பூனைகளில்லா உலகம் – வாசிப்பனுபவம்
‘பூனைகளில்லா உலகம்’ நாவலை எனக்கு முன்னரே படித்திருந்த தம்பி பிரவீன் ராஜ், ‘இந்த நாவல் மனதிற்கு இதமாக உள்ளது’ எனக் கூறியிருந்தான். நான் படித்தபோது ஏனோ அவ்வாறு எனக்குத் தோன்றவில்லை. ஆயினும், இப்போது சிந்தித்துப் பார்த்தால் அது உண்மைதான் என்றும், இந்நாவலைப் படிக்கும் எவருக்கும் அது இதமளிக்கவே செய்யும் என்றும் தோன்றுகிறது.
நான் படிக்கும் முதல் ஜப்பானிய நாவல் இதுதான். நாவலைப் படித்து முடித்த பிறகு ஜப்பானிய இலக்கியங்களின் காதலனான பிரவீனுடன் அதுபற்றி அவ்வப்போது உரையாடி வந்தேன்.
“ஜப்பானின் கடந்தகால ஏகாதிபத்திய வரலாறு; இப்போது ஜப்பான் முழுவதுமே ‘ஒர் உழைப்பு முகாமாக’ மாறியிருப்பது; வேலைப் பித்தர்களாக ஜப்பானியர்கள் இருந்துவருவது; ஜப்பானில் பிறப்புவிகிதம் அதலபாதாளத்திற்குச் சென்றிருப்பது; முதியோர் எண்ணிக்கை அதிகரித்து, அவர்களைப் பேண வேண்டிய சூழல்; பல்வேறு தேவைகளுக்காக ஜப்பானுக்குளேயே நடக்கும் புலப்பெயர்வுகளின் பெருக்கம்; அதை வேண்டாவெறுப்புடன் பார்க்கும் ஜப்பானியச் சமூகம்” என பிரவீன் கூறிய பல விஷயங்கள் எனக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும் தந்தன.
பூனைகளில்லா உலகம் நாவலிலும் நாயகனின் அப்பா கைக்கடிகாரக் கடை வைத்துள்ளார்; அவரின் உலகமே அதுதான். 24 மணிநேரமும் அங்கேயே மூழ்கியிருக்கிறார். டி.வி.டி. கடையில் வேலைபார்க்கும் நாயகனின் நண்பனோ, எப்பொழுதும் கடையைத் திறந்துவைத்து அமர்ந்திருக்கிறான். திரைப்பட அரங்கில் பணிசெய்யும் நாயகனின் காதலி; அஞ்சல் துறையில் பணியாற்றும் நாயகன் என அனைவரும் எப்போதும் வேலை செய்பவர்களாகவே — அதை விரும்புகிறவர்களாகவே நாவலில் வருகிறார்கள்.
ஆயினும் பிரவீன் கூறிய விஷயங்கள் எவையும் நாவலின் நேரடிப் பேசுபொருள்களாக இல்லை.
நாவலில் நான் கவனித்த வேறு ஒரு விஷயம் — புற்றுநோய். ஜப்பானில் புற்றுநோய் முக்கிய நோயாக இருக்குமெனத் தோன்றுகிறது. நாயகனின் தாய் புற்றுநோயால் மரணிக்கிறாள்; அவர்கள் முதலில் வளர்த்த ‘லெட்டூஸ்’ பூனை அந்நோயால்தான் இறந்துபோகிறது; நாயகனும் புற்றுநோய்க்கு ஆளாகியே மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறான்.
பூனைகளில்லா உலகம் நாவல் எதார்த்தமும், மாயவுலகும் ஒன்றுகலந்தது. அதில் ஒரு சாத்தான் தோன்றி உரையாடும்; ஒருசமயம் பூனை பேசும். ஊடுபாவான தத்துவ குணம் கொண்டது நாவலின் தொனி. மரணம்; மனிதக் கண்டுபிடிப்புகள்; வாழ்க்கையின் பொருள் ஆகியவை இதில் தத்துவ வினவுப் பொருட்களாக உள்ளன. அவற்றின் மீது விசாரணை நிகழ்த்தப்படுகிறது. அதன் விளைபொருளாக — வாழ்க்கையின் அர்த்தங்களைப் புரிந்துகொண்ட எண்ணம் நமக்குத் தோன்றும்போது நாவல் நிறைவடைகிறது.
