கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பெண்ணியவாதம் ஆபத்தானதா?

Loading

தற்காலத்தில் கல்வி, கலை, இலக்கியம், சட்டம் என அனைத்து மட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் கருத்தியலாக பெண்ணியவாதம் உள்ளது. மட்டுமின்றி, நவீன பொதுப்புத்தியிலும் அது பலத்த செல்வாக்கு செலுத்தி வருகிறது. இச்சூழலில், இஸ்லாமியச் சட்டகத்திலிருந்து பெண்ணியத்தை அதற்கே உரிய இடத்தில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

அந்த வகையில், “Is Feminism Dangerous?” என்ற தலைப்பில் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்காவைச் சேர்ந்த இஸ்லாமிய அழைப்பாளர் டேனியல் ஹகீகத்ஜூ, ஹார்வேர்ட் மெடிக்கல் ஸ்கூலில் ஆற்றிய உரையை சுருக்கி தமிழாக்கியுள்ளோம்.

பெண்ணியவாதத்தை விமர்சித்தல்

பெண்ணியம் குறித்துப் பேசுவதற்கு முன், இரு அம்சங்களை கவனப்படுத்த விரும்புகிறேன். ஒன்று, பெண்ணியவாதக் கருத்தாக்கங்களை இன்றைக்கு எவரேனும் கேள்விக்குள்ளாக்கினால் அவர் பெண்களுக்கு எதிரானவர், பெண் வெறுப்பாளர் என்றெல்லாம் முத்திரை குத்தப்படுகிறார். கடும் கண்டனங்களுக்கு ஆளாகிறார். மேலும், அறிவுத்தள உரையாடல்களில் அவர் புறக்கணிக்கப்படுகிறார். அதிலும், அவர் ஓர் ஆணாக இருந்தால் கதை முடிந்தது. பெண்ணியம் பற்றி பேசுவதற்கு அவர் அருகதையற்றவராகிவிடுவார்.

ஆணாக இருப்பவர் பெண்ணியவாதத்தை விமர்சிக்கக் கூடாது என்றால், கம்யூனிசத்தை கம்யூனிஸ்டுகளும், நாஜிசத்தை நாஜிகளும்தான் விமர்சிக்க வேண்டுமா என்ன! இப்படிச் சொல்வதில் என்ன தர்க்க நியாயம் இருக்கிறது என்று தெரியவில்லை.

பொதுவாக, பெண்ணியவாதம் என்பது ஆண்களை தனிப்பட்ட அளவிலும், கூட்டு ரீதியாகவும் விமர்சனத்துக்கு உட்படுத்தக்கூடியது. அப்படியிருக்கும்போது, ஆண்கள் எவ்வித மறுமொழியும் சொல்லத் தகுதியற்றவர்கள் என்று ஒரே போடாகப் போடுவது சரியா? பென்னம்பெரிய குற்றவாளிகளுக்குக்கூட தன் தரப்பு வாதத்தை முன்வைக்க உரிமை வழங்கப்படும். ஆனால், ஆணாதிக்கச் சமூக அமைப்பை உருவாக்கி பெண்களை பாதிப்புக்குள்ளாக்கிய குற்றவாளிகள் என்று சொல்லி ஆண்களுக்கு அதுவும் மறுக்கப்படும்.

இரண்டாவது, பெண்ணியவாதத்தை எதிர்ப்பது பெண் உரிமைகளையே எதிர்ப்பதாகும் என்று வாதிடப்படுகிறது. இதுவும் முன்சொன்னதுபோன்ற நியாயமற்ற வாதமே.

பள்ளியில் படித்தபோதும், தொடக்க கால கல்லூரிக் காலங்களிலும் என்னை ஒரு முஸ்லிம் பெண்ணியவாதி என்று பெருமிதத்துடன் சொல்லி வந்தேன். ஆனால், பெண்ணியவாதத்தின் அறிவுசார் வரலாறு குறித்த எழுத்துகளையும் ஆய்வுகளையும் வாசித்த பிறகே, அதன் கறுப்புப் பக்கங்கள் எனக்குப் புலப்படத் தொடங்கின. பெண்ணியம் பிரச்னைக்குரியது என்பதும், பெண் உரிமைகளுக்கே பாதகமான கருத்துநிலை என்பதும் எனக்குப் புரிந்தது. நான் இங்கு தெளிவுப்படுத்த நினைப்பது என்னவெனில், நான் பெண் உரிமைகளுக்கு எதிரானவன் இல்லை என்பதையே.

