கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஏன் இந்த கள்ள மௌனம்?

Loading

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் தலைப்புச் செய்திகளாக இருந்த நாட்கள் மாறி இன்று அவை பெட்டிச் செய்திகளாக சுருங்கிவிட்டன. சமூக வலைத்தளங்கள் இல்லையென்றால் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் பொதுமக்களின் பார்வையிலிருந்து முழுவதுமாக மறைக்கப்பட்டிருக்கும்.

பசு பாதுகாப்பு, லவ் ஜிஹாத், இந்துமதப் பண்டிகை ஊர்வலங்கள் என அனைத்து வாய்ப்புகளும் முஸ்லிம்களை தாக்கும் கருவிகளாக மாற்றப்பட்டுவிட்டன. பக்தியும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்த மதப் பண்டிகைகள் இன்று வெறுப்பையும் வன்மத்தையும் வெளிப்படுத்துகின்றன. ஆரவாரமின்றி அமைதியாக நடைபெற்ற உள்ளூர்ப் பண்டிகைகள் — முழுமையாக இல்லாவிடினும் — கொஞ்சம்கொஞ்சமாக சங் பரிவார்கள் கைகளில் சிக்கிச் சின்னாபின்னமாகி வருகின்றன. இந்துத்துவம் ஆட்சியில் அமர்ந்த தொடக்க நாட்களில் தாக்கப்பட்ட அல்லது கொலைசெய்யப்பட்ட முஸ்லிம்களின் பெயர்களும் தாக்குதலுக்கு ஆளான ஊரின் பெயர்களும் நம் நினைவில் இருந்தன. ஆனால் நாளடைவில், தாக்குதல்கள் எப்போது நடைபெற்றன, எங்கு நடைபெற்றன, யார் தாக்கப்பட்டார்கள், யார் கொல்லப்பட்டார்கள் என்பதை எல்லாம் நினைவில் வைக்க இயலாவண்ணம் வெகுவாக அதிகரித்துவிட்டன. ஒரு விதத்தில் அவை இங்கு இயல்பாக்கம் (Normalization) செய்யப்பட்டுவிட்டன.

ஒற்றைக் கலாச்சார தேசியவாதத்தை முன்வைக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸும் அதன் பரிவாரங்களும் மட்டுமின்றி, அதன்வழி வந்த அரசு நிர்வாகமும் இன்று முஸ்லிம்களை ஒடுக்குவதில் முன்னணிக்கு வந்துள்ளது. சங் பரிவார்கள் விட்டுச் சென்ற மீதி வேலையை அல்லது அவர்களால் செய்ய முடியாத வேலைகளை இன்று அரசு நிர்வாகம் நிறைவேற்றுகிறது. குற்றத்தில் ஈடுபட்டோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முஸ்லிம்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்படுகின்றன. சமீபத்தில் ஹரியானாவில் நிகழ்ந்த வன்முறையைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான வீடுகளும் வியாபார நிறுவனங்களும் புல்டோசர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. சந்தேகமின்றி இவற்றில் பெரும்பாலும் — அல்லது முழுவதும் — முஸ்லிம்களுக்குச் சொந்தமானவைதாம். அங்கொன்றும் இங்கொன்றுமாக தொடங்கிய இந்த புல்டோசர் அராஜகம் இன்று வட இந்தியா முழுவதும் வியாபித்து நிற்கிறது. விதிவிலக்காக எங்கோ ஒன்று அல்லது இரண்டு இடங்களில் முஸ்லிம் அல்லாதவர்களின் வீடுகள் புல்டோசர்களைக் கொண்டு இடிக்கப்படுகின்றன. இடிக்கப்படுகின்றன என்றுகூட கூற முடியாது, தொட்டுச் சென்றன என்று வேண்டுமானால் கூறலாம். இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து அரசுப் பணியைவிட்டு வெளியேறும் தைரியம் ஒரு சிலருக்கே இங்கு இருக்கிறது. “எங்களால் என்ன செய்ய முடியும்? அரசாங்கம் சொன்னதைத்தான் செய்கிறோம்” என்று காரணங்கள் கூறுபவர்களே இங்கு அதிகம். சமூகவியல் அறிஞர் மேக்ஸ் வெபர் கூறியதைப் போன்று, அதிகாரிகளிடம் மனித இயல்பு (human factor) குறைவாகவே இருக்கிறது.

