கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 5

Loading

விசாலமான வீட்டில் இருக்க வேண்டும் என்பது என் ஆசைகளுள் ஒன்று. வீடு மாறும்போதெல்லாம் இந்த விசயத்தை நான் மிகவும் கவனத்தில் கொள்கிறேன். விசாலமான வீட்டிற்கும் மனவிசாலத்திற்கும் தொடர்பிருக்கிறது என்று நான் கருதுகிறேன். சிறிய வீடு மனநெருக்கடியைத் தரக்கூடியது. சிறிய வீட்டில் நீண்ட நேரம் அடைபட்டு கிடக்க முடியாது. ஓய்வெடுப்பதற்காக தவிர அங்கு அதிக நேரம் தங்கியிருப்பது நம் மனதில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியது. வெளியே செல்ல முடியாத இந்த ஊரடங்கில் சிறிய வீடு ஜெயிலில் அடைபட்டு கிடக்கும் அனுபவத்தையே தரும்.

பெண்கள் அதிகம் கோபம் கொள்வதற்கும் சிறிய வீட்டில் அவர்கள் அடைந்து கிடப்பதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வெளியில் வேலைக்குச் செல்லும் பெண்களைவிட வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் பெண்களே அதிகம் அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். அவர்கள் உணரும் மனநெருக்கடியே கோபமாக மாறுகிறது. திறந்த வெளியில் உலவுவது மனதின் நெருக்கடியைப் போக்கும் மிகச் சிறந்த வழிமுறைகளுள் ஒன்று. தங்கள் வெறுமையைப் போக்கும் மிகச் சிறந்த வழிமுறைகளைப் பெற்றிருப்பவர்கள் விதிவிலக்கானவர்கள்.

நம் உலகம் விசாலமாக விசாலமாக நம் மனதும் விசாலாமாகிக் கொண்டே செல்லும். அது தன்னைச் சுற்றியிருக்கும் சூழலிலிருந்து பெரிதும் தாக்கமடையக்கூடியது. அறிதல்கள் நம் மனதை விசாலமாக்கிக் கொண்டே செல்கின்றன. அந்த அறிதல்களை நாம் பரந்துவிரிந்த இந்த பிரபஞ்ச வெளியிலிருந்தும் பெற முடியும். அது மௌன மொழியில் நமக்கு உணர்த்தும் அறிதல்கள் எண்ணிக்கையற்றவை. அவை மனதின் வெளியை விசாலமாக்கக்கூடியவை.

மனதின் சில நெருக்கடிகள் வெளிப்படையான காரணிகளால் உருவாகுபவை. அவை அகற்றப்பட்டால் மனம் அவற்றிலிருந்து விடுபட முடியும். சில நெருக்கடிகள் உள்ளார்ந்தவை. எந்த வெளிப்படையான காரணிகளைக் கொண்டும் அவற்றை போக்க முடியாது. எல்லாவற்றையும் பெற்றிருந்தாலும் அவை ஏற்படுத்தும் இழப்புணர்வால் எல்லாம் சூன்யமாகவே தோன்றும். அவை விசாலமான பிரபஞ்சத்தைக்கூட குறுகிய ஒன்றாக நம் முன்னால் காட்டக்கூடியவை. இறைவனின் பக்கம் திரும்புவதன் மூலமே, இறைவழிகாட்டுதலைப் பின்பற்றுவதன் மூலமே அவற்றிலிருந்து விடுபட முடியும்.

துன்பங்களிலிருந்தோ இன்னபிற தளைகளிலிருந்தோ விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை மனதிற்குப் பெரும் பலம். அந்த நம்பிக்கையை என்றும் மனம் கைவிட்டுவிடக்கூடாது. ஆம், அது இறைநியதிகளுள் ஒன்றுதானே! இருளுக்குப் பின் வெளிச்சம் வந்தே தீரும். காரிருள் விடியலுக்கான அறிகுறி. கடுமையான புழுக்கம் மழையின் அறிகுறி. நிராசையடைய வேண்டிய அவசியமில்லை. நிராசையடைவது நம்பிக்கையாளர்களின் பண்பு அல்ல.

நம்பிக்கைதான் வாழ்க்கை. அதுதான் மனித வாழ்வை முன்னகர்த்திச் செல்கிறது. உங்களின் அறிவு உங்களை எப்போதும் பதற்றத்திலும் பயத்திலும் ஆழ்த்திக் கொண்டிருந்தால் அதனைப் புறக்கணிப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை. அதனைவிட நம்பிக்கைகொண்ட எளிய மனம் பலமடங்கு சிறந்தது. உங்களின் எளிய மனதை இழந்துவிடாதீர்கள். அதனை அதிகப்படியான, தேவையற்ற தகவல்களால் நிரப்பிக் கொள்ளாதீர்கள். குறிப்பிட்ட அளவைத் தாண்டிவிட்டால் அவை பேயுருவம் கொண்டு உங்களை அச்சுறுத்தத் தொடங்கிவிடும்.

நிச்சயமாக இது சுயநலப்போக்கோ கோழைத்தனமோ அல்ல. மாறாக உங்களின் இயல்பறிந்து நீங்கள் உங்கள் மீது காட்டும் கருணை. இந்த ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் அணுதினமும் அளவுக்கு மீறிய தகவல்குப்பைகளை உங்கள் மீது வந்து கொட்டிக்கொண்டேயிருக்கின்றன. அவர்கள் விரிக்கும் விளம்பர வலைகளில் உங்களையும் அறியாமல் நீங்கள் சிக்கிக் கொள்கிறீர்கள்.

