கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்ரேலை அமெரிக்கா ஆதரிப்பது ஏன்?

Loading

பல ஆண்டுகளாக அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இஸ்ரேல் இருப்பது நமக்குத் தெரியும். அதிலும் காஸா மீது இஸ்ரேல் அரசு இனப்படுகொலையை நிகழ்த்தும்போது அமெரிக்கா அதற்கு பக்கபலமாக நின்று எந்த அளவுக்கு ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளிக்கிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். 1948ல் இஸ்ரேல் எனும் நாடு உருவான சமயம் தொட்டு (75 ஆண்டுகளாக) இரு நாடுகளுக்கும் மத்தியில் மிக பலமான உறவு இருந்துவருகிறது. இந்த உறவு வலுவாக இருப்பதற்கு 4 முக்கியக் காரணங்கள் இருக்கின்றன.

  1. தொடக்கம் முதலே ஆதரவு

பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பில் இருந்த பாலஸ்தீனில் 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. அப்போது 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் தம் வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். முதல் நாடாக இஸ்ரேலை அங்கீகரித்த நாடு அமெரிக்கா. அப்போது அதிபராக ட்ரூமன் இஸ்ரேல் உருவான 11 நிமிடங்களில் அதை அங்கீகரித்தார்.

1800களில் யூதர்களுக்கென்று ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு ஸியோனிச இயக்கம் உருவாக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக அடக்குமுறைக்கு உள்ளாகிவரும் யூதர்களுக்கான தீர்வு தனி நாடு அமைப்பதுதான் என்று அவர்கள் முழங்கினார்கள். யூத இனப்படுகொலை ஐரோப்பாவில் நடந்திருந்த பின்னணியில், ஸியோனிஸ்டுகளின் தேச உருவாக்கத் திட்டத்துக்கு 1930, 1940களில் பெரும் அனுதாபம் இருந்தது. அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிக்க இதுவொரு காரணம்.

மற்றொரு முக்கியக் காரணம், அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன் தேர்தலை எதிர்கொண்டிருந்த சமயம் அது. அப்போது யூதர்களின் ஆதரவு அவருக்குத் தேவைப்பட்டது. பொதுவாக அவர் யூதர்களை வெறுப்பவராக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், 1948 மார்ச் மாதம், ஹாரி ட்ரூமனை அவரின் மிக நெருங்கிய நண்பர், யூத மதத்தைச் சார்ந்தவர், மிகப்பெரிய வணிகர் எட்வேர்ட் ஜேகப்சன் சந்திக்கிறார். சைம் வைஸ்மேன் எனும் ஸியோனிச இயக்கத் தலைவரை நீங்கள் சந்திக்க வேண்டும் என்று அவருக்கு அழைப்பு கொடுக்கிறார். வைஸ்மேன் எதிர்காலத்தில் இஸ்ரேலின் ஜனாதிபதி ஆனவர். அவரைச் சந்தித்த ஹாரி ட்ரூமன் இஸ்ரேல் உருவாக அமெரிக்கா ஆதரவு வழங்கும் என்று வாக்குறுதி கொடுத்தார். அன்றிலிருந்து இன்றுவரை அமெரிக்க-இஸ்ரேல் நட்பு தொடர்கிறது. இன்றைக்கும் இதுபற்றி விவாதிக்கும் வரலாற்றாசிரியர்கள் எட்வேர்ட் ஜேகப்சனின் பாத்திரம் இவ்விஷயத்தில் மிக முக்கியமானது என்று சொல்கிறார்கள்.

இன்னொன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஜனநாயகம், மதச்சார்பின்மை மாதிரியான மதிப்பீடுகளை, விழுமியங்களைக் கடைப்பிடிப்பதில் பரஸ்பரம் ஒத்துப்போவதாக அமெரிக்க அரசியல்வாதிகள் தொடங்கி அதிபர்கள்வரை சொல்லி வருகிறார்கள். மத்தியக் கிழக்கிலுள்ள ஒரு ஜனநாயக நாடு இஸ்ரேல் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப் போன்ற பலர் சொல்லியிருக்கிறார்கள். அதேசமயம், இஸ்ரேல் இன வேற்றுமை அரசாக (apartheid state) இருப்பதைப் பற்றியெல்லாம் அமெரிக்கா வாய்திறக்காது என்பதை நமக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

