அவமதிப்பதற்குச் சுதந்திரம்?
கடந்த ஆகஸ்ட் 12 அன்று நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஹாதி மதார் (24) என்ற இளைஞர் சல்மான் ருஷ்டியை கத்தியால் தாக்கினார். இது சர்வதேச மட்டத்தில் ஒரு பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியது. விசாரணை நிறைவடையும் முன்னரே ஊடகங்கள் ஒருவிதமான கதையாடலைக் கட்டமைத்து விவாதித்து வருகின்றன. இது ஒருபுறமிருக்க. இந்தச் சம்பவத்தை முன்னிட்டு வழமைபோல் முஸ்லிம் சமூகத்தை குற்ற விசாரணை செய்துகொண்டிருக்கிறார்கள். எனது வட்டத்திலுள்ள இலக்கிய ஆர்வலர்கள் சிலர் இந்த அரசியல் உரையாடலின் தர்க்கத்தைப் புரிந்துகொள்ளாமல், முஸ்லிம் சமூகம் இலக்கியப் பிரதியை எப்படி வாசிக்க வேண்டும் என்றெல்லாம் கதாகாலட்சேபம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
1988ல் சல்மான் ருஷ்டி முஸ்லிம்களின் நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தும் ‘சாத்தானிய வசனங்கள்’ (Satanic Verses) நூலை வெளியிட்டார். இதற்கு உலகளவில் முஸ்லிம் சமூகத்திடமிருந்து பலத்த கண்டனங்கள் எழுந்தன. ஈரானில் ஆயத்துல்லாஹ் கொமைனி, சல்மான் ருஷ்டிக்கு மரண தண்டனை வழங்க ஃபத்வா (சமய அபிப்ராயம்) வெளியிட்டார். இது அரசியல் ரீதியான சந்தர்ப்பவாதமாக இன்றுவரை விமர்சிக்கப்படுகிறது. இவரைப் பற்றிய எல்லாச் செய்திகளிலும் இந்த ஃபத்வா விஷயம் தவறாமல் இடம்பெறுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். 1998ல் அப்போதைய ஈரானிய அதிபர் முஹம்மது காதமி, ருஷ்டியைக் கொல்வதை ஈரான் ஆதரிக்கவில்லை என்று கூறினார்.
ஈரானைக் காட்டிலும் மேற்குலக ஊடகங்களும் லிபரல் அறிவுஜீவிகளுமே இந்த ஃபத்வாவை மீண்டும் மீண்டும் விவாதப்பொருளாக்குகின்றார்கள். இதன் மூலம் முஸ்லிம்கள் கலை இலக்கியத்துக்கு விரோதமானவர்கள் என்றும், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் என்றும் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. “மேஜிகல் ரியலிசம் பற்றியெல்லாம் ருஷ்டியை எதிர்ப்போருக்கு என்ன தெரியும்?” என்றுகூட அசட்டுத்தனமான கருத்துகளை சமூக ஊடகங்களில் காண முடிகிறது. பெல்ஜியத்தைச் சேர்ந்த ராபர்ட் பொலெட் (மறைவு 1989) மேஜிகல் ரியலிசம் என்ற வகைமைக்கு முன்னோடியாக அறியப்படுபவர். எனினும் தற்காலத்தில் மிக அரிதாகவே அவர் கவனப்படுத்தப்படுகிறார். காரணம், அவர் நாஜி கட்சியுடன் இணைந்து செயல்பட்டதுதான். சல்மான் ருஷ்டி எவ்வளவு பெரிய எழுத்தாளராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். முஸ்லிம்களை சீண்டும் விதமாகவும், திருக்குர்ஆனையும் இறைத்தூதரையும் உண்மைக்குப் புறம்பாகக் கேலி செய்தும் எழுதினால் முஸ்லிம் சமூகம் எதிர்வினையாற்றாதா? கருத்துச் சுதந்திரம் எல்லையற்றதா?
சமீபத்தில் ராபர்ட் கார்டர் என்ற பத்திரிகையாளர் ட்விட்டரில் பகிர்ந்த பதிவு நினைவுக்கு வருகிறது. LGBT+ அவமதிப்பு ஹோமோ ஃபோபியா என்றும், யூத அவமதிப்பு செமிட்டிய விரோதம் என்றும், தோல் நிறத்தை அவமதித்தல் இனவாதம் என்றும் கருதப்படும் நிலையில், இஸ்லாத்தை அவமதிப்பது மட்டும் கருத்துச் சுதந்திரம் ஆகிவிடுமா?