பனூ குறைளா சம்பவம்: ஒரு மீளாய்வு
ஓரிரு மாதங்களுக்கு முன் ‘நாசகார ISISம் தக்ஃபீரிசமும்’ என்ற தலைப்பிலானவொரு தொடரின் முதல் முகநூல் பதிவை நான் கீழ்வரும் வரிகளைக் கொண்டு ஆரம்பித்திருந்தது நினைவிருக்கலாம்.
//’இஸ்லாமிய அரசு’, ‘ஃகிலாஃபா’, ‘ஜிஹாது’, ‘ஷரீஆ’ போன்ற உயரிய இஸ்லாமிய எண்ணக்கருக்களை எல்லாம் சிதைக்கவும் பிழையாகச் சித்தரிக்கவும் ஏகாதிபத்திய சக்திகள் நெடுங்காலமாகவே முயன்று வருகின்றனர் என்பது உண்மைதான் என்றாலும், எதிரிகளின் அந்த நிகழ்ச்சிநிரலுக்கு ISIS உள்ளிட்ட தக்ஃபீரி குழுக்கள் ஒரு வரப்பிரசாதமாக வந்து குதித்திருக்கிறார்கள்.//
அதனை மேலும் உண்மைப்படுத்தும் விதமாக ISIS ‘ஆய்வாளர்களில்’ சிலர் கடந்த சில நாட்களாக ‘பனூ குறைளா இனப்படுகொலை’ உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான சீறா வகுப்புகள் எடுப்பதில் இறங்கியிருக்கிறார்கள். நீங்களும் அதனை கவனித்திருக்கக் கூடும்.‘நீங்கள் விடயங்களை முன்வைக்கும் விதம் சரியாகத் தோன்றவில்லையே’ என்கிற பொருளில் கருத்துரைக்க முயன்றோரை எல்லாம், “முதலில் போய் சீறாவை முழுமையாக வாசித்துவிட்டு வாருங்கள்!” என்று கண்ணியப்படுத்தி அனுப்பி வைத்து விடுகிறார்கள்.
‘சமரசமில்லாமல்’ இஸ்லாத்தை முன்வைக்கிறோம் என்ற பெயரில், தமது அரைவேக்காட்டுத் தனமான வாசிப்பில் ஈட்டிக் கொண்ட ‘அறிவை’ மற்ற முஸ்லிம்களுக்கும் திகட்ட திகட்ட அள்ளிக் கொடுத்து, அவர்களனைவரையும் அறியாமையிலிருந்து மீட்காமல் ஓய்வதில்லை என கங்கனம் கட்டிக்கொண்டு ‘களமாடி’ வருகிறார்கள் இந்த உள்ளூர் ISIS விசுவாசிகள். அபாரம்!
நிற்க. விடயத்துக்கு வருகிறேன்.
இவர்களின் ‘கொசுத் தொல்லையை’ இதற்கு மேலும் தாங்கிக் கொள்ள முடியாது என்ற நிலை தோன்றியதாலேயே இப்பதிவு. நண்பர்கள் சற்று பொறுத்தருளவும்.
அவர்கள் உதிர்த்த அரிய முத்துக்களில் ஒன்று கீழே:
//சந்தைப்பகுதியுல் ஒரு பெரிய கிடங்கை வெட்டிவிட்டு வருகின்ற ஒவ்வொருவராக #கழுத்தை_வெட்டி அந்த 700-900 ஆண்களின் கதைகளையும் முடித்தார்கள் இஸ்லாமிய தேசத்து போராளிகள்.இது நடந்தது ரமாதியிலோ, மொஸுலிலோ அல்ல. மதீனாவில்…. இதனை மேற்பார்வை செய்தவர் யார் தெரியுமா?? எம் அன்புக்குரிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தான். எல்லா ஹதீஸ் புத்தகத்திலயும் வரலாற்றுப் புத்தகத்திலயும் விரிவாவே இருக்கும். #பனூ_குறைளா என்று தேடிப்பாரு சாரே!!//
‘இதைக் கொண்டு என்ன சொல்ல வருகிறீர்கள்?’ என்று எவரேனும் கேட்டால்,
//இந்த சம்பவம் அதிகமானவர்களுக்கு தெரியாது. நயவஞ்சகர்களுக்கும் உடன்படிக்கை மீறி கிளர்ச்சி செய்பவர்களுக்கும் எதிரான நபிகாளின் மார்க்கத் தீர்ப்பு (சுன்னா) இப்படித்தான் அமைந்தது என்பதை உணர்த்துவது. ஒருவேளை நீங்களும் இதனைக் கேள்விப்படுவது முதல் தடவையாக இருக்கலாம்.//
என்றொரு ‘அறிவுபூர்வமான’ பதில் வேறு.
