கட்டுரைகள் 

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 6

Loading

மக்களை ‘காஃபிர்கள்’ என்று அழைப்பதில் மிகவும் தளர்வான, தாராள போக்கினை கைக்கொள்வதே ‘தக்ஃபீர்’ என்றும், அதனைச் செய்பவர்களே ‘தக்ஃபீரிகள்’ என்றும் நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம்.

மிக வெளிப்படையாகவே இறைவனை நிராகரிப்பவர்களுடன் இணைத்து, முக்கியமான சில விடயங்களில் தமக்கு மாற்றமான புரிதலைக் கொண்ட முஸ்லிம்களையும் சகட்டுமேனிக்கு ‘காஃபிர்கள்’ என்று அழைப்பதே இத்தக்ஃபீரிகளின் பொதுப் பண்பாக இருந்து வருகிறது.

இவ்வாறு கட்டற்ற விதத்தில் பெருந்திரளான மக்களை ‘காஃபிர்கள்’ என்று பிரகடனப்படுத்துவதில் இந்த ISIS உள்ளிட்ட தக்ஃபீரிகள் வரலாற்றிலேயே புதியதொரு உச்சத்தை எட்டியிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். தம்மைத் தவிர ஏறக்குறைய அனைவர் மீதும் இவர்கள் தக்ஃபீரை பிரகடனம் செய்கிறார்கள்.

இத்தொடரின் ஆரம்பப் பகுதியில், ISIS ஆதரவாளர்கள் சிலர் “அப்படி யார் யாரையெல்லாம் ISIS தக்ஃபீர் செய்திருக்கிறது என்று சொல்ல முடியுமா?” என்ற மிகவும் ‘கடினமானதொரு’ கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

(நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல் எந்தக் கேள்விக்கு, எப்போது பதிலளிப்பது என்ற தெரிவினை நாம் தீர்மானிப்பதை வைத்து, ஒருவேளை இந்தக் ‘கொள்கைவாதிகள்’ குறைந்தபட்சம் சில கேள்விகளேனும் தப்பியதே என்று உள்ளுக்குள் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கக் கூடும். பாவம், உங்கள் நிம்மதிக்கு ஆயுள் குறைவு. ஒன்று மட்டும் நிச்சயம். இத்தொடரின் முடிவில், ISIS உள்ளிட்ட தக்ஃபீரிகளின் ‘வலுவான’ வாதங்கள் ஒன்று கூட தப்பிப் பிழைத்திருக்காது என்பதை எல்லோரும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! )

“அப்படி யார் யாரையெல்லாம் ISIS தக்ஃபீர் செய்திருக்கிறது என்று சொல்ல முடியுமா?” என்ற கேள்விக்கு எப்போதும் எளிமையான பதில் இதுவாகத்தான் இருக்க முடியும்:
அதாவது, “ISIS-ஐப் போன்றே சிந்திக்காத, அவர்கள் ஏற்படுத்தியுள்ள ‘இஸ்லாமிய’ ஆட்சியை சட்டபூர்வமானதென்று ஏற்காத அனைவரையும் அது நேரடியாகவோ மறைமுகமாகவோ ‘காஃபிர்கள்’ என்றே சித்தரிக்க முனைகிறது.”

“இது அவதூறு; ஆதாரம் தர முடியுமா?” என்று அவசரப்பட்டு கர்ஜித்து, அவமானப்பட வேண்டாம் என்று பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

‘நாங்கள் இன்ன இன்ன வகையினரை மட்டும்தான் ‘காஃபிர்கள்’ என்கிறோம்; அதில் எங்களுக்கு ‘மிகத் தெளிவான கொள்கை வழிப்பட்ட நிலைப்பாடு’ இருக்கிறது’ என்று கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் ஒரு நாற்பது அம்ச பட்டியலை போட்டு வைத்துக் கொண்டு திரிகிறார்கள் இவர்கள்.

அந்தக் கொள்கைத் தெளிவின் அழகினை நாம் இத்தொடரின் பல்வேறு இடங்களில் ஏற்கனவே தோலுரித்துக் காட்டியுள்ளோம். அதுவும் போக, தமக்கு ஆகாத முஸ்லிம்களை எல்லாம் இவர்கள் ஏதேனும் சாக்குபோக்கு சொல்லி ‘காஃபிர்கள்’ என்று பட்டம் கட்டிவிடுகிறார்கள் என்பதே நடைமுறை யதார்த்தம்.

முஸ்லிம்கள் தமக்கிடையே கருத்து வேறுபடுவதற்கும், ஒருவரையொருவர் மிகக் கடுமையாக விமர்சித்துக் கொள்வதற்குமான உரிமையை இஸ்லாம் மறுத்துவிடவில்லை. ஆனால் இத்தக்ஃபீரிகளின் பிரச்சினை என்னவென்றால், தமக்கு மாறுபட்ட புரிதல்கள் கொண்ட முஸ்லிம்கள் அனைவரையும் இவர்கள் ‘தக்ஃபீர்’ எனும் கண்ணாடி வழியே மட்டும்தான் பார்க்கிறார்கள்.

அதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், அவர்களை ‘முர்தத்’ என்றும் பிரகடனம் செய்து கொலை செய்வதற்கான சூழலை உருவாக்குகிறார்கள்.
‘ரித்தா’ என்றால் என்ன? ‘முர்தத்’ என்றால் யார்? என்பன பற்றியும், அது குறித்து நிலவும் சட்டவியல் தப்பபிப்பிராயங்கள் பற்றியும் பிறகொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன், இன்ஷா அல்லாஹ்.

இவர்களின் அதிகாரபூர்வ ஆங்கில இதழான ‘Dabiq’-ன் ஒரேயொரு வெளியீட்டில் (இதழ் 12, 1437 சஃபர்) இடம்பெற்றுள்ள இரண்டு கட்டுரைகளுக்குள் மட்டும் இவர்கள் எத்தனை பேருக்கு ‘காஃபிர்’ என்றும், ‘முர்தத்’ என்றும், ‘தாகூத்’ என்றும் பட்டம் கட்டியிருக்கிறார்கள் என்பதை இப்பதிவில் சுருக்கமாகத் தொட்டுக் காட்டவிருக்கிறேன்.

இக்கட்டுரைகளில் ‘காஃபிர்’ என்றும், ‘முர்தத்’ என்றும், ‘தாகூத்’ என்றும் புகழாரம் சூட்டப்பட்ட தனிநபர்களில் இருந்து துவங்குவோம்:

1. ஸைத்தூனா கல்வி நிலைய நிறுவனர் ஹம்சா யூசுஃப்
2. யாசிர் காழி
3. சுஹைப் வெப்
4. நக்ஷ்பந்தியா சூஃபி தலைவர் ஹிஷாம் கப்பானி
5. பிலால் ஃபிலிப்ஸ்
6. அப்துல்லாஹ் ஹாக்கிம் குவிக்
7. வலீத் பஸ்யூனி
8. ஹமாஸ் பிரதமர் இஸ்மாயில் ஹனியா
9. துருக்கி அதிபர் தையிப் அர்துகான்
10. ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் சையித் அலி காமினயி

பட்டியல் முடிந்துவிடவெல்லாம் இல்லை, எனினும் இத்துடன் போதுமாக்கிக் கொள்கிறேன் (அண்ணன் டயர்ட் ஆகிட்டேன்!).

மேற்கூறிய முஸ்லிம் தலைவர்கள் மீதும், அவர்களின் கருத்துக்கள் மீதும், செயற்பாடுகள் மீதும் கடுமையான விமர்சனங்களை எவரொருவரும் முன்வைக்க முடியும்.

எனினும், ISIS உள்ளிட்ட தக்ஃபீரிகளின் பிரச்சினை என்னவென்றால், இவர்கள் தம்முடன் முரண்படும் எல்லோரையும் ‘காஃபிர்’ என்றும், ‘முர்தத்’ என்றும், ‘தாகூத்’ என்றும் பட்டம் கட்டி அவர்களைக் கொலை செய்ய வேண்டுமெனத் தூண்டுகிறார்கள்.
அதில் முதல் கட்டுரைக்கு தலைப்பு என்ன தெரியுமா?!

“Kill the Imams of Kufr in the West”.

“மேற்குலகிலுள்ள காஃபிர் இமாம்களைக் கொல்லுங்கள்!”

அதற்கு, இரத்தம் தோய்ந்த கத்தியுடன் கூடிய கிராஃபிக்ஸ் டிசைன் வேறு.
ஆனாலும், நாம் இவர்களை ‘தக்ஃபீரிகள்’ என்று சொல்லக் கூடாது, ஆமாம்!

அடுத்ததாக, 15 பக்கங்கள் கொண்ட ஒரு முழுநீளக் கட்டுரையை “The murtadd Brotherhood” என்ற தலைப்பில் இஃக்வான் அல்-முஸ்லிமூனுக்கு என்றே ஒதுக்கியிருக்கிறார்கள்.
இஃக்வான் அல்-முஸ்லிமூன் இயக்கத்தை அறிமுகப்படுத்தும் அக்கட்டுரையின் முதலிரு பத்திகளை நீங்கள் கண்டிப்பாக வாசித்தே தீர வேண்டும். (இல்லையென்றால் ISIS ஆதரவாளர்கள் கோபித்துக் கொள்வார்கள்):

