கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சவூதி அரசு மக்காவை துஷ்பிரயோகம் செய்கிறது

Loading

சவூதி அரேபிய ஆட்சியாளர்களுக்கு முஸ்லிம் மக்களிடையே பெரும்பாலும் அங்கீகாரமும் அந்தஸ்தும் கிடைத்துள்ளதற்குக் காரணம், மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் கஅபாவையும் மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கவனித்துக் கொள்கின்றனர் என்பதே. மன்னர் சல்மானும், தனக்கு முன்வந்த மன்னர்களைப் போலவே, “காதிமுல் ஹரமைன் அஷ்-ஷரீஃபைன்” — “இருபெரும் புனிதப் பள்ளிவாசல்களின் அறங்காவலர்”, அல்லது இன்னும் சரியாக, “இரு புனித இறையில்லங்களின் சேவகர்” — என்று பட்டம் சூட்டிக் கொண்டுள்ளார்.

பணிவான இந்த அரச பட்டத்தைச் சூட்டிக்கொண்டுள்ள போதிலும், சவூதி மன்னராட்சி மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமின் பிரசங்க மேடையை அங்குள்ள இமாம்கள் மூலம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ஆட்சியாளர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் போற்றிப் புகழ்ந்து நியாயப்படுத்தவும், புனிதப்படுத்தவும் முனைந்துள்ளது.

பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலைக்குப் பிறகு, உலகமே இளவரசர் முஹம்மத் பின் சல்மானை குற்றவாளியாகப் பார்க்கும் இத்தருவாயில், சவூதி மன்னராட்சி மீண்டும் மஸ்ஜிதுல் ஹராமைப் பயன்படுத்தி, பட்டத்து இளவரசரை நியாயப்படுத்திப் பூஜிக்கிறது. எனினும் இந்நடவடிக்கை, இதுவரை இல்லாத அளவுக்கு அந்த ஆட்சியின் அங்கீகாரத்தையும், மக்கா-மதீனா மீதான அதன் கட்டுப்பாட்டையும் தார்மீக ரீதியில் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

அக்டோபர் 19 அன்று, மஸ்ஜிதுல் ஹராமின் அரசு-நியமன இமாமும் ராஜ்யத்தின் மிக உயர்ந்த மார்க்கத் தலைமையுமான ஷெய்கு அப்துர்ரஹ்மான் அஸ்-சுதைஸ் எழுதி வாசிக்கப்படும் ஓர்  ஜும்ஆ பிரசங்கத்தை ஆற்றினார். மஸ்ஜிதுல் ஹராமில் ஆற்றப்படும் ஜும்ஆ பிரசங்கங்கள் நேரடி ஒளிபரப்பாக கேபிள் அலைவரிசைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் காட்டப்படுகின்றன, அவற்றைக் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் பயபக்தியுடன் பார்க்கின்றனர், அவை மக்களிடையே பாரிய ஒழுக்க, ஆன்மீக அங்கீகாரம் கொண்டுள்ளன.

இந்நிலையில், இமாம் சுதைஸ் தான் வீற்றிருக்கும் சங்கையான இடத்தின் புனிதத்தைக் களங்கப்படுத்தும் விதமாக உரையாற்றி இருக்கிறார். ஒவ்வொரு நூற்றாண்டிலும் இறைவன் ஒரு முஜத்திதை, மாபெரும் சீர்திருத்தவாதியை, அனுப்பி சன்மார்க்கத்தைக் காக்கிறான் அல்லது புத்துயிரூட்டுகிறான் என்ற கருத்தில் உள்ள நபிமொழியை அதில் மேற்கோள் காட்டிப் பேசினார். பிறகு அதை விளக்கும் வண்ணமாக, ஒவ்வோர் யுகத்திலும் நிலவும் அதற்கேயுரிய சவால்களைச் சந்தித்துத் தீர்வளிக்க முஜத்தித் தேவை என்று குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து, பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் மீது புகழ்மழை பொழியத் தொடங்கிவிட்டார். அவர் முஸ்லிம்களுக்கு அனுப்பப்பட்ட இறை அருட்கொடை என்றெல்லாம் கூறி, ஒவ்வொரு காலகட்டத்திலும் இஸ்லாமிய மார்க்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க அல்லாஹ் அனுப்புகிற முஜத்தித்களில் ஒருவர் அவர் எனச் சூசகமாகச் சுட்டினார். “இந்த அருள்வாய்ந்த பூமியில் நடந்தேறும் சீர்திருத்தமும் நவீனமயமாக்கலும்… அதன் இளமையான, இலட்சியத் துடிப்பான, இறைத் தூண்டுதல் பெற்ற சீர்திருத்தவாதியுமான பட்டத்து இளவரசர் தரும் கரிசனையிலும் கவனிப்பிலும் முன்னேற்ற நடை போடுகிறது. அவரது புதுமையான, மதிநுட்பம் கூடிய நவீனத்துவப் பார்வையின் வழிகாட்டலால் அனைத்து அச்சுறுத்தல்களும் நெருக்கடிகளும் தோல்வியைச் சந்திக்கின்றன” என்று பகிரங்கமாகப் பறைசாற்றினார், இமாம் சுதைஸ். அப்போது அவர் நின்றிருந்த இடம், அண்ணல் நபி (ஸல்) இறுதிப் பேருரை ஆற்றிய அதே பிரசங்க மேடையாகும்!

