மனம் என்னும் மாயநதியின் வழியே – 6
நற்செயல்களை செய்யத் தொடங்குவது கொஞ்சம் கடினம்தான். மனம் எளிதில் வசப்படாது. சாக்குப்போக்குகள் கூறி அவற்றைத் தட்டிக் கழிக்க முற்படும். ஆனால் அவற்றை செய்யத் தொடங்கிவிட்டால் முடிப்பது இலகுவானதாகிவிடும். அவை முடிவில் மனநிறைவைத் தருகின்றன. எந்தவொரு நற்செயலையும் செய்து முடித்தவுடன் மனம் அலாதியான திருப்தியுணர்வைப் பெறுகிறது. இந்த இனிமையான முடிவை அடைவதற்கு எப்படி மனம் தடையாக இருந்தது என்று எண்ணத் தோன்றும்.
பாவமான செயல்கள் வசீகரிக்கும் இயல்பினைக் கொண்டவை. அவை தற்காலிகமான இன்பங்களைத் தந்தாலும் மனதில் பெரும் அழுத்தமாகத் தேங்கி நிற்கக்கூடியவை, மனச்சோர்வை ஏற்படுத்தக்கூடியவை. பாவமன்னிப்பின் மூலம் தூய்மையாக்கப்படாத பாவக்கறைகள் மனதில் அழியாத வடுக்களாக எஞ்சி விடுகின்றன.
ஒரு நற்செயல் செய்யும்போது மனித மனம் உணரும் திருப்தியே அதற்குக் கூலியாக இருப்பதற்குப் போதுமானது. சத்தியத்தைப் பின்பற்றுபவன் இவ்வுலகிலேயே சுவனத்தைக் காண்கிறான். அவனது மனம் உணரும் நிம்மதிதான் அந்த சுவனம். பாவமான, அநீதியான செயல்களில் ஈடுபடும்போது கிடைக்கும் கணநேர அற்ப இன்பங்கள் அவற்றுக்குப் பிறகு வரக்கூடிய குற்றவுணர்ச்சியால் அடித்துச் செல்லப்பட்டுவிடுகின்றன. தொடர்ந்து மனிதன் செய்யக்கூடிய பாவங்களால் ஏற்படும் குற்றவுணர்ச்சி அவன் மனதில் முள்ளாய் குத்திக் கொண்டேயிருக்கும்.
சுவனமும் நரகமும் மறுவுலகில் மட்டுமல்ல, இவ்வுலகிலும்தான். மனிதர்கள் உணரும் இந்த திருப்தியுணர்வே அவர்களை நன்மையான செயல்களில், சமூக சேவைகளில் ஆர்வமுடன் ஈடுபட வைக்கிறது. அதுவும் மறுவுலகிலும் கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கை இறைநம்பிக்கையாளர்களை இன்னும் ஆர்வமாக ஈடுபட வைக்கிறது. நாம் அனுபவித்த இன்பங்கள் துன்பங்கள் எல்லாம் வெறும் நினைவுகளாக மட்டுமே எஞ்சிவிடுகின்றன. நாம் செய்த நற்செயல்களே ஆறுதலளிக்கும், திருப்தியளிக்கும் உணர்வாக மனதில் நிலைத்திருக்கின்றன.
ஒரு மனிதன் சரியான வழியில் பயணிப்பதிலும் தவறான வழியில் செல்வதிலும் அவனைச் சுற்றியுள்ள சூழல்களின் பங்கு முக்கியமானது. மனம் தன்னை வலுப்படுத்தக்கூடியதன் பக்கம் சாய்ந்துவிடும். மனதின் சாக்குப்போக்குகளுக்கு போலியான தர்க்கங்களுக்கு அவன் அடிபணிந்து விடக்கூடாது.
எது சரியானது, எது தவறானது என்பது மனிதனுக்கு இயல்பாகவே உணர்த்தப்பட்டுள்ளது. இறைவஹி மனித இயல்பில் படிந்துவிட்ட கரைகளை நீக்குகிறது. அது மனித இயல்புகளோடு முழுவதுமாக ஒன்றிப் போகிறது. எந்த இடத்திலும் அது அவனது இயல்புகளோடு முரண்படுவதில்லை. அது ஏற்கனவே அவனிடம் இருக்கும் ஒளியோடு இன்னும் ஒரு ஒளியாக வந்து சேர்ந்துகொள்கிறது. அதன்மூலம் அவன் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி சரியானதை சரியானதெனவும் தவறானதை தவறானதெனவும் அறிந்துகொள்கிறான். அறிதல் முறைகளில் உள்ளுதிப்பும் மிக முக்கியமான ஒன்றாகும். அதன்மூலமாக அல்லாஹ் தன் அடியார்களைப் பாதுகாக்கிறான், அவர்களுக்கு உதவி செய்கிறான். அவர்களை சரியான பாதையில் வழிநடத்துகிறான்.
அன்போ காமமோ கோபமோ வெறுப்போ பொறாமையோ மிகைத்துவிட்டால் மனிதன் பின்விளைவுகள் குறித்து எதுவும் யோசிக்காமல் செயல்படத் தொடங்குகிறான். தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்ளவும் அவன் தயங்குவதில்லை. சில சமயங்களில் அவனுடைய சூழலும் சில சமயங்களில் அவனுடன் இருப்பவர்களும் அவனைப் பாதுகாக்கும் அரணாக அமைகிறார்கள். கூட்டு வாழ்க்கையில் அல்லாமல் தனியனாக வாழும் மனிதன் பெரும்பாலும் தனக்கு மட்டுமல்லாமல் சமூகத்திற்கும் ஆபத்தானவனாக மாறிவிடுகிறான்.
