daniel haqiqatjou liberalism tamilகட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தாராளவாதத்தைக் கட்டுடைத்தல் (1)

Loading

(அமெரிக்காவைச் சேர்ந்த இஸ்லாமிய அழைப்பாளரும், ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியலும் தத்துவமும் பயின்றவருமான டேனியல் ஹகீகத்ஜூ வழங்கிய The Great Lie: A Conceptual Analysis of Liberalism எனும் இணையவழிப் பாடநெறியின் சுருக்கப்பட்ட தமிழ் வடிவமே இந்தப் புதிய தொடர்.)

தாராளவாதம் குறித்து சற்று விரிவாக இந்தப் பாடநெறியில் பார்க்கவிருக்கிறோம். இந்தக் கருப்பொருளில் பாடமெடுப்பதற்கு நான் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். ஏனெனில், இது எனக்கு மிகவும் பிடித்தமான தலைப்பு. ஒரு கருத்தியலாக, தத்துவமாக தாராளவாதத்தின் அடிப்படையான எண்ணக்கருக்களை நாம் இங்கு அலசவுள்ளோம்.

அறிமுகம்

தாராளவாதமும் அறிவியல்வாதமும் நவீனத்துவத்தின் இரு முதன்மையான கருத்துநிலைகளாகும். நவீனத்துவத்தின் முக்கியமான கருத்தியலாக தாராளவாதம் இருப்பதையே நாம் முந்தைய இரு பாடநெறிகளிலும் பார்த்தோம். இங்கு புரிந்துகொள்ள வேண்டியது, எல்லாக் கலாச்சாரங்களையும் மரபுகளையும் அழித்தொழிப்பதுதான் தாராளவாதத்தின் குறிக்கோளாக உள்ளது. அது மனித இனத்தின் அழிவுக்கு வழிகோலும். இந்தப் பாடநெறி, தாராளவாதம் குறித்த அடிப்படையான புரிதலை உங்களுக்கு வழங்கும், இன்ஷா அல்லாஹ்.

தொடர்ச்சியாகவும் முறையாகவும் தாராளவாதம் குறித்து நீங்கள் கற்க வேண்டியது அவசியம். ஏனெனில், தற்காலத்தில் அது பல மட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதன் அடிப்படை எண்ணக்கருக்களைக் கற்ற பிறகு, உளவியல், குடும்ப அமைப்பு, சமூக அமைப்பு, அரசியல், தொழில்நுட்பம், வரலாறு என அது பிற தளங்களில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் நாசங்களையும் நாம் அறிய வேண்டும். அப்போதுதான் அதிலிருந்து நம்மை நாம் காத்துக்கொள்ளவும், அதற்கு எதிர்வினையாற்றவும் முடியும்.

முஸ்லிம்களிடையே தோன்றும் குழப்பங்களுக்கும் சந்தேகங்களுக்கும் பெரும் ஊற்றுக்கண்ணாக தாராளவாதம் விளங்குகிறது. அதன் அறவியல் சார்ந்த அழுத்தங்களுக்கு பெரும்பாலான மதங்கள் பணிந்துவிட்டன. ஜனநாயகம், அரசையும் சமயத்தையும் பிரித்தல், சமத்துவம்/ சுதந்திரம் குறித்த கண்ணோட்டம் என எல்லா நவீன மதிப்பீடுகளையும் மதங்கள் சுவீகரித்திருக்கின்றன. தங்கள் மதங்களும் அவற்றையே போதிப்பதாக வாதிடப்படுகிறது. முஸ்லிம் தாராளவாதிகளும் இப்படியான நிலைப்பாடுகள் எடுப்பதை நீங்கள் அவதானிக்கலாம். இஸ்லாம் மதச்சார்பின்மையை வலியுறுத்துவதாகவும், உலகில் முதல் மதச்சார்பற்றவாதியே நபிகள் நாயகம்தான் என்றும் அவர்கள் கூறுவார்கள்.