‘மறக்கடிக்கப்பட்டுவிட்ட ஒரு சுன்னாஹ்வை’, ‘மார்க்கச் சட்டத்தை’ உயிர்ப்பிப்பதற்கு நீங்கள் எடுத்துக் கொள்ளும் சிரமத்தைக் கண்டு அப்படியே மெய் சிலிர்த்துப் போகிறேன். வளர்க உம் மார்க்கப் பணி!
இஸ்லாத்தின் பெயரால் கொலைபாதகங்களை நிகழ்த்திவரும் ஒரு சமகால கிரிமினல் கும்பலை (ISIS) ஆதரிப்பதென இவர்கள் எடுத்திருக்கும் அநீதமான நிலைப்பாடு, இவர்களை எப்படியெல்லாம் தரம்தாழ்ந்து பேச வைத்திருக்கிறது என்பதை பார்க்கும்போது சினமும் பரிதாபமும் கலந்தவொரு உணர்வு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
சமரசமில்லாமல் உண்மைகளைப் பேசுவதற்கும், மூளையை அடகுவைத்துவிட்டு உளறிக் கொட்டுவதற்கும் பாரிய வித்தியாசம் இருக்கிறது என்பதை யாரேனும் இந்த ISIS ‘அறிஞர்களுக்கு’ எடுத்துச் சொல்லி நம்மை இது போன்ற கடினமான சோதனைகளில் இருந்தெல்லாம் காப்பாற்றக் கூடாதா? புண்ணியமாகப் போகும்.
இவர்களைப் போன்றவர்களுக்கு ‘கருத்தியல் அடித்தளம்’ என்ற ஒன்று இருக்குமென்றால், அது முழுக்க முழுக்க அரை உண்மைகளையும், திரிபுகளையும், புரட்டுகளையும் கொண்டே ஆகியிருக்கும் என்பதை இவர்கள் சந்தர்ப்பம் தவறாமல் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றார்கள்.
சரி, பனூ குறைளா சம்பவத்துக்கு வருவோம்.
மதீனா தாக்கப்பட்டால் அதனை பாதுகாத்துப் போரிடுவோம் என்ற தமது உடன்படிக்கையை மீறியது மட்டுமல்லாமல், எதிரிகளோடு இணைந்து சதி நடவடிக்கையிலும் தாக்குதல்களிலும் ஈடுபட்ட காரணத்திற்காக பனூ குறைளாவை சேர்ந்த சதிகாரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட சம்பவம்தான் இங்கு ஒரு ‘கூட்டுப் படுகொலை’ அல்லது ‘இனப்படுகொலை’ போல் திரிபுபடுத்தப்பட்டுள்ளது.
அதனை சற்று விரிவாக அலசுவோம்.
இவர்கள் கூறுவது என்ன?
“மதீனாவின் சந்தைப் பகுதியில் பெரிய கிடங்கு ஒன்றை வெட்டச் சொல்லி, பனூ குறைளாவை சேர்ந்த வயது வந்த ஆண்கள் அனைவரையும் -சுமார் 700 முதல் 900 பேர்களை- கழுத்தை வெட்டிக் கொன்றுவிட்டு, அவர்களின் பெண்களையும் சிறார்களையும் அடிமைகளாக ஆக்கிக் கொண்டார்கள் நபிகளார் தலைமையிலான முஸ்லிம்கள்.”
இதுதான் இவர்கள் கூறுவது.
இதுவொரு கட்டுக்கதை. வரலாற்றுத் திரிபு. பச்சையான அவதூறு.
ஆனால், இதனை ஐயத்திற்கிடமற்றவோர் வரலாற்றுண்மை போல் இவர்கள் சித்தரிக்க முனைவதிலேயே, இவர்களின் அறிவு நேர்மை அவலட்சணமாகப் பல்லிளிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
இப்படிச் சித்தரிப்பதன் மூலம் சாதாரண மக்களை ஏமாற்றி, உணமையென நம்பச் செய்து, அதன் நீட்சியாக தமது நாயகர்கள் (ISIS) அரங்கேற்றும் பச்சைப் படுகொலைகளுக்கு ‘இஸ்லாமிய’ முலாம் பூசுவதே இந்த ISIS ரசிகர்களின் ஒரே நோக்கம் என்பதை ‘கண்டுபிடிப்பதற்கு’ நாம் பெரிய ஆய்வொன்றும் செய்யத் தேவையிருக்காது.
இப்னு ஜரீர் அத்-தபரியின் ‘தாரீஃக்’ நூற்தொகுதிகளின் (அல்லது மொழிபெயர்ப்புகளின்) PDF பிரதிகளை தரவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு, எந்தவித விமர்சனப் பார்வையும் இல்லாமல் (அல்லது, தமக்கேற்றார் போன்ற ‘செய்திகளை’ தெரிவுசெய்து படித்துவிட்டு), அதை முகநூலில் ‘ஆதாரபூர்வ உண்மைகள் போல்’ பிதற்றும் ‘அறிஞர் பெருமக்கள்’ யாரும் கீழ்வருவன பற்றி வாய் திறக்க மாட்டார்கள்:
* இந்தச் செய்திகளின் மூல ஊற்றுக்கள் எவை?