பெண்கள் சார்ந்த விவகாரங்களுக்கு உரிய விதத்தில் இச்சமூகம் முகங்கொடுக்க வேண்டும். பெண்கள் பாதிக்கப்படும்போது நாம் இஸ்லாமிய அடிப்படையில் அதற்குத் தீர்வு காண வேண்டும். ஆனால், தற்காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கெல்லாம் நிவாரணியாக பெண்ணியவாதம் முன்னிறுத்தப்படுகிறது.

பெண் விவகாரங்கள், அவர்களின் உரிமைகள் தொடர்பாக முற்கால இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் நிறைய விவாதித்திருக்கிறார்கள். நவீன பெண்ணியக் கருத்தாக்கங்களில் நாம் சிக்கிக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில், முன்சொன்னதுபோல, பெண்ணியம் என்பது பெண்களுக்கே விரோதமான கருத்தியல். அது சமூகத்தை சீர்குலைக்கவே செய்திருக்கிறது. அதன் வரலாற்றை ஆராய்ந்தால் இந்த உண்மை விளங்கும்.

முஸ்லிம் சமூகங்களைக் கபளீகரம் செய்வதற்கான ஆயுதமாக பெண்ணியத்தை காலனியவாதிகள் பயன்படுத்தினர். கறுப்பு அமெரிக்கர்கள், கறுப்பின ஆப்பிரிக்கர்கள், பூர்வகுடி ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோரை ஒழிப்பதற்கும் அது உபயோகிக்கப்பட்டது. இப்படி காலனிய, ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரலுக்கு கருவியாக பெண்ணியம் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படுகிறது.

அரசு மையச் சமூகம்

ஒரு கணம் நிதானித்து நாம் வாழும் நவீன உலக ஒழுங்கை சற்றுக் கூர்மையாக அவதானியுங்கள். நவீன தேச அரசு எனும் அமைப்புக்குள் நாம் வசிக்கிறோம். அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி எனப் பல்வேறு தேச அரசுகள் இருக்கின்றன இல்லையா? இப்படியான கட்டமைப்பு மனிதகுல வரலாற்றுக்கு மிகவும் புதியது. மிஞ்சிப்போனால் 200 – 300 ஆண்டுகளைத் தாண்டாது.

ஒரு தேச அரசில் அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூகமயப்படல், சுகாதாரம், குழந்தைகள் / முதியோர் நலன், பொழுதுபோக்கு என மனித வாழ்வின் அனைத்து அம்சங்களும் அரசு மற்றும் பெருநிறுவனங்களின் பிடிக்குள் கொண்டுவரப்பட்டு இயக்கப்படுகின்றன. பொருளாதார அதிகாரத்தை அரசும் பெருநிறுவனங்களும் தன்வசம் வைத்திருக்கின்றன. அதேபோல், அரசியல், கல்வி போன்றவையும் அவற்றின் வசமே உள்ளன.

சொல்லப்போனால், நம் ஒவ்வொருவரின் முழு வாழ்க்கைப் போக்கையும் இந்த இரு அதிகார மையங்களும்தான் தீர்மானிக்கின்றன. இதைத்தான் நான் அரசு மையச் சமூகம், பெருநிறுவன மையச் சமூகம் என்று சுட்டுகிறேன்.