  1. ராஜாங்க நலன்

அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களின் நலன்களுக்குப் பரஸ்பரம் உதவிக்கொள்வதன் மூலமே அவர்களுக்கு மத்தியிலான உறவும் பந்தமும் பலமாக உள்ளது. இதைப் புரிந்துகொள்ள அமெரிக்காவுக்கும், இன்றைக்கு ரஷ்யாவாக உள்ள சோவியத் யூனியனுக்கும் மத்தியில் நடந்த பனிப் போர் காலம் பற்றி நாம் அறிவது அவசியம். உலகை யார் ஆள்வது என்பதில்தான் இவ்விரு நாடுகளுக்கும் மத்தியில் போட்டி நிலவியது. இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்ததிலிருந்து 80களின் பிற்பகுதிவரை பனிப் போர் காலமாக இருந்தது. இந்த போட்டாப் போட்டி என்பது மத்தியக் கிழக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, இஸ்ரேலுக்கு அண்டை நாடாக இருக்கக்கூடிய எகிப்தில்.

இஸ்ரேல் உருவானபோது எகிப்து உள்ளிட்ட 5 அரபு நாடுகள் இஸ்ரேலுடன் போர் புரிந்தன என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும். 1955ல் எகிப்தை ஆட்சிபுரிந்த கமால் அப்துல் நாசர் சோவியத் யூனியனிலிருந்து ஆயுதங்கள் வாங்கினார். இதைத் தொடர்ந்து, மத்தியக் கிழக்கு இரு துருவங்களாகப் பிரிந்தது. ஒருசில நாடுகள் சோவியத் ஆதரவு தரப்பாகவும், வேறு சில நாடுகள் மேற்குலக நாடுகளுக்கு ஆதரவானவையாகவும் ஆகின.

1950ல் இருந்து இஸ்ரேல் அமெரிக்காவிடம் ஆயுத உதவி கோரி வந்தது. பகைமையாக உள்ள அரபு நாடுகளிலிருந்து தனக்குப் பாதுகாப்பு தேவை என்ற அடிப்படையில் இந்தக் கோரிக்கையை முன்வைத்தது. கடைசியில், 1962ல் அமெரிக்க அதிபராக இருந்த கென்னடி இதற்கு ஒப்புக்கொண்டார். 1967ஆம் ஆண்டு 6 நாட்கள் நடைபெற்ற போருக்குப் பிறகு அமெரிக்காவின் ஆயுத உதவி பன்மடங்கு பெருகியது. அந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஜோர்டான், சிரியா, எகிப்து ஆகிய நாடுகளின் நிலப்பகுதிகளைக்கூட இஸ்ரேல் ஆக்கிரமித்தது. இந்தப் பின்னணியில்தான் இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவும் பெருகியது. பிறகு, உளவுத்துறையை பலப்படுத்துவதன் மூலம் அமெரிக்காவின் நேசமிகு கங்காணியாகச் செயல்படத் தொடங்கியது இஸ்ரேல்.

  1. இஸ்ரேலுக்கு நிதியுதவி

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகப்பெரும் தொகையை இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கியிருக்கிறது. இந்த அளவுக்கு வேறு யாருக்கும் அந்த நாடு நிதி வழங்குவதில்லை. 1946ல் இருந்து 2023 வரை 260 பில்லியன் டாலர்களை வழங்கியிருக்கிறது (Source: Congressional Research Service). 2008 வரை பொருளாதார உதவியும், ராணுவ உதவியும் வழங்கி வந்த அமெரிக்கா இப்போது ராணுவ உதவி மட்டும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆண்டுக்கு 3.8 பில்லியன் டாலர்களை இஸ்ரேல் அமெரிக்காவிடமிருந்து பெறுகிறது. வேறு வார்த்தையில் சொல்வதானால் அமெரிக்க குடிமக்களின் வரிப் பணத்தில் இஸ்ரேல் ராஜ வாழ்க்கை வாழ்கிறது. ராணுவ பலத்தையும் பன்மடங்கு பெருக்கியிருக்கிறது.