* அவை நம்பத்தகுந்தவையா?
* அவற்றை விமர்சன ஆய்வுக்கு உட்படுத்திய இஸ்லாமிய அறிஞர்களின் மதிப்பீடு என்ன?
* அவற்றை உறுதிப்படுத்தும் பிற ஆதாரங்கள் உள்ளனவா?
* நபிவாழ்வின் ஒட்டுமொத்த பாங்குடன் இவை ஒத்துப் போகின்றனவா?
* இஸ்லாத்தின் நீதிநெறி விழுமியங்களுடன் இவை பொருந்துபவைதானா?
* இவற்றை சந்தேகிக்கச் சொல்லும் காரணிகள் உள்ளனவா?
இவை அனைத்தையும் முழுதாக விழுங்கி ஏப்பமிட்டு விட்டுத்தான், அவர்கள் நமக்கு சீறா பாடம் நடத்த முன்வந்திருக்கிறார்கள்.
// எல்லா ஹதீஸ் புத்தகத்திலயும் வரலாற்றுப் புத்தகத்திலயும் விரிவாவே இருக்கும். #பனூ_குறைளா என்று தேடிப்பாரு சாரே!//
என்று கொக்கரிப்பதன் மூலம், இது ஏதோ மிகப் பலராலும் அறிவிக்கப்பட்ட ‘முத்தவாத்திரான செய்தி’ (பலவழிச் செய்தி) போல், மறுக்கவியலாத வரலாறு போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முனைவது, உண்மையில் பாமரர்களை ஏமாற்றுவதற்கான ஒரு மலின உத்தியே. உண்மையில் இவர்கள் நேர்மையாளர்களாக இருந்திருப்பின், இது மிகவும் தீவிர விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்ட ‘சர்ச்சைக்குரிய’ தகவல் என்பதை சொல்லியிருக்க வேண்டுமல்லவா? சரிதான், இவர்களிடம் போய் அத்தகைய ஆய்வு நேர்மையையோ அறிவு நிதானத்தையோ எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனமல்லவா?!
இந்தச் செய்திகளின் மூல ஊற்றுக்கள் எவை?
அனைத்திற்கும் முதலாக, பனூ குறைளாவைச் சேர்ந்த பலநூறு பேர் தம்முடைய துரோகத்திற்காக கழுத்து துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள் என்ற செய்திக்கு பல்வேறு மூலங்கள் எல்லாம் இல்லை. ஒரேயொரு ஒற்றை மூலம்தான். அதுதான் இப்னு இஸ்ஹாக்கின் ‘சீறா நபவிய்யா’ எனும் நூல். நபிகளாரின் மரணத்திற்கு 80 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தவொரு வரலாற்றாசிரியர்தான் இப்னு இஸ்ஹாக். இவரின் மேற்குறிப்பிட்ட ஆக்கம் வரலாற்று ஓட்டத்தில் தொலைந்து போய்விட்டது.
அவரின் இரு மாணவர்களின் வழியாகவே அது அடுத்த தலைமுறையினருக்கு கடத்தப்பட்டது. ஒருவர் ஸியாது அல்-பாக்காயீ (இவரின் ஆக்கமும் தொலைந்து விட்டது). இவரிடமிருந்துதான் பிரபல சீறா ஆசிரியர் இப்னு ஹிஷாம் இச்சம்பவங்களை மேற்கோள் காட்டுகிறார். அடுத்தவர் சலாமா இப்னு ஃபழ்ல் அல்-அன்சாரி (இவரின் ஆக்கமும் தொலைந்து விட்டது). இவரிடமிருந்துதான் முஹம்மது இப்னு ஜரீர் அத்-தபரி இச்சம்பவங்களை விரிவாக எடுத்தாள்கிறார்.
இச்சம்பவங்களை தம்முடைய வரலாறு மற்றும் திருக்குர்ஆன் விரிவுரை ஆக்கங்களில் பிரதி செய்த பிற்கால அறிஞர்கள் அனைவருமே மேற்கூறிய இருவரின் ஆக்கங்களிலிருந்து எடுத்தே அவை பற்றி பேசுகின்றனர். ஆக, ‘பனூ குறைளாவைச் சேர்ந்த பலநூறு பேர் கொல்லப்பட்ட’ கதை இன்று நம்மை வந்தடைந்துள்ளது இப்னு இஸ்ஹாக் எனும் ஒற்றை மூலத்தில் இருந்துதான் என்பதை நன்கு மனதிலிருத்திக் கொள்ளுங்கள்.
அவை நம்பத்தகுந்தவையா?
பொதுவாகவே வரலாற்று நூல்களில் பதிவு செய்யப்படும் செய்திகள், ஹதீஸ்களின் விடயத்தில் செய்யப்படுவது போல் ‘இஸ்னாதுகளுடன்’ (அறிவிப்பாளர் தொடர்களுடன்) பதியப்படுவதில்லை என்பது இஸ்லாமிய அறிவுத்துறை மாணவர்கள் அனைவரும் அறிந்ததே.