உங்கள் தனிப்பட்ட அனுபவங்களைக் கொண்டே சற்று யோசித்துப் பாருங்கள். மேற்குலகில் ஒரு குழந்தை தனது வாழ்வில் எவ்வளவு காலம் பெற்றோருடன் செலவிடுகிறது? தாய் தந்தை இருவரும் வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். தனியார் அல்லது அரசுசார் பள்ளி – கல்லூரிகளில் அந்தப் பிள்ளையின் முக்கியமான காலங்கள் கழிகின்றன. அதன் பொழுதுபோக்கு அம்சங்களைக்கூட தீர்மானிக்கும் இடத்தில் மேற்கூறிய அதிகார மையங்களே உள்ளன. பெற்றோர் சம்பாதித்து நாட்டுக்கு வரி செலுத்திக்கொண்டிருக்க, பிள்ளை அரசு மற்றும் பெருநிறுவனங்களின் மேற்பார்வையில் வளர்கிறது.

இப்படி ஒருவனுடைய வாழ்வின் ஆரம்பம் முதல் முடிவுவரை அரசின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. முதலாளித்துவ அரசு அல்லது கம்யூனிச அரசு என எதுவாக இருந்தாலும், நவீன தேச அரசுகள் இந்த விதத்தில்தான் இயங்குகின்றன. அவற்றுக்கு மத்தியில் சமூக பொருளாதாரப் முறைமைகளில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அடிப்படையில் தேச அரசுக்குரிய பண்புகளையே அவை கொண்டிருக்கும்.

குடும்ப மையச் சமூகம்

இஸ்லாம் உருவாக்க விரும்பும் சமூகம் வேறு விதமானது. கடந்த காலத்தை நீங்கள் மதச்சார்பற்ற கல்விப்புலக் கண்ணோட்டத்தில் காண்பதற்கும், இஸ்லாமிய நோக்கில் காண்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடுகள் உண்டு.

நவீன தேச அரசு உருப்பெறும் முன்பு சமூகம் எப்படி இருந்தது? குறிப்பாக, முஸ்லிம் சமூக அமைப்பு எப்படி இருந்தது?

தற்காலத்தில் அரசு மையச் சமூகமாக இது உள்ளது. முற்காலத்தில் இது குடும்ப மையச் சமூகமாக இருந்தது. இன்றைய நவீன உலகில் குடும்பம் என்று சொன்னால், கணவன், மனைவி, குழந்தைகள் ஆகியோரைக் கொண்ட அமைப்பு அது. ஆனால், முஸ்லிம் சமூகங்களில் கூட்டுக் குடும்பமுறை வலுவாக இருந்துள்ளது. அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூகமயப்படல், சுகாதாரம், குழந்தைகள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு, பொழுதுபோக்கு என அனைத்து விஷயங்களும் அன்றைக்கு குடும்பங்களையும் குடும்ப உறவுகளையும் மையப்படுத்தியே இருந்தன.

கல்வியை எடுத்துக்கொள்ளுங்கள். அதை அன்று குடும்பம்தான் குழந்தைகளுக்கு வழங்கியது. குடும்ப மையச் சமூகத்தில் நீங்கள் வசிக்கும் பகுதியே ஒரு பெருங்குடும்பமாக இருக்கும். அதில் இருபாலருக்குமான பாத்திரங்களும் (roles) பொறுப்புகளும் முறையாக வரையறுக்கப்பட்டிருக்கும். இஸ்லாமிய மூலாதாரங்களில் இவை தெளிவாக இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் என்கிறது திருமறை (4:34). அந்த வகையில், ஆண்களே முதன்மையான பாதுகாவலர்களும், பொருளீட்டி செலவு செய்வோரும் ஆவர். அரவணைப்பு, கல்விப் புகட்டல் உள்ளிட்ட குடும்பவியல் விவகாரங்களில் பெண்கள் முதன்மைப் பங்காற்றுவர். இப்படி இருபாலருக்கும் குறிப்பிட்ட கடமைகளை வரையறுப்பது தற்போது பெண்ணியவாதிகளால் பிரச்னையாக்கப்படுகிறது.

மானுடவியல் சார்ந்து நீங்கள் ஆராய்ந்தால் பன்னெடுங்காலமாக இப்படியான சமூகக் கட்டமைப்பு முன்வாழ்ந்த சமூகங்களில் காணப்படுவதை நீங்கள் அறியலாம்.

