்ட, உருவாக்கப்பட்ட தீண்டப்படாத மக்கள் எவ்வித மாற்றமும் பெற முடியாமல் அவரவர்க்கு ஒதுக்கிய இழிவு தொழிலை மட்டும் செய்ய முடியும்.
எந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாத நிலையில், தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள தனித் தொகுதியில் மட்டுமே போட்டியிட முடியும், வெற்றிபெற முடியும். இருப்பினும், இந்தப் பாவப்பட்ட மக்கள் இத்தகைய இழிந்த நிலையை சுமந்துகொண்டு அறிவு மயங்கிக் கிடக்கிறார்கள்.
தங்களுக்கென்று ஒரு தெரு, அதற்கொரு சாலை, தங்களுக்கென்று ஒரு கோயில், தங்களுக்கென்று ஒரு குளம், தங்களுக்கு தனியாக ஒரு சுடுகாடு, அதற்கொரு பாதை என்பதாக இந்தியாவில் இருக்கிற பன்னிரண்டு லட்சம் கிராமங்களிலும் ஓரங்கட்டி ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதற்கு என்ன காரணம்? முஸ்லிம்களாகிய உங்களுக்கும் தனியாக ஒரு தெரு இருக்கிறது. தனியாக ஒரு பள்ளிவாசல் இருக்கிறது. தனியாக இடுகாடும் இருக்கிறது. ஆனால் இந்துக்களின் பார்வையில் நீங்கள் தீண்டத் தகுந்தவர்கலாகவும் நாங்கள் தீண்டத் தகாதவர்கலாகவும் போனதற்கு என்ன காரணம்?
ஒரு முஸ்லிம் தெருவை எடுத்துக்கொள்ளுங்கள். எண்ணற்ற மாற்றம் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. நேற்று வோட்டு வீடு, இன்று மாடி வீடு, வகைவகையான கதவுகள், ஜன்னல்கள். நேற்று சைக்கிள், இன்று மோட்டார் சைக்கிள். நேற்று அம்பேசடர், இன்று மாருதி கார். இப்படியாக ஏகப்பட்ட மாற்றங்கள் கண்ணைப் பறிக்கின்றதே!
ஆனால் எங்கள் தெருவில் நந்தனார் காலம் முதல் இன்றைய காலம் வரை எவ்வித மாற்றமும் இல்லையே! ஏன்? உலகில் வளர்ந்துவரும் விஞ்ஞானத்துக்கு ஏற்ப அல்லது பொருளாதாரத்துக்கு ஏற்ப முஸ்லிம்கள் வளர்ச்சி அடைவதும், வளர்ந்துவரும் விஞ்ஞானம், பொருளாதாரத்தின் வாடை கூட எங்கள் தெருவில் வீசாததற்கு என்ன காரணம்?
நீங்கள் இந்துக்களுக்கு அப்பாற்பட்டவர்கள்தான். நாங்களும் இந்துக்களுக்கு அப்பாற்பட்டவர்கள்தான். ஆனால் முஸ்லிம்கள் இந்துக்களுக்கு நிகராக எந்தத் தொழிலையும் செய்ய முடிகிறது. எந்தத் தொகுதியிலும் போட்டியிடவும் வெற்றிபெறவும்கூட முடிகிறது. ஆனால் எங்களுக்கு அந்த நிலை வரவில்லையே! ஏன்?
எங்களுடைய இந்த இழிந்த நிலைக்கும், உங்களுடைய இந்த உயர்ந்த நிலைக்கும் ஒரே காரணம் நாம் வணங்குகின்ற கடவுள்தான்.
இன்று இந்தியாவில் இருக்கின்ற முஸ்லிம்கள் ஒருகாலத்தில் எங்களைப் போல் கல்லையும் செம்பையும் கடவுளாக வணங்கி வந்தவர்கள்தான். இந்நாட்டினை ஆக்கிரமித்த வந்தேறிகள், கடவுளைக் காட்டி அதன் பெயராலேயே இந்த மண்ணின் மைந்தர்களை கீழ்மைப்படுத்தி, படித்தால் குற்றம், ஆடை உடுத்தினால் குற்றம், செருப்பு அணிந்தால் குற்றம், குடை பிடித்தால் குற்றம் என்றெல்லாம் அடிமைபடுத்தினார்கள்.
இஸ்லாமியத் தத்துவம் உலகில் பரவியபோது, அது இங்கு அடிமைகளாக வாழ்ந்த மக்களுக்கு விடுதலையைக் கொடுத்தது.
- ஆடை உடுத்தாமல் இருந்தால் குற்றம் என்றது இஸ்லாம். இங்கு ஆடை உடுத்த தடுக்கப்பட்டவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
- செருப்பு அணியாதது குற்றம் என்றது இஸ்லாம். இங்கு செருப்பு அணியத் தடுக்கப்பட்டவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். செருப்பு அணிந்தார்கள்.
- படிப்பது ஒவ்வொருவரின் கடமை என்றது இஸ்லாம். படிக்கக் கூடாது என்று தடுக்கப்பட்டவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். படிக்கத் தொடங்கினார்கள்.
ஆகவே, இந்த மண்ணின் மைந்தர்கள் சுயமரியாதையோடும் தன்மானத்தோடும் பகுத்தறிவோடும் வாழ ஆசைபட்டார்கள். சமத்துவமும் சகோதரத்துவமும் உள்ளவர்களாக வாழ விரும்பினார்கள். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தன்மானமுள்ள கூட்டமாகவும், சுயமரியாதை உள்ள கூட்டமாகவும் பகுத்தறிவு உள்ளவர்களாகவும் முஸ்லிம்களாகவும் வாழ்கிறார்கள்.
காரணம், இந்த மண்ணின் மைந்தர்களில் பலர் தாம் வணங்கி வந்த கடவுள்களைப் புறக்கணித்ததால் இன்றைக்கு விடுதலை பெற்ற மக்களாக, முஸ்லிம்களாக வாழ்கின்றார்கள். வணங்குகின்ற கடவுளை மாற்றாத காரணத்தால் தாழ்த்தப்பட்ட மக்கள் ஓரங்கட்டி, ஒதுக்கப்பட்டு அடிமைகளாக இழிந்த வாழ்க்கை வாழ்கிறார்கள்.