இப்னு இஸ்ஹாக்கின் ‘சீறா நபவிய்யா’ உள்ளிட்ட எந்தவொரு வரலாற்று நூலும் இதற்கு விதிவிலக்கில்லை. முதற்கண் இதனை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
சரி, இப்னு இஸ்ஹாக்குக்கு இச்செய்திகள் எங்கிருந்து கிடைத்தன?
மதீனாவிலிருந்த பனூ குறைளா யூதர்களின் வழித்தோன்றல்கள் உள்ளிட்ட நபர்களிடமிருந்தே இப்னு இஸ்ஹாக் இந்தச் ‘செய்திகளை’ பெற்றதாக பதிவு செய்திருக்கிறார். அவர்கள் ‘தமக்கு நேர்ந்த துன்பங்களை’ மிகைப்படுத்திச் சொல்லியுள்ளார்கள் என்ற விமர்சனம் உள்ளது. தொடர்ந்து வரும் பகுதிகளில் அதனை சற்று விரிவாகப் பேசுவோம்.
இக்காரணம் மட்டுமின்றி வேறு சில காரணங்களும் சமீபகால ஆய்வுகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளன. எனினும், அவை ஒரு தீவிர ஆய்வுக் கட்டுரையின் புலத்தில் வைத்து விவாதிக்கப்பட வேண்டியவை என்பதால் அவற்றுக்குள் நுழைவதை தவிர்த்துக் கொள்கிறேன்.
இப்னு இஸ்ஹாக்கின் கூற்றுகளை அப்படியே தமது ஆக்கங்களில் ‘பெருந்தன்மையுடன்’ இடம்பெறச் செய்த பிற்கால அறிஞர்கள் பலரும் அவற்றின் நம்பகத் தன்மை மீது தமக்கிருக்கும் சந்தேகங்களை சில சந்தர்ப்பங்களில் ‘பூடகமாக’ குறிப்பிட்டுள்ளார்களே தவிர, அவற்றை விரிவான விமர்சன ஆய்வுக்கு உட்படுத்தத் தவறியுள்ளார்கள்.
எனவே, இவை விமர்சன பூர்வமாக ஆராயப்பட்டு, உண்மைத் தன்மை நிறுவப்பட்ட பிற செய்திகள் போன்றவை அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இவற்றை விமர்சன ஆய்வுக்கு உட்படுத்திய இஸ்லாமிய அறிஞர்களின் மதிப்பீடு என்ன?
‘பனூ குறைளா படுகொலை’ உள்ளிட்ட யூதக் ‘கதைகளை’ விமர்சனமின்றி அப்படியே எடுத்து தமது ஆக்கங்களில் இடம்பெறச் செய்தமைக்காக (இதனோடு இணைந்து வேறு சில தவறுகளுக்காகவும்) இப்னு இஸ்ஹாக்கை அவருடைய சமகாலத்தவரும் மாபெரும் சட்டத்துறை அறிஞருமான இமாம் மாலிக் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.
இப்னு இஸ்ஹாக் ஒரு ‘பொய்யர்’ என்றும், ‘மோசடியாளர்’ என்றும் இமாம் மாலிக் சாடியுள்ளார்கள். இக்காரணங்களை முன்வைத்து இப்னு இஸ்ஹாக்குடைய அறிவிப்புகள் எதையும் தம்முடைய ஹதீஸ் ஆக்கங்களில் இடம்பெறச் செய்ய இமாம் மாலிக் அவர்கள் மறுத்துவிட்டார்கள்.
நபிகளாரின் படை எழுச்சிகள் தொடர்பான செய்திகளை பெறுவதற்காக இப்னு இஸ்ஹாக் மதீனாவிலிருந்த யூதர்களின் வழித்தோன்றல்களை நாடினார்கள் என்றும், அவர்கள் தம்முடைய முன்னோர்களிடமிருந்து தாம் பெற்ற செய்திகளை அவருக்கு அறிவித்தார்கள் என்றும் கூறியே இமாம் மாலிக் அவர்கள் இப்னு இஸ்ஹாக்கை கண்டனம் செய்ததாக இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்னு இஸ்ஹாக் இது தொடர்பாக பதிவு செய்துள்ள செய்திகளை ‘நூதனமான கட்டுக்கதைகள்’ என்று கூறி இப்னு ஹஜர் அவர்கள் முற்றாக நிராகரிக்கிறார்கள்.
இதனால், இப்னு இஸ்ஹாக்கின் ஆக்கம் மொத்தமுமே நிராகரிக்கப்பட வேண்டியது என்று பொருளில்லை. அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அவரின் ஆக்கத்தில் இடம்பெறும் குறிப்பான சில பகுதிகள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களாகும் என்பதை புரிந்து கொள்வது முக்கியம்.
