கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாம் Vs. நவீனத்துவம் (2)

Loading

நவீனத்துவமும் மரபு எதிர்ப்பும்

கல்லூரியில் நான் படித்தது இயற்பியலும் தத்துவமும். பொதுவாக, தத்துவம் பயில முயன்ற பல முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தின் மீது ஐயங்கள் உருவாவதை அவதானித்திருக்கிறேன். சிந்தனைமுறையில் அவர்களுக்கு ஏற்படும் மாற்றங்களே அதற்குக் காரணம்.

அனுபவவாதமும் (Empiricism) பகுத்தறிவுவாதமும் நவீனத்துவ அறிவாய்வியலின் அடிப்படைகளாய் விளங்குகின்றன. ஃபிரான்ஸைச் சேர்ந்த அறிவொளிக் கால தத்துவவியலாளர் ரெனே டேக்கார்ட் அறிவின் மூலங்களைக் கேள்விக்குள்ளாக்கும்படி கோருவார். எல்லா அறிவையும் ஐயநிலையில் அணுக வேண்டும் என்பது அவரின் வாதம். மேற்குலக தத்துவவியலின் தந்தை என்று இவர் அறியப்படுகிறார்.

தூய பகுத்தறிவின் மூலம் நாம் பெறுபவையே மெய்யான அறிவு என்பது பகுத்தறிவுவாதம். நம் புலனுணர்வால் அவதானித்தவை மட்டுமே இந்த உலகம் பற்றி நாம் அறிந்தவை எனும் கருத்தாக்கம் அனுபவவாதம் எனப்படும். இவ்விரண்டுக்கும் உள்ள ஒப்புமை இவற்றின் மரபு எதிர்ப்புதான். இந்தப் பின்னணியில்தான் ரெனே டேக்கார்ட், ஜான் லாக், ஸ்டூவர்ட் மில் போன்ற மெய்யியலாளர்கள் மரபை பிரச்னைக்குரியதாக அடையாளப்படுத்தினர். இதுவே உலகிலுள்ள மற்ற தத்துவங்களிலிருந்தும், சிந்தனைச் சட்டகங்களிலிருந்தும் நவீனத்துவத்தை வேறுபடுத்தும் முக்கியமான அம்சம்.

இஸ்லாமிய அறிதல்முறையில் மரபுக்கு மையமான இடமுண்டு. அதேவேளை, பகுத்தறிவையும் அனுபவவாதத்தையும் புறக்கணிப்பது இஸ்லாமிய நிலைப்பாடல்ல. நம் அறிதல்முறையின் பகுதிகள்தாம் அவை. இறைவனும் திருமறையில் தொடர்ச்சியாக நம்மை சிந்திக்கத் தூண்டுகிறான் அல்லவா?

இஸ்லாம் மற்றும் நவீனத்துவ சிந்தனைச் சட்டகங்களுக்கு மத்தியிலான வேறுபாடு எந்தப் புள்ளியில் தோன்றுகிறது என்றால், ஃபித்றா, உள்ளுணர்வு, மரபு என்பன உங்கள் சிந்தனைக்கு இடையூறாக இருப்பதாய் நவீனத்துவம் வாதிடுகிறது. அத்தோடு, உங்கள் அறிவையும் அனுபவத்தையும் மட்டுமே அறிவின் மூலங்களாக முன்வைக்கிறது. இந்த இடம்தான் பிரச்னைக்குரியது.

சிந்தனையும் மொழியும்

நாம் ஒவ்வொருவரும் மொழியைக் கொண்டே உலகை அறிகிறோம். மொழி ஒருவரின் சிந்தனைக்கும் கண்ணோட்டத்துக்கும் அடிநாதமாய் விளங்குகிறது. உதாரணத்துக்கு, எஸ்கிமோ மொழியில் பனிக்கு ஏராளமான சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். பனியின் தன்மையைப் பொருத்து அதிலிருந்து ஒரு சொல்லைக் கையாள்கிறார்கள். அவர்கள் பனியைப் பார்க்கும் விதமும் நாம் பார்க்கும் விதமும் நிச்சயம் வேறுபடும். காரணம், மொழிதான்.