இறைவன் ஆணையும் பெண்ணையும் வெவ்வேறாகத்தான் படைத்திருக்கிறான். இருவருக்கிடையே பலம், பலவீனம் மாறுபடுகிறது. இந்த மாறுபாடு சமூகத்தில் ஒரு சமநிலையையும் ஒத்திசைவையும் உண்டாக்குகிறது. நான் இப்படியெல்லாம் சொல்வது “பழமைவாதமாக”, “பிற்போக்கானதாக” சிலருக்குத் தோன்றலாம். ஏனெனில், எதார்த்தத்தையும் இயற்கையையும் புறக்கணித்து சில புதிய கண்ணோட்டங்களை அநேகர் வரித்துக்கொண்டுள்ளனர்.

பாரம்பரியமாக இருந்துவந்த குடும்ப மையச் சமூகம், அதில் இருபாலருக்கும் வெவ்வேறு பாத்திரங்கள் என்பனவற்றை நாம் பேசினால் பெண்ணியவாதிகள் எரிச்சலுறுவார்கள். நெடுங்காலமாக குடும்ப விவகாரங்களோடு பெண்களை முடக்கி பொருளாதார, அரசியல் அதிகாரத்திலிருந்து அவர்களை விலக்கி வைத்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுவார்கள். முந்தைய சமூக அமைப்பே பெண்களை ஒடுக்கும் கருவிதான் என்பார்கள். அவர்களின் வாதங்கள் தவறானவை.

பொதுவாக, பெண்ணியவாதிகளின் எதிர்வாதங்கள் அரசு மையச் சமூகத்தை மனங்கொண்டுதான் முன்வைக்கப்படுகின்றன. குடும்ப மையச் சமூக அமைப்பையும், அதன் இயக்கத்தையும் அவர்கள் கருத்தில் கொள்வதில்லை. முற்காலத்தில் பொருளாதார, அரசியல் அதிகாரங்கள் குடும்ப அமைப்பின் வசமே இருந்தன. ஆண்களும் பெண்களும் அதில் இணைந்து பங்காற்றினார்கள். ஆனால், இப்போது குடும்பம் எனும் நிறுவனத்திடமிருந்து அதிகாரங்கள் அத்தனையும் பிடுங்கப்பட்டு, அரசிடமும் பெருநிறுவனங்களிடமும் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.

முன்னர் பெருநிறுவன ஆதிக்கமெல்லாம் கிடையாது. முதன்மையான பொருளாதாரச் செயல்பாடுகள் குடும்ப உறவுகளையும் சமூகக் கட்டமைப்புகளையும் மையங்கொண்டிருந்தன. அதில் பெண்களும் பங்கெடுத்தார்கள். குடும்பம் சார்ந்த வியாபாரங்கள் இதற்கோர் எடுத்துக்காட்டு.

கடந்த காலங்களிலும், இன்றைக்கும் பெண்ணியவாதிகள் பாரம்பரியமான குடும்ப மையச் சமூகக் கட்டமைப்பு முறையின் மீது தாக்குதல் தொடுப்பதோடு, அரசு மையச் சமூக அமைப்புக்காகவே வாதிடுகிறார்கள். வேறு வார்த்தையில் சொல்வதானால், அரசு மற்றும் பெருநிறுவனங்களின் ஆயுதமாக பெண்ணியவாதம் இருக்கிறது.

உண்மையில், பெண்ணியவாதம் மனிதச் சமூகங்களுக்கு நாசத்தையே விளைவித்திருக்கிறது. திருமணத்தின் முக்கியத்துவத்தை மதிப்பிழக்கச் செய்வது, விவாகரத்தையும் கருக்கலைப்பையும் ஒருபால் உறவு போன்றவற்றையும் ஊக்குவிப்பது முதலானவற்றின் மூலம் குடும்ப அமைப்பை அழித்தொழிக்கும் வேலையைத்தான் அது செய்து வந்திருக்கிறது. பிள்ளைகள் பெற்றுக்கொள்வதையோ பெருங்குடும்பங்கள் உருவாவதையோ அது ஊக்குவிப்பதில்லை.

