சமநிலையின் சூட்சுமம்
ஒவ்வொரு துறைக்கும் அதற்கென மனிதர்கள் இருக்கிறார்கள். இறைவன் இந்த உலகில் படைத்த அற்புதங்களில் ஒன்று, மனித வாழ்க்கை சீர்குலையாமல் நேரான பாதையில் பயணிக்க அவன் ஏற்படுத்தியுள்ள சமநிலையாகும். இங்கு ஒவ்வொன்றும் சரியான அளவில் இருக்கின்றது.
அல்லாஹ் மனிதர்களை ஒரே நிலையில் படைக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கேற்ப வெவ்வேறு திறமைகளை பெற்றிருக்கிறார்கள். ஒருவர் மற்றவருக்கு ஊழியம் செய்யும்விதமாக அவன் மனிதர்களின் வாழ்க்கையை அமைத்துள்ளான். அவர்களுக்கான பாதைகளையும் இலகுபடுத்தியுள்ளான். யாருக்கு எந்தப் பணி இலகுபடுத்தப்பட்டுள்ளதோ அந்தப் பணியை அவரால் மட்டுமே மனமொன்றி மிகச் சிறப்பாக செய்ய முடியும்.
இறைவன் ஏற்படுத்தியுள்ள இந்த சமநிலையைப் புரிந்துகொள்வதற்கு நுணுக்கமான அறிவெல்லாம் தேவையில்லை. தம்மைச் சுற்றிக் காணப்படுபவற்றை ஒருவன் சற்று கவனத்தோடு பார்த்தாலே அவனால் இந்த சமநிலையை எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.
இஸ்லாமிய மார்க்கத்தின் தனித்தன்மைகளுள் அதன் போதனைகளில், சட்டங்களில் காணப்படும் சமநிலையும் ஒன்றாகும். அவை மனித வாழ்வில் சமநிலையை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அவற்றை தம் வாழ்க்கையில் செயல்படுத்தும் மனிதன் சமநிலையான மனிதனாய் மிளிர்கிறான். எந்தவொன்றாலும் அவன் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுவிடுவதில்லை. ஒருபுறமாக அவன் சாய்ந்து விடுவதும் இல்லை. அவன் எல்லாவற்றையும் துறந்த துறவியாகவோ இச்சைகளால் வழிநடத்தப்படும் கொடிய விலங்காகவோ ஆகிவிடுவதில்லை.
இந்த உலகில் காணப்படும் சமநிலையும் இஸ்லாத்தில் காணப்படும் சமநிலையும் படைத்த இறைவனால் அன்றி வேறு யாராலும் ஏற்படுத்த முடியாதவை. மனிதனின் இயலாமைகளில் இதுவும் ஒன்று. அவனால் இப்படிப்பட்ட ஒரு சமநிலையை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது.
இயற்கையமைப்பில் காணப்படும் சமநிலை ஆச்சரியமூட்டக்கூடியது. ஆச்சரியமான முறையில் ஒன்று மற்றொன்றை முழுமைப்படுத்தக்கூடியதாகவும் வலுப்படுத்தக்கூடியதாகவும் ஒவ்வொன்றும் அதனதன் இடத்தில் மிகச்சரியாகப் பொருந்திப் போகக்கூடியதாகவும் இருக்கின்றது. இந்தச் சமநிலையை மீறி அதிகப்படியாக எந்தவொன்றும் நிகழ்ந்துவிடுவதில்லை.
மனிதர்களுக்கு வழங்கப்பட்ட வெவ்வெறு திறமைகளும் படித்தரங்களும் இந்தச் சமநிலையின் ஒரு பகுதிதான். எந்தப் பணிக்காக ஒருவர் இறைவனால் தேர்வு செய்யப்பட்டுள்ளாரோ அந்தப் பணியை அவரைத் தவிர வேறு யாராலும் சிறப்பாக நிறைவேற்ற முடியாது. ஒவ்வொருவரும் அவர்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகளை நோக்கி செலுத்தப்படுகிறார்கள்.
‘தற்செயல்கள்’ என்று எதுவும் இல்லை. அவற்றைக் குறித்து நாம் அறியாததால் ‘தற்செயல்கள்’ என்கிறோம். அவை நம் பக்கம் இழுத்துக் கொண்டு வரப்படுகின்றன அல்லது நாம் அவற்றின் பக்கம் இழுத்துச் செல்லப்படுகிறோம். நாம் அவற்றிற்கு உரியவர்கள். அவை நமக்கு உரியவை.
மாபெரும் இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருளிலும் உயிரிலும் காணப்படும் பிரமிப்பூட்டக்கூடிய இந்தச் சமநிலை மனித வாழ்வு நிச்சயம் நோக்கமுடையதுதான், அது வீணானது அல்ல என்பதை மௌன மொழியில் அறிவித்துக் கொண்டிருக்கிறது. அதற்குச் செவிகொடுப்பவர் அதனை செவியேற்கிறார். அதன் பக்கம் தன் பார்வையை செலுத்துபவர் அதனைப் பார்க்கிறார். மற்றவர்கள் கண்டும் காணாமல் கேட்டும் கேளாமல் கடந்து செல்கிறார்கள்.
இறைவனின் பண்புகளுக்கிடையே காணப்படும் சமநிலையைப் புரிந்துகொள்வதும் மிக அவசியமான ஒன்றாகும். அவனது அனைத்துப் பண்புகளினூடாக நாம் அவனை அணுகும்போது இந்த சமநிலையை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். அவன் கூறும் அறிவுரைகளிலும் இடும் கட்டளைகளிலும் எந்த முரண்பாடும் இல்லை என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.
இறைவன், தான் நாடியதைச் செய்யக்கூடியவன். அவனது நாட்டத்திற்குத் தடையாக எந்தவொன்றும் வந்துவிட முடியாது. அதே சமயத்தில் அவன் நீதியாளன். அடியார்கள்மீது சிறிதும் அநீதி இழைக்க மாட்டான். அவனது செயல்கள் மதிநுட்பமிக்கவை, நோக்கங்கள் நிறைந்தவை. வீணான எந்தவொன்றும் அவனிடமிருந்து வெளிப்படாது.
அவன், தான் நாடியவர்களை மன்னிக்கிறான், தான் நாடியவர்களைத் தண்டிக்கிறான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரக்கூடியவர்களை, தன் பக்கம் திரும்பக்கூடியவர்களை அவன் மன்னிக்கிறான். கர்வம் கொண்டு பாவத்தில் பிடிவாதமாக நிலைத்திருப்பவர்களை அவன் தண்டிக்கிறான்.
அவன் இந்த உலகில் சில நியதிகளை ஏற்படுத்தியுள்ளான். இவ்வுலகின் இயக்கங்கள் அந்த நியதிகளுக்கு உட்பட்டவை. அவனது நாட்டம் அவன் அமைத்த நியதிகளை செயலிழக்கச் செய்யலாம். அந்த நியதிகள் அவனது நாட்டத்திற்கு உட்பட்டவை.
அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். அவனால் செய்ய முடியாதது எதுவும் இல்லை. அனைத்தும் அவனது கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. நெருப்பிற்கும் சுடும் தன்மையை, நீரிற்கு குளிர்விக்கும் தன்மையை மற்றும் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தன்மையை அளித்தவன் அவனே. அவன் நாடினால் அவற்றின் தன்மைகளைப் போக்கிவிடவும் செய்வான். அவன் நாட்டமின்றி யாரும் யாருக்கும் பலனளிக்கவோ தீங்களிக்கவோ முடியாது.