ஒரு சிறிய பிரார்த்தனை
“அல்லாஹ்வே! உன் அருட்கொடைகள் அழிவதிலிருந்தும் நீ அளித்த ஆரோக்கியம் மாறுவதிலிருந்தும் திடீரென உன் தண்டனை வருவதிலிருந்தும் உன் கோபங்கள் அனைத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.” (முஸ்லிம்)
இது நபியவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகளில் ஒன்று. அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடைகள் நம்மிடமிருந்து பறிக்கப்படுவது, நம்முடைய ஆரோக்கியம் மாறி நாம் நோய்வாய்ப்படுவது, திடீரென அவனுடைய தண்டனை நம்மை வந்தடைவது, அவனுடைய கோபத்திற்கு ஆளாவது ஆகிய அனைத்திலிருந்தும் நாம் அவனிடமே பாதுகாவல் தேடுமாறு நபியவர்கள் நமக்குக் கற்றுத் தருகிறார்கள்.
நமக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளுக்கு நாம் நன்றி செலுத்தவில்லையெனில் அவை நம்மிடமிருந்து பறிக்கப்படலாம். ஒருவன் தனக்கு வழங்கப்பட்டுள்ள அருட்கொடைகளை எண்ணி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினால் அவற்றை அவனுக்கு விருப்பமான வழிகளில் பயன்படுத்தினால் அவற்றைக் கொண்டு கர்வம் கொள்ளாமல் இருந்தால் நிச்சயம் அவை பன்மடங்காகப் பெருகிக் கொண்டேயிருக்கும். ஆனால் அவன் நன்றிகெட்டத்தனமாக நடந்துகொண்டால் அவற்றைக் கொண்டு கர்வம் கொண்டால் அவற்றைக் கொண்டு அநியாயம் செய்ய முற்பட்டால் நிச்சயம் அவை அவனிடமிருந்து பறிக்கப்பட்டு விடும். எவற்றை அவன் அருட்கொடைகளாக எண்ணிக் கொண்டிருக்கிறானோ அவை அவனுடைய நிம்மதியின்மைக்கும் அழிவுக்கும் காரணமாக அமைந்து விடும். இந்த உலகில் அல்லாஹ் சில நியதிகளை அமைத்துள்ளான். அந்த நியதிகளின் படியே இந்த உலகம் இயங்குகிறது. இப்படித்தான் திருக்குர்ஆன் நமக்குக் கற்றுத் தருகிறது.
பாவங்கள் துன்பங்களைக் கொண்டு வருபவை. பாவங்கள் நம்முடைய ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. நமக்கு வரக்கூடிய நோய்களுக்கும் நாம் செய்யக்கூடிய துன்பங்களுக்கும் தொடர்பு இருக்கின்றது. திடீர் வேதனை யாரை வந்தடையும்? அருட்கொடைகள் வழங்கப்பட்டும் தொடர்ந்து ஒருவன் பாவங்களில் மூழ்கிக் கிடந்தால், அநியாயம் இழைத்துக் கொண்டிருந்தால் அது திடீர் வேதனை அவனை வந்தடையப் போகிறது என்பதற்கான அறிகுறி. மனிதர்களுக்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. எல்லாவற்றையும் தாண்டி ஒருவன் பாவங்களில் மூழ்கியிருப்பான் எனில் தனக்கு வழங்கப்பட்ட அவகாசத்தை தன் திறமையின் விளைச்சலாகக் கருதிக்கொண்டிருப்பான் எனில் அவன் தனக்கான துன்பங்களை தானே தேடிக்கொண்டிருக்கிறான் என்று பொருள்.
மனிதனுக்கு வழங்கப்படும் வேதனைகளில் மிகக் கடுமையானது திடீரென அவனைத் தாக்கும் வேதனைதான். அவன் கண்விழித்துப் பார்ப்பதற்குள் எல்லாம் நிகழ்ந்து விடுகிறது. அவனுடைய எண்ணங்கள், ஆசைகள், நோக்கங்கள் அப்படியே அறுபட்டுவிடுகின்றன. மரணத்தை அறிந்து அதற்கு முன்னால் தங்களை தயார் செய்பவர்கள் ஒரு வகையினர். திடீரென மரணத்தால் பீடிக்கப்படுபவர்கள் ஒரு வகையினர். திடீரென வரக்கூடிய வேதனையையும் அகலா மரணத்தையும் அவ்வளவு எளிதாக நம்மால் ஜீரணித்துக் கொள்ள முடியாது. நம்ப முடியாமல் நாம் புலம்பிக் கொண்டேயிருப்போம். கொஞ்சம் கொஞ்சமாக ஒரு இழப்பிற்கு மனரீதியாக நாம் தயாராகி வருவது வேறு. கிட்டத்தட்ட வழியனுப்பும் மனநிலையை நாம் அடைந்து விடுகின்றோம். சிறிது காலத்திற்குள் நம் காயம் ஆறிவிடுகிறது. திடீரென வேதனையால் பீடிக்கப்படுவது என்பது எளிதில் மீள முடியாத பெரும் வேதனை. மனம் அதனை உணரவே நீண்ட நேரம் எடுக்கும். மீண்டும் மீண்டும் சம்பவம் பொய் என்றே நீண்ட நேரம்வரை அது எண்ணிக் கொண்டிருக்கும்.
இந்த அச்சங்கள் மனிதனின் மனதில் இயல்பாகவே இருக்கக்கூடியவை. இந்த அச்சங்களிலிருந்து விடுபடும் வழியை நபியவர்கள் நமக்குக் கற்றுத் தருகிறார்கள். அதுதான் பிரார்த்தனை. நம்முடைய அச்சங்களைப் போக்குமாறு இறைவனிடம் கோரிக்கையாக முன்வைப்பது. அவனிடம்தானே அனைத்து அதிகாரங்களும் இருக்கின்றன. அவனுடைய நாட்டமின்றி இந்த உலகில் எதுவும் நிகழ்ந்துவிட முடியாது. அவன் நம்மைப் பாதுகாக்க நாடிவிட்டால் யாரும் நமக்குத் தீங்கிழைக்க முடியாது. அவன் நம்மைக் கைவிட்டு விட்டால் யாரும் நம்மைப் பாதுகாக்க முடியாது.