இந்த நவீன யுகத்தில் சிறிய அளவிலான குடும்ப அமைப்பும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகிறது. கருத்தரிப்பு விகிதம் சரிந்துகொண்டே போவதை நீங்கள் பார்க்கலாம். பிள்ளைகள் பெற்றுக்கொள்வதை ஒரு பெரும் சுமையாக அனைவரும் கருதும் சூழல் நிலவுகிறது.

குடும்ப அமைப்பு சீர்குலைவதன் எதிரொலியாகவே மகிழ்ச்சிக் குறியீடு அதளபாதளத்தில் உள்ளது. மன அழுத்தம் கொண்டோர் எண்ணிக்கையும், தந்தையில்லாமல் வளரும் குழந்தைகள் எண்ணிக்கையும் உச்சம் தொட்டுள்ளது. தந்தையின்றி வளரும் குழந்தைகளிடையேதான் போதைப் பொருள் பயன்பாடு, பள்ளியை பாதியில் நிறுத்துதல், குற்றச் செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்டவை மிகுதியாகக் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாம் குடும்ப அமைப்பை பலப்படுத்துவதற்குத் தேவையான போதனைகளை வழங்குகிறது. குடும்ப உறுப்பினர்களுடன், சொந்த பந்தங்களுடன் அது பலமான பிணைப்பை ஏற்படுத்தித் தருகிறது.

இந்த தனிமனிதவாத நவீன உலகம் ஏற்படுத்தியுள்ள ஆன்ம ரீதியான பாதிப்புகள் பற்றியும் சொல்லியாக வேண்டும். உறவுகளை நாம் சமூக ஊடகங்களில் தேடிக்கொள்ளும் காலம் இது. வாழ்க்கை மீது இன்று மனிதனுக்குக் கடும் அதிருப்தி நிலவக் காரணம், அவனுக்கு வாழ்வதற்கான அர்த்தம் பிடிபடாமல் இருப்பதே. ஒருவனின் மனத்தை வெறுமையைக் கொண்டு நிரப்ப இயலாது. உங்கள் சிந்தனையையும் மனத்தையும் ஆன்மாவையும் ஆரோக்கியமானதைக் கொண்டு நிரப்பவில்லை என்றால், எதிர்மறையான விஷயங்கள் அதில் நிரம்பிவிடும்.

பாரம்பரிய சமூகக் கட்டமைப்பில் கிடைத்த அன்பும் அரவணைப்பும் மானுடப் பிணைப்பும் இன்று இல்லாமல் போனது பல பிரச்னைகளை உருவாக்கியுள்ளது. சொல்லப்போனால், பாசிஸ்டுகளும் நாஜிகளும் உருவாகவும் ஒருவகையில் நவீன சமூக அமைப்புக்குப் பங்கிருக்கிறது. மனிதர்கள் தனியர்களாய்ச் சிதறி, அவர்களுக்குத் தேவையான உறவுகளும் சமூகத் தொடர்பாடலும் கிடைக்காமல் போவதால் அவர்கள் தீவிர தேசியவாத இயக்கங்களில் தம்மை இணைத்துக்கொள்கிறார்கள் என்பது ஒரு நிதர்சனமான உண்மை.

பெண்ணியத்தின் மீதான விமர்சனங்கள்

1. பெண்ணியவாதிகள் முன்வைக்கும் ஒரு முக்கியமான வாதம் என்னவென்றால், காலங்காலமாக ஆண்கள் பெண்களின் மீது மேலாதிக்கம் செலுத்தி அவர்களை ஒடுக்கியிருக்கிறார்கள் என்பது. இந்த வாதத்தின் மூலம் அவர்கள் நிறுவ முயல்வதென்ன? பெண்கள் இத்தனை நூற்றாண்டாகவும் ஆண்களால் ஒடுக்கப்பட்டு வந்ததை தாங்களே கண்டறிந்து உலகுக்குச் சொல்வதாக அவர்கள் நினைக்கிறார்களா? நவீனத்துக்கு முன்வாழ்ந்த பெண்கள் திறனற்றவர்களாகவும் ஏமாளிகளாகவும் இருந்து வந்திருப்பதாகக் கூறுகிறார்களா?

