கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே -4

Loading

“காதல் என்பது நெடுங்காலத் தோழமையாலும் கட்டிக் காத்த தொடர்பாலும் விளைவது என்பது தவறானது. ஆன்ம உறவின் இறுக்கத்தில் ஊற்றெடுப்பது காதல். இந்த உறவின் இறுக்கம் ஒரு நொடியில் உருவாகவில்லையென்றால் பல ஆண்டுகளாகலோ தலைமுறைகளாகலோ உருவாக்க முடியாது.” (கலீல் ஜிப்ரான்)

காதல் மனிதனைப் பைத்தியமாக்கும். அவனது கண்களைக் குருடாக்கும். ஆம், அது ஒரு மனரீதியான நோய். எவ்வித பாதிப்பும் இல்லாமல் அதிலிருந்து வெளியேறுவது மிகவும் கடினம். காதல் என்பதும் காமம் என்பதும் நேசம் என்பதும் ஒன்றல்ல. மூன்று வார்த்தைகளும் வேறு வேறு பொருள்களைக் குறிக்கக்கூடியவை. புரியாதவர்கள் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள்.

காதல் உணர்வு திடீரென உள்ளத்தில் மையம் கொண்டு எதிர்பாரா சமயத்தில் மனிதனைத் தாக்கக்கூடிய ஒன்று. அது மனிதனை எளிதாக வீழ்த்தி அவனைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுகிறது. அதிலிருந்து தப்பி ஓடுபவர்கள் மிக மிகக் குறைவு. ஒரு பார்வை, அதற்குப் பிறகான சிறிய சந்திப்பு போதும் காதல் தீ கொழுந்துவிட்டு எரிவதற்கு. அது ஒரு புறம் மட்டும் இருந்தால் பெரும் அவஸ்தை. இருபுறமும் இருந்தால் கொஞ்சம் அவஸ்தை குறையலாம். ஆனால் அதுவும் அவஸ்தைதான்.

அது மாபெரும் பிரபஞ்ச வெளியை குறுகிய ஒன்றாக மாற்றிவிடுகிறது; சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் மூடி மறைத்துவிடுகிறது. அவனது மொத்த கவனமும் அவளை நோக்கி அவளது மொத்த கவனமும் அவனை நோக்கி குவிந்து விடுகிறது. சமநிலையை சீர்குலைத்து நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்ற விடாமல் செய்துவிடுகிறது. நிறைவேறும் காதல், நிறைவேறா காதல் என இரண்டுமே குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அணைந்துவிடுகின்றன. நிறைவேறா காதல் சிலருக்கு அழியாத வடுக்களை ஏற்படுத்திவிட்டுச் செல்லலாம். பக்குவ வயதிலிருந்து சாகும் வயதுவரை மனிதன் வெவ்வெறு வடிவங்களில் காதல்வயப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறான்.

பேராசான் டால்ஸ்டாய் எழுதிய ‘அன்னா கரீனினா’ காலம் கடந்தும் நிலைத்திருக்கும் மகத்தான காதல் காவியம். காதல் ஏற்படுத்தும் ஒவ்வொரு உளநிலையையும் கூடுதல் குறைவின்றி பிரச்சார நெடியின்றி மிகத் துல்லியமாக அதில் சித்தரித்து காட்டியிருப்பார். ஒரு மாபெரும் வாழ்க்கையை வாழ்ந்து முடித்த அனுபவத்தை அந்தப் புத்தகம் உங்களுக்குத் தரலாம்.

காதலுக்கான ஆயுள் குறைவுதான். அது நீண்ட காலம் அதே நிலையிலேயே நீடித்திருக்க முடியாது. அது எல்லாவற்றையும் மிகைப்படுத்திக் காட்டக்கூடிய ஒருவிதமான சமநிலைக் குலைவு. கொஞ்சம் கொஞ்சமாக மனம் சமநிலையை அடைந்து போதையிலிருந்து மீண்டு விடும். ஒவ்வொன்றுக்கும் ஒரு கால அளவு இருக்கிறது. தேவை, சிறிது காலப் பொறுமை.

