கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஒரு காஸா குழந்தையின் உயில்!

Loading

(காஸா நகராட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆஸிம் அந்நபீஹ், அல்ஜஸீறா இணையதளத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

பத்து வயதுக் குழந்தைகள் பொதுவாக விளையாட்டுப் பொம்மைகள் வைத்து விளையாடிக்கொண்டும், கிறுக்கிக்கொண்டும், தங்கள் நண்பர்களுடன் சுற்றித் திரிந்துகொண்டும் மும்முரமாக இருப்பார்கள். ஒருபோதும் அவர்கள் தங்கள் மரண உயில்களை எழுதுவதற்கு விரும்புவதில்லை.

“நான் உயிர்த் தியாகி ஆகிவிட்டால் அல்லது மரணித்துவிட்டால் இது எனது உயில்: எனக்காக நீங்கள் அழ வேண்டாம்; ஏனென்றால் உங்கள் அழுகை எனக்கு வலி தருகிறது. என் உடைகள் தேவையுடையவர்களுக்குக் கொடுக்கப்படும் என்று நம்புகிறேன். என் பொருட்கள் றஹஃப், சாரா, ஜூடி, லானா, பதூல் ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். என்னுடைய மணிகளை அஹ்மதுக்கும் றஹஃபுக்கும் கொடுத்துவிடுங்கள். எனது மாதாந்திரத் தொகை 50 ஷெகல்களில் 25ஐ றஹஃபிற்கும், 25ஐ அஹ்மதுக்கும் கொடுக்க வேண்டும். என்னுடைய கதைப் புத்தகங்களையும் பாடப் புத்தகங்களையும் றஹஃபிற்கும், விளையாட்டுச் சாமான்களை பதூலிற்கும் கொடுத்துவிடுங்கள். என் சகோதரன் அஹ்மதைத் திட்ட வேண்டாம். தயவுசெய்து என்னுடைய இந்த விருப்பங்களை நிறைவேற்றுங்கள்.”

என் 10 வயது மருமகள் றஷா எழுதிய உயிலை அவளை அடக்கம் செய்யும்வரை குடும்பத்தில் ஒருவரும் அறிந்திருக்கவில்லை. 11 வயதான அவளின் சகோதரன் அஹ்மதையும் அவளையும் ஒரே மண்ணறையில் அடக்கம் செய்தோம். செப்டம்பர் 30 அன்று அவர்களின் இல்லத்தின்மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தாக்குதலின் காரணமாக அவர்களின் முகங்கள் பாதியைக் காணவில்லை. காஸாவில் 12 வயது முஹம்மது அத்துர்ரா கொலைசெய்யப்பட்டு சரியாக இருபத்தி நான்கு வருடங்கள் கழித்து இச்சம்பவம் நடந்தேறியுள்ளது.

இதன் மூலம், அப்பாவிக் குழந்தைகளைக் கொலைசெய்வதில் தனது நீண்டகாலச் சாதனையை இஸ்ரேல் நமக்கு நினைவூட்டியிருப்பது போல் தெரிகிறது.

தங்களுடைய சிறு குழந்தைகளின் உயிரற்ற உடல்களை நோக்கி வேகமாக ஓடும் பெற்றோர்களைச் சூழ்ந்துள்ள பயங்கரத்தையும், சேதமடைந்த கட்டடத்தின் முன் நிற்கும் திகிலையும் எளிதாக மறக்க முடியாது.
சில மாதங்களுக்கு முன்னர், ஜூன் 10 அன்று, இந்தக் கட்டடம் (றஷாவின் வீடு) குண்டு வீசித் தாக்கப்பட்டது. அன்றைய தினம், அக்கட்டடத்தில் இருந்த இரண்டு குழந்தைகளுக்கு தலா ஒரு ஏவுகணை என இரண்டு ஏவுகணைகளை இஸ்ரேல் வீசியது. ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் சிறு காயங்களுடன் நாங்கள் வெளியே எடுத்தபோது அவர்கள் எங்களைக் கேலி செய்தனர். செப்டம்பர் 30 அன்று குண்டு வீசுவதற்குக் காரணம் ஏதும் இல்லாதது போன்றே, அன்றைய தினமும் குண்டு வீசுவதற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை.

அவர்கள் வீட்டை மீண்டும் குறிவைத்து இருவரையும் கொலைசெய்வதற்கு முன்னர் றஷா, அஹ்மது இருவரும் போர், அச்சம், பசி ஆகியவற்றுடன் கூடுதலாக சில மாதங்கள் வாழ்ந்திருந்தனர்.

இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட 10 வயதான சிறுமி றஷா

பள்ளிக்கூடத்தில் சிறந்து விளங்கிய, அனைவராலும் விரும்பப்பட்ட, ஆற்றல் நிறைந்த தனது குறும்புக்கார அண்ணன் அஹ்மதை யாரும் திட்ட வேண்டாம் என்று தனது உயிலில் றஷா கேட்டுக்கொண்டாள். அஹ்மது தப்பிப் பிழைத்து தனது 25 ஷெகல்களை மரபுரிமையாகப் பெற்றுக்கொண்டு, தான் வாழ முடியாத வாழ்க்கையை வாழ்வான் என்று அவள் நம்பியிருந்தாள். ஆனால் அவர்கள் ஒன்றாக வாழ்ந்து, அச்சப்பட்டு, பட்டினி கிடந்ததைப் போல் ஒன்றாகவே தங்கள் முடிவையும் சந்திப்பதற்கு விதிக்கப்பட்டிருந்தனர்.

ஒரு வருட இடைவெளியில் றஷாவும் அஹ்மதும் பிறந்தனர். அவர்கள் 10, 11 என்ற இளவயதுகளில் இறக்காமல், வளர்ந்து, அவர்களின் தாயைப் போல் முனைவர் பட்டம் பெறுவார்கள் என்று நினைத்திருந்தோம்.
இதுவே உலகின் வேறு பகுதி எனில், இதுவொரு மன்னிக்க முடியாத போர்க் குற்றமாக இருந்திருக்கும். ஆனால் காஸாவில் அவ்வாறு எதுவும் இல்லை. பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரில் இவர்கள் வெறும் இருவர்.

அக்டோபர் 7, 2023 முதல் 16,700க்கும் அதிகமான குழந்தைகளை காஸாவில் இஸ்ரேல் கொலைசெய்துள்ளது. ஏறத்தாழ 14,000 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் பத்து குழந்தைகள் தங்கள் கால்களை இழப்பதாக ஜனவரி 2024இல் ‘Save the Children’ அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்த வசந்த காலத்துடன் 88 சதவீதப் பள்ளிக்கூடங்கள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தக் கட்டுரையில் ஒரேயொரு சம்பவத்தை மட்டுமே என்னால் கவனப்படுத்த முடிந்திருக்கிறது. இந்த வலியை 16,700 மடங்கு பெருக்குவதற்கு நான் ஏதேனும் வழியைக் கண்டுபிடித்தாலும்கூட, காஸாவின் துயரத்தை வாசகர்கள் புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமாகவே இருக்கும்.

இவ்வளவு சிறுவயதுக் குழந்தை தன் பொருட்களை தனக்கு விருப்பமானவர்களுக்குப் பகிர்ந்தளிக்குமாறு கூறி தனது இறுதி முடிவை உயிலாக ஏன் எழுதினாள் என்பதை குடும்பத்தில் யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. கடந்த 12 மாதங்களுமே வயதானவர்கள், இளவயதினர் என அனைத்து ஃபலஸ்தீனர்களுக்கும் அதிர்ச்சிகரமானவைதாம் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் தான் இறந்துவிடுவோம் என்று றஷா எப்படி நம்பினாள்?

றஷாவின் உயில்

காஸாவின் 23 இலட்சம் மக்கள் தொகையில் பாதிப் பேர் 18 வயதிற்கும் குறைவானவர்களாக இருக்கும் நிலையில் எத்தனை குழந்தைகளுக்கு இதுபோன்ற எண்ணங்கள் இருக்கலாம்? றஷாவின் உயில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவரும் நிலையில் இதுபோன்ற இன்னும் ஏராளமான உயில்கள் இடிபாடுகளில் சிக்கிக் காணாமல் போயிருக்கலாம்.

என் பிரியத்திற்குரிய மருமகனுக்கும் மருமகளுக்கும் தாமதமான புகழுரையாகத் தோன்றும் இந்தக் கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், எந்தக் குழந்தை இருளில் தனது உயிலை எழுதிக்கொண்டிருக்கிறதோ என்றே வியப்புறுகிறேன்.

மருத்துவமனையின் குளிர் மிகுந்த தரையில், ஒரு முழு இரவை தங்கள் போர்வைகளுக்குள் அஹ்மதும் றஷாவும் அருகருகே கழித்தார்கள். மறுநாள் காலை நாங்கள் அவர்களை மண்ணறைக்குத் தூக்கிச் சென்று ஒரே குழியில் இருவரையும் அருகருகே நிரந்தரமாக ஓய்வெடுக்க வைத்தோம்.

16,700 குழந்தைகளின் கோரமான படுகொலைக்கு எதிராக எழுந்திருக்க வேண்டிய சர்வதேசச் சீற்றம் எங்கே?

தமிழில்: ரியாஸ்

(மூலம்: அல்ஜஸீறா)

Related posts

Leave a Comment