பெண்ணிய விமர்சனங்கள் நவீனகால உருவாக்கமாகும். வரலாற்றில் அவற்றை நீங்கள் காண இயலாது. ஆணாதிக்கம், ஆணாதிக்கத்தை அகவயப்படுத்தல் (internalized patriarchy), நச்சுத்தன்மையான ஆண்மை (toxic masculinity), mansplaining மாதிரியான சொல்லாடல்கள் முற்காலத்தில் இல்லை.

அன்றும் சரி, இன்றும் சரி பெண்களை பாதிப்புக்குள்ளாக்கும் நடைமுறைகளும் வழக்கங்களும் இருந்து வருவது உண்மை. தன் கணவரின் நடத்தை பற்றி நபிகளாரிடம்கூட சில பெண்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், இந்தச் சமூக அமைப்பிலேயே பிரச்னை இருக்கிறது என்றோ, இது அதனளவிலேயே ஒடுக்குமுறையானது என்றோ சொல்வது புதிய போக்காகும்.

2. பொதுவாக, பெண்ணியத்தின் வரலாற்றைச் சொல்லும்போது, முதல் அலை பெண்ணியத்திலிருந்து தொடங்குவார்கள். முதலில் அது வாக்குரிமைக்கான போராட்டமாக மேலெழுந்ததாய் நேர்மறையான விதத்தில் நம் பாடப்புத்தகங்களில் இடம்பெறும். உண்மையில் தொடக்கம் அதுவல்ல. ஜெரமி பெந்தம், மான்டெஸ்கியூ போன்ற ஐரோப்பிய ஆண்களே ஆரம்பக்கால பெண்ணியவாதிகளாவர். அவர்களின் காலத்தை முதல் அலைக்கு முந்தைய பூஜ்ஜிய அலை என்று நான் கூறுவேன்.

அந்தச் சமயத்தில், உலகம் முழுக்க வாழும் மற்ற சமூகங்களை நாகரிகப்படுத்தும் பணியில் ஈடுபடுவதாக வெள்ளை காலனியவாதிகள் தங்களுக்குள் கருதி வந்தனர். மேற்கூறிய பெண்ணியவாதிகள் என்ன செய்தார்கள் என்றால், முஸ்லிம் உலகைச் சார்ந்தோர், பூர்வகுடி அமெரிக்கர்கள், ஆப்பிரிக்கர்கள் முதலான பிற சமூகங்களுடன் ஒப்பிடுகையில் வெள்ளையினப் பெண்களின் வாழ்வே மேம்பட்டது என்றும், அவர்களே உரிமைகளுடன் வாழ்வதாகவும், ஒடுக்குமுறைக்குள்ளாகி வரும் மற்ற இனத்துப் பெண்கள் தங்களால் மீட்கப்பட வேண்டியவர்கள் என்றும் கதையாடலை உருவாக்கினர். அதனூடாக மற்ற “காட்டுமிராண்டி”ச் சமூகங்களின் மீதான காலனியத்துக்கும் ஆக்கிரமிப்புக்கும் நியாயவாதம் கற்பிக்கப்பட்டது. லூயிஸ் நியூமன் எழுதிய ‘வெள்ளையினப் பெண்களின் உரிமைகள்’ எனும் முக்கியமான நூலில் இதுகுறித்து விளக்கப்பட்டுள்ளது. வாய்ப்புள்ளோர் வாசித்துப் பார்க்கலாம்.

மிகவும் குறிப்பிடத்தக்க பெண்ணிய முன்னோடிகளான எலிசபெத் கேடி ஸ்டாண்டன், ஃபிரான்சஸ் வில்லார்ட், சூசன் பி ஆண்டனி, ரெபேக்கா ஃபெல்டன் போன்றோரின் எழுத்துகள் வழியாகவும்கூட பெண்ணியவாதம் காலனியவாதிகளின் ஆயுதமாகப் பயன்பட்டதை அறிய முடியும்.