அவற்றை உறுதிப்படுத்தும் பிற ஆதாரங்கள் உள்ளனவா?
இப்னு இஸ்ஹாக் பதிவு செய்துள்ளது போல் பனூ குறைளாவைச் சேர்ந்த பலநூறு பேர், அவர்கள் செய்த உடன்படிக்கை மீறலுக்காக கழுத்து துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டது உண்மை என்றால் அது சாதாரணமானதொரு விடயம் அல்ல.
ஐயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட, மிகவும் ஆதாரபூர்வ திருமறைக் குர்ஆன் அது பற்றி ஏதும் சொல்லியிருக்கிறதா?
அண்ணலாரின் நபித்துவ போராட்ட வாழ்வில் ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலும் தீர்க்கமான வழிகாட்டுதல்களை வழங்கிக் கொண்டிருந்த திருக்குர்ஆன் இது பற்றி ஒரேயொரு வசனத்தில் மட்டுமே பேசுகிறது. அந்தச் சம்பவத்தை ஒரு படுகொலை போல் சித்தரிக்கும் மேற்கூறிய கதைகள் கூறுவது போன்றதொரு பரிமாணத்தில் வைத்து திருக்குர்ஆன் அதனைப் பேசவில்லை என்பதை எவரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
‘தாக்கவந்த படையினருக்கு உதவிபுரிந்த வேதக்காரர்களையும் அவர்களின் கோட்டைகளிலிருந்து இறக்கி, அவர்களின் உள்ளங்களில் திகிலைப் போட்டு விட்டான். அவர்களில் ஒரு பிரிவினரை நீங்கள் கொலை செய்தீர்கள். ஒரு பிரிவினரை சிறை பிடித்தீர்கள்…’ (திருக்குர்ஆன் 33:26)
(ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல், பல அறிஞர்கள் இவ்வசனத்துக்கு வியாக்கியானம் எழுத முற்படும் வேளைகளில் இப்னு இஸ்ஹாக்கின் கதைகளை அப்படியே விமர்சனமின்றி பிரதி செய்துள்ளமை ஆட்சேபனைக்குரியது.)
மிகச் சுருக்கமான இக்குறிப்பைத் தவிர இது தொடர்பாக திருக்குர்ஆனில் வேறொன்றும் இல்லை. பலநூறு பேருக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை உண்மையானதாக இருந்திருக்கும் பட்சத்தில் அதனை திருக்குர்ஆன் விரிவாக உரையாடியிருக்கும் என்று நாம் எதிர்பார்ப்பது இயல்பே. ஆனால் அது அவ்வாறு செய்யவில்லை என்பது தெளிவு.
துரோகமும் குற்றமும் இழைத்த சிலர் மட்டுமே நீதியின் அடிப்படையில் தண்டிக்கப்பட்ட காரணத்தால், அந்தச் சம்பவத்தை தனிக்கவனம் தந்து சிறப்பாக கையாள வேண்டிய தேவையெதுவும் திருக்குர்ஆனுக்கு இருக்கவில்லை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
இந்தச் சம்பவத்தில் சிறுவர்கள் கொல்லப்படவில்லை என்பதைக் குறிக்கும் சில ஹதீஸ்கள் புஃகாரி உள்ளிட்ட கிரந்தங்களில் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்த சட்டகத்தில் வைத்து அவற்றையும் சில அறிஞர்கள் விமர்சன ஆய்வுக்கு உட்படுத்தி, அவற்றில் இடம்பெற்றுள்ள சில அம்சங்கள் பற்றி கேள்விகள் எழுப்பியுள்ளனர்.
அது எவ்வாறிருப்பினும், இக்கதைகளில் சொல்லப்பட்டது போல் பலநூறு பேர் கொல்லப்பட்டதையோ, அதற்கு நெருங்கியவொரு எண்ணிக்கையையோ உறுதிப்படுத்தும் ஒரேயொரு ஆதாரபூர்வ ஹதீஸையேனும் உங்களால் காண முடியாது.
நபிவாழ்வின் ஒட்டுமொத்த பாங்குடன் இவை ஒத்துப் போகின்றனவா? பத்தாண்டுகால மதீனா வாழ்வில், இக்கதைகளில் வருவது போல் அண்ணல் நபியவர்கள் பலநூறு பேரை கழுத்தை வெட்டிக் கொன்றார்களென ஒரு சம்பவத்ததையேனும் எவராலும் எடுத்துக்காட்ட முடியாது.
பனூ குறைளா இழைத்த குற்றம் ‘சாதரணமான ஒன்று’ என்று நாம் சித்தரிக்க முனையவில்லை. அதேவேளை, ‘அது முன்னுதாரணம் அற்ற அசாதரணமான ஒன்று என்ற காரணத்தினாலேயே அதற்கு அத்தகைய அசாதரணமானதொரு தண்டனை’ என்று கூறுவது மிகவும் பலவீனமானதொரு வாதமாகும்.