- கல்வி கற்றால் தீண்டாமை போய்விடும் என்றார்கள்! கல்வி கற்றவர்களுக்கு தீண்டாமை போய்விட்டதா?
- பணம் வந்தால் தீண்டாமை போய்விடும் என்றார்கள்! பணம் வந்தவர்களுக்கு தீண்டாமை போய்விட்டதா?
- நாகரிகம் வந்தால் தீண்டாமை போகும் என்றார்கள்! நாகரிகம் வந்தர்களுக்கு தீண்டாமை போய்விட்டதா?
யாரும் தீண்டாமையிலிருந்து விடுபெற முடியவில்லை. காரணம், கல்வி இல்லாததால், நாகரிகம் இல்லாததால், பொருளாதாரம் இல்லாததால் தீண்டாமை வரவில்லை! தீண்டத்தகாதவர்களாக அவர்கள் ஆக்கப்பட்டதால்தான் கல்வி, நாகரிகம், பொருளாதாரம் போன்றவையெல்லாம் மறுக்கப்பட்டன.
தீண்டாமை எப்படி வந்தது?
தீண்டாமை என்பது கடவுளின் பெயரால் வந்தது. கடவுள் இல்லையென்று சொல்லிப் பார்த்தோம். ஆனால் கடவுளால் சொல்லப்பட்ட சாதி நம்மை விட்டுப் போகவில்லை அல்லது சாதியை விட்டு நாம் போகவில்லை. சாதியால் வந்த தீண்டாமையும் நம்மைவிட்டுப் போகவில்லை.
குறைந்தபட்சம் கடவுள் இல்லை, சாதி இல்லை. பரிணாம வளர்ச்சியும், விஞ்ஞான வளர்ச்சியும்தான் உலகம் எனச் சொல்லக்கூடியவர்கள் கூட ஒரு கூட்டமாக, ஒரு மனித வட்டமாக சேர முடியவில்லை. அவரவர் சாதி வட்டத்தை விட்டு வெளியே வர முடியவில்லை.
கடவுள் இல்லை, மதம் இல்லை என்பதெல்லாம் வீண் பேச்சாகவும் வெட்டிப் பேச்சாகவும் போய்விட்டது. இத்தகைய வாதங்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நம்மை எள்ளளவும் முன்னேறவிடவில்லை.
ஆகவே முஸ்லிம்களைப் போல் நாமும் சாதியம் கற்பித்த கடவுளர்களைத் தூக்கி எறிவதன் மூலம்தான் உலக இன்பத்தையும் விஞ்ஞானத்தையும் பொருளாதரத்தையும் நுகர முடியும். முஸ்லிம்களுக்கு இடையேயும் சிலர் பிரிவினைகள் இருக்கின்றன என்று சிலர் சொல்வதுண்டு. நான் கேட்கிறேன், அங்கே சில பிரிவுகள் இருப்பதால் யாருக்கு என்ன இழப்பு? யாரை யார் சுரண்டுகிறார்கள்? யார் யாரை அடிமையாக்குகிறார்கள்? யார் யாரைக் கீழ்மைப்படுத்துகிரார்கள்?
பட்டானித் தரு, லெப்பைத் தெரு, மரைக்காயர் தெரு, சாஹிப் தெரு எனப் பிரிக்கப்பட்டு அவர்களுக்கிடையே ஏற்றத் தாழ்வு பாராட்டப்படுகிறதா? வணங்குகின்ற கோயிலிலே பேதமை இருக்கிறதா? புதைக்கின்ற இடுகாட்டில் பேதமை இருக்கிறதா? நடக்கின்ற சாலையிலே பேதமை உள்ளதா? திருமணம் செய்வதில் பேதமை இருக்கின்றனதா? ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறதா? கிடையாது.
காரணம், முஸ்லிம்கள் வணங்குவது ஒரே இறைவனைத்தான். அந்த இறைவன் என்ன சொல்கிறான்? உங்கள் அனைவரையும் ஒரே ஆண் மற்றும் பெண்ணிலிருந்தே படைத்தேன். உங்களிடையே உயர்ந்தவர் – தாழ்ந்தவர் என்ற வேறுபாடு கிடையாது என்று தெளிவாகச் சொல்கிறான்.
காலுக்கும் தலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. காலை விட தலை உயர்ந்தது. கால் இல்லாமல்கூட வாழ்ந்துவிடலாம். தலை இல்லாமல் வாழ முடியாது. ஆகவே, காலில் பிறந்தவனை விட தலையில் பிறந்தவன் உயர்ந்தவன் என்று சொல்ல முடியும்.
ஆனால், ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் இடையே ஏற்றத் தாழ்வு கற்பிக்க முடியுமா? ஒரு சீப்பின் பல் வரிசையில் ஏற்றத் தாழ்வு இருக்க முடியுமா?
ஆகவே, சகோதரர்களே! முஸ்லிம்களிடையே பிரிவு என்பதெல்லாம் வாழுகின்ற தேசத்தைப் பொறுத்து, பேசுகின்ற மொழியைப் பொறுத்து, உடுத்துகின்ற உடையைப் பொறுத்து அன்றி ஏற்றத் தாழ்வு என்பது இல்லை. இந்த உண்மையை அம்பேத்கர், பெரியார் போன்ற சமூக சிந்தனையாளர்கள் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். உலகம் ஒப்புக்கொண்டிருக்கிறது. இதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது.
பௌத்தம் தீண்டாமையை ஒழிக்குமா?
சமீபகாலமாக சிலர் என்னிடம், “பௌத்த மதத்தில்தானே அம்பேத்கர் சேர்ந்தார். நீங்கள் இஸ்லாம் மதத்தில் சேரச் சொல்கிறீர்களே..” என்று கேட்கிறார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்கூட இந்தக் கேள்வியைத்தான் கேட்கிறார்கள்.