சமூக ஊடகங்களுக்கு அடிமையான பாமரர்கள் இந்த தகவல்குப்பைகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். பலர் தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்து ஒருவித பதற்றத்திலும் பயத்திலும் எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையிலும் இருக்கிறார்கள். வாழ்வு குறுகியது. எப்போது வேண்டுமானாலும் இங்கிருந்து நாம் மறைந்துவிடலாம். குறுகிய காலத்தில் நாம் மறக்கடிக்கப்பட்டுவிடுவோம். நிச்சயமற்ற தன்மையே நம்மைச் சூழ்ந்துள்ளது. ஆனாலும் எல்லாவற்றையும் தாண்டிய நன்னம்பிக்கையே நம்மை முன்னகர்த்திச் செல்கிறது.

மனம் ஒன்றை நம்பிவிட்டால் உடல் அதற்கு கட்டுப்பட்டுவிடுகிறது. முடியும் என்பதும் முடியாது என்பதும் மனதைப் பொறுத்தது. உடலின் ஒட்டுமொத்த ஆற்றலும் மனம் என்னும் சிறிய சிமிழிக்குள் அடங்கியிருப்பதுதான் ஆச்சரியம். உடலை பலப்படுத்துவதைவிட மனதை பலப்படுத்துவதற்குத்தான் ஒருவன் முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நீங்கள் உணரும் பயமும் பதற்றமும் உங்கள் ஆற்றல்களை சூன்யமாக்கிவிடும்.

ஒருவன் சரியான கண்ணோட்டங்களைக் கொண்டு தன் மனதை மனதைப் பக்குவப்படுத்த முடியும். சரியான கண்ணோட்டங்களைக் கொண்டிராத மனம் தேவையற்ற பயத்திலும் பதற்றத்திலும் சிக்கிக் கொள்ளும். வாழ்வாதாரம் குறித்த அச்சம், எதிர்காலம் குறித்த அச்சம், மரணம் குறித்த அச்சம் என பலவகையான அச்சங்களில் அது தடுமாறித் திரியும்.

வாழ்வாதாரம், எதிர்காலம், மரணம் ஆகியவை குறித்து நம்பிக்கையாளன் கொண்டிருக்கும் கண்ணோட்டங்கள் அவனை பயத்திலிருந்தும் பதற்றத்திலிருந்தும் விடுவிக்கின்றன. விதி அவனிடம் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. “எந்த உயிரியும் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட வாழ்வாதாரத்தை முழுமையாகப் பெறாதவரை மரணிக்காது” என்ற நபியின் வாக்கு ஒரு நம்பிக்கையாளனுக்கு வழங்கக்கக்கூடிய கண்ணோட்டங்கள் எத்துணை அற்புதமானவை!

எந்தவொன்றிலும் நிலைபெறாத மனம் என்ன செய்வது, எங்கு போவது என்று தெரியாமல் காரிருளில் தடுமாறித் திரிகிறது. மனம் ஏதாவது ஒன்றை நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை சரியானதாக இருந்தால் மனம் பேரின்பத்தை உணரும். எந்த நம்பிக்கையும் அற்று இருப்பதைவிட மூடநம்பிக்கை சிறந்தது. அது தற்காலிகமான திருப்தியுணர்வையாவது அளிக்கிறது என்பதனால்.

எதிர்காலம் தனக்குள் என்ன மறைத்து வைத்திருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. அதன் கனமான திரைகளை அகற்றி அங்கு நடப்பதை யாரும் பார்த்துவிட முடியாது. நன்னம்பிக்கையே மனித வாழ்வை முன்னகர்த்திச் செல்கிறது. நன்னம்பிக்கையைக் கொண்டே நாம் எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டும்.

நன்னம்பிக்கையே தேவையற்ற பயத்திலிருந்தும் பதற்றத்திலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது. எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கும் பதற்றத்திற்கும் உள்ளாகிறார்கள். எதிர்காலம் குறித்த அச்சம் அவர்களின் நிகழ்காலத்தையும் நாசமாக்கி விடுகிறது. மனித வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களுடன் சில மணிநேரம் உரையாடினாலே போதுமானது.

ஒருவன் மனதில் கொண்டிருக்கும் கண்ணோட்டங்களுக்கும் அவனது வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தான் கொண்டிருக்கும் கண்ணோட்டங்களின் அடிப்படையில்தான் அவன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான். அவனது இயல்போடு இயைந்து செல்லக்கூடிய கண்ணோட்டங்கள் தேவையற்ற மனஉளைச்சல்களிலிருந்தும் பதற்றங்களிலிருந்தும் கவலைகளிலிருந்தும் அவனைப் பாதுகாக்கின்றன.

நம்பிக்கையாளன் தன் இறைவனின் மீது நல்லெண்ணம் கொள்கிறான். இறைவன் அவனுக்கு என்ன விதித்துள்ளானோ அதில்தான் அவனுக்கு நன்மை இருக்கிறது என்று கருதுகிறான். தனக்குரியவை ஒருபோதும் தன்னைவிட்டு விலகிச் செல்லாது என்றும் அவையல்லாதவை ஒருபோதும் தன்னை வந்தடையாது என்றும் தன் வாழ்வாதாரமும் வாழ்நாளும் நிர்ணயிக்கப்பட்டுவிட்டன என்றும் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட வாழ்வாதாரத்தை முழுமையாகப் பெறாமல் தான் மரணிக்க மாட்டேன் என்றும் அவன் உறுதியாக நம்புகிறான். இந்த நம்பிக்கைதான் அவனது ஆன்ம பலம். இந்த நம்பிக்கைதான் அவனை எதிர்மறை எண்ணங்களிலிருந்து பாதுகாக்கிறது. இஸ்லாம் ஒரு மனிதனுக்கு வழங்கக்கூடிய கொடைகளுள் இதுவும் ஒன்று.

Related posts

Leave a Comment