பெரும்பான்மைவாத ஜனநாயகத்தில் சிறுபான்மையினரின் இருப்பு, இந்திய வரலாற்று எழுத்தியலில் நிலவும் பக்கச்சார்பு, மையநீரோட்ட மதச்சார்பற்ற கட்சிகளிடமுள்ள சிக்கல்கள் உள்ளிட்ட பல அம்சங்களை ஷர்ஜீல் இமாமின் எழுத்துகள் விவாதிக்கின்றன. அவை காத்திரமான மாற்றுப் பார்வைகளை முன்வைப்பதுடன், கல்விப்புல விவாதங்களை மக்கள்மயப்படுத்துகின்றன.
தெரிவுசெய்யப்பட்ட அவரின் கட்டுரைகளையும் பேச்சுக்களையும் தொகுத்தளிக்கிறது இந்நூல். முஸ்லிம் விவகாரம் சார்ந்த பல விவாதங்களுக்கான தொடக்கப்புள்ளியாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.
சமீபத்தில் வெளியான முனைவர் இமாத் ஹம்தாவின் Salafism and Traditionalism: Scholarly Authority in Modern Islam என்ற நூல் எமது உரையாடல்புலத்திற்குப் பயனளிக்கும் பல முக்கியமான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது. அதிலொன்று, நவீனகால சலஃபிசச் சிந்தனைப் பள்ளியானது இஸ்லாமிய மூலாதாரங்களைப் பொருள்கோடல் செய்வதற்கான மற்றொரு முறைமையாகவே (Hermeneutical Methodology) புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்ற அவரது கருத்து. ஏனெனில், கடந்த சில தசாப்தங்களாக சலஃபிசம் எனும் சொல் மிகவும் அரசியல்படுத்தப்பட்ட ஒன்றாகிவிட்டது. நாசகர அரசியல் குறிக்கோள்களை நோக்கி மக்களை வழிநடத்தும் கோட்பாடாகவே அது பார்க்கப்படுகிறது. இது தவறான கண்ணோட்டம் என்று கூறும் நூலாசிரியர், சலஃபிசத்தின் மையமான வாதங்களையும், மூலாதாரங்களை அவர்கள் அணுகும் விதத்தையும், அதிலுள்ள உள்முரண்பாடுகளையும் பகுப்பாய்வு செய்கிறார்.
அடுத்து, இஸ்லாமிய மூலாதாரங்களைப் பொருள்கோடல் செய்வது எப்படி என்பது குறித்த சலஃபிசச் சிந்தனைப் போக்கை, அதற்கு எதிர்த்திசையில் பயணித்த இஸ்லாமிய மரபுவாதத்தின் (Islamic Traditionalism) விவாதங்களைத் தவிர்த்துவிட்டுப் புரிந்துகொள்ள முடியாது என்கிறார் இமாத் ஹம்தா. இந்தப் பின்னணியில், இஸ்லாமிய மரபுவாதத்தின் பிரதான கருத்தாடல்கள் பற்றியும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது.
தமிழ் நாவல் உலகு எனும் வீட்டில் புதியதொரு ஜன்னலை திறந்துவிட்டுள்ளது கிரானடா என்று சொன்னால் அது மிகையான கருத்தல்ல. ”அசாதரணமாதொரு காலத்தில் வாழ்ந்த சாதாரணர்கள் சிலரின் வாழ்க்கையைப் பின் தொடர்ந்து செல்வதன் ஊடாக, பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த முஸ்லிம் ஸ்பெயினின் வீழ்ச்சி ஏற்படுத்திய பண்பாட்டு இழப்பையும் வலியையும் வெகு நுட்பமாக நெய்தெடுக்கிருக்கிறது கிரானடா” எனப் பின்னட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகத்திற்கு நியாயம் செய்துள்ளது இந்த நாவல்.
அறிவும் உணர்வும் கலந்த தனித்துவமான சமூக இயங்கியலை புனைவின் வழியாக மீட்டுருவாக்கம் செய்து, சந்தேகத்தையும் நம்பிக்கையையும் மையப்படுத்தி, காதலையும் தொலைதலையும் அதனூடகப் பிணைத்து, ஆன்மாவின் தேடல் எதுவென்பதை மனித மனங்களுக்குப் புரியவைக்கும் முயற்சியாகப் பயணப்படுகிறது இந்நாவல். பாரசீகப் பட்டுநூலால் நெய்யப்பட்ட திடமான படைப்பாய் இப்புனைவு உருவாகியிருப்பதை உணரமுடிகிறது.
‘பெண் உரிமைகளின் பெயரால்: ஃபெமோ நேஷனலிசத்தின் எழுச்சி’ எனும் தலைப்பிலான ஆர்வமூட்டும் புத்தகம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் சாரா ஃபாரிஸ். அதில் வலதுசாரி தேசியவாதிகளும் நவதாராளவாதிகளும் சில பெண்ணியவாதிகளும் பாலினச் சமத்துவம் கோரும் முகமையைச் சேர்ந்தோரும் முஸ்லிம் ஆண்களைப் பூதாகரப்படுத்தும் நோக்கிலும், தங்கள் சொந்த அரசியல் குறிக்கோள்களை அடைவதற்காகவும் பெண் உரிமைகளைப் பயன்படுத்திக்கொள்வதை ஆராய்கிறார். இந்தத் தரப்புகள் ஒவ்வொன்றும் தங்களுக்கிடையே முரண்படுபவையாகத் தெரிந்தாலும், ஒரு புள்ளியில் இவை சந்தித்துக்கொள்வதில் முக்கியமானதொரு அரசியல்-பொருளாதாரப் பரிமாணம் இருப்பதாக அவர் வாதிடுகிறார்.