3. இரு உலகப் போர்களுக்குப் பிறகு, இரண்டாம் அலை பெண்ணிய காலகட்டத்தில், காலனியவாதிகளின் மொழியில் மாற்றம் ஏற்பட்டது சுட்டிக்காட்டத்தக்க ஒன்று. முன்பு காட்டுமிராண்டிகளை நாகரிகப்படுத்துவதாகச் சொல்லிவந்த காலனியவாதிகள் தற்காலத்தில் மூன்றாம் உலக நாடுகளை வளர்ச்சியடைய வைப்பதாகக் கூறுகிறார்கள். மனித உரிமைகள், பெண் உரிமைகள், பெண்களை அதிகாரப்படுத்துதல் என அவர்களின் மொழி மாற்றமடைந்துள்ளது. உண்மையில், மொழிதான் மாறியிருக்கதே தவிர அவர்களின் மனப்பான்மையிலும் குறிக்கோளிலும் எந்த மாற்றமும் இல்லை. முஸ்லிம் உலகை உருமாற்றும் திட்டத்தையும் அவர்கள் கைவிடுவதாக இல்லை.

அங்குள்ள குடும்ப அமைப்பை முற்றிலுமாக சீர்குலைத்து, பலமான அரசு மைய/ பெருநிறுவன மையச் சமூகத்தை உருவாக்க அவர்கள் முயல்கிறார்கள். அப்போதுதானே அந்த மக்களை தமது முழு ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர இயலும்! ஆக, காலனிய, ஏகாதிபத்தியச் செயல்திட்டத்தில் பெண்ணியவாதம் மையமான இடத்தை வகிப்பது கண்கூடு. ஆஃப்கானிஸ்தான் இதற்கொரு சமீபத்திய உதாரணம். ஆஃப்கன் பெண்களைக் காப்பாற்ற, அவர்களுக்கு ஆடைச் சுதந்திரம் வழங்க, கல்வி உரிமை வழங்க அங்கே படையெடுப்பதாக அமெரிக்கர்கள் வாதிட்ட கதை நமக்குத் தெரியும். இப்படிக் கோருவதன் வழியாகவே அமெரிக்க அரசு தனக்கான ஆதரவைப் பெருக்கிக்கொண்டது. இவ்விஷயம் தொடர்பாக மேலும் அறிய, லைலா அபூ லுகத், ஜோசஃப் மஸ்ஸாத் போன்றோரை வாசிக்கலாம்.

4. மூன்றாம் அலை பெண்ணியக் கருத்தாக்கங்களும் சமூகத்தில் குழப்பத்தையும் நாசத்தையுமே விளைவிக்கும் என்பது தெளிவு. பாலினம் சார்ந்த விவாதத்தில் அது இன்னொரு பாய்ச்சலை ஏற்படுத்தியது. உயிரியல் ரீதியான பாலின வேறுபாடுகூட சமூகத்தால் கட்டமைக்கப்பட்டதே என்றார் ஜூடித் பட்லர். இவரொரு திருநங்கை. பெண்ணியவாதிகள் இந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது ஆச்சரியப்படுவதற்கில்லைதான். ஏனெனில், இரு பாலருக்குமான பாத்திரங்கள் என்பன சமூக உருவாக்கம், பெண்களை ஒடுக்குவதற்காகத் திணிக்கப்பட்டது என்பவர்கள் ஒருகட்டத்தில் உயிரியல் வேறுபாடுகளும் சமூக உருவாக்கம்தான் என்று கூறுவது வியப்புக்குரியதல்ல அல்லவா?

இப்படியான வாதங்கள் குடும்ப அமைப்பில் என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று யோசியுங்கள். நீங்கள் ஆண் யார், பெண் யார் என்பதைக்கூட உறுதி செய்ய முடியாதே! இரு பாலருக்குமான தனித்தனி பொறுப்புகளும் கடமைகளும் இருப்பது ஒருபக்கம் வைத்துவிடுவோம். இந்த அடிப்படையான விவகாரத்தை நீங்கள் எப்படி அணுகுவீர்கள்?