அஞ்சல் துறையில் பணியாற்றும் நாவலின் நாயகனுக்குப் புற்றுநோய் காரணமாக மரணம் நெருங்கிவிட்டமை மருத்துவப் பரிசோதனையின்போது தெரியவருகிறது. அப்பொழுதிருந்து நாவல் முடிவதற்கு முன்பான சில பக்கங்கள்வரை சாத்தான் ஒன்று தோன்றி அவனுடன் உரையாடுகிறது. அது நாவலை நகர்த்துகிற கருவியாக வருகிறது. கேலியான, தமாஷான பாத்திரமாக அது விளங்குகிறது. நாயகனிடமுள்ள பொருட்களை உலகிலிருந்து மறையச் செய்வதன் வழியாக வாழ்வில் ஒருநாளைக் கூட்டிக்கொள்ள முடியும் என்ற விதிவிலக்கான சலுகையை வழங்குகிறது. மேலும் எந்தப் பொருளை மறையவைக்க முயல்கிறானோ அந்தப் பொருளைக் கடைசியாக ஒருமுறை பயன்படுத்திக்கொள்ளவும் சலுகை நீட்டிப்பைத் தருகிறது அந்தச் சாத்தான். சாக்லேட்டுகளை மட்டும் உலகிலிருந்து மறையவைப்பதை மட்டும் ஆச்சரியமான, கேலிக்குரிய வகையில் சாத்தானே மறுத்துவிடுகிறது.
காதலியின் தொலைபேசி; நாயகனின் மனதிற்கு நெருக்கமான திரைப்படங்கள்; சதாசர்வகாலமும் கடிகாரக் கடையைக் கட்டியழும் அப்பாவின் கடிகாரம்; இவர்கள் எல்லோருடனும் தொடர்புகொண்ட பூனைகள் ஆகியவற்றை உலகிலிருந்து மறையவைக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. எதிர்பாராத ஆனால் முதலில் அவசியமாகத் தோன்றும் இந்தச் சூழலிலிருந்து நாவல் ‘டேக்ஆஃப்’ ஆகிறது.
மரணம் நாயகனுக்கு, தான் வாழ்ந்த வாழ்வைத் திரும்பிப் பார்க்கவும்; உடனிருந்தவர்களைப் புரிந்துகொள்ளவும்; எது வாழ்க்கை என்ற புரிதலை அடையவும் அவகாசமாக அமைகிறது. தனக்கு நேரவுள்ள மரணத்தைப் பற்றி வருந்தி அழும் அவனுடைய ‘மேலோட்டமான துயரம்கூட’ அவன் மனதில் அமிழ்ந்தே கிடக்கிறது. அவ்விதமிருந்தாலும் அது உள்ளீடற்றதாகவும் இல்லை; அதற்குச் சக்தி உள்ளது. உலகிலிருந்து பொருட்களை மறையச்செய்வதன் மூலம் வாழ்வில் ஒரு நாளைக் கூட்டிக்கொள்ளும் உள்ளாற்றலுடையதாகவே இருக்கிறது. ஆனால், நாயகன் அதிலேயே திருப்திகொண்டானா என்ன!
அவனுடைய மனதில் எந்த அடையாளமுமற்று வெறுமனே பதிந்துகிடந்த பழைய நிகழ்வுகள் தேவையான சமயத்தில் அர்த்தம் பொதிந்தவையாக மாறிப் பிறகு சூரியனைக் கண்ட பனிபோல விலகுகின்றன. காதலியின் பிரிவு; அம்மாவின் மரணம்; அப்பாவுடன் நீண்டகாலப் பிணக்கு எல்லாம் ஏன் ஏற்பட்டன, காரணம் என்ன என்பதையெல்லாம் நாயகன் அவதானிக்கிறான்.
அம்மா-அப்பா-காதலி-நாயகன்- (இவர்கள் எல்லோருடனும் தொடர்புள்ள நிலையில்) பூனைகள் ஆகிய எல்லாம் ஒன்றுடனொன்று இணைந்து அவன் வாழ்க்கை நிகழ்வுகளில் காரணமாகவும், காரியமாகவும் செயலாற்றியதை நாயகன் உணர்ந்துகொள்கிறான்.
ஒரு சிறிய நாவலுக்குள் உலகின் கவலைபடு பொருட்கள் அனைத்தையும் நாவல் விவாதிக்கிறது. இந்த நாவலின் அதிகப்படியான எளிமை ஆரம்பத்தில் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. பெரும்பெரும் தத்துவ விஷயங்களையெல்லாம் வெகு சாதாரணமாக, எளிதாகப் பேசுவது ஜப்பானிய இலக்கிய உலகின் குணமென்று பிரவீன் தம்பி கூற, பிறகு தெரிந்துகொண்டேன்.
நாவலை ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்துள்ள ‘ஜார்ஜ் ஜோசப்’ மிக இயல்பான இலகுத் தன்மையுடன் மொழிபெயர்த்துள்ளார். ஒரு புனைவெழுத்தாளராக இருந்துகொண்டு இன்னொரு புனைவை மொழியாக்கம் செய்யும்போதான இரட்டிப்பு அனுகூலம் இப்பிரதியில் தெரிகிறது.