மனம் சமநிலையை இழக்கும்போது அறிவு அளிக்கும் ஆலோசனைகள் முழுமையாகப் புறந்தள்ளப்படுகின்றன. அவன் எதைக் குறித்தும் யோசிக்காமல் சிறு குழந்தையைப் போல அடம்பிடிப்பவனாக, செயல்படக்கூடியவனாக ஆகிவிடுகிறான். அந்தச் சமயத்தில் ஒரு தாயைப் போல, தந்தையைப் போல அன்பும் அக்கறையும் கொண்ட வழிகாட்டியைப் பெற்றிருப்பவர்கள் பாக்கியவான்கள். சமநிலை குலையும்போதுதான் வழிகாட்டியின் பங்கு மிக இன்றியமையாத ஒன்றாக ஆகிவிடுகிறது.

மனித மனதிற்கு கடிவாளங்கள் அவசியம். அது ஒருபுறம் கடிவாளங்களை வெறுத்தாலும் இன்னொரு புறம் அவற்றை விரும்பவும் செய்கிறது. ஏனெனில் அது தன்னை நினைத்து பயப்படுகிறது. தன் ஆசைகள் தன்னை படுகுழியில் தள்ளிவிடாமலிருக்க வேண்டும் என்று அது விரும்புகிறது. அதனால்தான் அது சில சமயங்களில் தன் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களைக்கூட விரும்புகிறது.

காதல் தனித்துவமான உணர்வுகளைக் கொண்டது. காதலையும் இயல்பான பாலின ஈர்ப்பையும் பலர் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. பிரிவும் தூரமும் பாலின ஈர்ப்பை மட்டுப்படுத்திவிடும். ஆனால் அவை காதலை இன்னும் கொழுந்துவிட்டு எரியச் செய்யும். யாரைப் பிரிந்து யாருடன் பேசாமல் உங்களால் இருக்க முடியவில்லையோ அவருடன் நீங்கள் காதல்வயப்பட்டுள்ளீர்கள் என்று பொருள். காதல் என்பது உங்கள் அனுமதியுடன் நிகழும் ஒரு செயல்பாடு அல்ல. அது உங்களையும் அறியாமல் உங்கள் அனுமதியின்றி உங்களுக்குள் நுழையக்கூடிய ஒன்று. அது வெளியேறுவதும் அப்படித்தான்.

பாலின ஈர்ப்பையும் காதலையும் வேறுபடுத்தும் அம்சங்கள் பலவற்றைக் குறிப்பிடலாம். காதல் எதிர்ப்பிலும் வளரக்கூடியது. எதிர்ப்பில்தான் அது இன்னும் உறுதியடையும். அதற்காக காதலர்கள் தங்கள் உயிரைக்கூட இழக்கத் துணிவார்கள். அதன் பாதையில் தங்களுக்கு ஏற்படும் இழிவுகளைக்கூட அவர்கள் பொருட்படுத்துவதில்லை. சமூகமே ஒன்றுதிரண்டு அவர்களைத் திட்டினாலும் அதற்காக அந்த சமூகத்தைவிட்டு ஓடிவிட வேண்டும் என்று நினைப்பார்களே தவிர தங்கள் காதலை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

காதல் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் மறைத்துவிடும்; மற்ற உணர்வுகள் அனைத்தையும் மழுங்கடித்துவிடும். அது தாமாகவே மட்டுமே குணமாகக்கூடிய, மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த முடியாத ஒரு நோய். அதற்கான காலகட்டம் மாறுபடலாம். ஆனால் அது நீண்ட காலமோ வாழ்நாள் முழுவதுமோ நீடித்திருக்க முடியாது. அது வேறு வடிவம் கொண்டு உதாரணமாக நேசமாக, இரக்கமாக, புரிந்துணர்வாக நீண்ட காலம்வரை நீடித்திருக்கலாம்.

பாலின ஈர்ப்பு எதிர்ப்பில் மழுங்கிவிடும். அது எந்த எதிர்ப்பையும் இழப்பையும் தாங்கிக் கொள்ளாது. தூரமும் அதனை மழுங்கடித்துவிடும். ஆண் பெண்ணுக்கு மத்தியிலுள்ள நெருக்கமே பாலின ஈர்ப்புக்கு அடிப்படை. அந்த ஈர்ப்பும் நட்பும் அதனை காதலைப் போன்று சித்தரித்து விடுகின்றன.