அதற்கு முன்பும் கூட உடன்படிக்கைகள் மீறப்பட்டிருந்தன. தாக்குதல்கள் நடத்தப்பட்டு முஸ்லிம்கள் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன. மக்கத்து எதிரிகளோடு இணைந்து சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால், அண்ணலார் அவர்கள் ஒருபோதும் இவ்வாறு பெருந்திரளானோருக்கு மரண தண்டனை விதித்தது கிடையாது.
பனூ குறைளா சம்பவத்துக்கு முன்னர் முதலில் பனூ கைனுகாவும் பிறகு பனூ நதீரும் உடன்படிக்கையை மீறிய போது, நபியவர்கள் அவர்களை முற்றுகையிட்டு பணிய வைத்து வெற்றி பெற்றார்கள். அவர்கள் தம்மால் இயலுமான செல்வங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு மதீனாவை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டார்களே ஒழிய, இப்படி பலநூறு பேருக்கு கூட்டாக மரண தண்டனையை நிறைவேற்றவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
அதே போல் பனூ குறைளா சம்பவத்துக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பெற்ற ஃகைபர், ஃபதக் யூதக் கோத்திரங்களின் விடயத்திலும் கூட இக்கதைகளில் வருவது போல் நூற்றுக் கணக்கில் கூட்டாக நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகள் என எதையும் உங்களால் பார்க்க முடியாது.
அது மட்டுமின்றி, பனூ குறைளாவுக்கு அப்படியொரு கதி நேர்ந்தது உண்மையாயிருக்கும் பட்சத்தில், அதற்குப் பிறகு நடந்த போரில் ஃகைபரின் யூதர்கள் எங்கனம் சரணடைய முன்வந்திருப்பார்கள்? ஃபதக்கின் யூதர்கள் எப்படி சமரசத் தூது அனுப்பியிருப்பார்கள்?
எந்த வகையில் பார்க்கினும், இப்னு இஸ்ஹாக் பதிவு செய்திருக்கும் ‘படுகொலைக் கதைகள்’ நபி வாழ்வுடன் கொஞ்சமும் ஒத்துப்போகவில்லை என்பது எளிதில் விளங்கும்.
இஸ்லாத்தின் நீதிநெறி விழுமியங்களுடன் இவை பொருந்துபவைதானா?
தலைவர்கள் உடன்படிக்கையை முறித்தார்கள், துரோகமிழைத்தார்கள் என்பதற்காக ஒரு இனத்தைச் சேர்ந்த வயதுவந்த ஆண்கள் அனைவரையும் கொலை செய்வது எந்த வகையிலும் இஸ்லாமிய நீதியுணர்வுடன் பொருந்துவதில்லை.
“எந்தவொரு ஆன்மாவும் வேறொரு ஆன்மாவின் சுமையை சுமக்காது.” (திருக்குர்ஆன் 35:18)
இவர்கள் கூறுவது போல் இருந்திருந்தால், மூலாதாரங்களிலிருந்து சட்டங்களை உய்த்தறிந்த இஸ்லாமிய சட்டவியல் அறிஞர்கள் இதனை முக்கியமானதொரு முன்னுதாரணமாகக் கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அவர்கள் இந்தக் ‘கதைகளை’ பொருட்படுத்தாமல் மேற்கூறிய திருக்குர்ஆன் வசனத்தையே மாறாத கோட்பாடாக உயர்த்திப் பிடித்துள்ளார்கள் என்பதை இஸ்லாமிய சட்டவியல் பற்றி பரிச்சயம் இருக்கும் எவரும் அறிவர்.
இப்னு இஸ்ஹாக்கின் சமகாலத்தவரும் வயதில் இளையவருமான இமாம் அல்-அவ்ஸாயீ வழங்கிய சட்டத் தீர்ப்பொன்றை இதற்கு உதாரணமாக குறிப்பிட நாடுகிறேன். லெபனானில் வேதக்கார மக்களைச் சேர்ந்த சிலர் அரச துரோகச் செயலில் ஈடுபட்டார்கள். ஆளுநராக இருந்த அப்துல்லாஹ் இப்னு அலீ துரோகத்தை முறியடித்த பிறகு, அந்தச் சமூகத்தினர் அனைவரையும் அங்கிருந்து மொத்தமாக வெளியேறும்படி ஆணையிட்டார். ஆனால், இமாம் அவ்ஸாயீ இதனை ஆட்சேபித்தார். “சிலரின் குற்றத்துக்காக பலரை தண்டிப்பது அல்லாஹ்வின் விதியல்ல” என்ற கருத்தில் அவருடைய வாதம் அமைந்திருந்தது. ‘பனூ குறைளா படுகொலை’ தொடர்பான கதைகளை அவர் ஏற்றுக் கொண்டிருந்தால், ஆட்சியாளரின் தீர்மானத்துக்கு எதிராக அவர் இப்படியொரு வாதத்தை கொண்டு வந்திருக்க மாட்டார் என்பது தெளிவு.