நான் அவர்களைக் கேட்கிறேன். அம்பேத்கர் ஏன் பௌத்த மதத்தில் சேர்ந்தார்? அவர் மதம் மாற என்ன காரணம்? பௌத்தம் நம் மண்ணில் தோன்றியது, அந்த மதத்தை எப்படியாவது காப்பாற்றியாகவேண்டும் அல்லது புத்தர் நம் நாட்டுக்காரர், அவர் தோற்றுவித்த மதத்தை எப்படியும் காப்பாற்றியாக வேண்டும் என்ற எண்ணங்களினாலா அம்பேத்கர் பௌத்தத்தை ஏற்றார்? இல்லையே!
இந்து மதத்தில் நாம் மானம் இழந்த வாழ்வு வாழவேண்டாம். இந்து மதம் நம்மைக் கீழ்மைப்படுத்திவிட்டது. இந்துவாக இருந்துகொண்டு மானம் இழந்த வாழ்வு வாழக்கூடாது என்பதற்காகத்தான் இந்து மதத்தை விட்டு வெளியேறினார்.
நீங்கள் ஏன் பௌத்த மதத்தில் சேரச் சொல்லவில்லை என்று கேட்பதற்கு ஓர் இந்துவுக்கு என்ன தகுதி இருக்கிறது? அதுவும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு என்ன தகுதி உள்ளது?
இந்தக் கருத்தரங்கிற்கு என்னை அழைத்த நண்பர்கள் சொன்னார்கள், காலை 6.30 மணிக்கு இங்கு வருவதற்கு கும்பகோணத்தில் பேருந்து இருக்கிறது. அதில் வந்தால் சரியான நேரத்துக்கு வரலாம் என்றார்கள். அதன்படி, நான் காலை 6.30 மணிக்கு கும்பகோணம் பேருந்து நிலையத்துக்கு வந்துவிட்டேன். அங்கு வந்து விசாரித்தபோது, வண்டி பழுதாகிவிட்டதாகவும், அது வரவில்லை என்றும் சொன்னார்கள்.
எப்படியும் சரியான நேரத்திற்கு கருத்தரங்கிற்குப் போய்ச்சேர வேண்டும் என்ற கவலை எனக்கு வந்துவிட்டது. வேறு வழியில்லாமல் 7.30 மணிக்கு வந்த வண்டியில் ஏறி வந்துசேர்ந்தேன். ஒருமணி நேரம் தாமதமாக வந்தாலும் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. ஆகையால்தான், இங்கு வந்துசேர்ந்துவிட்டேன். அதைவிட்டுவிட்டு, பழுதாகிக் கிடக்கின்ற 6.30 மணி வண்டியில் ஏறி உக்கார்ந்து கொண்டு இந்த வண்டியில்தான் போவேன் என்று கூறினால் அதற்கு என்ன அர்த்தம்?
அந்தக் கருத்தரங்கில் நான் கலந்துகொள்ள விருப்பம் இல்லை என்றுதான் அர்த்தம். அதுபோல்தான், சிலர் இன்று பௌத்த மதத்தில் சேருங்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
இதுவரை பௌத்த மதத்தில் சேர்ந்தவர்களுடைய நிலை என்ன என்பதை பார்க்க வேண்டாமா! ஒரு மதம் அல்லது ஒரு மார்க்கத்தைப் பின்பற்றவேண்டும் என்றால் அதற்கு என்னென்ன ஆதாரங்கள் வேண்டும் என்பதையெல்லாம் அவர்கள் சிந்திப்பதில்லை. ஏதோ காங்கிரஸ், தி.மு.க. போன்ற அரசியல் கட்சி என்று நினைக்கிறார்கள்.
இந்தச் சின்ன கிராமத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இங்கே முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். அவர்கள் தொழுவதற்குப் பள்ளிவாசல் உள்ளது. அந்தப் பள்ளிவாசலுக்கு ஒரு மார்க்க அறிஞர் இருக்கிறார். அவருக்குத் துணையாக மற்றொருவர் இருக்கிறார். பள்ளிவாசலுக்கு அருகே அடக்கவிடம் இருக்கிறது. அந்தப் பள்ளிவாசலுக்கான சொத்துகளும் இருக்கின்றன. அவற்றை நிருவகிக்க ஓர் அமைப்பும் உள்ளது.
அதேபோல், இங்கே சில கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வழிபட இங்கொரு மாதா கோயில் உள்ளது. அதில் மதகுரு ஒருவர் இருக்கிறார். அந்தக் கோயிலுக்காக நிலமும் சொத்துகளும் உள்ளன. அதற்கான நிருவாகிகளும் இருக்கின்றார்கள். மார்க்கத்தைப் பின்பற்றுவோருக்கு விதிகளைக் கூறவும், சட்டதிட்டங்களைப் போதிக்கவும் நூல்களும், ஆவணங்களும் இருக்கின்றன. இதைத் தொடர்ந்து இதற்கு மேலான அமைப்புகள் இருந்து வருகின்றன. அப்படியிருந்தால் தான் ஒரு மார்க்கம் செயல்பட முடியும்.
அதை விட்டுவிட்டு, சிந்திக்காமல் என்னைக் கேள்வி கேட்கிறார்கள்! நான் பௌத்தம் என்று பெயரளவில் சொல்லிவிட்டு, இந்துக் கோயில்களை வணங்கிக் கொண்டு, இந்துப் பண்டிகைகளைக் கொண்டாடிக்கொண்டு, இந்து சாஸ்திர சம்பிரதாயங்களைப் பின்பற்றிக்கொண்டு இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பௌத்தம் பரவியிருக்கிற நாடுகளுக்கெல்லாம் சென்றார். இந்தியாவில் பௌத்த மதத்தை வலுவாக உருவாக்க அவர் திட்டமிட்டார். அதற்குப் பெரும் முயற்சியும் அவர் எடுத்தார். எனினும் அவரின் முயற்சிகள் வெற்றிபெறும் முன் அவர் காலமாகிவிட்டார்.
