granada novel - radwa ashourநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கிரானடா: மாபெரும் வரலாற்றுத் துயரின் நிழலோட்டம்

Loading

ஒரு நாவலை அறிமுகம் செய்யும் பொழுது அதன் கதையைக் கூறிவிட்டால் பிறகு அந்த நாவலை வாசிப்பவர்களுக்கு அதன் சுவாரஸ்யம் குன்றி விடாதா?

இந்தக் கேள்விக்கு ஆம், இல்லை என்று இரண்டு விதமாகவும் பதில் கூறலாம். என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு நாவலாசிரியருக்குமான கதை கூறுமுறையும், சித்தரிப்புகளும் தனித்துவமானவை. அந்தச் சித்தரிப்பின் பலத்திலும், கதை கூறுமுறையின் தனித்துவத்திலும்தான் ஒரு நாவலாசிரியரின் படைப்பின் ஆன்மா உள்ளது. அதைப் பிறரால் தீண்ட முடியாது. ஆக, நாவலின் கதையைக் கூறிவிடுவதால் யாருக்கும் எந்தப் பாதகமும் இல்லை.

ஆனால் நான் ரழ்வா ஆஷுரின் ‘கிரானடா‘ நாவலின் கதையை இங்கே கூற வரவில்லை. மாறாக, நாவலில் எனக்குப் பிடித்த அம்சம் ஒன்றின் பக்கம் வாசகர்கள் கவனத்தை ஈர்ப்பதே எனது நோக்கம். சூழலைப் புரிந்துகொள்வதற்காக நாவலின் வரலாற்றுப் பிண்ணனி குறித்து கொஞ்சம் பார்க்கலாம். 15ம் நூற்றாண்டின் இஸ்லாமிய நாகரிகத்தின் அறிவு மற்றும் பண்பாட்டுத் தலைநகரான முஸ்லிம் ஸ்பெயினின் (அந்தலூஸ்) வீழ்ச்சியின் வரலாற்றுப் பின்னணியை அடிப்படையாக வைத்து நகர்கிறது கிரானடா நாவலின் கதை. பெருமளவு ஒரே குடும்ப உறுப்பினர்கள்தாம் கதை மாந்தர்கள். ஆனால், அதன் வழியே நாவல் ஒரு மாபெரும் வரலாற்றுத் துயரை நிழலோட்டமாக முன்வைத்து அற்புதமான தரிசனத்தை எமக்குள் நிகழ்த்துகிறது.

நாவலில் ஒரு தருணம் வருகிறது: அபூஜஃபரும் அவருடைய பத்து வயது பேத்தி சலீமாவும் கிரானடாவில் நடக்கும் ஒரு கோலாகலமான விழாவுக்குச் செல்கிறார்கள். அந்த விழாவில் அமெரிக்க கண்டத்தைக் ‘கண்டுபிடித்த’ கிறிஸ்தோஃபர் கொலம்பஸுக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்படுகிறது. கொலம்பஸுக்கு அளிக்கப்படும் புகழாரத்தைக் காணும் பேத்தி தனது பாட்டனாரிடம் வினவுகிறாள்:

‘யார் இவர்?’

‘இவர்தான் புதிய உலகத்தைக் கண்டுபிடித்தவர்’

‘அதை ஏன் புதிய உலகம் என்கிறார்கள்?’

‘ஏனெனில் இதற்கு முன்பு நாம் அதை அறிந்திருக்கவில்லை’

‘நாம் அறிந்திருக்காது இருப்பின் அது எப்படி புதிய உலகம் என்று ஆகும்?’

நவீனத்துவம் பற்றிய விமர்சனம், ஓரியண்டலிசம், காலனித்துவ நீக்கம் போன்ற கோட்பாட்டுகளுக்கான புள்ளி சலீமாவின் கேள்வியில் உள்ளது. அதை நாவலின் Narration-க்குள் நுட்பமாக உள்ளடக்கியதுதான் ரழ்வா ஆஷுரின் கலை மேதமை.

“புதிய உலகம்” என்ற சொல்லாடலில் மேற்கு தான் அல்லாத பிற உலகை எத்தகைய மனோபாவத்தில் அணுகியது என்பதற்கான தடம் உள்ளது. உண்மையில் கொலம்பஸ் புதிய உலகமான (?) அமெரிக்க கண்டத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே அதில் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். இன்கா, மாயன், அஸ்டெக் போன்ற பூர்வகுடிகளின் நாகரிகம் செழித்து வளர்ந்திருந்த கண்டம்தான் அமெரிக்க கண்டம். அங்கே வளமான சுதேச கலாச்சாரம் இருந்தது. அறிவியலும், கணிதமும் இருந்தன; நாட்காட்டி இருந்தது. இயற்கை வளங்களில் காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்களை வாய் பிளக்க வைத்த பூமி அது.

எனில் எப்படி அது புதிய உலகம் என்று ஆகும்? ஐரோப்பியர்களுக்குத் தெரியவில்லை என்றால் அது புதிய உலகம் ஆகிவிடுமா? ஐரோப்பியர்களின் அறியாமை இங்கு அறிவாக, புதிய கண்டுபிடிப்பாக மாறிய விந்தை என்ன?