உள்ளம் என்பது உணர்வுகள் உருவாகி கொந்தளித்துக் கொண்டிருக்கும் இடம். அங்கு எப்போதும் போராட்டம் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். ஒன்று மற்றொன்றை மிகைப்பதற்கு முயன்று கொண்டேயிருக்கும். அறிவு அவனுக்கு ஆலோசனை வழங்குகிறது. எதனை வெளிப்படுத்த வேண்டும், எதனை வெளிப்படுத்தக்கூடாது என்று அவனுக்குக் கற்றுக்கொடுக்கிறது. அறிவுக்கும் உணர்வுக்குமான போராட்டத்தில் பெரும்பாலான சமயங்களில் உணர்வே வெல்கிறது. அறிவின் பணி ஆலோசனை வழங்குவது என்றளவில் சுருங்கி விடுகிறது.
ஒரு மனிதன் தன் உள்ளத்து உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டால் அவன் எந்த உறவிலும் நட்பிலும் நீண்ட நாட்கள் நீடிக்க முடியாது. உணர்வுகள் மாறிக்கொண்டே இருக்கக்கூடியவை. ஒன்றை நீங்கள் விரும்பலாம். சில காலம் கழித்து அதனை நீங்கள் வெறுக்கலாம். மீண்டும் அதனையே விரும்பலாம். இப்படி ஒரு பொருளில்கூட உங்களின் பல்வேறு உணர்வுகள் மாறி மாறி மையம் கொண்டு கொண்டேயிருக்கும்.
சிறு குழந்தைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்ளும். பின்னர் உடனே சேர்ந்து கொள்ளவும் செய்யும். ஒருவன் பக்குவமடைந்துவிட்டான் என்பதற்கான அடையாளம் அறிவின் செயல்பாடு அவனிடம் மிகைத்துக் காணப்படுவதுதான். ஒரு மனிதன் எந்தவொன்றுக்கும் அடிமையாகாமல் இருக்கிறான் என்பதற்கான அடையாளமும் இதுதான். மூடர்களிடம் அறிவின் செயல்பாடு மிகக் குறைந்த அளவேயிருக்கும். மனதின் அரிப்புகளை உடனே தீர்க்க வேண்டும் என்பதுதான் அவர்களின் இலக்காக இருக்கும். அவர்களிடம் மல்லுக்கு நிற்காமல் கடந்து செல்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.
யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். யானைக்கு மட்டுமல்ல எல்லாவற்றுக்கும் அப்படித்தான். யானை சற்று பெரியதாக இருப்பதால் அது சறுக்குவதற்கு வாய்ப்பில்லை என்று நாம் தவறாக எண்ணி விடுகிறோம். பெரிய மனிதர்களும் சின்னத்தனங்களில் அகப்பட்டு விடுவார்கள். பெரிய மனிதர்கள் என்பதால் அவர்கள் சின்னத்தனங்கள் இல்லாமல் இருப்பார்கள் என்றில்லை. ‘பெரிய மனிதர்’ என்பதே கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பம்தானே. அவரது இயல்புக்கு எதிராக நாமே ஒன்றைக் கட்டமைத்துவிட்டு அப்படி அவர் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்? கட்டமைக்கப்பட்ட தம்முடைய பிம்பம் சிதையாமல் இருக்க வேண்டும் என்று அவரும் தம்மால் இயன்ற முயற்சிகளைச் செய்யத்தான் செய்வார். ஆனாலும் சில சமயங்களில் அவரையும் மீறி அவரது இயல்பு வெளிப்பட்டுவிடுகிறது. அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உள்ளபடியே வெளிப்பட்டே தீருவார்.
நம்மைப் போல எல்லாவிதமான பலவீனங்களையும் கொண்ட ஒரு மனிதரை ஆட்சியாளராக, ஆன்மீகத் தலைவராக அமர்த்திவிட்டு அவர் அற்புதங்கள் நிகழ்த்தும் சாதனையாளராக, பாவங்கள் செய்யாத புனிதராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் மனிதர்களாகத்தான் நாம் இருக்கிறோம். அப்படித்தான் நம்மால் இருக்க முடியும். அவருக்கு அந்த உயர்பதவியை அளித்ததற்கு ஈடாக அவரிடமிருந்து உன்னதங்கள் வெளிப்பட வேண்டும் என நாம் விரும்புகிறோம். அவரிடமிருந்து வெளிப்படும் சின்னத்தனங்கள் நம்மை வெகுண்டெழச் செய்கின்றன. அவரை தலைக்கு மேலே தூக்கி வைத்து கொண்டாடிய நாம் ஒரு கட்டத்தில் அவரை நம் காலுக்குக் கீழே போட்டு நசுக்கவும் தயங்குவதில்லை. நாம் எதிர்பார்க்கும் மனிதர்கள் அரிதிலும் அரிது. அதுவும் உயிருடன் இருப்பவர்கள் அந்த நிலையை அடையவே முடியாது. செத்த பிறகுதான் சாதனையாளர் அல்லது புனிதர் பட்டம் கொடுக்கப்படுகிறது. எந்தவொன்றும் நம்மைவிட்டு விலகிச் சென்ற பிறகு அதன் அருமையை நாம் உணர்ந்து கொள்கிறோம். சிறப்பான ஒவ்வொன்றும் தூரத்திலிருந்தே ரசிக்கப்படுகின்றன. அருகில் வந்துவிட்டால் அவை மதிப்பிழந்து விடுகின்றன.