போர் விமானங்கள் தொட்டு, Iron Dome defence system வரை அமெரிக்கா வழங்கியதுதான். அமெரிக்கா வழங்கும் நிதியைக் கொண்டு அமெரிக்க ஆயுத நிறுவனங்களிடமிருந்து இஸ்ரேல் இவற்றைப் பெற்றுக்கொள்கிறது. ஆயுதத் தளவாடங்ககளைப் பிரயோகிப்பது தொடர்பாக எந்த நிபந்தனையையும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா விதிக்கவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அதனால் இஸ்ரேல் எப்படி வேண்டுமானால் அவற்றைப் பயன்படுத்தலாம், அநியாயமும் அட்டூழியமும் புரியலாம் என்ற நிலை இருக்கிறது. லேஹி சட்டம் என்று ஒன்று அமெரிக்காவில் உண்டு. அமெரிக்காவிலிருந்து பெறும் ராணுவத் தளவாடங்களை தற்காப்புக்காக மட்டுமே பிரயோகிக்க வேண்டும் என்றும், மனித உரிமை மீறல்களுக்குப் பிரயோகிக்கக் கூடாது என்றும் அது சொல்கிறது. ஆனால், இந்த நிபந்தனையையெல்லாம் அமெரிக்காவோ இஸ்ரேலோ பொருட்படுத்துவதில்லை என்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

  1. உள்நாட்டு அரசியல் நலன்

அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு ஆதரவான பொதுக் கருத்து நிலவுகிறது. காஸா மீதான போர் தொடங்கிய பிறகு அதில் ஒரு குறிப்பிடத்தக்க மாறுதல் ஏற்பட்டு வருவது உண்மை. சிக்கல் என்னவென்றால், அமெரிக்காவின் சுமார் 25 சதவீத Evangelical கிறிஸ்தவர்கள் இஸ்ரேல் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தம்மை கிறிஸ்தவ ஸியோனிஸ்டுகளாக அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். தங்களின் நிலைப்பாடுகளை பைபிளைக் கொண்டு அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். கடவுள் யூதர்களுக்கு அந்த நிலத்தை வாக்களித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

இதுபோக, AIPAC இஸ்ரேலின் லாபி குழுக்கள் அமெரிக்காவில் மிக வலுவாக இருக்கிறார்கள். அவர்கள் அமெரிக்க அரசியல் மிகுந்த செல்வாக்கைக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களுக்கு பெரிய அளவில் நிதியுதவி தரும் அமைப்பாக AIPAC இருக்கிறது. இஸ்ரேல் விஷயத்தில் அந்த வேட்பாளர் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பதைப் பொருத்தே அது நிதி வழங்குகிறது. AIPAC மாதிரியே பல குழுக்கள் இஸ்ரேலுக்கு ஆதரவான கொள்கை உருவாக்கத்துக்காக அமெரிக்காவில் செயல்படுகின்றன.

இப்படியான விஷயங்கள்தாம் அமெரிக்க இஸ்ரேல் உறவை பலமாக்கியிருக்கின்றன. வரலாற்று ரீதியான தொடர்வு, ஒரே மதிப்பீடுகளைக் கொண்டிருப்பதாகக் கருதுவது, ராஜாங்க நலன், மதம், அரசியல் ஆதரவு ஆகியன இவ்விரு நாடுகளையும் பிணைத்திருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் இன்றைக்கு பாலஸ்தீனில் கொத்துக்கொத்தாக மக்களைக் கொன்று குவித்தாலும் அமெரிக்கா இஸ்ரேலை விட்டுக் கொடுப்பதில்லை. இஸ்ரேல் எவ்வளவு கொடூரத்தை இழைத்தாலும் அமெரிக்காவின் துணை கொண்டு அதிலிருந்து தப்பிவிடலாம் என்ற மிதப்பில் இஸ்ரேல் இருக்கிறது. அதனால்தான் ஐநா சபையையோ சர்வதேச சட்டங்களையோ அது கொஞ்சமும் பொருட்படுத்துவதில்லை.

இறுதியாக நாம் சொல்ல விரும்புவது, பாலஸ்தீனர்கள் மீதான இன அழிப்பு என்பது மக்கள் கருத்தை வெகுவாக மாற்றியமைத்து வருகிறது. முன்புபோல் எந்த இடையூறும் இல்லாமல் இஸ்ரேல் அமெரிக்க உறவு நீடிக்க முடியாது என்பதை மக்கள் தம் போராட்டங்களின் வழியாக நிறுவிக்கொண்டிருக்கிறார்கள். இரு நாடுகளும் இப்போது உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இது அவற்றின் வீழ்ச்சிக் காலம் நெருங்கிவிட்டதையே நமக்கு உணர்த்துகிறது.

Related posts

Leave a Comment