அவர் பௌத்தத்தில் சேர்ந்த சில மாதங்களில் அவர் இறந்தார். அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. அவரால் செயல்பட முடியவில்லை. அவர் இறந்த பிறகு, இந்தியாவில் உள்ள நமது தலைவர்கள் தேர்தலில் கண்ணாக இருந்தார்களே தவிர மார்க்கத்தை வலுப்படுத்த நினைக்கவில்லை. பெயரளவில் பேசிக்கொண்டிருக்கிறார்களே ஒழிய வேறொன்றுமில்லை.
ஆகவே, பௌத்தத்தைத் தழுவுவதால் எந்த முன்னேற்றமும் அடைந்துவிடப் போவதில்லை. சுந்தரராசன், சக்திதாசன் போன்ற தலைவர்கள் எல்லாம் பௌத்த மதத்தில் சேர்ந்தவர்கள் என்பதை நீங்கள் நினைவில் நிறுத்தவேண்டும்.
ஊனமுற்றோர் இருக்கையில் அமர ஊனப்படுத்திக் கொள்ளலாமா?
நம்முடைய சகோதரர்கள் சிலர் நாம் இந்து மதத்தை விட்டுப் போய்விட்டால் இந்தக் கல்விச் சலுகைகளையும், உத்தியோக வாய்ப்பையும், இடஒதுக்கீட்டில் பங்கும் போய்விடும் என்று நினைக்கிறார்கள்.
இங்கு படித்த சகோதரர்கள் ஏராளமானோர் இருகிறீர்கள். எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில் நீங்கள் படித்திருப்பீர்கள். பட்டம் பெற்றிருப்பீர்கள். உங்கள் தந்தையார் பொழுதெல்லாம் நாற்றுப் பறித்தும், மண் சுமந்தும், மண் வெட்டி, பாறை கோடரிப் பிடித்து உழைத்தும், உங்கள் தாயார் நடவு வேலை செய்தும், களை வெட்டியும், புல் அறுத்தும், உழைத்துச் சம்பாதித்து உங்களுக்கு உணவு, உடை, புத்தகம், இதர சவுகரியங்களைச் செய்துகொடுத்து உங்களைப் படிக்க வைத்தார்கள்.
நீங்கள் உத்தியோகத்துக்குப் போய் நிறைய பணம் சம்பாதித்து, நல்ல முறையில் வாழ்வீர்கள், தங்களையும் நல்ல நிலையில் வாழ வைப்பீர்கள், தம்பி மற்றும் தங்கைகளுக்கு உதவி செய்வீர்கள் என்றெல்லாம் கற்பனை செய்திருப்பார்கள். அதை விட தன்னைப் போல் தன் பிள்ளையும் இந்த அடிமை வேலை செய்யவேண்டாம். குறைந்த ஊதியத்தையும் சுயமரியாதையற்ற தன்மையும் கொண்ட தங்களின் குலத்தொழிலாகிய விவசாயக் கூலி மற்றும் பண்ணை அடிமை முறையில் இருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்று ஆசைபட்டிருப்பார்கள்.
அப்படியெல்லாம் படிக்க வைக்கப்பட்ட மாணவர்கள், பணக் கல்வி பயின்று வரும் பணக்கார பிள்ளைகளோடு போட்டி போட்டு மதிப்பெண்கள் பெற முடியாமல், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டுப் போய்விட்டார்கள். இளமைப் பருவத்தில் குலத்தொழிலையும் பயிலாமல் படிப்பையும் பாதியில் நிறுத்திவிட்டுச் சென்றவர்கள் நிலை பரிதாபமாக இருக்கிறது. குறிப்பிட்ட வயதுக்கு மேல் மீண்டும் தன் குலத்தொழிலை மேற்கொண்டு அவதிப்படுகிறார்கள். அவமானமும் படுகிறார்கள்.
இரவு பகலாகப் படித்து, உயர் சாதி பணக்கார பிள்ளைகளின் கல்விக்கு இணையாகப் படித்துப் பட்டம் பெற்று வந்துள்ள உங்கள் அனைவரின் உத்தியோகத்துக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உத்தியோக வயது வரம்பை தாண்டிய நிலையில்கூட சிலர் இருப்பதைப் பார்க்கிறோம். அவர்களெல்லாம் இனி என்ன செய்யப் போகிறார்கள்?
குறைந்தபட்சம் பிற சாதியினர் போல் வியாபாரக் கடைகளில் வேலை செய்ய முடியுமா? தனியார் நிறுவனங்களில் வேலை கிடைக்குமா? வேலைதான் கொடுப்பார்களா? பண்ணைகளில் கார் ஓட்டிகளாக, கணக்குப் பிள்ளைகளாக, மணியக்காரராக வைத்துக்கொள்வார்களா? எடுபிடி வேலைக்காவது வைத்துக்கொள்வார்களா? மாட்டார்கள்!
காரணம், நீங்கள் பிறந்த சாதி. உங்களுக்குத் தீண்டாமை இருக்கிறது. இந்திய தேசத்தில் உள்ள வேலை வாய்ப்புகளில் 90 சதவிகிதத்துக்கும் மேல் தனியாரிடம் உள்ளது. இந்த தனியாரெல்லாம் மேல்சாதிக்காரர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எப்படி உங்களுக்கு வேலை கொடுப்பார்கள்?
இந்த தேசத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் பண்ணை, மடம், கோயில் போன்ற நிறுவனங்களில் துப்புரவுப் பணிக்காக மட்டுமே நம்முடைய சமுதாயத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். நீங்கள் தனியாரிடம் வேலை பெறவேண்டும் என்றால், இந்த துப்புரவுப் பணியில்தான் சேரவேண்டும். மீதமுள்ள 10 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கிற அரசு பணிகளில்தான் நீங்கள் இடஒதுக்கீடும், விகிதாச்சாரமும் கேட்கவேண்டும். தற்போதுள்ள நிலையில் அந்த உத்தியோகம், தகுதிக்குத் தகுந்தாற்போல் விலைபோகிறது.
