கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே -3

Loading

மனிதன் இரண்டு வகையில் சிறைப்படுகிறான். ஒன்று உடல்ரீதியாக, இரண்டாவது மனரீதியாக. அரசின் சட்டத்தை மீறி குற்றமிழைப்பவர்கள் அரசின் காவலர்களால் பிடிக்கப்பட்டு சிறைப்படுத்தப்படுகிறார்கள். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதைக் குறித்து நான் பேசப்போவதில்லை. இரண்டாவது மனரீதியாக சிறைப்படுவது என்றால் ஏதேனும் ஒன்றுக்கு மனிதன் அடிமையாகிவிடுவது. அது அவனது இன்ப துன்பங்களின் மையப்புள்ளியாக மாறிவிடுவது. விசாலமான வெளியில் அவன் சுற்றித் திரிந்தாலும் குறுகிய சிறைச்சாலையின் அடைக்கப்பட்டது போன்று அவன் உணர்வான். அவன் எதற்கு அடிமையானானோ அந்த ஒன்றைத் தவிர மற்ற எந்தப் பொருளும் அவன் கண்ணுக்குத் தெரிவதில்லை. கண்ணிருந்தும் எதையும் பார்க்காதவனாக காதிருந்தும் எதையும் கேட்காதவனாக அவன் மாறிவிடுவான். மனிதனுக்கு ஏற்படக்கூடிய மனரீதியான நோய்களில் இதுவும் ஒன்று.

உண்மையில் உடல்ரீதியாக சிறைப்படுவதைவிட மனரீதியாக சிறைப்படுவது கொடுமையானது. மனமே அனைத்திற்கும் மையப்புள்ளி. உடல் சிறைப்பட்டு விட்டால்கூட மனம் தன் போக்கில் பரந்த வெளியில் சஞ்சரித்துக் கொண்டுதான் இருக்கும். அதற்குத் தடையேதும் இல்லை. பார்ப்பவர்களுக்கு அது கொடுமையான ஒன்றாகத் தெரிந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்களின் மனம் அதற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்கிறது.

நபியவர்கள் கற்றுத் தந்த பின்வரும் பிரார்த்தனையை அடிக்கடி நினைவுறுகிறேன். அவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனைகள் மனித மனதின் இருட்குகைகளில் வெளிச்சம்பாய்ச்சக்கூடியவையாக இருப்பதை எண்ணி வியப்படைகிறேன்:
“அல்லாஹ்வே! உன் அருளை நான் வேண்டுகிறேன். கண்சிமிட்டும் நேரம்கூட என்னை என் மனதில் கட்டுப்பாட்டில் விட்டுவிடாதே. என் விவகாரங்கள் அனைத்தையும் சீர்படுத்துவாயாக. உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை”

“உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே! என் உள்ளத்தை உன் மார்க்கத்தின் மீது நிலைபெறச் செய்வாயாக” இதுவும் நபியவர்கள் அடிக்கடி கேட்ட பிரார்த்தனைகளுள் ஒன்று.
மனித மனம் தடுமாறக்கூடியது. அது எந்தவொன்றுக்கும் மிக இலகுவாக அடிமையாகிவிடும். அறிவு ஆலோசனை மட்டுமே அளிக்கக்கூடியது. கட்டுப்படுத்தும் ஆற்றல் அதற்கு இல்லை. மனம் அந்த ஆலோசனையை ஏற்கலாம். ஏற்காமல் நிராகரிக்கவும் செய்யலாம். அந்த அறிவைக் கொண்டே தன் நிலைக்கு ஆதரவாக வாதாடவும் செய்யலாம்.