இன்னொரு உதாரணம்: சிறு வயதிலிருந்து முதுமையை அடையும் வரையிலான ஒருவரின் புகைப்படங்களை ஆங்கிலேயரின் கையில் கொடுத்து, அவற்றை வரிசையாக அடுக்கச் சொன்னால் அவர் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் அடுக்குவார். அதையே ஓர் அறபியிடம் கொடுத்தால் அவர் வலமிருந்து இடமாக அடுக்குவார். ஏன் என்பதை நீங்களே ஊகிக்கலாம்.

ஆம், அவர்கள் தம் மொழியை எந்தப் பக்கத்திலிருந்து வாசிக்கவும் எழுதவும் செய்கிறார்களோ அதைப் பொருத்து சிந்திக்கும் முறை அமைவதால் அதற்குத் தோதுவாக அவர்களின் செயல்பாடுகளும் அமைகின்றன.

இதே பரிசோதனை ஆஃப்ரிக்காவைச் சேர்ந்த ஒரு பழங்குடியினத்தவர்களிடம் மானுடவியலாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. அதில் அந்த மக்கள் கிழக்குப் பக்கத்திலிருந்து மேற்கு நோக்கி புகைப்படங்களை வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், அவர்களில் வெவ்வேறு நபர்களை அழைத்து எந்தப் பக்கம் நிற்கவைத்தாலும் சரியாக கிழக்கிலிருந்து மேற்குப் பக்கம் அடுக்கியிருக்கிறார்கள்.

ஆக, மொழியும் பண்பாடும் சிந்தனையில் தீர்மானகரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவு. இதை ஆங்கிலத்தில் Whorfianism என்றும் சொல்வார்கள். இதை இங்கு குறிப்பிடக் காரணம், நாம் அனிச்சையாகப் பயன்படுத்திவரும் பல சொற்கள் நம்மிடம் சிந்தனை ரீதியான குழப்பத்தைத் தோற்றுவித்து வருகின்றன.

ஈமான் எனும் அறபி வார்த்தையை எடுத்துக்கொள்வோம். அதை நம்பிக்கை என்று நாம் மொழிபெயர்க்கிறோம் அல்லவா? அது அந்தச் சொல்லின் பொருளை சரியாகப் பிரதிபலிப்பதில்லை. நவயுகத்தில் நம்பிக்கை என்பது அறிவுக்கும் உண்மைக்கும் அப்பாற்பட்டதாகக் கருதப்படுகிறது. அது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். ஆனால், இஸ்லாமியச் சொல்லாடலில் ஈமான் என்பது வெற்று நம்பிக்கையைக் குறிக்காது. அதை உண்மையிலிருந்தும் அறிவிலிருந்தும் பிரித்தெடுக்கவும் முடியாது.

“அல்லாஹ் இருக்கிறானா என்பது நமக்குத் தெரியாது. ஆனாலும் நம்பிக்கை கொள்கிறோம்” என்று சில முஸ்லிம் இளைஞர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். நவீன கிறிஸ்தவ இறையியலில் Leap of Faith என்றொரு எண்ணக்கரு உண்டு. ஆதாரமோ அறிவின் துணையோ இன்றி கடவுள் மீது நம்பிக்கை கொள்வதை அது குறிக்கும். நம்மவர்களிடமும் இதன் பாதிப்பு இருக்கிறது போலும். இஸ்லாத்துக்கு இந்நிலைப்பாடு முற்றிலும் முரணானது என்பதில் சந்தேகமில்லை.

இறைவன் ஒருவனென்று சாட்சி கூறுவதுதான் இஸ்லாத்தில் அடிப்படை. அவனின் இருப்பை நம் அறிவைக் கொண்டே அறிகிறோம். ஆக, வெற்று நம்பிக்கையாக ஈமானை நாம் அர்த்தப்படுத்த முடியாது. இஸ்லாத்தில் நம்பிக்கையையும் உண்மையையும், நம்பிக்கையையும் அறிவையும் பிரிக்க இயலாது என்பதை நினைவில் கொள்க. மொழி எந்த அளவுக்கு நம் சிந்தனையை பாதிக்கும் என்பதற்கு இதுவோர் எடுத்துக்காட்டு (கூடுதல் எடுத்துக்காட்டுகள் பின்வரும் விளக்கப்படத்தில்).