இவர்கள் கூவுவது போல், “நயவஞ்சகர்களுக்கும் உடன்படிக்கை மீறி கிளர்ச்சி செய்பவர்களுக்கும் எதிரான நபிகளின் மார்க்கத் தீர்ப்பு (சுன்னா) இப்படித்தான் அமைந்தது” என்பது உண்மையாக இருந்திருப்பின், அது இஸ்லாமிய சட்டவியலில் எத்தகையதொரு முக்கிய அந்தஸ்தை பிடித்திருக்கும் என்பதை எவரும் எளிதில் விளங்கிக் கொள்ளலாம். அது அவ்வாறு அமையவில்லை என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை.
இவற்றை சந்தேகிக்கச் சொல்லும் காரணிகள் உள்ளனவா?
இந்தக் கதைகள் கூறுவது போல் பெரும் எண்ணிக்கையில் பனூ குறைளாவினர் கொல்லப்பட்டிருந்தால், திருக்குர்ஆன் அதற்கு தனிக்கவனம் தந்து முக்கிய படிப்பினைக்குரிய ஒன்றாக ஆக்கியிருக்கும். ஆனால், திருக்குர்ஆன் இது பற்றி ஒரேயொரு வசனத்தில் மட்டுமே, அதுவும் மிகவும் சுருக்கமாக குறிப்பிட்டுள்ளமை இக்கதைகளுக்கு வலுவூட்டுவதாக அமையவில்லை.
சதி மற்றும் துரோகச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டவர்களை மட்டும் தண்டிப்பதுதான் இஸ்லாமிய சட்ட விதி. இக்கதைகள் அதற்கு நேர்முரணாக அமைகின்றன.
இப்படி ஒட்டுமொத்தமாக ஓரினத்தைச் சேர்ந்த ஆண்கள் அனைவரையும் கொல்வதென்பது எந்த வகையிலும் இஸ்லாத்தின் நீதியுணர்வுடன் இசைந்து போவதில்லை. “எந்தவொரு ஆன்மாவும் மற்றொரு ஆன்மாவின் சுமையை சுமக்காது” என்பது உள்ளிட்ட மிகத் தெளிவான குர்ஆனியக் கோட்பாடுகளுடன் இக்கதைகள் முற்றாக முரண்படுகின்றன.
போரில் சரணடைந்தோரை ஒன்று அப்படியே விடுவித்துவிட வேண்டும், அல்லது பணயக் கைதிகளாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; கொலை செய்தல் தகாது என்ற வலுவான விதியுடனும் இக்கதைகள் முரண்படுகின்றன.
பனூ குறைளா சம்பவத்துக்கு முன்பும் பின்பும் நடந்த நிகழ்வுகளுடன் இக்கதைகள் ஒத்துப்போகவில்லை. பனூ குறைளாவுக்கு அப்படியொரு கதி நேர்ந்திருந்தால் அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு ஃகைபரைச் சேர்ந்த யூதர்கள் எப்படி சரணடைய முன்வந்திருப்பார்கள்?
வரலாற்றுச் சம்பவங்களை பதிவுசெய்கையில், அவற்றில் சம்பந்தப்படுவோரின் பெயர்கள் அனைத்தையும் மிகவும் விரிவாக பட்டியலிடுபவர் இப்னு இஸ்ஹாக். அபிசீனியாவுக்கு ஹிஜ்றத் செய்த 101 பேரின் பெயர்களையும், பத்ரு யுத்தத்தில் பங்கேற்ற 314 பேரின் பெயர்களையும் அவர் பதிவு செய்துள்ளார். ஆனால், கொல்லப்பட்ட பனூ குறைளாவினர் என்று வரும்போது மட்டும் ஹுயை இப்னு அஃக்தப், அஸ்-ஸுபைர் இப்னு பத்தா போன்ற ஓரிரு பெயர்களைத் தவிர வேறு எவரின் பெயர்களையும் பதிவு செய்யவில்லையே அது ஏன்?
மதீனாவின் சந்தையில் கிடங்குகள் வெட்டப்பட்டு இத்துணை பெரிய எண்ணிக்கையிலானோர் கொல்லப்பட்டது உண்மையெனில், மற்ற வரலாற்றுச் சின்னங்களின் விடயங்களில் உள்ளதுபோல் அந்தக் கிடங்குகளை குறிக்கும் எந்த விதமான அடையாளக் குறிகளோ, ஏன் வாய்வழிச் செய்திகளோ கூட இல்லாதிருப்பது ஏன்?
உண்மையில் இப்படியொரு படுகொலை நிகழ்த்தப்பட்டிருந்தால், இஸ்லாமிய சட்டத்துறையில் அது மிகப்பெருமொரு முன்னுதாரணமாக அமைந்திருக்காதா? அப்படி அமையவில்லையே அது ஏன்?
