கொரோனாவை விட வேகமாகப் பரவும் இஸ்லாம்-வெறுப்பு வைரஸ்!
(இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ’தி கார்டியன்’ இதழில் ஹனா எல்லிஸ் பீட்டர்சன், அஜீசுர்ரஹ்மான் ஆகியோர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)
வடமேற்கு டெல்லியிலுள்ள ஹரேவலி எனும் கிராமத்தில் மஹ்பூப் அலீ எனும் இளைஞரை அவருடைய மூக்கிலும் காதுகளிலும் ரத்தம் வழிந்தோடும்வரை கொஞ்சமும் ஈவிரக்கமில்லாமல் ஒரு கும்பல் கம்புகளால் தாக்கியது, கால்களால் உதைத்தது. சமய நிகழ்வு ஒன்றுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய அலீ ஒரு முஸ்லிம். இந்தப் பின்னணியில், கொரோனாவைப் பரப்ப முயலும் இஸ்லாமியச் சதியில் அவருக்குப் பங்கிருப்பதாக இந்து அமைப்புகள் ஒரு வதந்தியைப் பரப்பின. அந்த இளைஞர் “கொரோனா ஜிஹாத்” நிகழ்த்துவதற்கு முன்பாக தண்டிக்கப்பட வேண்டும் என எண்ணி ஒரு கும்பல் அவரைத் தாக்கியிருக்கிறது.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. ஒரு காணொளிக் காட்சி மூலமும் இளைஞரின் குடும்பம் வழியாகவும் கிடைக்கும் தகவல்படி, ஏப்ரல் 5 அன்று அவரைத் தாக்கியவன், “இந்தச் சதிக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று சொல்!” என்றுள்ளான். அந்த கும்பல் அலீயை அருகிலுள்ள கோவிலுக்கு தூக்கிச் சென்று, மருத்துவமனைக்குப் போக வேண்டுமென்றால் இஸ்லாமைத் துறந்து இந்து மதத்துக்கு மாறு என நிர்பந்தித்திருக்கிறது.
அலீயின் குடும்பமும் கொரோனாவைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டப்படுவதால், தாக்குதல் நடந்து ஐந்து நாட்கள் கழித்தும் அந்தக் குடும்பம் அச்சத்திலேயே உரைந்திருக்கிறது. ”நாங்கள் போலீசில் புகாரளித்தால் இங்குள்ள இந்துக்கள் எங்களை இந்த கிராமத்தில் வாழ விடமாட்டார்கள்” என அந்தக் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் கூறுகிறார். சில வாரங்களுக்கு முன்பு போபாலில் நடந்த இஸ்லாமிய நிகழ்ச்சியில் அந்த இளைஞர் கலந்துகொண்டதால், நோய்த்தொற்றுக்கான அறிகுறி இல்லையென்றாலும் டெல்லியிலுள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயணன் மருத்துவமனையில் “Corona Suspect”ஆகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று போலீசார் உறுதிசெய்துள்ளனர்.
அலீயின் மீதான தாக்குதல் என்பது முஸ்லிம் சமூகத்தின் மீது இந்தியாவில் வளர்ந்துவரும் தாக்குதலுக்கான அறிகுறிதான். முஸ்லிம்கள் வேண்டுமென்றே இந்து சமூகத்துக்குள் கொரோனாவைப் பரப்புவதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டு தீவிரமாக சமூகத்தில் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
ஏற்கனவே சிறுபான்மைச் சமூகம் தாக்குதலுக்கு உள்ளாகியே வருகிறது. சில வாரங்களுக்கு முன்புதான் டெல்லி வன்முறையில் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். தற்சமயம் இந்தியா முழுக்க முஸ்லிம்களின் வியாபாரங்கள் முடக்கப்படுகின்றன, நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வலர்கள் “கொரோனா தீவிரவாதிகள்” எனத் தூற்றப்படுவதோடு, உணவிலும் தண்ணீரிலும் அவர்கள் எச்சில் துப்பி வைரசைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டப்படுகின்றனர். டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் சில பகுதிகளில் முஸ்லிம்கள் உள்ளே வரக்கூடாது என சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் தெற்கு டெல்லியில் நடந்த தப்லீக் நிகழ்ச்சிதான் நாடு முழுக்க கொரோனா வைரஸ் பரவக் காரணம் என காவல்துறையும் அரசும் பொறுப்புச் சாட்டியபோதே இப்படியான பிரச்னைகள் மேலெழுந்தன. நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர் உட்பட 8000 பேர் கலந்துகொண்ட அந்த நிகழ்வுக்கு டெல்லி அதிகாரிகள் அனுமதியளித்திருந்தனர். அதில் கலந்துகொண்டோருக்கு எதிர்பாராத விதமாய் கொரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அங்கிருந்து இந்தியாவின் பல நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பரவியது.