இந்தப் பின்னணியில்தான் செவ்வியல் அறபியில் புலமையில்லாதவர்கள் இஸ்லாமிய அறிஞர்களாய் ஆக முடியாது என்று முற்கால உலமா பெருமக்கள் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்கள். ஏனெனில், இஸ்லாத்தைப் புரிந்துகொள்ள அதன் மூலப் பிரதிகளை அதன் மொழியிலேயே வாசிக்க வேண்டும். மொழிபெயர்ப்பைச் சார்ந்திருப்பது புரிதலில் பெரும் இடைவெளியையும் போதாமையையும் உண்டாக்கும்.

நபித் தோழர்களுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கு அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் அறபி மொழி வளம் குறைந்து வருவதைக் கண்ட உமர் (றழி), வருத்தப்பட்டிருக்கிறார். அது குர்ஆனைப் புரிந்துகொள்வதில் சிக்கலையும் குறைபாடுகளையும் ஏற்படுத்தும் என்பதே அவரின் கவலைக்கான காரணம்.

இந்த விளக்கப் படத்தில் நவீனத்துவ சிந்தனைச் சட்டகத்துக்கும், இஸ்லாமிய சிந்தனைச் சட்டகத்துக்கு இடையிலான மொழிசார் வேறுபாடுகளுக்கு சில எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன.

நவீனத்துவ சிந்தனைச் சட்டகம்இஸ்லாமிய சிந்தனைச் சட்டகம்
அறிவு Vs. இல்ம்பகுத்தறிவு மற்றும் அனுபவங்களின் மூலம் பெறுவதே அறிவு.இல்ம் என்பது இஸ்லாமிய மூலாதாரங்கள், ஃபித்றா, இறை வழிகாட்டல் (ஹிதாயா) முதலானவற்றையும் உள்ளடக்கும்.
ஆதாரம் Vs. ஆயத் (அத்தாட்சி)அறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு நிறுவப்படுவது. ஆதாரம் முதன்மையாக இருவகையில் முன்வைக்கப்படலாம்: அறிவியல் ரீதியாக/ அனுபவப்பூர்வமாக அல்லது தர்க்க/ கணித ரீதியாக.இஸ்லாத்தில் குர்ஆன், இயற்கை, உள்ளுணர்வு, ஃபித்றா முதலான பல அம்சங்கள் சான்றாதாரமாக இருக்க முடியும்.
பகுத்தறிவு Vs. அக்ல்பகுத்தறிவு இறை வெளிப்பாடுகளை மறுக்கிறது.மனித அறிவு (அக்ல்) இறை வெளிப்பாட்டை (நக்ல்) இனங்கண்டு உறுதி செய்யும்.
இதயம்/ புத்தி Vs. கல்ப்இதயம் உணர்வுகளுக்கும், புத்தி அறிவுக்குமான இடமாக இன்று கருதப்படுகிறது. நம்பிக்கை என்பது உணர்வுப்பூர்வமானதாகவே கொள்ளப்படுகிறது.பகுத்தறிவுச் சிந்தனை, நம்பிக்கைகள் ஆகியவற்றின் உறைவிடம் கல்ப் தான்.
“பூமியில் இவர்கள் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா, என்ன? (அவ்வாறு பார்த்திருந்தால்) உணர்ந்து கொள்ளக்கூடிய இதயங்களையும், கேட்கக்கூடிய செவிகளையும் இவர்கள் பெற்றிருப்பார்களே!” என்கிறது திருமறை (22:46)
இயற்கை Vs. கல்க் (படைப்பு)மலக்குகள், ஜின்கள் போன்ற மறைவான விஷயங்கள் ஏற்புடையவையல்ல. புலனுணர்வால் அறிய முடியாத அவற்றுக்கு இயற்கையில் இடம் கிடையாது.மலக்குகள், ஜின்கள், சொர்க்கம், நரகம் உள்ளிட்ட மறைவான விஷயங்கள் இறைவனுடைய படைப்பின் அங்கங்களாகும்.

தொடரும்..

(தொகுப்பும் மொழியாக்கமும்: நாகூர் ரிஸ்வான்)

Related posts

Leave a Comment