முஸ்லிம்களை சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற மிரட்டல்கள் இன்று வெளிப்படையாகவே முன்வைக்கப்படுகின்றன. முஸ்லிம் வியாபார நிறுவனங்களில் பொருட்களை வாங்கக் கூடாது, முஸ்லிம்களுக்கு வீடுகளையும் கடைகளையும் வாடகைக்கு கொடுக்கக் கூடாது, முஸ்லிம்களை பணியில் அமர்த்தக் கூடாது என்று விதவிதமாக ஒதுக்குதல்கள் நடைபெறுகின்றன. நாஜிகளிடமிருந்து பாடம் பயின்றவர்கள் அவற்றை இந்தியாவில் இன்று மும்முரமாக நிறைவேற்றி வருகின்றனர். முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்துவரும் அடக்குமுறைகளைவிட ஆபத்தானது, அவற்றைக் கண்டும்காணாமல் கள்ள மௌனம் சாதிக்கும் போக்குதான். தேசியளவில் இந்துத்துவத்தின் அரசியல் முகமாக இருக்கும் பா,ஜ.கவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. அனைவரையும் அரவணைத்து அழைத்துச் செல்லும் நோக்கத்தில் இந்த கூட்டணி உருவாகி இருப்பது மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க இயலாது. ஆனால், இந்தக் கூட்டணி அறிவிக்கப்பட்ட பின் முஸ்லிம்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்குறித்து அதன் தலைவர்கள் யாரும் பெரியளவில் கண்டன அறிக்கைகளைக் கூட பதிவுசெய்யவில்லை. ஓட்டரசியல் தளத்தில் மட்டும் இந்துத்துவத்தை எதிர்ப்பதால் எவ்விதப் பலனும் கிடையாது என்பதை நாம் பலமுறை சுட்டிவருகிறோம். நாட்டில் கணிசமாக உள்ள ஒரு சமூக மக்களை ஒதுக்கிவிட்டு வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை இந்த தலைவர்கள் நிச்சயமாக உணர்ந்திருப்பார்கள். இருந்தும் முஸ்லிம்களிடம் கைகோர்க்கும் சிந்தனை அவர்களிடம் ஏன் இல்லை என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை எதிர்க்கும் சில கட்சிகளிடம் கூட ஒரு வித அனுதாபப் பார்வை மட்டுமே இருக்கிறது. ஒடுக்கப்படும் ஒரு இனத்தின் மீது அனுதாபம்கொள்வதையும் தாண்டி அவர்களுடன் இணைந்து பயணிப்பதே, அதைவிட அவசியமாகும்.

முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்படுவதை கண்டிக்கும் சிலர் இவ்வாறு வீடுகளை இடிக்கும்போது தவறு செய்யாதவர்களும் பாதிக்கப்படுகிறார்களே என்று வித்தியாசமான அனுதாபத்தை வெளிப்படுத்துகின்றனர். சம்பந்தப்பட்ட நபர்கள்மீது குற்றம்தான் சாட்டப்பட்டுள்ளதே தவிர அவர்கள் யாரும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படவில்லை. குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டாலும் வீடுகளை இடிக்கும் உரிமையை அவர்களுக்கு யாரும் வழங்கவில்லை என்பதை இவர்கள் ஏனோ மறந்துவிடுகின்றனர். பல வருடங்களாக நிலைத்துநின்ற இந்த கட்டிடங்கள் திடீரென சட்டவிரோதமாக எவ்வாறு மாறுகின்றன என்பது சங் பரிவார்களுக்கு மட்டுமே தெரியும் ரகசியம்! கலவரங்களால் பாதிக்கப்பட்டு வசிப்பிடங்களை இழக்கும் மக்களுக்கு தங்குமிடத்தை வழங்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை. ஆனால், அந்த அரசாங்கமே வீடுகளை இடித்து பெரும் தொகையான மக்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவருவதை வன்மையாகக் கண்டிப்பவர்களைக் காண்பதென்பதே மிக அரிதாகிவிட்டது.

