நாத்திகம் அறிவியலுக்கு எதிரானது!
நாத்திகம் அறிவியலுக்கு எதிரானது என்ற தலைப்பு பலருக்கும் ஆச்சரியம் தரலாம். ஏனெனில், பொதுவாக மதம் அறிவியலுக்கு எதிரானது என்ற பிரச்சாரம்தான் நம்மிடையே வலுவாக வேரூன்றியுள்ளது. இது சார்ந்த விவாதங்களிலெல்லாம் கிறிஸ்தவ சபை கலிலியோவின் அறிவியல் கருத்துகளுக்காக அவரை வீட்டுச் சிறையில் அடைத்ததாக ஓர் உதாரணத்தை நாத்திகர்கள் சொல்வதுண்டு. அதன் மூலம் எல்லா மதங்களும், மத நம்பிக்கையாளர்களும் அறிவியலுக்கு எதிராக இருப்பதாய்ப் பொதுமைப்படுத்துவதை நாம் பலமுறை அவதானித்திருப்போம். இந்த வாதம் எந்த அளவுக்கு சரியானது?
கலிலியோவைப் பொறுத்தவரை, சூரிய மையக் கோட்பாட்டில் பயன்பாடு அதிகம் என்பதைத் தாண்டி சூரிய மையக் கோட்பாடுதான் உண்மை. மெய்மையில் சூரியன்தான் மையமாக உள்ளது. மெய்மையை அறிவியலால் கண்டறிய இயலும். நமது அறிவியல் கோட்பாடுகள் மெய்மையைப் பிரதிபலிப்பதாக உள்ளன என்பது அவரது வாதம். இந்தக் கருத்து அறிவியல் மெய்மைவாதம் (Scientific Realism) எனப்படும் தத்துவார்த்த நிலைப்பாடாகும். இதை முதலில் முன்வைத்தவராக கலிலியோ கருதப்படுகிறார். இதன் காரணமாகவே அவர் சிறையிலடைக்கப்பட்டாரே அன்றி, அவரது அறிவியல் கோட்பாட்டிற்காக அல்ல எனப் பல கிறிஸ்தவ தத்துவவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாத்திகமும் அறிவியலும்
கடவுள் இல்லை எனில் இந்தப் பிரபஞ்சம் தோன்றியதற்கான, பிரபஞ்சத்தின் இருப்பிற்கான காரணம் என்னவாக இருக்கும்? எந்தக் காரணமுமின்றி அது தானாகவே தோன்றியது, தானாகவே செயல்படுகிறது என்பார்கள் நாத்திகர்கள். படைப்பாளன், திட்டம், நோக்கம், அறிவு என எதுவுமின்றி இந்த மாபெரும் பிரபஞ்சம் தோன்றியது எனக் கொண்டால், இதில் சீர்மையும் (Perfection) தக்க வடிவமும் (Pattern) காணப்படுவது எப்படி? மட்டுமின்றி, இவையெல்லாம் என்றென்றும் இவ்வாறே இருக்கும் (Repetition for Inductive Reasoning) என்று நம்பி, அதைக் கொண்டு அறிவியல் கோட்பாடுகள் உருவாக்கப்படுகின்றவே! நாத்திகக் கண்ணோட்டத்தில் இது நம்பிக்கையா, மூடநம்பிக்கையா?
உண்மையில், பகுத்தறிவற்ற குரங்கின் கிறுக்கலில் அர்த்தமுள்ள உயர்ந்த கவிதையைத் தேட முயல்வது எவ்வளவு பகுத்தறிவற்ற செயலோ அதைவிட மோசமானது நாத்திக நம்பிக்கையைக் கொண்டு அறிவியல் செய்வது. இதன் காரணமாகவே இன்றும் வரலாற்றிலும் அறிவியலாளர்கள் பலர் இறை நம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள் போலும். ஆம், நியூட்டன் ஓரிறை நம்பிக்கை கொண்ட Unitarian கிறிஸ்தவர். ஐன்ஸ்டீன் டீயிஸக் கடவுள் கோட்பாட்டை நம்புபவர் (Deist). அதுபோல, கலிலியோவும் இறை நம்பிக்கையாளரே. இப்படி இந்த வரிசையில் இன்னும் அநேகரைக் குறிப்பிடலாம்.
அறிவியல் முறையும் நாத்திகச் சிக்கலும்
நவீன அறிவியல் முறையை முதலில் முன்வைத்தவர் இப்னுல் ஹைதம் ஆவார். இது சாத்தியமாகக் காரணமாக இருந்தது தொகுத்தறிதல் முறையாகும் (Inductive Reasoning). அறிவியல் முறையின் அடித்தளமாக இது உள்ளது. அதாவது, நாம் ஒரு பந்தை மேலே எறிந்தால் அது கீழே திரும்ப வருகிறது. நாம் பத்து முறை இவ்வாறு செய்துவிட்டு, அதற்கு அடுத்த முறையும் இதேபோலத்தான் நடக்கும் என அனுமானிக்கிறோம். இதைத்தான் தொகுத்தறிதல் என்கிறார்கள்.
இந்த அனுமானத்திற்கு சரியான காரணத்தை நாத்திகத்தால் முன்வைக்க இயலுமா? இப்படியான தத்துவார்த்தக் கேள்விகளை டேவிட் ஹும் என்ற பிரபலமான தத்துவவியலாளர் Problem of Induction என்கிறார். இன்றளவும் இது தத்துவத்தில் தீராப் பிரச்னை. மட்டுமின்றி, இதை அடிப்படையாகக் கொண்டு மேலும் சில புதிய தத்துவார்த்த சிக்கல்களும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இப்னுல் ஹைதம் போன்ற இஸ்லாமிய நம்பிக்கையாளர் இந்த தொகுத்தறிதல் முறையின் யதார்த்தத்தை நிச்சயம் அறிந்தே இருப்பார். இறைவன் தன் வழக்கத்தையும் நியதியையும் பொதுவாக மாற்றிக்கொள்ள மாட்டான் என்கிறது திருக்குர்ஆன். ஒரு குறிப்பிட்ட நியதியின்படி இப்பிரபஞ்சம் இயங்குவதே அறிவியல் முறை சாத்தியமாகுவதற்குக் காரணம். இதுகுறித்த தெளிவுதான் இப்னுல் ஹைதமின் அறிவியல் முறைமையிலான சிந்தனைக்கு தொடக்கமும் உந்துசக்தியும்.
“…அல்லாஹ்வின் நியதியில் யாதொரு மாற்றத்தையும் எப்போதும் நீர் காணமாட்டீர்…” (குர்ஆன் 35:43)
“…மேலும், அல்லாஹ்வுடைய நியதியில் நீர் எவ்வித மாற்றத்தையும் காணமாட்டீர்.” (குர்ஆன் 33:62)
“வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறிமாறி வருவதிலும் அறிவுடையவர்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.” (குர்ஆன் 33:190)