பெரும்பாலோர் காதலையும் பாலின ஈர்ப்பையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. இரண்டையும் காதல் என்றே புரிந்து கொள்கிறார்கள். காதல் என்று உறுதியாகத் தெரிந்துவிட்டால் அவர்களைப் பிரிக்க முயற்சிக்காமல் சாத்தியமான வழிகளைத் தேடுவதே பெற்றோருக்கு பொறுப்பாளர்களுக்கு நல்லது. அது அவர்களுக்குப் பிடிக்காவிட்டாலும் விதி விட்ட வழி என அவர்கள் எண்ணி அமைதியாக இருந்து விடுவதே அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்லது. இல்லையெனில் அது ஏற்படுத்தும் விளைவுகளையும் எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

திருமணத்திற்குப் பிறகு ஒரு ஆணோ பெண்ணோ தம் வாழ்க்கைத்துணை அல்லாதவர்களிடம் கொள்ளும் காதலை சமூகம் கள்ளக்காதல் என்கிறது. புனிதமான காதல், கள்ளக்காதல் எல்லாம் சமூகம் ஏற்படுத்திய வெறும் பெயர்கள்தாம். அடிப்படையில் காதலுக்கு இப்படிப்பட்ட பிரிவுகள் கிடையாது. எல்லாம் ஒரே மூலத்திலிருந்து வெளிப்படக்கூடியவைதாம்.

ஆண், பெண் கலப்பில் காதல் நிகழ்வது சகஜமான ஒன்றுதான். ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் பழகுவதுபோன்று ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் பழகுவதுபோன்று ஆண், பெண் பழக்கம் அமையுமெனில் அங்கு காதல் நிகழ்ந்துகொண்டேயிருப்பது இயல்பான ஒன்றுதான். ஒரு ஆணோ பெண்ணோ திருமணமான பிறகும் மீண்டும் மீண்டும் காதலில் விழுந்துகொண்டேயிருக்கலாம். அவர்கள் எந்தச் சமயத்தில் வேண்டுமானாலும் காதல்வயப்படலாம். ஆன்ம உறவின் இறுக்கத்தில் ஒரு நொடியில்கூட காதல் ஏற்பட்டுவிடலாம் என்கிறார் கலீல் ஜிப்ரான். மிகச் சரியான வரையறைதான் அது. ஆனால் அது வளர்வதற்கு உகந்த சூழல் மிக அவசியம். உகந்த சூழலைப் பெறாத காதல் மனதளவில் மட்டுமே நின்று மறைந்துவிடவும் செய்கிறது.

பர்தா முறை சரியாகப் பின்பற்றப்படும் குடும்பங்களில் அந்தச் சூழலுக்கான வாய்ப்பு அமைவது மிகவும் குறைவு என்று கருதுகிறேன். இங்கு பர்தா முறை என்பதை வெறுமனே ஒரு ஆடை அமைப்பாக இல்லாமல் அதன் விரிவான பொருளில் பயன்படுத்துகிறேன். அங்கு ஆண்-பெண் சகஜமான நட்புக்கான சூழல் இருக்காது. ஒருவேளை கணவனோ மனைவியோ வேறு ஒருவருடன் காதல்வயப்பட்டாலும் அது மென்மேலும் வளரக்கூடிய வாய்ப்பு அங்கு குறைவாகவே இருக்கும். ஒரு குடும்பம் சிதைவுறாமல் இருப்பதற்கு கணவனும் மனைவியும் தங்களின் தொடர்புகளை ஒரு வரம்புக்குட்பட்டு அமைத்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒரு குடும்பம் சிதையும்போது அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தாம்.

இதுபோன்ற விசயங்கள் சர்வசாதாரணமாக, வெளிப்படையாக அணுகப்பட்டால் துரோகங்கள் குறையலாம் என்று கருதுகிறேன். ஒருவர் தம் மனதுக்குப் பிடித்தவருடன் வாழ்வதற்காக முறைப்படி விவாகரத்துப் பெற்றுச்செல்வதில் தவறேதுமில்லை. திருமணத்திற்கு அளவுக்கு மீறிய தேவையற்ற புனிதத்தையும் விவாகரத்திற்கு தேவையற்ற வெறுப்பையும் வழங்க வேண்டிய அவசியமில்லை. மனதிற்குப் பிடிக்கவில்லை என்ற ஒரு காரணமே விவாகரத்திற்குப் போதுமானது. அதற்கான காரணங்களை முன்வைக்க வேண்டும் என்று கட்டாயமாக்கினால் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே செல்வார்கள். துரோகத்தைவிட விவாகரத்து சிறந்தது. சில சமயங்களில் இரண்டில் எது குறைவான பாதிப்பை அளிக்கக்கூடியது என்ற அடிப்படையில்தான் விவகாரங்கள் அணுகப்பட வேண்டும்.

Related posts

Leave a Comment