நாடு முழுக்க காவல்துறை அந்த அமைப்புடன் தொடர்பிலிருந்தோரைச் சுற்றிவளைக்க உத்தரவிட்டது. தற்போது வரை தப்லீக் அமைப்பின் உறுப்பினர்கள், அவர்களுடன் தொடர்புகொண்டவர்கள் உட்பட சுமார் 27,000 பேர் 15 மாநிலங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். டெல்லி நிகழ்வில் கலந்துகொண்டோர் குறித்த தகவல்களைத் தெரிவிப்போருக்கு உத்தர பிரதேச போலீசார் 10,000 ரூபாய் வரை சன்மானம் வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியதற்கு தப்லீக் அமைப்பையே முதன்மையாகக் குறைகாண்பது குறித்து இந்திய விஞ்ஞானிகள் கூறும்போது, “கிடைக்கக்கூடிய தரவுகள் அந்த ஊகத்தை ஆதரிப்பதாக அமையவில்லை” என்று தெரிவித்திருக்கின்றனர். இந்தியாவில் கொரோனா பரிசோதனை ரொம்பவும் குறைவாக இருக்கும்போது, அரசின் ஆணைக்கிணங்க அதிக பரிசோதனைகள் தப்லீக் அமைப்பினர் மீதே நடத்தப்பட்டதாகவும் அதனால் எண்ணிக்கை பெரிதும் திசை திருப்பப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், அந்தப் பரிசோதனை முடிவுகளை ஆளும் இந்து தேசியவாதக் கட்சியான பாஜக-வினுடைய உறுப்பினர்கள் கையிலெடுத்துக்கொண்டு, தப்லீக் ஜமாத்தினர் இஸ்லாமிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக மில்லியன் கணக்கானவர்களுக்கு நோய்த்தொற்றச் செய்யும் “கொரோனா பயங்கரவாதத்தை” மேற்கொண்டுள்ளனர் என்று பரப்புரை செய்துவருகின்றனர்.
மூத்த பாஜக தலைவர் தப்லீக் ஜமாத் “தாலிபானிய குற்றம்” செய்ததாகக் கூறியதோடு, அந்த அமைப்பு உறுப்பினர்களை ”கொரோனா நோயாளிகள் எனும் போர்வையில் மனித வெடிகுண்டுகள்” என்றும் குற்றம் சாட்டினார். இன்னும் ஒருபடி மேலே சென்று தப்லீக் அமைப்பின் தலைவர்களைத் தூக்கிலிடவும் சுட்டுத்தள்ளவும் வேண்டும் என்றார். வெறுப்புப் பேச்சுகளுக்கு அவப்புகழ்பெற்ற கபில் மிஷ்ரா, “தப்லீக் ஜமாத்தினர் மருத்துவர்கள் மீதும் பிற மருத்துவ ஊழியர்கள் மீதும் எச்சில் துப்புகிறார்கள். அவர்களுடைய நோக்கம் தங்களால் முடிந்த அளவு பலரை கொரோனா தொற்று ஏற்படுத்திக் கொல்வதுதான்” என ட்வீட் செய்தார்.