கஷோக்ஜியின் கொலைச் சம்பவத்துக்குப் பின் எழுந்துள்ள விவாதம் பற்றி குறிப்பிட்ட இமாம் சுதைஸ், தப்பெண்ணம் கொண்ட ஊடக வதந்திகளையும், ஜாடை மாடையான பழிசுமத்தல்களையும் நம்பி இந்த மாபெரும் முஸ்லிம் தலைவரைச் சந்தேகிக்க வேண்டாம் என்று எச்சரித்தார். பட்டத்து இளவரசருக்கு எதிரான சூழ்ச்சிகளின் நோக்கம் உண்மையில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிப்பதே என்று சித்தரித்தார். “அவரது நவீனமயமாக்கல் சீர்திருத்தங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அனைத்தும் மண்ணைக் கவ்வும் என்பது மட்டுமல்லாமல், அவை சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பவை” என்று மேலும் எச்சரித்தார்.

“இந்த அருள்வாய்ந்த பூமிக்கு” எதிரான தாக்குதல்கள், நூறு கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை அவமானப்படுத்துகிற, ஆத்திரமூட்டுகிற செயலே என்று கூறி மக்களை எச்சரித்தார். அத்தோடு நிற்கவில்லை, அவர் இளவரசர் முஹம்மதை “முஹத்தஸ்” — “தனிச்சிறப்பு வாய்ந்தவர்” — என்ற சொல்லால் வர்ணித்தார். “முஹத்தஸ்” என்பது, நபித்தோழரும் இரண்டாம் இஸ்லாமிய கலீபாவுமான உமர் இப்னு கத்தாபுக்கு அண்ணல் நபி (ஸல்) சூட்டிய பட்டப்பெயர்.  இதன் மூலம், இமாம் சுதைஸ் சவூதி இளவரசரை கலீபா உமருக்கு ஒப்பாகச் சித்தரிக்க முயன்றுள்ளார்.

மேலும், இஸ்லாத்தின் எதிரிகள், பழிதூற்றுபவர்கள், நயவஞ்சகர்கள் எல்லோரும் சேர்ந்து இளவரசர் முஹம்மதுக்கு எதிராகப் பிண்ணும் சர்வதேசச் சதிவலைகளிலிருந்து அவரைப் பாதுகாக்குமாறு இறைஞ்சிவிட்டு, இறுதியாக, புனிதத் தலங்களுக்கும் இஸ்லாத்துக்கும் பாதுகாவலர்களும் சேவகர்களுமான மன்னருக்கும் விசுவாசமான பட்டத்து இளவரசருக்கும் கீழ்ப்படிந்து ஆதரவு அளிப்பது அனைத்து முஸ்லிம்கள் மீதும் தார்மீகக் கடமை எனக் கூறி முடித்தார்.