சமூகத்தில் தாராளவாத நம்பிக்கைகள் பலமாக வேரூன்றியிருக்கின்றன. தாம் ஒரு குறிப்பிட்ட கருத்தியலுக்கு பலியாகியிருக்கிறோம் என்பதைக்கூட பலரும் உணர்வதில்லை. அந்த அளவுக்கு அது பொதுநீரோட்டத்தில் கலந்திருக்கிறது. அதன் தாக்கத்தை முஸ்லிம்களிடமும், குறிப்பாக இஸ்லாமிய அழைப்பாளர்களிடமும்கூட நீங்கள் பார்க்கலாம்.

கல்விக்கூடங்களில் தாராளவாதத்தை மிகவும் நேர்மறையான விதத்தில் அறிமுகப்படுத்துகிறார்கள். மனிதகுலத்தின் வளர்ச்சியில் கண்டடையப்பட்ட உன்னதமான கருத்துநிலை அது என்பதாக அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால், யதார்த்தம் வேறு விதமானது.

பகுத்தறிவையும் இறைவெளிப்பாட்டையும் எதிரெதிரே நிறுத்தி நவீனத்துவம் மேற்கொள்ளும் விமர்சனங்களை முந்தைய பாடநெறிகளில் பார்த்தோம். இறை வெளிப்பாடு உங்கள் சிந்தனையை மட்டுப்படுத்துவதாகவும், உங்களை மடமையில் உழலச் செய்வதாகவும் கூறும் நவீனத்துவர்கள், பகுத்தறிவு உங்களுக்கு விடுதலையளிப்பதாகவும், உலகின் யதார்த்தத்தை உங்களுக்கு உணர்த்துவதாகவும் வாதிடுகிறார்கள்.

மேலும், குழப்பங்களுக்கும் இடைவிடாத போர்களுக்கும் சகிப்பின்மைக்கும் மூல ஊற்றாய் மதங்கள் இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையான சமத்துவமும் சகிப்புத்தன்மையும் தாராளவாதத்தின் வழியாகவே கிடைக்கப் பெறும் என்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, மதங்கள் இக்காலத்துக்குப் பொருத்தமற்றவை. உலகைப் புரிந்துகொள்ள அவற்றால் உதவ முடியாது. அத்துடன், அறிவியலும் பகுத்தறிவும் எல்லாவற்றுக்கும் விடையளிக்கின்றன. மனித இனத்தின் தோற்றம், பிரபஞ்சத்தின் இயக்கம் முதலானவற்றில் தொடங்கி, சரி – தவறுகளை வரையறுப்பதுவரை அவை நமக்கு வழிகாட்டும் என்று வாதிடப்படுகிறது.

பைபிள் தாராளவாத மதச்சார்பின்மையை அங்கீகரிப்பதாகக் கருதலாம். சீசருக்குரியதை சீசருக்கும், கடவுளுக்குரியதை கடவுளுக்கும் கொடுங்கள் என்ற புதிய ஏற்பாட்டின் வசனம் இதற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டப்படுகிறது. இஸ்லாமிய நிலைப்பாடு இதற்கு முரணானது என்பதில் சந்தேகமில்லை.

தாராளவாதம் என்பது அறவியல் சார்ந்த ஒரு தத்துவம். சுதந்திரம், சமத்துவம், சுய அதிகாரம் முதலானவற்றின் எல்லைகளை விரிவாக்கிக்கொண்டே போவதற்கு அது வலியுறுத்துகிறது. அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவற்றை அது எதிர்க்கிறது. அறத்தை வரையறுக்க மதமோ கடவுளோ தேவையில்லை என்றும், நமது அறிவைக்கொண்டே அதை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்றும் வாதிடுகிறது. மதச்சார்பின்மைவாதம், பெண்ணியவாதம், மனித மையவாதம் ஆகியன தாராளவாதத்தின் துணைக் கருத்தியல்களாக விளங்குகின்றன.

அடிப்படையில், தாராளவாதம் ஒரு தத்துவார்த்த நிகழ்ச்சிநிரல். நவீன மதச்சார்பற்ற அரசுகள் அவற்றின் அடிநாதமான கருத்தியலாக தாராளவாதத்தைக் கொண்டுள்ளன. மேற்குலகில் பல அரசியல் சார்ந்த போக்குகள் நிலவினாலும், சர்வாதிகார இடதுசாரியம், சர்வாதிகார வலதுசாரியம், சுதந்திரவாத இடதுசாரியம், சுதந்திரவாத வலதுசாரியம் என நான்கு வகைப்பாடுகளுக்குள் அவற்றை உள்ளடக்கிவிட முடியும்.