சதியில் ஈடுபட்டதாக பனூ குறைளாவைச் சேர்ந்த வெகு சிலரின் பெயர்கள் மட்டும் தான் பதிவுசெய்யப்பட்டுள்ளன. எனில், அவர்கள் மட்டும் தண்டிக்கப்பட்டிருப்பதற்குத் தானே வாய்ப்புள்ளது? ஒட்டுமொத்த கோத்திரமும் கொல்லப்படுவதற்கு என்ன தேவை வந்தது?
இன்று ஸியோனிஸ்டுகள் ‘ஹோலோகாஸ்ட்’ பற்றிய மிகைப்படுத்தப்பட்ட கதைகளையும், எண்ணிக்கைகளையும் பரப்பிக் கொண்டிருப்பது போல், பனூ குறைளாவின் வழித்தோன்றல்கள் தம்முடைய மூதாதையரின் ‘இழப்புகளை’ பற்றி மிகைப்படுத்தி சித்தரித்திருப்பதற்கே வலுவான முகாந்திரங்கள் இருக்கும் நிலையில், அவற்றை விமர்சன ஆய்வுக்கு உட்படுத்தாமல் அப்படியே ஏற்பது என்ன வகையில் சரி?
கொல்லப்பட வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் அனைவரையும் பனூ நஜ்ஜார் கோத்திரத்தை சேர்ந்த பின்த் அல்-ஹாரித் என்ற பெண்மணியின் வீட்டில் அடைத்து வைத்திருந்தாக குறிப்புகள் உள்ளன. இக்கதைகள் சித்தரிக்கும் எண்ணிக்கை உண்மையாக இருக்கும் பட்சத்தில், தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட பனூ குறைளா ஆண்களை கொள்ளுமளவு பெரிய அரண்மனைகள் எதுவும் அப்போது மதீனாவில் இருந்தனவா?
இன்னும் அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதுவே போதுமென்று நம்புகிறேன். சாராம்சமாக இவ்வாறு கூற முடியும்:
உடன்படிக்கையை மீறி, நம்பிக்கை துரோகமிழைக்கும் விதமாக, எதிரிகளுடன் சேர்ந்து சதிச் செயல்களில் நேரடியாக ஈடுபட்ட பனூ குறைளாவைச் சேர்ந்த தலைவர்களும் போர் வீரர்களும் சொற்ப எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். பொதுவான இஸ்லாமிய நீதிநெறியுடன் எவ்வகையிலும் முரண்படாத இயல்பானவொரு நீதி பரிபாலன நடைமுறைதான் இங்கு இடம்பெற்றுள்ளது.
யூதர்களின் வழித்தோன்றல்களால் கட்டவிழ்த்து விடப்பட்டு, இப்னு இஸ்ஹாக்கினால் பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுக்கதைகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை.
ISIS கும்பல் ஈராக்கிலும் சிரியாவிலும் பெரிய கிடங்குகளை வெட்டி வைத்துக் கொண்டு, போரில் பிடிக்கப்பட்டவர்களையும் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டவர்களையும் கூட்டங் கூட்டமாக அவற்றில் போட்டு நிரப்பி, தானியங்கி துப்பாக்கிகளை கொண்டு கண்மண் தெரியாமல் சுட்டுப் படுகொலை செய்வதை வீடியோ-நிழற்படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு, பெருமையுடன் பொதுவெளியில் பரப்பித் திரிவதை நீங்கள் அறிவீர்கள்.
தாம் போடும் இந்த இரத்த வெறியாட்டத்துக்கு இஸ்லாமிய முலாம் பூசுவதற்காகவே இவர்கள் வலுவான அடிப்படையற்ற ‘சர்ச்சைக்குரிய’ இவை போன்ற கதைகளை எடுத்துக் கொண்டு வருகிறார்கள் என்பதொன்றும் உலக மகா இரகசியமல்ல. இது நபிகளாரை, அவர்களின் ஆளுமையை இழிவுபடுத்தும் செயல். இஸ்லாத்தின் எதிரிகள் செய்யும் செயல்.
இப்னு இஸ்ஹாக்கின் ‘கதைகளை’ விமர்சன ஆய்வுக்கு உட்படுத்தாமல் அப்படியே பிரதிசெய்த இஸ்லாமிய அறிஞர்கள் பலரும் இது தொடர்பில் பிழை விட்டவர்கள்தான். ஆனால் அவர்கள் எவரும் இந்தக் கும்பலை போல் இரத்தவெறி பிடித்து அலையவோ (நஊது பில்லாஹ்), அத்தகையோரின் மாபாதகக் குற்றங்களுக்கு முட்டுக் கொடுக்கவோ முயன்றது இல்லை.
இந்தக் கிரிமினல் கும்பலின் அழிவை எல்லாம் வல்ல அல்லாஹ் துரிதப்படுத்துவானாக!