மனதின் நிலையற்ற தன்மையை மனிதன் உணர வேண்டும். அது எப்போது வேண்டுமானாலும் காதலில் வீழ்ந்துவிடலாம், பாவத்தில் மூழ்கிவிடலாம். ஒன்றில் அது நிலைபெற்றுவிட்டால் எதிர்ப்புகளையோ வசைகளையோ இழிவுபடுத்தல்களையோ பொருட்படுத்தாது. அவற்றை தன் நோக்கத்தை நிறைவேற்றுவதன் பாதையில் கிடக்கும் தடைக்கற்களாகக் கருதி அது முன்னேறிக் கொண்டே செல்லும். அதன் பாதையில் தன் உயிரையே இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும்கூட அது பின்வாங்காது.

நம் மனம் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதே உண்மை. அதில் உருவாகி முட்டி மோதக்கூடிய எண்ணங்கள்கூட எங்கிருந்து வந்தவை என்பதை நாம் அறிய மாட்டோம். அது படைப்பாளனின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவனே அதில் தான் நாடியவாறு மாற்றங்களை ஏற்படுத்துகிறான். தான் நாடிய உள்ளத்திற்கு அவன் சத்தியத்தை பிரியமானதாகக் காட்டுகிறான். தான் நாடிய உள்ளத்திற்கு அவன் அசத்தியத்தை பிரியமானதாகக் காட்டுகிறான். தான் நாடிய உள்ளத்தை நேர்வழியின் பக்கம் செலுத்துகிறான். தான் நாடிய உள்ளத்தை தவறான வழியில் விட்டுவிடுகிறான்.

ஒரு மனிதன் எதை விரும்புகிறானோ அந்தப் பாதை அவனுக்கு இலகுபடுத்தப்படும். நேர்வழியை விரும்பக்கூடியவன் தவறான வழியில் செலுத்தப்பட மாட்டான். அவன் தன் விருப்பத்தை பிரார்த்தனையாக முன்வைக்கும்போது இறைவன் நிச்சயம் அதற்குப் பதிலளிப்பான்.

மனிதனின் அந்தரங்கத்திற்கும் வெளிரங்கத்திற்குமான இடைவெளி மிகப் பெரியது. வெட்கம், சமூகத்தார் மீதான பயம், கட்டமைக்கப்பட்டிருக்கும் வெளிப்படையான பிம்பத்தை பாதுகாக்கும் எண்ணம், இறையச்சம் ஆகியவை அவையிரண்டையும் பிரித்துக் காட்டும் மெல்லிய கோடுகளாக இருக்கின்றன. வெட்கமோ சமூகத்தார் மீதான அச்சமோ கட்டமைக்கப்பட்டிருக்கும் வெளிப்படையான பிம்பத்தை பாதுகாக்கும் எண்ணமோ இறையச்சமோ இல்லாதவர்கள்கூட ஓரளவு அப்பட்டமாக வெளிப்பட்டாலும் முழுமையாக வெளிப்படுவதில்லை. இரண்டிற்கும் மத்தியில் இடைவெளி எப்போதும் இருந்துகொண்டேயிருக்கிறது.

மனித உள்ளம் பலவகையான எண்ணங்களால் கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஓர் இடம். அங்கு எல்லாவற்றுக்கும் அனுமதி உண்டு. அங்கு தடைசெய்யப்பட்டது என்று எதுவும் இல்லை. அதனால்தான் இஸ்லாம் மனதில் தோன்றும் தீய எண்ணங்கள் வெளிப்படுத்தப்படாதவரை அல்லது செயல்வடிவம் கொடுப்படாதவரை அவை மன்னிக்கப்பட்டு விடுகின்றன. அவற்றுக்காக இறைவன் உங்களை குற்றம்பிடிக்க மாட்டான் என்று கூறுகிறது.

மனிதன் உள்ளபடியே வெளிப்பட்டால் எந்த உறவும் நட்பும் நீண்ட நாட்கள் நீடிக்க முடியாது. தன் நலனைத் தவிர எதையும் அறியாத, தன் இச்சைகளை அப்படியே நிறைவேற்ற விரும்புகின்ற ஆபத்தான விலங்காக அவன் அறியப்படுவான். அவனுடைய அந்தரங்கத்திற்கும் வெளிரங்கத்திற்கும் மத்தியில் இருக்கும் சில அம்சங்கள்தான் அவனை வேறுபடுத்துகின்றன; அவனுடைய பிம்பத்தை வேறு விதமாகக் கட்டமைக்கின்றன.