இந்நிலையில், தப்லீக் ஜமாத்தினர் தனிமைப்பட (Quarantine) மறுக்கின்றனர், மருத்துவமனை ஊழியர்களைத் தொந்தரவு செய்கின்றனர், சிறுநீரை பாட்டிலில் நிரப்பி இந்துக்களின் மீது வீசுகின்றனர் என்றெல்லாம் பல போலிச் செய்திகள் வேகவேகமாக வெளியானாலும் அவை உடனுக்குடன் பொய்யென நிரூபிக்கப்பட்டன. எனினும், ட்விட்டரில் கொரோனா ஜிஹாத், கொரோனா தீவிரவாதம், கொரோனா தப்லீக் வெடிகொண்டு போன்ற ஹேஷ்டேகுகள் ட்ரண்டாக்கப்பட்டன. (வடமாநில) மையநீரோட்ட ஊடகங்களும் தப்லீக் அமைப்பினரை “சூப்பர் ஸ்பிரடர்ஸ்” என தொடர்ச்சியாக முழங்கின.
டெல்லி சிறுபான்மை நல அமைச்சகத்தின் தலைவர் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான் கூறும்போது, தப்லீக் அமைப்பினர் தொலைநோக்கில்லாமல் செயல்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். அத்தோடு, “அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் பிற மத அமைப்புகளும் கொரோனா வைரசுக்கான தடைகளை மீறி பெரும் எண்ணிக்கையில் கூடியதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன” என்றார். மேலும், “ஒட்டுமொத்த கவனமும் முஸ்லிம்கள் மீதே திருப்பிவிடப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களில் நாடு முழுக்க முஸ்லிம்கள் தாக்கப்படுவது புதிய உத்வேகத்தைப் பெற்றிருப்பதைக் காண்கிறோம். முஸ்லிம்களை சமூக விலக்கு செய்வது குறித்த பேச்சுகள் நிலவுகின்றன. பல்வேறு பகுதிகளில் இந்துத்துவ அமைப்புகளாலும் சிலசமயம் காவல்துறையாலும் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார்.
கர்நாடகாவில் பல்வேறு தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. பாஜக எம்.பி ஆனந்த் குமார் ஹெக்டே தப்லீக் அமைப்பினரை தீவிரவாதிகள் என்று கூறினார். அந்த சமயத்தில் ஒரு ஆடியோ பரவலாக வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டது. அதில் முஸ்லிம் பழ வியாபாரிகளையும் காய்கறி விற்பவர்களையும் தங்களின் பகுதிகளில் அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர்கள் அதன் மூலம் கொரோனாவைப் பரப்புகிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.
கர்நாடகாவின் தசாரஹல்லி மாவட்டத்தில் ஏழைகளுக்கு உணவளிக்கும்போது சையது தபரீஷ் என்ற இளைஞர், அவரின் அம்மா ஸரீன் தாஜ் உட்பட 7 பேர் உள்ளூர் பாஜக உறுப்பினர்களால் தாக்கப்பட்டார்கள். தபரீஷ் கூறுகிறார்: “சுமார் 20 உள்ளூர் பாஜக உறுப்பினர்கள் பைக்குகளில் வந்து எங்களிடம், ’நீங்கள் நிவாரணப் பொருட்கள் தரக்கூடாது. நீங்களெல்லாம் நோய்ப் பரப்பும் தீவிரவாதிகள். அந்தப் பொருட்களில் எச்சில் துப்பி தருவதும் தப்லீக் ஜமாத்திலிருந்து நீங்கள் வந்திருப்பதும் எங்களுக்குத் தெரியும்’ என சத்தம் போட்டனர்.”