சாதாரண கண்டெக்டர், க்ளர்க் போன்ற வேலைகளுக்கு ரூபாய் ஐம்பதாயிரத்துக்கும் குறையாமல் லஞ்சம் கொடுக்கவேண்டும். அதற்கு மேல் இருக்கும் உத்தியோகத்துக்கு ஒரு லட்சமோ அல்லது சிறுது கூட்டியோ குறைத்தோ கொடுக்கவேண்டியிருக்கும்! உங்கள் குடும்ப நிலைக்கு இந்தத் தொகையைக் கொடுத்து நீங்கள் வேலையில் சேர முடியுமா?
இந்த அரசு உத்தியோகம் நம்மில் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கிறது? இன்னும் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? எனும் கேள்விகளையெல்லாம் முன்வைத்துப் பார்த்தால், கீழ்சாதிக்காரன், தீண்டப்படாத சாதிக்காரன், பள்ளன், பறையன், சக்கிலியன் எனும் நிலை இருக்கும்வரை நாம் எவ்வித விடுதலையும் பெற இயலாது என்பது நன்றாக விளங்கும். உங்களுடைய சந்ததிகளும் எந்த விடுதலையும் பெற முடியாது.
ஆனால், நீங்கள் வணங்குகின்ற கடவுள்களை மாற்றிக் கொள்வதன் மூலம் கீழ்சாதி, தீண்டத்தகாதவன் என்ற நிலை மாறி, தீண்டத்தகுந்தவன் என்கிற நிலைக்கு வந்துவிட்டால், உங்களால் நூறு சதவிகித வேலை வாய்ப்புகளிலும் போட்டிபோட முடியும். உரிமை கோர முடியும். குறைந்த கல்வியில்கூட நிறைந்த லாபம் தரும் வியாபாரங்களை நடத்த முடியும்.
நான் வேறொன்றையும் சொல்ல விரும்புகின்றேன். பேருந்துகளிலே நீங்கள் பயணம் செய்யும்போது பார்த்திருப்பீர்கள். அதில் ஊனமுற்றோர் இருக்கை என்று எழுதியிருக்கும். ஊனமுற்றோருக்காக இரண்டு இருக்கைகள் ஒதுக்கியிருப்பார்கள். நின்றுகொண்டு, மேலே கம்பியைப் பிடித்துக்கொண்டு பயணம் செய்ய முடியாதவர்களுக்காக அந்த இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எப்படியாவது அந்த இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யவேண்டும் என்பதற்காக கைகளை, கால்களை ஊனமாக்கிக் கொள்ளலாமா?
உயர்ந்தவன் ஆகிக்கொள்ள வழி இருக்கும்போது, நான் கீழ்சாதி, எனக்கு ஒதுக்கீடு வேண்டும் என்று இன்னும் எவ்வளவு காலத்துக்கு கையேந்தி நிற்பது? இந்நிலை தொடர்ந்து இருப்பது நமக்கு அவமானம். நாட்டுக்கும் அவமானம். ஆகவே, கல்விச் சலுகையும், இடஒதுக்கீடும் தன்னுடைய சமூக விடுதலைக்கு நிரந்த தீர்வு தந்துவிடாது. நீங்கள் முஸ்லிம்கள் செய்ததுபோல் தீண்டாமையைக் கற்பிக்கும் கடவுளைத் தூக்கி எறிவதன் மூலம்தான் நிரந்தமான விடுதலையைப் பெற முடியும்.
பலதார மணமும் இந்துக்களும்
முஸ்லிம்களை பலதார மணம் கொள்ள உரிமை கொடுத்துள்ளது இஸ்லாம் என்று சிலர் சொல்வதுண்டு. நீங்கள் வசிக்கின்ற ஊர்களிலே முஸ்லிம்கள் எல்லாம் பல மனைவிகள் வைத்துக்கொண்டு இருக்கிறார்களா? முஸ்லிம் அல்லாத மற்றவர்கள் ஒரு தாரத்துக்கு மேல் நினைப்பதே இல்லையா? இந்து மதம் ஒரு தாரத்தை வலியுறுத்தி இருக்கிறதா? எந்தக் கடவுளாவது ஒரு தாரத்தோடு இருக்கிறதா? சில கடவுள்கள் அடுத்தவன் மனைவியையும் சில கடவுள்கள் விலங்குகளையும் சில கடவுள்கள் ஆணுக்கு ஆணும் சேர்ந்ததாகக் கதைகள் இருக்கின்றனவே!
ஒருவன் ஒருத்தி பண்பாட்டை கடவுளாவது காப்பாற்றி இருக்கவேண்டும் அல்லது இறைச் சட்டங்களாவது காப்பாற்றியிருக்க வேண்டும் அல்லது மன்னர்களின் சட்டங்களாவது காப்பாற்றியிருக்கவேண்டும். எந்த மன்னனாவது இந்த ஒருவன்-ஒருத்தி கலாச்சாரத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறானா? அத்தகைய சட்டத்தையாவது இயற்றியிருக்கிறானா? அந்தப்புரத்தில் ஆயிரமாயிரம் அழகிகளை வைத்துக்கொண்டு காமவெறியாட்டம் ஆடிய வரலாறுதானே இங்கே இருக்கிறது!
தற்கால சூழ்நிலையிலும் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள், சட்டத்தை இயற்றக்கூடிய அதிகாரத்தில் உள்ளவர்களில் பலதாரங்களை வைத்துக்கொண்டு இருப்பவர்களையும், சின்ன வீடு, பெரிய வீடு வைத்திருப்பவர்களையும், சட்டப்படியாக எந்த உரிமையும் இல்லாத போகப் பொருளாக பெண்களை வைத்திருப்பவர்களையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம் அல்லவா? இஸ்லாமும் பலதாரத்தை அனுமதித்ததற்கு காலச் சூழலும் காரணமும் இருந்திருக்கிறது. தற்போதுகூட பலதார மணம் புரிந்துள்ள இந்துக்களை விட சதவிகிதத்தில் முஸ்லிம்களின் சதவிகிதம் மிக மிகக் குறைவாகும். ஓர் அரசுக் கணக்கெடுப்பின்படி பழங்குடி மக்களின் 15.25%, இந்துக்களில் 6.7%, சீனர்களில் 9% முஸ்லிம்களில் 4.1% பலதாரமணம் உள்ளது. ஆகவே, முஸ்லிம்களை விட அதிக அளவில் இந்துக்கள் பலதாரமணம் செய்துகொள்கிறார்கள்.