ஒருவன் பாவம் செய்யாமல் இருக்கிறான் எனில் அதற்கான சந்தர்ப்பம் அவனுக்கு வாய்க்கப்பெறவில்லை அல்லது ஏதேனும் ஒரு தடையை ஏற்படுத்தி இறைவன் அவனைக் காப்பாற்றிவிட்டான் என்று பொருள். அதனால்தான் இஸ்லாம் ஒருவர் செய்த பாவத்தைச் சுட்டிக்காட்டி அவரைப் பழிக்க வேண்டாம் என்றும் அவரது அந்தரங்கமான பாவத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறது. அவ்வாறு நீங்கள் இழிவுபடுத்தினால் நீங்களும் இழிவுபடுத்தப்படுவீர்கள் என்றும் அது எச்சரிக்கிறது.

எது மனிதனை அதிகம் அச்சுறுத்துகிறதோ, எதை அவன் அதிகம் விரும்புகிறானோ, எதை அவன் அதிகம் வெறுக்கிறானோ அவற்றைப் பற்றியெல்லாம் அவன் ஓயாமல் பேசிக் கொண்டேயிருக்கிறான். பேசிப் பேசி விருப்பையும் வெறுப்பையும் தீர்த்துக் கொள்கிறான்; அச்சத்திலிருந்து விடுபட முனைகிறான். பேச்சு ஒன்றுதானே மிக இலகுவான வழி.

மனிதர்கள் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களால் பேசாமல் இருக்க முடியாது. காரணத்தோடும் காரணமின்றியும் காரணத்தை உருவாக்கியும் அவர்கள் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். ஒரு காரணத்திற்காக பேசுகிறார்கள். பேசுவதற்காக ஒரு காரணத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் பேச வேண்டும். அவ்வளவுதான். சிலருக்கு அதற்கான காரணங்களும் வேண்டும். பெரும்பாலோரிடம் எதையாவது பேச வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இருப்பதில்லை.

நேசிப்பவர்களுடன் நம்மால் மணிக்கணக்கில் பேச முடிகிறது. பேச்சு நீருற்று போல ஊறிக் கொண்டேயிருக்கிறது. அது இலக்கில்லாமல் எல்லையே இல்லாமல் நீண்டுகொண்டே செல்கிறது. பேசுவதற்காக படைப்பட்டவர்கள்போல அவர்களுடன் பேசிக் கொண்டேயிருக்கிறோம். பேச்சு எந்த அளவு சுவையானது என்பதை அவர்களுடன் பேசும்போதுதான் நாம் உணர்ந்துகொள்கிறோம். விரும்பாதவர்களுடன் நம்மால் பேச முடிவதில்லை. நம் சொற்கள் சுருங்கி விடுகின்றன. குறிப்பிட்ட அளவு தாண்டி அவை வெளியேற மறுக்கின்றன
.
மனம்திறந்து நாம் எல்லோரிடமும் பேசிவிடுவதில்லை, அவர்கள் நமக்கு நெருக்கமானவர்களாக இருந்தபோதிலும். குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே நாம் நம் மனதைத் திறந்து காட்டுகிறோம். பல சமயங்களில் நெருக்கமானவர்களிடம்கூட நாம் நம்மைத் திறந்து காட்டுவதில்லை. அதீத நெருக்கம் சில சமயங்களில் அதற்குத் தடையாக அமைந்துவிடுகிறது. ஒரு ஆன்மா தனக்கு ஒத்திசைவான ஆன்மாவை அறிந்துகொள்கிறது. அது அதனைக் கண்ட மாத்திரத்தில் கட்டித் தழுவிக் கொள்கிறது. இடைவிடாமல் அதனுடன் அது உரையாட வேண்டும் என்று நினைக்கிறது.

Related posts

Leave a Comment