மக்கள் தொகை உயர்வானது எந்நேரமும் தீங்கு விளைவிப்பதாய் மட்டும் இருப்பதில்லை என்பதையும் மதத்தோடு தொடர்புடையதாகவும் இல்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்த சமயம் முஸ்லிம்கள் 9.8ஆக இருந்தார்கள். 2011 கணக்கெடுப்பின்போது 14.2 சதவீதமானார்கள். அவர்களின் வளர்ச்சி விகிதம் கடந்த சில தசாப்தங்களாக சரிந்து வருகிறது. கூடியவிரைவில் அது நிலையானதாக ஆகிவிடக்கூடும். அரசாங்கம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது பற்றியெல்லாம் கலந்துரையாடவும், அதற்காகத் திட்டம் வகுக்கவும் செய்யலாமே அன்றி, இவ்விஷயத்தை மதம் சார்ந்து அணுகக் கூடாது. வாக்காளர்களைத் துண்டாடி, அதன் வழியாக ஒரு குறிப்பிட்ட கட்சியை வளர்ப்பதே முஸ்லிம் மக்கள் தொகை குறித்த வெறுப்புப் பேச்சுகளின் நோக்கமாகும். காலவோட்டத்தில் இதுவே சமூகத்தில் ஆழமாகப் படிந்துவிடுகிறது. எனவே, தர்க்க ரீதியாகவும் உண்மையைக் கொண்டும் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தை முறியடிப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.
இறந்தவர் தீர்க்கதரிசி போலும். தனது இறுதி நேரத்தைக் குறிப்பால் உணர்ந்துகொண்டு அருகிலிருந்த மனைவியை வறுத்தெடுத்து ஆசைஆசையாய்ச் சீனியடை செய்துதரச் சொல்லி சாப்பிட்டுவிட்டே சொர்க்கம் போயிருக்கிறார். தான் வாழ்ந்த காலத்திலும் அவர் டயட், உடல் நலம் பற்றியெல்லாம் கவலைப்படாதவர். ’விரும்பியதைச் சாப்பிடணும்’ என்று எப்போதும் சொல்வார்.
பலரும் பதில் சொல்லத் தயங்கும் ஒரு கேள்வி, ஃகிலாஃபத் எப்படி மன்னராட்சியாக மாற்றப்பட்டது என்பதுதான். அதற்கு அளிக்கப்படும் மழுப்பலான பதில்கள் தெளிவின்மையை, குழப்பத்தை அதிகரிப்பவை. அது தாமாகவே அந்த நிலையை அடைந்துவிட்டது என்பது போன்ற சித்திரத்தை ஏற்படுத்தக்கூடியவை. இங்கு அது தானாக மாறவில்லை. தனிமனிதர்களின் சுயநலத்தால் அது வலுக்கட்டாயமாக மன்னராட்சியாக மாற்றப் பெற்றது என்பதை உடைத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.
திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சிதறல்கள் அல்ல. அதன் வசனங்களுக்கு மத்தியில் வெளிப்படையான, நுண்ணிய தொடர்புகள் இருக்கின்றன. அதன் ஒவ்வொரு அத்தியாயமும் ஆரம்பம் முதல் இறுதிவரை நுண்ணிய இழைகளால் இணைக்கப்பட்டுள்ளன. அதன் அத்தியாயங்களுக்கு மத்தியிலும் தொடர்புகள் இருக்கின்றன. அதன் அத்தியாயங்கள், வசனங்கள் இறைக்கட்டளையின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. அதற்கு ‘இல்முல் முனாஸபாத்’ என்று பெயர். இது திருக்குர்ஆனின் அற்புதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சையித் குதுப் எழுதிய புத்தகங்களில் முதன்மையான புத்தகமாக ‘இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ என்ற புத்தகத்தையே கூறுவேன். தமிழில் 260 பக்கங்களைக் கொண்ட சிறிய புத்தகம்தான். ஆனால் செறிவான உள்ளடக்கத்தைக் கொண்ட மிகச் சிறந்த புத்தகம். ஒவ்வொரு நம்பிக்கையாளனும் ஒரு பாடத்திட்டமாகக் கருதி பயில வேண்டிய புத்தகம் அது. இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் ஊழியர்களுக்கு – குறைந்தபட்சம் பொறுப்பாளர்களுக்கு – இந்தப் புத்தகத்தை வாசிக்கும்படி பரிந்துரைக்க வேண்டும். இஸ்லாம் குறித்து வாசிக்க விரும்புவோருக்கு இந்தப் புத்தகம் மிகச் சிறந்த வழிகாட்டி.