சலீமாவின் கேள்வி மூலம் நாம் ஐரோப்பிய மையவாதத்தை (Eurocentrism) நாம் விமர்சனபூர்வமாக அணுகலாம். ஐரோப்பா தன்னையே உலகின் மையமாகக் கருதுகிறது. தன்னை மட்டுமே நாகரிகம் பெற்றவர்களாகவும், பகுத்தறிவு அடைந்தவர்களாகவும், ஜனநாயக நடைமுறை கொண்டவர்களாகவும் கருதுகிறது. இந்த ஆதிக்க மனோபாவம் மூலமாகப் பிறரை ஒடுக்கிய வரலாறுதான் காலனித்துவ வரலாறு. அதன் ஆரம்பப் புள்ளியே முஸ்லிம் ஸ்பெயின் மீதான ஐரோப்பிய ஆக்கிரமிப்பு. கிரானடா நாவலின் Backdrop இதுதான்.

சரி, புதிதாகக் கண்டுபிடித்த அமெரிக்க கண்டத்தில் ஐரோப்பா என்ன செய்தது?

அமெரிக்கப் பூர்வகுடிகளின் நாகரிகத்தை அழித்து, அதன் செல்வத்தைக் கொள்ளையடித்து தன்னை ‘வளப்படுத்திக்’ கொண்டது. பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதுடன், மக்களை கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக ரெமோன் கிரஸ்ஃபொகேல் கூறுவது போல ஓர் ‘அறிவாதாரப் படுகொலையை‘ (Epistemicide) ஒன்றை நிகழ்த்தி அமெரிக்கப் பூர்வகுடிகளை காலகாலத்திற்கும் தனக்கு அடிமையாக மாற்றும் கைங்கர்யத்துக்கு வித்திட்டது. இதன் மூலமாக மக்களின் அறிவு, சிந்தனை முறை, நாட்ட சக்தி அனைத்திலுமே அடர்ந்தேறி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது ஐரோப்பா. ஷெய்குல் அஸ்ஹர் முஸ்தஃபா அப்துர் ரஸ்ஸாக் கூறுவது போல, தனக்கான உலகக் கண்ணோட்டத்தை, தத்துவத்தை வைத்திருக்கும் சுதந்திரமே மிகப் பெரிய சுதந்திரம். ஐரோப்பா தன் காலனிய நவீனம் மூலமாக இந்தச் சுதந்திரத்தையே உலக மக்களுக்கு மறுத்தது.

குடியேற்ற காலனியம் (Settler Colonialism) உருவான வரலாறு இதுதான். அதாவது ஒரு நாட்டின் பூர்வகுடிகளை ஒட்டுமொத்தமாக அழித்து, அடிமைப்படுத்தி அந்த நாட்டில் ஆக்கிரமிப்பு தேசத்தவர்கள் குடியேறுவது. அமெரிக்க, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளின் வரலாறு குடியேற்ற காலனிய வரலாறுதான். இதற்கு மாறாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பிரிட்டிஷார் நடைமுறைப்படுத்தியது செவ்வியல் காலனித்துவம் – Classical Colonialism – அதாவது ஒரு நாட்டை ஆக்கிரமித்து, அதன் செல்வங்களை மட்டும் கொள்ளையடிப்பது. பிறகு அதன் சமூக நிறுவனங்களைத் தனது உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் நிறுவி, பெயரளவிலான சுதந்திரத்தை அளித்துவிட்டு நவ காலனித்துவ நடைமுறை மூலமாக மறைமுகச் சுரண்டலைத் தொடர்வது.

ஒவ்வொரு சுதேச கலாச்சாரமும் நவ தாராளவாதத்துக்கு மாற்றான தனது சுதேச பண்பாட்டின் விழுமியங்களையும், மதிப்பீடுகளையும் தேடும் நிலையில், கிரானடா நாவல் அதற்கான திறப்புகளை அளிக்கிறது எனலாம். நாவலின் உயிரோட்டம் இந்த அம்சம்தான் என்று கருதுகிறேன். கிரானடாவில் பேசுவதற்கு இன்னும் பல அம்சங்கள் உள்ளன.

இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் பி.எம்.எம். இர்ஃபான். உஸ்தாத் இர்ஃபானுக்கு இன்னொரு மகுடம் கிரானடா மொழிபெயர்ப்பு. சீர்மை பதிப்பகத்தின் வடிவமைப்பு, அட்டைப்பட அழகு எல்லாமே நாவலின் உள்ளடக்கத்துக்கு நியாயம் சேர்க்கிறது. சம்பிரதாயமாய் கூறுவது போல ‘கட்டாயமாக வாசிக்க வேண்டிய நூல்’ என்கிறேன். ஆனால் நிச்சயம் கட்டாயமாக வாசிக்க வேண்டிய நூல்தான் கிரானடா என்பதில் சந்தேகமே இல்லை.

Related posts

Leave a Comment