மேலும் கணவன், மனைவி சட்டப்படி தன் பாலுணர்வைத் தீர்த்துக்கொள்வதற்கும் ஒருவர் மற்றவரிடம் மனத் திருப்தி அடைவதற்கும் தமக்குப் பின் தம் சொத்தையும் லட்சியப் பணியையும் காக்கும் வாரிசுகளை உருவாக்கிக் கொள்வதற்கும் ஒவ்வொரு முஸ்லிம் ஆணும் பெண்ணும் உரிமை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
கணவனுக்கு எவ்வாறு மனைவியின் மேல் உரிமை இருக்கிறதோ அதேபோல், மனைவிக்கு கணவனிடத்தில் உரிமை இருப்பதாகச் சொல்கிறது இஸ்லாம். மனைவியைத் தேர்ந்தெடுக்க ஆணுக்கு உரிமை இருப்பதைப் போல் கணவனைத் தேர்ந்தெடுக்க பெண்ணுக்கு உரிமை அளிக்கிறது இஸ்லாம். அதேபோலவே, கொடுமைக்கார கணவனிடம் இருந்து பிரிவதற்கு உரிமை வழங்குகிறது இஸ்லாம். எக்காரணம் கொண்டும் மனைவியைச் சந்தேகிப்பதை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது. கணவனின் சொத்திலும் மனைவிக்கு பங்கு அளிக்கிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் மறுமணம் செய்துகொண்டால்கூட மனைவியரிடையே ஏற்றத் தாழ்வு கற்பிக்கக் கூடாது என்று கண்டிப்புடன் கூறுகிறது இஸ்லாம்.
முதல் தாரம், இரண்டாம் தாரம் எனும் பாகுபாடு கிடையாது. முன்னே வந்தவள், பின்னே வந்தவள், மூத்தவள், இளையவள் என்கிற பாகுபாடே கிடையாது. எல்லாவற்றிகும் மேலாக, எந்தவொரு பெண்ணையும் மலம் அள்ளிப் பிழைக்கவும், பண்ணையார் வீட்டு மாட்டுக் கொட்டாய் சாணி அள்ளி பிழைக்கவும், கொத்தனார்களுக்குக் கையால் வேலை செய்யவும், மேலாக்கு விலக கரும்பு தூக்கிப் பிழைக்கவும், கற்கள் தூக்கிப் பிழைக்கவும் முழங்காலுக்கு மேல் புடவையை சுருட்டிக்கொண்டு சகதியில் நின்றுகொண்டு அற்ப ஜீவனம் நடத்த பெண்களை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
காலச்சூழலால் கணவன் இறந்துவிட்டாலும், அவனை கைம்பெண்ணாக்கி ஓரங்கட்டி ஒதுக்கி வைக்காமல், பிறந்த சகோதரியையும் பெற்ற பிள்ளையையும் மூலி, முண்டச்சி என ஒதுக்கி வைக்காமல், அவளின் விருப்பம் போல் மறுமணம் புரிய 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் அனுமதித்துவிட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன். சமூக சமத்துவத்துக்காகப் போராடுகிறேன் என்பதற்காகவே அநீதியான முறையில் என் மீது கொலைக் குற்றம் சுமத்தி, ஆயுள் தண்டனை வழங்கி என்னைச் சிறையிலடைத்தார்கள். அப்படி சிறையில் இருந்த காலத்தில் அங்கு இருக்கும் நூல் நிலையத்துக்குச் சென்று படிப்பது வழக்கம்.
பாரதியார் கட்டுரை ஒன்றில் கொடுமைக்கார கணவனுக்கு சோறு போடக் கூடாது. சமைத்து எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு வெறும் பானையை வைத்துவிட வேண்டும். அவன் பட்டினிக் கிடந்தது பார்த்து திருந்திவிடுவான் என எழுதியிருந்தார்.
சாதாரணமாக, சுவையோடு சமைத்துப் போட்டபோது கொலையடி அடித்தவன், பசியோடு கிடந்தால் என்னபாடு படுத்துவான் என்று எண்ணிப் பார்த்தேன். நிச்சயமாக அவன் கொலையே செய்துவிடுவான். இப்படியாக எண்ணிக் கொண்டிருக்கையில், கொலைக் குற்றவாளிகளை விசாரிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.
மத்திய சிறைச் சாலையில் கொலைக் குற்றவாளிகளே பிரதானமானவர்கள் கைதிகளில் அவர்கள் பெருமளவில் இருப்பதாலும், நீண்ட காலம் சிறை நிர்வாகத்தின் விவரங்கள் அறிந்தவர்களாகவும் அவர்கள் இருப்பதால், பெரும் பகுதி நிர்வாகம் கொலைக் குற்றவாளிகளைக் கொண்டே நடைபெறும். கொலைக் குற்றவாளிகள் திருட்டு, பாலியல் வல்லுறவு, சாராயம், கள்ளநோட்டு போன்ற இதர குற்றங்களை செய்து வருபவர்களை மதிக்கமாட்டார்கள். ஒரு கொலைக் குற்றவாளி மற்றொரு கொலைக் குற்றவாளியை மதித்து நடந்துகொள்வார்.