“கடந்த சில பத்தாண்டுகளில் நாசகார புற்றுக்கட்டி ஒன்று தோன்றி, வளர்ந்து உருமாறி, பரவி இருப்பதுடன், முழு உம்மத்தையும் அது மதத்துறப்பில் (ரித்தத்) மூழ்கடிப்பதற்கு முயற்சி செய்து கொண்டுள்ளது. எகிப்திய நகரமொன்றில் கி.பி. 1928-ல் துவங்கிய அந்தப் புற்றுக்கட்டி விரைவில் எகிப்தையும் தாண்டி ஷாம், ஈராக் தேசங்களுக்கும், அறுதியில் தாகூத்திய முர்ததுகளின் ஆக்கிரமிப்பிலுள்ள நாடுகள் பலவற்றுக்கும் பரவியது. அதன் பிறகு அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்குலகுக்கு உள்ளாகவும் பரவியது. எங்கெல்லாம் முஸ்லிம் சமூகங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் அது அவர்களின் விவகாரங்களை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு, இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாம் அல்லாதவொரு மதத்தை அவர்களிடம் விதைக்க முயற்சித்தது.

இந்தப் புற்றுக்கட்டியின் வழிகேடானது வரலாற்றில் தோன்றிய மிக மோசமான பிரபல வழிகேடுகளான ஜஹ்மிய்யா, முஃதஸிலா, மாதுரீதிய்யா, அஷரிய்யா உள்ளிட்ட அனைத்தையும் விஞ்சுவதாகும். அறிஞர்கள் மரணித்து விட்டதாலும்; பல நூற்றாண்டுகளாகவே ஃகலீஃபாக்கள் இல்லாது போய்விட்டதாலும்; உஸ்மானியர்களின் கரங்களால் சூஃபியிசம், கலாம் (வழிகேடான “இறையியல் விவாதங்கள்”), றஃயீ (ஹதீஸ்களுக்கு முரண்படும் பிழையான ‘ஃபிக்ஹு’ அபிப்பிராயங்கள்), கப்ரு வழிபாடு, நவீனத்துவம் போன்றவை பரவியதாலும்; பல முஸ்லிம் நாடுகள் மீதான சிலுவை காலனியாதிக்கத்தாலும் இந்தப் புற்றுக்கட்டி தான் சென்ற எல்லா நாடுகளிலும் எளிதாக காலூன்றிக் கொண்டது.

‘ஜமாஅத் இஃக்வான் அல்-முஸ்லிமூன்’ (முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு) என்றறியப்படும் அந்தப் புற்றுக்கட்டி கி.பி. 1928-ல் ஹசன் அல்-பன்னாவால் துவங்கப்பட்டது….”

இதன் பிறகு இஃக்வான்களின் வழிகேடு என்று பக்கம் பக்கமாக எழுதிக் குவித்திருக்கிறார்கள். கட்டுரையின் கடைசி வரிகளையும் வாசித்து விடுங்கள்:

“அதே போல் இஃக்வானிய முர்ததுகள், அவர்களின் சிலுவை எஜமானர்கள், இஃக்வான்களுடன் அணிசேர்ந்துள்ள றாஃபிழாக்கள் என எல்லோரும் இணைந்து இஸ்லாத்தை அழிக்க முனைகிறார்கள்; நவீன கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும் நபி ஈசா (அலை) உரைத்த ஏகத்துவத்துடன் என்ன விதமான சம்பந்தம் இருக்குமோ, அதே விதமான சம்பந்தம்தான் இவர்கள் சொல்லும் இஸ்லாத்திற்கும் நபிகளாரின் இஸ்லாத்திற்கும் உண்டு. இவர்கள் தம்முடைய அந்த மதத்தைக் கொண்டு நபிகளாரின் இஸ்லாத்தைப் பதிலீடு செய்ய முனைகிறார்கள். இவர்களின் பாதையில் இருக்கும் ஒரே தடைக்கல்லான (ISIS-ன்) ‘ஃகிலாஃபத்துக்கு’ ஹிஜ்ரத் செய்துவர வேண்டியது எல்லா முஸ்லிம்களின் மீதும் கட்டாயக் கடமையாகும்.

“(ISIS உடைய) ஃகிலாஃபத்தின் ஜிஹாதின் ஊடாக இந்த வழிகெட்ட முர்ததுக் கட்சிக்கு அல்லாஹ் முடிவு கட்டுவானாக! ஆமீன்!”

இவ்வாறு சகட்டுமேனிக்கு முஸ்லிம் அறிஞர்களையும், தலைவர்களையும், இயக்கங்களையும் இவர்கள் ‘காஃபிர்’ என்றும், ‘முர்தத்’ என்றும், ‘தாகூத்’ என்றும் முத்திரை குத்துவதுடன், அவர்களைக் கொலை செய்யத் தூண்டுவது இஸ்லாத்தின் அடிப்படையில் எப்படி மிகச் சரியானது என்பதை அதன் ஆதரவாளர்கள் ஐயத்திற்கிடமின்றி நிறுவி, நம்மை எல்லாம் அறியாமையிலிருந்து மீட்க வேண்டும் என்பதற்காக நான் பதிவை மேலும் நீட்டிச் செல்லாமல் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

Related posts

Leave a Comment