விளக்கப்படம்

சர்வாதிகார வலதுசாரியத்துக்கு தேசிய சோசலிசம், ஃபாசிசம் போன்றவற்றை உதாரணமாகக் கொள்ளலாம். லெனினியம், ஸ்டாலினியம் முதலாவை சர்வாதிகார இடதுசாரியத்துக்கு உதாரணங்கள். பொருளாதாரக் கொள்கையில் இவற்றுக்கு மத்தியில் வேறுபாடு உண்டு. சோசலிசம் இடதுசாரியத்தில்தான் வரும். அதை மேற்காண் விளக்கப் படத்தின் சிவப்புக்கும் பச்சைக்கும் இடையில் பொருத்திப் புரிந்துகொள்ளலாம். சுதந்திரவாதத்தை (Libertarianism) சுதந்திரவாத வலதுசாரியத்துடனும், அரசின்மைவாதத்தை (Anarchism) சுதந்திரவாத இடதுசாரியத்துடனும் பொருத்தலாம். அதுபோல, நவ தாராளவாதம் சர்வாதிகார வலதுசாரியத்துக்கு அனுக்கமானது. ஆக, இங்கு குறிப்பிட்ட அரசியல் கொள்கைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளைக் கொண்டிருந்தாலும், இவை அனைத்தும் தாராளவாதச் சட்டகத்திலிருந்து உருப்பெற்றிருப்பவைதாம்.

சில முஸ்லிம்கள் தாராளவாதம், மதச்சார்பின்மைவாதம் போன்றவற்றின் பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இவையெல்லாம் மனிதகுலத்துக்கு நன்மை பயக்குவதாக அவர்கள் கருதுகிறார்கள். நம்மைப் படைத்த இறைவன் இவற்றையெல்லாம் அருளவில்லை; மனிதர்கள், குறிப்பாக, 19ம் நூற்றாண்டுகால ஃபிரஞ்சு, பிரிட்டிஷ் அறிவுஜீவிகள் உருவாக்கிக் கொடுத்த கருத்தியல்கள் இவை. இவற்றை மனிதகுல மீட்சிக்கானது போல கருதுவது சரியா என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.

தாராளவாத எண்ணக்கருக்கள் எல்லா விதத்திலும் உயர்ந்தவை என மேற்குலகு தோற்றுவிக்கும் பிம்பத்தை இன்று அநேகர் உள்வாங்கியிருக்கிறார்கள். மேற்கத்தியப் பண்பாடு பலமான அறிவுசார் அடித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டிருப்பதாகவும், அதுவே தர்க்க ரீதியில் முறைசார்ந்து இருப்பதாகவும் நாம் நம்ப வைக்கப்படுகிறோம். அது காலனியச் சக்திகளை வலுப்படுத்துகிறது.

இப்படியான நவயுகக் குழப்பங்களுக்கு ஒரு முஸ்லிம் எப்படி முகங்கொடுப்பது என்பது குறித்து முந்தைய பாடநெறிகளில் விளக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் நினைவூட்டுகிறேன். இஸ்லாமிய மரபில் நிலைகொண்டு, அதன் விழுமியங்களையும் அறிவுசார் கருத்துகளையும் எது தாக்குகிறதோ அதை விசாரணைக்குள்ளாக்க வேண்டும். அத்துடன், இஸ்லாத்தின் மேன்மையைக் கண்டடைந்து அதை மீள்நிறுவ முயல வேண்டும்.

இந்தப் பாடநெறி பெரும்பாலும் தாராளவாத எண்ணக்கருக்களைக் கட்டுடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் சிந்தனையை நவீனகால புற பாதிப்பிலிருந்து முற்றாக விடுவிக்க இது உதவும், இன்ஷா அல்லாஹ்.

தொடரும்…

(தொகுப்பும் தமிழாக்கமும்: நாகூர் ரிஸ்வான்)

Related posts

One Thought to “தாராளவாதத்தைக் கட்டுடைத்தல் (1)”

Leave a Comment