நானும் ஒரு கொலைக் குற்றவாளி என்பதால் அவர்களிடம் நெருங்கி, ஏன் கொலை செய்தார்கள் என்று அறியவேண்டும் என்று நினைத்தேன். நோட்டுப் புத்தகத்தில் குறிப்புகள் எடுத்தால் உண்மையைக் கூறமாட்டார்கள் என்பதற்காக ஏதோ நலம் விசாரிப்பது போல் தினமும் விசாரிப்பேன். ரகசியமாகச் செய்திகள் சேகரித்தேன்.
கொலைக் குற்றவாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களைக் கொன்றவர்களாக இருந்தார்கள். 1982 முதல் 1984 வரை 1300, 1400 என்கிற அளவில் கொலைக் குற்றவாளிகள் இருந்தார்கள். இப்படிப்பட்ட சமூகத்தில் பாரதியார் சொல்வது எப்படி பொருந்தும் என்று நினைத்தேன்.
இப்போது நான் இஸ்லாத்தின் பெண் உரிமைகள் குறித்து படிக்குபோது கொடுமைக்கார கணவரிடத்தில் இருந்து மணவிலக்கு பெற்று வெளியேறும் உரிமையை இஸ்லாம் வழங்கியதோடு, அவளின் விருப்பம்போல் மறுமணம் செய்யவும் உரிமை அளித்துள்ளது என்பதை அறிந்துகொண்டேன்.
அப்படி மணவிலக்கு பெறும் பெண்கள் மீது அதிகாரம் செலுத்த ஆண்களுக்கு எவ்வித உரிமையும் இல்லாமல் அவளை சுதந்திரமானவளாக ஆக்கிவிடுகிறது இஸ்லாம். ஆகவேதான், பெண்களைக் கொலை செய்துள்ள அந்த ஆயிரம் கொலையாளிகளில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை என்ற அதிசயத்தை இப்போது நான் உணர்கிறேன்.
இதற்கு ஆதாரமாக ஓர் இஸ்லாமிய வரலாற்றுச் செய்தியை சொல்கிறேன். ஒரு முஸ்லிம் தன் மனைவியிடமிருந்து மணவிலக்கு பெற விரும்பி ஒரு மார்க்க அறிஞரிடம் செல்கிறார். அப்போது அவரின் நண்பர் எதிரே வந்து, ஏன் உன் மனைவியை மணவிலக்கு செய்கிறாய் என்று கேட்டார். அதற்கு இந்த முஸ்லிம், நான் அவளைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. எனக்கு வேண்டுவதெல்லாம் அவளிடம் இருந்து மணவிலக்கு மட்டுமே என்று கூறிவிட்டு மார்க்க அறிஞரை சந்திக்கச் செல்கிறார்.
வேலையை முடித்துவிட்டு திரும்பியபோது, அதே நண்பர் கேட்கிறார், நீ சொல்லமாட்டாயா? உனக்கும் உன் மனைவிக்கும் இடையே என்ன நடந்தது? எனக் கேட்கிறார். அதற்கு அந்த முஸ்லிம், நான் செல்லும்போது அவள் என் மனைவியாக இருந்தால், மனைவியைப் பற்றி குறைகூறித் திரிவது கணவனுக்கு அழகல்ல. நான் அவளைப் பற்றி எதையும் உன்னிடம் கூறவில்லை. ஆனால் இப்போது அவள் என் மனைவி அல்ல. நான் மணவிலக்கு செய்துவிட்டதால் இனி அந்த அந்நியப் பெண்ணைப் பற்றி பேச எனக்கு உரிமையில்லை. ஆகவே உன் கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை. வருத்தப்படாதே என்று சொல்லிவிட்டு அந்த முஸ்லிம் போய்விட்டார்.
இது எவ்வளவு பெரிய மகத்தான பண்பாடு? இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். ஆனால் இப்போதும் நடைமுறையில் இருக்கிறதல்லவா? இப்படிப்பட்ட நடைமுறை இருப்பதால்தான் அந்த ஆயிரம் கொலைக் குற்றவாளிகளில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை என்ற உண்மையை நாம் உணரவேண்டும். ஆகவே, நமது பெண்கள் முஸ்லிம் பெண்களைப் போன்ற உயர்ந்த வாழ்வு வாழவேண்டுமா அல்லது தீண்டப்படாத பெண்களைப் போல் அடிமை வாழ்வு, பாவப்பட்ட வாழ்வு, இழிந்த வாழ்வு வாழவேண்டுமா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
முஸ்லிம்களுடைய உயர்ந்த வாழ்வும் தீண்டப்படாத மக்களின் தாழ்வும் வணங்குகின்ற கடவுளால் வந்ததாகும். வணங்குகின்ற கடவுளை மாற்றாத வரையில் தீண்டப்படாத மக்கள் வாழ்வில் எவ்வித மாற்றமும் காண முடியாது. சமூக விடுதலையைப் பெற முடியாது. ஒன்று திரண்டு போராடு, புரட்சி செய் என்பதெல்லாம் தற்காப்பு நடவடிக்கையே தவிர சமூக விடுதலையைத் தந்துவிடாது.
மாற்றத்தைத் தர முடியாதது எப்படிப் புரட்சியாகும்? வெண்மணியிலே நாம் போராடவில்லையா? வேட்டமங்கலத்தில் போராடவில்லையா? குடிதாங்கி, அண்டக்குடி, புத்தூர், திருப்பனந்தாள், இன்னும் இந்தியக் கிராமங்கள் தோறும் நம் மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்! ஆனால் எவ்வித மாற்றமும் நிகழவில்லை. செத்ததுதான் மிச்சம். சிறை சென்றதுதான் மிச்சம். இந்துக்களுக்குப் பயந்துகொண்டு ஊரைவிட்டு ஓடியவர்கள் அங்கேயும் சென்று அடிமைத் தொழில் செய்ததுதான் மிச்சம்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களை இந்துக்களை விட்டு விலகி வாழச் சொல்லவில்லையா? நான் மட்டும் ஏன் விலகிச் செல்ல தயங்கவேண்டும் என்பதை நீங்கள் சிந்திக்கவேண்டும். சில நண்பர்கள் கூறுகிறார்கள், மதம் மாறுவது என்றால் எல்லோரும் ஒட்டுமொத்தமாக மாறவேண்டும் என்று.
