குறும்பதிவுகள் 

காஷ்மீர் மீதான தாக்குதல் நிலத்தை அபகரிப்பதற்கானதா?

Loading

மக்கள் மீதான ஒரு தாக்குதலை, வெறுமனே நிலஅபகரிப்பு என்று பிழையாகப் புரிந்துகொள்ளக் கூடாது.

ஆஷ்விட்ஸ் வதை முகாமும்கூட 100% ஆதாயம் ஈட்டியதுபோலவே தெரிகிறது. அதற்காக, (சில இந்துக் கம்யூனிஸ்டுகளைத் தவிர) உலகில் பொருட்படுத்தத்தக்க யாருமே ‘ஆதாயத்திற்காகத்தான் நாஜிகள் ஆஷ்விட்ஸ் வதை முகாமை நடத்தினார்கள்’ என்று வாதிட மாட்டார்கள்.

தற்போது இந்து நாஜிகள் காஷ்மீரை நிர்வாக ரீதியில் பலவாகப் பிளப்பது, பெருமளவில் மக்கள்தொகை விகிதாச்சாரத்தை மாற்றியமைப்பது ஆகியவற்றைத் திட்டமிடுகிறார்கள்; வரவிருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தம்முடைய நோக்கத்திற்கேற்ப திரிப்பதற்கு ஆயத்தமாகிறார்கள் என்பதுடன், வளர்ச்சித் திட்டங்களையும் வகுத்து வருகிறார்கள். கிட்டிய எதிர்காலத்தில் இவை தொடர்பாக அரசின் பொருளாதாரக் கொள்கைப் பிரகடனங்களோ, அம்பானியின் வியாபாரத் திட்ட அறிக்கைகளோ வெளிவருகையில் நம்முடைய அறிவுஜீவிகள், தாம் ஏதோ பெரியதொரு கண்டுபிடிப்பை நிகழ்த்திவிட்டதைப் போன்று நடந்துகொள்வார்கள். நாம் எல்லோரும்கூட பின்வருமாறு ஒப்பிக்கும்படி எதிர்பார்க்கப்படுவோம்: “அட பைத்தியமே, எல்லாம் பொருளாதாரம்தான்!”

காரண காரியத் தொடர்பு பற்றியும், எது சாரம் – எது உடன்விளைவு என்பது பற்றியும் பொறுப்பற்ற விதத்தில் பேசுவதில் இந்துக் கம்யூனிஸ்டுகள், இந்து நாஜிகளுக்கு எவ்விதத்திலும் சளைத்தவர்களில்லை.

சில பழங்குடி இனக்குழுக்கள் வழமையான இடைவெளிகளில் தம்முடைய திருவிழாக்களின்போது செய்வதுபோல், நீங்கள் உங்களுடைய செல்வங்களையும் உடைமைகளையும் காரணமே இல்லாமல் எரித்துச் சாம்பலாக்கினால்கூட, அதிலும் ஒரு பொருளாதாரப் பரிமாணம் கண்டிப்பாக சம்பந்தப்பட்டு இருக்கும். அறுதியான பகுப்பாய்வில் Material factor எனும் பொருளாயதக் காரணிதான் (குறுகிய பொருளிலான பொருளாதார [economic] காரணி அல்ல) தீர்மானகரமானது என்றாலும், மனிதர்கள் ஆதாயம் அல்லது உடைமை ஈட்டுதல் எனும் அத்தியாவசியத்தைக் கடந்துசெல்வதை ஒரு குறிப்பிட்டளவு அனுமதிப்பதாகவே பொருளாதார அடிக்கட்டுமானம் எப்போதும் அமைந்திருக்கிறது. நம் உடல்கள் ஆரோக்கியமாக இருக்கும்போது, அவற்றை நம்மால் முற்றாக மறந்திருக்க முடிவதை ஒத்தது இது.

பொருளாதாரத் தர்க்கத்தை மீறிச் செல்வதற்கு அல்லது அதற்கு எதிராகவேகூட செல்வதற்கான ஒரு உச்ச அளவான உதாரணம்தான் நாஜி சிந்தனை. அதற்காக, அவர்களிடம் பொருளாதாரம் என்ற ஒன்றே இருக்காது என்றோ, அதனை அவர்கள் திட்டமிடமாட்டார்கள் என்றோ அர்த்தமில்லை. நாஜிகள் ஹோலோகாஸ்ட் இனப்படுகொலைகளின்போது கொல்லப்பட்டவர்களின் தங்கப்பற்களைப் பிடுங்கி எடுத்ததுபோன்று, அல்லது பலியாட்களை கடுமையாக வேலை வாங்கியே சாகடித்ததுபோன்று, அல்லது போர்களின்போது பெண்களை பலாத்காரம் செய்ததுபோன்று இந்து நாஜிகளும் தம்முடைய குரூரமான கொள்கைகளின் வழியாக ஆதாயம் ஈட்டலில் ஈடுபடவே செய்கிறார்கள். அதற்காக, அவர்கள் இதையெல்லாம் வெறும் பணத்திற்காகவே செய்கிறார்கள் என்று அர்த்தமில்லை.

மீண்டும் சொல்கிறேன்: காஷ்மீரில் நடந்துகொண்டிருப்பது மக்கள் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதலின் தொடக்கமே ஒழிய, வெறும் நிலஅபகரிப்பு அல்ல. நிலத்தை அபகரிப்பது அந்த மக்களைத் துன்புறுத்துவதற்குத்தானே தவிர, நிலத்தை அபகரிப்பதற்காக அந்த மக்கள் துன்புறுத்தப்படவில்லை. முக்கியத்துவத்தைப் பொறுத்தவரை, இரண்டும் வெவ்வேறானவை. பாலஸ்தீனத்தின் நிலைமை இதற்கு நேர் எதிரானது.

(மூலம்: தோழர் சிட்டிபாபுவின் முகநூல் பதிவு)

(தமிழில்: உவைஸ் அஹமது)

Related posts

Leave a Comment