பெண்ணியவாதத்தில் இம்மாதிரியான பல கோளாறுகள் இருக்கின்றன. பாலினம் குறித்த அதன் கண்ணோட்டம், இருபாலரையும் கலந்திருக்கும்படி வலியுறுத்துவது, திருமணத்துக்கு அப்பாலான உறவுகளை ஊக்குவிப்பது என்பனவெல்லாம் எந்த வகையிலும் மனிதர்களுக்கு நன்மை பயக்கப்போவதில்லை.

சில ஆலோசனைகள்

பெண்ணியம் ஒருவகையில் நாத்திகத்துக்கு அனைவரையும் இட்டுச்செல்லும் கருத்தியலாக உள்ளது. தங்களை பெண்ணியவாதிகள் என்று கருதிக்கொள்வோர் நாத்திகர்களாக மாறிவிடுவார்கள் என்றோ இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்றோ நான் வாதிடவில்லை. நான் கவனப்படுத்த விரும்புவது, ஒருவர் பெண்ணியவாதக் கண்ணோட்டத்தை வரித்துக்கொண்டு இஸ்லாத்தைப் புரிந்துகொள்ள முடியாது என்பதையே. ஏனென்றால், முன்கூறியதுபோல், இஸ்லாம் குடும்ப மையச் சமூகத்தை வலியுறுத்தும் மார்க்கம். இது பெண்ணியவாதத்துக்கு முற்றிலும் முரணான நிலைப்பாடாகும்.

அதுபோல, ஒருவர் இஸ்லாமியச் சட்டங்களை பெண்ணியவாதக் கண் கொண்டு பார்த்தால் அவை நிச்சயம் பிரச்னைக்குரியதாகத் தோன்றும். சொத்துப் பங்கீடு, சாட்சியமளித்தல், பிற மத ஆடவரை திருமணம் செய்தல் போன்ற பெண்கள் தொடர்பான சட்டவியல் விஷயங்களில் அவருக்குக் குழப்பம் உண்டாகும். ஆக, முஸ்லிம்கள் இப்படியான நவீன குழப்பங்களில் சிக்கிக்கொள்ளக் கூடாது.

நவீனமயப்பட்டிருக்கும் இன்றைய உலகில் குடும்ப அமைப்பைப் பாதுகாப்பதும் பலப்படுத்துவதும் சவாலானது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவு உண்மைதான் குடும்ப அமைப்பை வலுப்படுத்த நாம் தனிக் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் முன்பைக் காட்டிலும் அதிகமாகியுள்ளது என்பதும். அதுபோல, தனிநபராக சமூகம் சிதறும் இச்சூழலில், சொந்த பந்தங்களுடன் அணுக்கமான உறவை அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பிரத்யேகமாக இளைஞர்களுக்குச் சொல்ல விரும்புவது, சீக்கிரமே திருமணம் செய்யுங்கள். இயலுமான அளவு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். நேரம் செலவிட்டு அவர்களை வளர்த்தெடுங்கள். அரசு/கார்ப்பரேட் நிறுவனங்கள் அவர்களை வழிநடத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஹோம் ஸ்கூலிங் செய்வதை நான் பரிந்துரைப்பேன். அப்போதுதான் நீங்கள் அவர்கள் மீது நல்ல தாக்கங்களை ஏற்படுத்த முடியும். ஈமானுடனும், நல்ல பழக்க வழக்கங்களுடனும் அவர்களை வளர்த்தெடுக்க முடியும். இதையே அடுத்தடுத்த தலைமுறையும் செய்யும்படி அமைத்துக்கொண்டால் ஒரு பெரும் சமூக மாற்றத்தை நிச்சயம் அது ஏற்படுத்தும்.

(தொகுப்பும் மொழியாக்கமும்: நாகூர் ரிஸ்வான்)

Related posts

Leave a Comment