இது நடக்கிற காரியமா? அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மாறியபோது, ஒட்டுமொத்தமாக மாறாதவர்கள் உன்னோடும், என்னோடும் மாறுவார்களா என்பதை எண்ணிப் பாருங்கள். அண்ணல் அவர்கள் இந்து மதத்தை விட்டு விலகியபோது இந்தியாவில் ஏறத்தாழ பத்து கோடி தீண்டத் தகாத மக்கள் இருந்தார்கள். ஆனால் எத்துனை பேர் மதம் மாறினார்கள்? வெறும் ஆறு லட்சம் பேர் மட்டுமே அவரோடு மாறினார்கள். மீதம் ஒன்பது கோடிக்கும் மேற்பட்டவர்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை.
மாறாக, சிலர் அவர் மதம் மாறுவதை குற்றம் பேசிவந்தார்கள். அதற்காக அண்ணல் அவர்கள் வருத்தப்படவுமில்லை. தனக்கு சரி என்று பட்டதையே அவர் செய்தார்.
ஆகவே அவரவர்கள் சுயமரியாதையும் விழிப்புணர்வும் பெறும்போது அவர்களாகவே தங்களின் விடுதலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். ஒரு மனிதனுக்குப் பாதுகாப்பு கொடுப்பதும், போதனைகள் செய்வதும் நமது கடமையாகும். அவனை நம் விருப்பப்படி கட்டியிழுப்பது அவன் உரிமையைப் பறிப்பதாகும்.
தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடினோம். ரத்தம் சிந்தினோம். சிறைக்குச் சென்றோம். அது நம் கடமை. ஆனால் நீங்கள் எல்லோரும் என் பின்னால் வரவேண்டும் என்பது முறையல்ல. அது அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டிய விஷயம். மிக அண்மைக் காலமாக எனது சொற்பொழிவுகளைக் கேட்டு, வணங்குகிற கடவுளை மாற்றிக்கொண்டவர்கள், கடவுள் இல்லை என்ற கொள்கையைக் கைவிட்டு ஓரிறைக் கொள்கையான இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களும் பூரண விடுதலை பெற்றுவிட்டார்கள் என்பது கண்கூடான விஷயம். இனி யாராலும் அவர்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என்பது திண்ணம்.
- நேற்றுவரை செல்வமாக இருந்தவர் இன்று முஹம்மத் மைதீன், பள்ளிவாசலில் தொழுகைக்கு அனைவரையும் அழைக்கும் முஅத்தினாக இருக்கிறார்.
- நேற்றுவரை ஞானராஜாக இருந்தவர் இன்று ஜமாலுத்தீன். பள்ளிவாசலில் முஸ்லிம்களுக்குத் தலைமை தாங்கும் இமாமாக இருக்கிறார்.
- நேற்றுவரை ராஜேந்திரன். இன்று முஹம்மத் சுல்தான். எலக்ட்ரிகல்ஸ் கடையில் வேலை,
- நேற்றுவரை காமராஜ். இன்று ஹாலி முஹம்மத். சூப்புக் கடை.
- நேற்றுவரை தேவ ரத்தினம். இன்று முஹம்மத் ரஃபீக். ஜவுளிக் கடையில் வேலை.
- நேற்றுவரை ஜெயச் சந்திரன். இன்று ஜமால் முஹம்மத். பெட்டிக் கடையில் வேலை.
- நேற்றுவரை சேகர். இன்று செக் முஹம்மத். இரும்புக் கடையில் வேலை.
- நேற்றுவரை ராஜேந்திரன். இன்று ஜமாலுத்தீன். மளிகைக் கடையில் வேலை.
- நேற்றுவரை மாணிக்கம். இன்று முகமத் யாசின். ஜவுளிக் கடையில் வேலை.
- நேற்றுவரை செல்வம். இன்று சுலைமான். சோப்புக் கம்பெனியில் வேலை.
- நேற்றுவரை ரமேஷ். இன்று அப்துல் ரஹ்மான். மளிகைக் கடையில் வேலை.
- நேற்றுவரை எபினேசர். இன்று முஹம்மத் யஹ்யா. மளிகைக் கடையில் வேலை.
- நேற்றுவரை குலோத்துங்கன். இன்று முஹம்மத் காமில். ஜவுளிக் கடையில் வேலை.
- நேற்றுவரை ராமு. இன்று சம்சுதீன். முஅத்தின்.
இப்படி எண்ணிப் பார்க்க முடியாத தொழில் மாற்றங்கள், பொருளாதார முன்னேற்றங்கள், சமூக சமத்துவம், பள்ளிவாசலில் சமத்துவம், குளத்தில் சமத்துவம், குடியிருப்பில் சமத்துவம், வியாபாரத்தில் சமத்துவம், மயானத்தில் சமத்துவம்.. மொத்தத்தில் மானுட சமத்துவம் பெற்றவர்களாக விளங்குகிறார்கள்.
ஆயிரமாயிரம் ஆண்டுகாலப் போராட்ட புரட்சியில் வந்ததா இந்த மாற்றம்? இப்போது சொல்லுங்கள், எது புரட்சி? மாற்றத்தைத் தருவது தானே புரட்சி? தீண்டப்படாத மக்களைப் பொறுத்தமட்டில், தீண்டாமையைக் கற்பிக்கும் கடவுள்களைத் தூக்கி எறிவதே புரட்சியன்றி, வேறொன்றும் புரட்சி ஆகாது.
கடவுள் மாற்றம் என்பது தொழில் மாற்றம்!
கடவுள் மாற்றம் என்பது பொருள் மாற்றம்!
கடவுள் மாற்றம் என்பது அரசியல் மாற்றம்!
கடவுள் மாற்றம் என்பது சமூக மாற்றம்!
ஆகவே கடவுளை மாற்றுவோம். கடவுளை மாற்றுவோம் எனக் கூறி முடிக்கிறேன்.