இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (5)
(முந்தைய பகுதியை வாசிக்க)
இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தை முற்றாக நிராகரிக்கும் சில குழுக்கள் உண்டு. கடந்த காலத்தில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர்களில் பெரும்பாலானோர் இஸ்லாத்தைத் தவறாக விளங்கி வைத்திருந்ததாகவும், குர்ஆனை மட்டும் படித்துப் புரிந்துகொண்டால் போதும் என்றும் கூறும் அஹ்லே குர்ஆன் வகையறாக்கள் இதற்கோர் எடுத்துக்காட்டு.
ஹதீஸ்களை முழுமையாகப் புறக்கணிக்கும் இவர்கள், குர்ஆனை மட்டும் ஏற்றுக்கொள்கிறார்கள். இதன் அடிப்படை தர்க்கமே பிழையானது. இவர்களிடம் ஜிப்ரீல் (அலை) நேரடியாக இறங்கி குர்ஆனை ஒப்படைத்தார்களா என்ன! குர்ஆனைப் பாதுகாத்து நமக்குக் கையளித்தவர்கள் முன்சென்ற தலைமுறையினர்தானே? அதே முறையிலைக் கொண்டுதானே அவர்கள் ஹதீஸ்களையும் பாதுகாத்து, நம்மிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். ஹதீஸ்களில் படித்தரங்கள் உண்டு என்பது வேறு விஷயம். ஆனால், குர்ஆனை ஏற்று, ஹதீஸை முற்றாக மறுப்பது வழிகேடாகும்.
ஆக, முற்கால அறிஞர்களை உதாசீனப்படுத்துவது நம்மை தடம் புரளவே வைக்கும் என்பதை நினைவில் கொள்க. பன்னெடுங்காலமாக கருத்து வேறுபாடுகளே இல்லாத இஸ்லாமிய விவகாரங்களிலும் முஸ்லிம் சமூகத்துக்குள் குழப்பங்கள் தோன்றியது காலனியத்துக்குப் பிறகுதான் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
அறிவும் இறை வெளிப்பாடும் பரஸ்பரம் முரண்படாது என்று முன்பு நாம் பார்த்தோம். இஸ்லாம் அறிவுப்பூர்வமானது, சரியான அற மதிப்பீடுகளை வழங்குவது என்பதில் நாம் தெளிவுபெற வேண்டும். அப்போதுதான் சஹாபாக்களைப் போன்று ஈமானை சுவைக்கும் பாக்கியம் நமக்குக் கிட்டும். அதற்கு நாம் இஸ்லாத்தை சரிவர கற்பது மிகவும் அவசியம்.
ஆனால், இன்று ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழமைவில் வசிக்கும் நாம் பல்வேறு சிந்தனை ரீதியான தாக்கங்களுக்கும் பாதிப்புகளுக்கும் ஆளாகிறோம். நவீனத்துவமும் முற்போக்குவாதமும் நம்மிடம் பலமாக செல்வாக்கு செலுத்துகிறது. விளைவாக, தாராளவாதம், அறிவியல்வாதம், மதச்சார்பின்மைவாதம், பெண்ணியவாதம் முதலானவை நம் நம்பிக்கையை செல்லரிக்க முனைகின்றன. எனவேதான், முதலில் நாம் அவற்றைக் கேள்விக்குள்ளாக்கும் ஐயவாதியாக இருக்க வேண்டியது அவசியம் என்கிறேன். ஒருசிலர் இதை எதிர்மறையான அணுகுமுறை என்றும், இஸ்லாத்தை சரியாக போதித்தாலே போதும் என்றும் என்னிடம் கூறுவதுண்டு. உண்மையில், அவ்வாறு செய்வது மிகவும் பலவீனமான நிலைப்பாடு. சமகால குழப்பங்களையெல்லாம் எதிர்கொள்ள அது மட்டுமே போதுமானதல்ல.
நீங்கள் ஒரு வீட்டை கட்டுவதற்காக இடம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அங்கு ஏற்கனவே ஒரு சிதிலமடைந்த கட்டடம் இருக்கிறது என்றால் என்ன செய்வீர்கள்? அதன் மேலேயே நீங்கள் உங்கள் வீட்டை கட்ட மாட்டீர்கள். அப்படி செய்ய முடியாது, செய்தாலும் அது நிலைக்காது என்பதால் அந்தக் கட்டடத்தையே முற்றாகத் தகர்ந்துத் தரைமட்டமாக்கிவிட்டு, தூலமான நிலத்தின் மீது முறையாக அஸ்திவாரமிட்டு, பிறகு வீட்டை நிர்மாணிப்பீர்கள். அப்படித்தானே? இதுபோன்ற அணுகுமுறையைத்தான் நானும் பரிந்துரைக்கிறேன்.
இறுதியாக, தற்கால குழப்பங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து நினைவூட்டி நிறைவு செய்கிறேன்.
- பாரம்பரிய இஸ்லாமிய அறிவு மரபில் நிலைகொள்ள வேண்டும்.
- எதுவெல்லாம் பாரம்பரிய அறிவுக்கும் பண்பாட்டுக்கும் மாற்றாக எழுகின்றதோ அதை விசாரணைக்குள்ளாக்க வேண்டும்.
- இஸ்லாமிய அறிவு மரபின் ஞானத்தையும், அதன் உயர் மதிப்பீடுகளையும் நாம் மீளக் கண்டடைவதோடு, அவற்றை மீள்நிறுவுவதற்கு உழைக்க வேண்டும்.
முற்றும்.
(தொகுப்பும் மொழியாக்கமும்: நாகூர் ரிஸ்வான்)