இரண்டு நாட்கள் கழித்து சுமார் 25 பாஜக உறுப்பினர்கள் தபரீஷையும் அவரின் அம்மாவையும் பிற தன்னார்வலர்களையும் தாக்குவதற்காக கிரிக்கெட் மட்டையுடன் வாகனங்களில் பின்தொடர்ந்திருக்கிறார்கள். அவர்களுள் சிலரை போலீஸ் கைது செய்துள்ளது.
இதுவொரு தனித்த நிகழ்வல்ல. ஸ்வராஜ் அபியான் எனும் தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மனோகர் இளவார்தி கூறுகையில், கடந்த சில நாட்களாக ஊரடங்கின்போது தங்களுடன் சேர்ந்து நிவாரணப் பொருட்கள் வழங்கிய முஸ்லிம் தன்னார்வலர்கள் மீது பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவற்றுள் சில போலீசே நிகழ்த்தியதாகவும் தெரிவித்தார்.
இந்த வாரம் மங்களூரிலுள்ள சில பகுதிகளில் முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை என போஸ்டர் வைக்கப்பட்டிருக்கிறது. அலபே எனும் இடத்தில், “கொரோனா வைரஸ் முழுமையாக நீங்கும்வரை எந்த முஸ்லிம் வியாபாரிகளுக்கும் எங்கள் ஊருக்குள் வர அனுமதியில்லை” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதேபோல, இந்துக்கள் செறிவாக வாழும் அங்கனஹல்லி கிராமத்தில், எந்த இந்துவாவது ஒரு முஸ்லிமிடம் பழகி பிடிபட்டால் “500ல் இருந்து 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்” என அந்த கிராமப் பஞ்சாயத்து தலைவர் மகேஷ் எச்சரிக்கும் வீடியோ கார்டியனுக்குக் கிடைத்தது.
மதத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதற்கு கொரோனோ வைரஸ் சாக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பாஜகவின் இந்து தேசியவாத செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, முஸ்லிம்களை இந்தியாவில் இரண்டாம் தரக்குடிமக்களாக மாற்றுவதற்கு அரசு ஆதரவுடனான பிரச்சாரம் அதிகரித்து வருகிறது. இப்போது முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் சர்வ சாதாரணமாகிவிட்டன. சமீபத்தில் சிஏஏ-வுக்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி அந்தச் சட்டம் முஸ்லிம்களிடம் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி போராடியது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் நிலைமை எந்தளவு மோசமானது என்றால், இஸ்லாமோ ஃபோபியா உடனான வெறுப்புப் பேச்சை ஆராய்ச்சி செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த தெற்காசிய மனித உரிமை அமைப்பான ஈக்வலிட்டி லேப்ஸ், உலக சுகாதார அமைப்பிடம் (WHO), “கோவிட்-19 தொடர்பான வெறுப்புப் பேச்சுக்கும், மதச் சமூகங்களை அதனுடன் தொடர்புபடுத்தாமல் இருப்பதற்கும் மேலதிக வழிகாட்டுதல்களை வழங்குக” என்று ஓர் அறிக்கையை வெளியிட வலியுறுத்தும் அளவிற்குச் சென்றது.
“நூற்றுக்கணக்கான முஸ்லிம் வீடுகளும் கடைகளும் அழிக்கப்பட்ட டெல்லி படுகொலைகள் நிகழ்ந்து சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், அதிகரித்திருக்கும் போலித் தகவல்களும் ஊறு விளைவிக்கும் வகுப்புவாத மொழியும் வன்முறைக்கு வழிவகுத்துள்ளது” என்று ஈக்வாலிட்டி லேப்ஸின் நிர்வாக இயக்குனர் தேன்மொழி சௌந்தரராஜன் கூறியுள்ளார். மேலும், “மற்றொரு படுகொலைக்கான அச்சுறுத்தல் இன்னும் எஞ்சியிருக்கிறது” என அவர் எச்சரிக்கிறார்.
தமிழில்: நாகூர் ரிஸ்வான்.