புத்த, சமண கோவில்கள் இந்து ஆலயங்களாக மாற்றப்படவில்லையா?
கஜினி முகம்மது பதினேழு முறை சோமநாதபுரம் கோவிலை இடித்து நொறுக்கினார் என்று உங்களுக்குப் பாடநூற்கள் சொல்லியுள்ளன இல்லையா? பண்டைய இந்தியாவில் கோவில்கள் என்பன சாமி கும்பிடுகிற இடங்கள் மட்டுமல்ல. மன்னர்களின் கோட்டைகளாகவும் நிதிக் களஞ்சியங்களாகவும் அவை இருந்தன. இல்லாவிட்டால் தஞ்சைப் பெரிய கோவிலைச் சுற்றி இவ்வளவு பெரிய அகழி ஏன்? பண்டைய மன்னர்களின் போர்கள் என்பன பெரும்பாலும் கொள்ளையடிப்பதற்காக மேற்கொள்ளப் பட்டவைதாம். இந்த அடிப்படையில்தான் கஜினி முகம்மது கொள்ளையிட்டதும்.
கோவிலுக்குள் ஒளிந்து கொண்ட எதிரி மன்னனைக் கொல்லவும், ஒளித்து வைக்கப்பட்ட செல்வத்தைக் கொள்ளையிடவும், எதிரியின் பண்பாட்டு ஆளுமையை அழிக்கவுமே கோவில்கள் மீது படையெடுக்கப்பட்டன. எந்த முஸ்லிம் மன்னனும் தன்னுடைய எல்லைக்குள் இருந்த இந்துக் கோவில்களையோ, தனது பாதுகாப்பிலிருந்த இந்துக் கோவில்களையோ இடித்ததில்லை. அவுரங்கசிப் ஆட்சிக் காலத்திலும் அப்படித்தான். அவருக்கு எதிராகச் சதி செய்தவர்களின் கோட்டைகளும் கோவில்களும் இடிக்கப்பட்டன. மற்றபடி முழுமையான மதச் சுதந்திரம் இருந்தது. அவுரங்கசிப் ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாட்டிலிருந்து குமரகுருபரர் காசிக்குச் சென்று முப்பதாண்டுகள் சமயப் பொழிவுகள் செய்து அங்கே குமாரசாமி மடம் ஒன்றையும் நிறுவினார்.
இன்னொன்றையும் யோசித்துப் பாருங்கள். தஞ்சைப் பெரிய கோவில் உட்பட இன்றுள்ள பல கோவில்கள் சமண/புத்த கோவில்களை இடித்துக் கட்டப்பட்டவைதானே. இராசராசன் இலங்கையிலுள்ள அநுராதபுரம், பொலனருவை ஆகிய இடங்களிலிருந்த புத்தக் கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கி அந்த ஊர்களுக்கு ‘ஜனநாத மங்கலம்’ என்று தன் பெயரைச் சூட்டவில்லையா? சுபதாவர்மன் (கி.பி. 1193-1120) என்ற ‘பார்மரா’ மன்னன் குஜராத்தைத் தாக்கி அங்கிருந்த சமணக் கோவில்களைக் கொள்ளையிடவில்லையா?
காஷ்மீர் இந்து மன்னன் ஹர்ஷன் ஆட்சியில் கோவில்களை இடிப்பதற்கென்றே ‘தெய்வங்களை நிர்மூலம் செய்கிற அதிகாரி’ (தேவோத்பத நாயகன்) என்றொரு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்ததாக கல்ஹணன் எழுதிய ராஜதரங்கிணில் குறிப்பிடப்பட்டுள்ளதே! புத்த, சமணக் கோவில்களை இடித்துத்தான் தஞ்சைப் பெரிய கோவில், காஞ்சி காமாட்சி கோவில் போன்றவையெல்லாம் கட்டப்பட்டன என சுரேஷ்பிள்ளை, மயிலை சீனிவேங்கடசாமி முதலியோர் நிறுவியுள்ளனர். திருவாரூர் கோவில் திருக்குளத்தை விரிவு செய்ய வேண்டும் எனக் காரணம் சொல்லி அங்கிருந்த சமணக் குடியிருப்பு அழிக்கப்பட்டது குறித்துப் பெரியபுராணத்திலேயே சான்றுகள் உள்ளன. எனவே, கோவில் இடிப்பு என்பதை எந்தவொரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றும் மக்களின் செயலாகவும் கருத வேண்டியதில்லை.
(“இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்” நூலிலிருந்து..)