ஹரியானாவில் கலவரம் நடைபெற்று முடிந்த பின் வீட்டு வேலைசெய்வதற்கு யாரும் வராததால் குப்பைகள் தேங்கியுள்ளதாக குர்காவுன் பகுதியில் வசிக்கும் மேல்தட்டு மக்கள் அங்கலாய்த்தனர். கலவரத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் உயிர்களையும் உடைமைகளையும் இழந்ததுகூட இவர்களுக்கு பெரிதாகத் தெரியவில்லை. தங்களின் வேலைகளை குறைந்த ஊதியத்தில் செய்வதற்கும், குப்பைகளை அள்ளுவதற்கும் மக்கள் வராதது மட்டுமே இவர்களுக்கு பெரும் கவலையாக இருக்கிறது. சமூகத்தில் வாழும் ஒரு பிரிவினரின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்பதை இவர்களின் கூற்றுகள் பிரதிபலிக்கின்றன.

பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த மோனு மனேசர் மீது இரண்டு முஸ்லிம்களை கொலைசெய்தது உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல்துறை தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டும் சமூக ஊடகங்களில் வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்துகொண்டும் அவர் இருக்கிறார். முஸ்லிம்களைத் தாக்குவதையும் கொலைசெய்வதையும் வழக்கமாகக்கொண்ட இந்த மோனு மனேசர், ஹரியானாவில் நடைபெற்ற பண்டிகை யாத்திரையில் கலந்துகொள்வதாக வந்த செய்தியை அடுத்து முஸ்லிம்கள் தங்களின் எதிர்ப்பை பதிவுசெய்தனர். இதுவே, வன்முறைக்குக் காரணமாக அமைந்தது. ஆனால், இவன்குறித்து இந்துச் சமூகத்தை சேர்ந்த மக்களிடம் கேட்டபோது ஒருவர்கூட அவனைக் குறித்து பேசுவதற்கு முன்வரவில்லை என்று பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டியதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களையும் ஒடுக்குமுறைகளையும் அங்கீகரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறதோ என்ற அச்சத்தை இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

சமூக, பொருளாதார மற்றும் அரசியல்ரீதியாக முஸ்லிம்களை அந்நியப்படுத்தும் போக்கை சிலர் அங்கீகரிக்க, பலர் கண்டும் காணாமல் இருந்துவரும் நிலையில் நீதித்துறையின் சில செயல்பாடுகள் நமக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் உத்தர பிரதேசத்தில் இதேபோன்று முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டபோது சிலர் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். இடிக்கப்படும் கட்டடங்கள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டவை என்ற அரசாங்கத்தின் கூற்றை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறியதுடன் ஒதுங்கிக்கொண்டது. ஆனால், தற்போது ஹரியானாவில் வீடுகள் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவுசெய்தது. நீதிபதிகள் ஜி.எஸ்.சந்தாவாலியா, ஹர்பிரீத் கவுர் ஜீவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “நீங்கள் நடத்துவது இனச்சுத்திகரிப்பா?” என்ற காட்டமான கேள்வியை அரசாங்கத்தை நோக்கி எழுப்பியதோடு வீடுகள் இடிக்கப்படுவதற்கு உடனடியாகத் தடையும் விதித்தனர். “சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் கட்டடங்கள் இடிக்கப்படுகின்றனவா?” என்ற கேள்வியையும் நீதிபதிகள் எழுப்பினர். ஆனால், இதன் பின்னர் இந்த வழக்கு மற்றொரு அமர்வுக்கு மாற்றப்பட்டது வேறு கதை. நீதிமன்றங்கள் கேள்விகளை எழுப்புவதோடு நின்றுவிடாமல் தவறிழைத்தவர்கள்மீது உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கும் பட்சத்திலேயே மீண்டும் இத்தகைய தவறுகள் நிகழாமல் தடுக்க முடியும்.

அதே சமயம் சிவில் சமூகமும் அரசியல் கட்சிகளும் தங்களின் பங்களிப்பை மறந்துவிடக் கூடாது. மதத்தின் காரணமாக குறிப்பிட்ட சமூகத்தை குறிவைக்கும் போக்கை கண்டும் காணாமல் இருந்தோமெனில் ஜனநாயக மாண்புகள் சீரழிக்கப்படுவதோடு நாட்டில் அமைதியும் சீர்குலைந்துவிடும். வடக்கு, கிழக்கு, வடகிழக்கு என எல்லா பகுதிகளிலும் இந்துத்துவ ஃபாசிசம் கலவரங்களைப் பற்றவைத்துள்ள சூழலில் கள்ள மௌனம் சாதிப்பது நாட்டிற்கு நல்லதல்ல என்பதை எதிர்க்கட்சிகள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

Related posts

Leave a Comment