நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கிரானடா: நாவல் வாசிப்பனுபவம்

Loading

தமிழ் நாவல் உலகு எனும் வீட்டில் புதியதொரு ஜன்னலை திறந்துவிட்டுள்ளது கிரானடா என்று சொன்னால் அது மிகையான கருத்தல்ல.

”அசாதரணமாதொரு காலத்தில் வாழ்ந்த சாதாரணர்கள் சிலரின் வாழ்க்கையைப் பின் தொடர்ந்து செல்வதன் ஊடாக, பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த முஸ்லிம் ஸ்பெயினின் வீழ்ச்சி ஏற்படுத்திய பண்பாட்டு இழப்பையும் வலியையும் வெகு நுட்பமாக நெய்தெடுக்கிருக்கிறது கிரானடா” எனப் பின்னட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகத்திற்கு நியாயம் செய்துள்ளது இந்த நாவல்.

கி.பி. 711ல் மூசா பின் நுஸைருடைய உத்தரவின் பேரில் தாரிக் பின் ஸியாத் எனும் தளபதியின் தலைமையில் ஸ்பெயினில் கால்பதித்த முஸ்லிம்கள் 800 ஆண்டுகாலம் ஸ்பெயினை ஆட்சிசெய்தார்கள். கி.பி. 1400லிருந்து அங்கு முஸ்லிம்களின் பலம் குன்றத் தொடங்குகிறது. அன்றைய முஸ்லிம் ஆட்சியின்போது ஸ்பெயினின் கார்டோபாவும் ஈராக்கின் பாக்தாதும்தான் அறிவுலகின் கேந்திரங்களாகத் திகழ்ந்தன. ஒப்பீட்டளவில் சிறப்பான ஆட்சியைத் தந்த முஸ்லிம்கள் காலப்போக்கில் ஒற்றுமையின்றி, குழுமனப்பான்மையை உயர்த்திப் பிடித்து, கிறிஸ்தவப் படைகளிடம் ஒவ்வொரு பகுதியாக இழந்தனர். இறுதியாக வீழ்ந்த பகுதிதான் கிரானடா.

சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து சண்டையிட்ட கிறிஸ்தவர்கள் ஒன்றுசேரத் தொடங்கி தங்கள் பலத்தை அதிகரித்துக்கொண்டனர். குறிப்பாக, பரம வைரிகளாக இருந்த கேஸ்டில்லா ராணி இஸபெல்லாவும் அராகான் ராஜா ஃபெர்டினாண்டும் மணமுடித்துக்கொண்டு ஒன்றாக 1482 முதல் 1491வரை பத்து ஆண்டுகளில் முஸ்லிம்களிடம் மிச்சமிருந்த கிரானடாவை வீழ்த்திக் கையகப்படுத்தினர். யூதர்களும் முஸ்லிம்களும் வலுக்கட்டாயமாக ஞானஸ்நானம் செய்து கிறிஸ்தவர்களாக்கப்பட்டனர் அல்லது நாடுகடத்தப்பட்டனர். ஒட்டுமொத்த ஸ்பெயினிலும் முஸ்லிம்கள் தம்மை பொது சமூகத்திலும் அரசுப் பதிவேடுகளிலும் கிறிஸ்தவர்களாகக் காட்டிக்கொண்டு வீடுகளில் மட்டும் முஸ்லிம்களாக வாழ்ந்தனர்; அல்லது, முழுமையாகக் கிறிஸ்தவத்தில் இரண்டறக் கரைந்துபோயினர்

மேலே குறிப்பிட்ட எந்தச் சம்பவமும் இந்நாவலில் குறிப்பிடப்படவில்லை. மாறாக, இந்தச் சம்பவங்களின் பிண்ணணியில்தான் நாவல் நிகழ்கிறது எனப் புரிந்துகொண்டால் நாவலைப் புரிந்துகொள்வதற்கு இன்னும் இலகுவாக இருக்கும். அறபி மொழி இலக்கியச் செறிவுடன்கூடிய மொழி என்றாலும் இர்ஃபானின் தமிழ்நடையை “சிறப்பு” எனும் ஒற்றை வார்த்தையில் அடக்கிவிட முடியாது. வெகுநேர்த்தியாக வார்த்தைகளைத் தொடுத்து இந்நாவலை மொழிபெயர்த்துள்ளார்.

கிரானடாவின் வசந்தகாலம், அழகுப் பூங்காக்கள், அபூ மன்ஸூரின் பொதுக் குளியலகம், அபூ ஜாஃபரின் குடும்பம், பேரன் ஹசன், பேத்தி சலீமா, பிழைப்புத் தேடி அகதியாய் வந்த நதீம், சஅது, மருமகள் என ஆறு நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஸ்பெயினை கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் றள்வா ஆஷூர். ஸ்பானிஷ் மதக்குற்ற விசாரணை காலத்தின் மூச்சடைக்கும் சூழலுக்கு மத்தியில் அரும்பும் அழகிய காதல்கள் என வாழ்வின் இரவையும் பகலையும் அழகுற படம் பிடிக்கிறது புத்தகம். மாமியாருக்குப் பிடிக்காத மருமகள், கணவன் மேல் கோபப்படும் மனைவி, தன் குடும்பத்தினருக்காக உறவுகளையே தூரத்திலாக்கும் மகன் என அழகிய நாவலாக மலர்ந்துள்ளது கிரானடா.

ஒரு வரலாற்று நூலைப் போல் வரலாறு சொல்லாமல், நாவல் வடிவில் அதனைத் தந்திருக்கும் றள்வா ஆஷூர் பாராட்டுக்குரியவர். 1994 கெய்ரோ புத்தகக் கண்காட்சியின் சிறந்த நாவல் விருதை இது பெற்றதில் ஆச்சர்யமில்லை. சாதாரண மனிதர்களின் வாழ்வின் ஊடாக ஒரு பெரும் இனச்சுத்திகரிப்பின் வலியைச் சொல்லும் காவியம் கிரானடா. அடக்குமுறைக்கு முன் பணிய மறுக்கும் பண்பாடு, பிழைத்து வாழ மேற்கொள்ளப்படும் யத்தனங்கள், யுத்தச் சூழலிலும் அரும்பும் காதல் என வாழ்வின் பல்வேறு வண்ணங்களும் முயங்கி மாயம் நிகழ்த்தும் ஒரு நவீன கிளாசிக் நாவல் கிரானடா.

ஆக்கிரமிப்பு அரசை எதிர்த்துப் போராட குடும்பத்தைப் பிரிந்து செல்லும் சஅது, வீட்டுக்கு தன் மகள் ஆயிஷாவை முதன் முதலாகப் பார்க்க வரும்போதும், மருத்துவச்சி மனைவி சலீமாவோ சூனியம் வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நெருப்பில் வீசியெறிய உத்தரவிடப்படும்போதும் ஆயிஷாவுக்கு கதை சொல்லிக்கொண்டிருந்த மர்யமா மட்டும் கதையை நிறுத்தவில்லை, நாமும் இதன் அடுத்த பாகத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

பிளஸ்: தமிழில் வெளிவந்துள்ள முதல் நவீன கிளாசிக் நாவல் முஸ்லீம் வாழ்வியலின் அடிப்படையில், அழகிய கவித்துவ நடை, உணர்வுபூர்வமான எழுத்துக்கள்.

மைனஸ்: கால கட்டத்தின் வரலாற்றை சுருக்கமாக கொடுத்திருக்கலாம்.

(நன்றி: Tamil Books Review)

Related posts

Leave a Comment