விவாதம் – ஒரு சிறிய விளக்கம்
எல்லாவற்றுக்கும் நாம் விவாதித்துக் கொண்டிருக்க முடியுமா? விவாதத்தின் மூலம் நம்மால் ஒரு தீர்வை எட்டிவிட முடியுமா? விவாதம் தீர்வை நோக்கி இட்டுச்செல்லக்கூடியது அல்ல. அது முடிவிலியாக நீண்டு கொண்டே செல்லக்கூடியது. அது ஒரு வகையான கருத்தியல் யுத்தம். தோல்வியடைந்தவர்கள் காழ்ப்புகளை சுமந்துகொண்டு பின்வாசல் வழியாக அல்லது வேறொரு வடிவில் மீண்டும் தாக்குதல் தொடுக்க முனைவார்கள். அது அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் பெரும் நெருப்பு. யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்காமல் அல்லது ஒருவர் மற்றவரை சகித்துக்கொள்ளாமல் அந்த பெரும் நெருப்பை அவ்வளவு எளிதாக அணைத்துவிட முடியாது. கணவன் மனைவிக்கு மத்தியில் இந்த நெருப்பு மூண்டுவிட்டால் இல்லற வாழ்வு சகித்துக்கொள்ள முடியாத அளவு நெருக்கடிமிகுந்ததாகிவிடும். இருவரில் ஒருவர் முழுமையாக இறங்கிப் போகாதவரை அங்கு எந்தவொரு சுமூகமான முடிவையும் எட்ட முடியாது.
அரசியல் நிலைப்பாடுகளோடு முன்முடிவுகளோடு விவாதிப்பவர்களுடன் விவாதிப்பது நம்மை நாமே சித்ரவதைக்குள்ளாக்குவதற்கு ஒப்பாகும். உண்மைகள் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. தங்களின் அரசியல் நிலைப்பாடுகளைத் தாண்டி இம்மியளவும் அவர்கள் நகர்ந்து வர மாட்டார்கள். தோல்வியடையும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டாலும் எதிர்கேள்விகளை உருவாக்கிக் கொண்டு விவாதத்தை நீட்டிக்கவே அவர்கள் விரும்புவார்கள். அது சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமான மோதல் அல்ல. ஒரு ஈகோவுக்கும் இன்னொரு ஈகோவுக்குமான மோதல். அவ்வளவு எளிதாக அது முடிவுக்கு வந்துவிடாது.
அறிஞர்கள் விவாதம் செய்ய விரும்புவதில்லை. அரைகுறைகளுக்கு விவாதம் பெரும் தீனி. அறிவிலிகளுக்கு அது ஒரு போர். விவாத அறைகூவல் விடுப்போரை புறக்கணித்து விடுவதே சிறந்தது. அதுதான் அதனை தகர்ப்பதற்கான சிறந்த வழிமுறையும்கூட. அதுவும் ஆன்மீக பிரச்சாரத்தை முன்னெடுப்பவர்கள் விவாதத்தின் பக்கம்கூட செல்லாமல் இருப்பதே மிகச் சிறந்தது. அதுதான் பேணுதலான வழிமுறையும்கூட.
ஒரு விசயத்தின் பல்வேறு கோணங்கள் தெளிவுபடுத்தப்படுவதற்காக செய்யப்படும் விவாதம் வேறு. முன்முடிவுகளுடன் செய்யப்படும் விவாதம் வேறு. முதலாவது வகை விவாதம் ஆரோக்கியமானது. அதனை விவாதம் என்று சொல்வதைவிட ஒரு வகையான உரையாடல் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். எந்தவொரு விசயத்தையும் ஆழமாகத் தெரிந்துகொள்ள, அதன் பல்வேறு கூறுகளை அறிந்துகொள்ள அத்தகைய உரையாடல் மிகுந்த பயனளிக்கும். இந்த வகையில் முன்வைக்கப்படும் கேள்விகளும் ஆட்சேபனைகளும் ஒரு துறையை ஆழமாகப் புரிந்துகொள்ள நமக்கு வழிவகுக்கின்றன. திருக்குர்ஆன் அழகிய விவாதம் என்று இத்தகையே விவாதத்தையே கூறுகிறது என்று கருதுகிறேன்.
இரண்டாவது வகையான விவாதங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. அது ஒருவகையான கருத்தியல் யுத்தம். அத்தகைய விவாதங்கள் இறுதியில் உள்ளத்தில் ஒருவித வெறுப்பை, விலகலை விட்டுச் செல்கின்றன. தொலைக்காட்சிகளில் நடக்கக்கூடிய விவாதங்கள் இத்தகைய விவாதங்களே. அவற்றைத் தொடர்ந்து பார்க்கும்போது நம்முடைய மனநிலை பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. சாத்வீகமாக உரையாடுபவர்கள்கூட எதிர்த்தரப்பினரின் கூச்சலால் அவர்களைப் போன்று அவர்களின் மொழியில் பதிலளிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்த நிலைக்கு உள்ளாகிவிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் மனநோயாளிகளின் கூச்சல்போன்று அது தோற்றம் பெற்றுவிடுகின்றது.
இது ஒருவகையான பொழுதுபோக்கு. எதிரெதிர் கருத்துகள் கொண்டவர்களை மோதவிட்டு ரசிப்பது. நிச்சயம் இத்தகைய விவாதங்களால் பயன்களைவிட தீங்குகளே அதிகம். இத்தகைய விவாதங்களில் நம்முடைய குரல் மேலோங்கினாலும் நம் கொள்கைகளைக் குறித்த வெறுப்பு எதிர்த்தரப்பினரின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. விளைவாக, அவர்கள் நம்மைவிட்டு இன்னும் வெகுதூரம் விலகிச் சென்றுவிடுகிறார்கள்.
முன்முடிவுகளுடன் விவாதிப்பவர்களிடம் நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? ஒவ்வொருவருக்கும் தங்களின் கருத்தை நிலைநாட்டியே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்கிறது. தங்களின் தரப்புக்கு விசுவாசமாக விவாதிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. விவாதத் திறமையுள்ளவன் விவாதத்தில் வெல்கிறான். இத்தகைய விவாதங்களின் மூலமாக நாம் ஆரோக்கியமான மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. இத்தகைய விவாதங்களை முடிந்த மட்டும் தவிர்த்துவிடுவது நம் மனநிலைக்கு நல்லது.