சவூதி அரேபியாவின் புனித நகரமான மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராமின் மையத்தில் அமைந்துள்ள இஸ்லாத்தின் மிகப் புனிதத் தலமான கஅபாவைச் சுற்றி ஹாஜிகள் வலம் வருகின்றனர். (நன்றி: முஸ்தபா சிப்ட்சி/அனடோலு ஏஜன்சி, மூலம்: கெட்டி இமேஜஸ்)

சவூதி மார்க்க அறிஞர்கள் மன்னராட்சிக்கு ஊழியம் புரியும் பணியில் இதுவரை இவ்வளவு அப்பட்டமாக நபிகள் நாயகத்தின் (ஸல்) பிரசங்க மேடையை ஒரு கருவியாகப் பயன்படுத்தத் துணிந்ததில்லை. மஸ்ஜிதுல் ஹராமின் எந்தவொரு இமாமும் இதுவரை எவ்வொரு சவூதி ஆட்சியாளரையும் ‘இக்காலத்து முஜத்தித்’ என்று பட்டம் சூட்டியதோ அல்லது அவ்வாறு சூசகமாகச் சுட்டியதோ இல்லை.

மக்காவிலும் மதீனாவிலும் பிரசங்கங்கள் எழுதி வாசிக்கப்படுகின்றன, அவற்றுக்கு சவூதிப் பாதுகாப்புப் படையின் முன்அங்கீகாரம் அவசியம். மன்னரே மஸ்ஜிதுல் ஹராமுக்கும், மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவிக்கும் தலா ஒரு முதன்மை இமாமை நியமிக்கிறார், பிறகு இவர்களுக்குத் துணை இமாம்கள் பலர் அரசால் நியமிக்கப்படுகின்றனர், அவர்கள் சுழற்சி முறையில் தொழுகை நடத்துவதையும், பிரசங்கங்கள் ஆற்றுவதையும் செய்து வருகின்றனர்.

பல தசாப்தங்களாகவே, மக்காவிலும் மதீனாவிலும் ஆற்றப்படும் பிரசங்கங்கள் எளிய பயபக்தி போதனைகளாகவும், வறட்டுக் கொள்கைகளைப் பேசுவதாகவும், ஒரே மாதிரியானவையாகவும் அமைந்துள்ளன. அவை எப்போதும் சவூதி அரச பரம்பரையினருக்கான பிரார்த்தனையுடன் முடிவுறும் என்றபோதிலும், இமாம்கள் ஒருபோதும் மன்னராட்சிக்குப் புனிதப் பண்புகளைக் கற்பிக்க மாட்டார்கள், மாறாக அத்தகைய ஆட்சியாளர்கள் இறைவனுக்கு அடிபணிவதைப் பொறுத்தே நாம் அவர்களுக்கு அடிபணிய வேண்டும் என்று வலியுறுத்துவார்கள்.

இளவரசர் முஹம்மது அதிகாரத்துக்கு வந்தது முதல் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எதிர்ப்பின் அறிகுறியைக் காட்டியதற்காக நூற்றுக்கணக்கான பிரதான சவூதி இமாம்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், இதில் மஸ்ஜிதுல் ஹராமின் முன்னாள் இமாம்களான ஷெய்கு ஸாலிஹ் அல்-தாலிப் மற்றும் ஷெய்கு பந்தர் பின் அஜீஸ் பிலிலா போன்ற மிகப் பிரபலமான, செல்வாக்கு மிகுந்த மார்க்கச் சட்ட மேதைகளும் அடங்குவர். சவூதி அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், சென்ற ஆண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்ட பிரபல மார்க்க அறிஞரும் சீர்திருத்தவாதியுமான சல்மான் அல்-அவ்தாவுக்கு மரண தண்டனை கோரி வாதிட்டுள்ளனர். சில செய்திகளின் படி, 2016 ஏப்ரலில் கைதான ஷெய்கு சுலைமான் தாவீஷ் அவர்கள் சவூதியில் சித்ரவதைக்கு ஆளாகி சிறையிலேயே இறந்துவிட்டார் எனக் கூறப்படுகிறது.

பட்டத்து இளவரசரின் விருப்பங்களுக்கு இணங்கிநடக்கச் சம்மதித்துள்ள இமாம்கள் மட்டுமே மக்காவின் மஸ்ஜிதுல் ஹராமிலும், மதீனாவின் மஸ்ஜிதுந் நபவியிலும் தொழுகை நடத்துவதற்கும் பிரசங்கங்கள் ஆற்றுவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தோன்றுகிறது. ஷெய்கு அப்துல் அஜீஸ் அர்-ரயீஸ் போன்ற சில செல்வாக்கு மிக்க சவூதி அறிஞர்கள் வரம்புகடந்து பேசியுள்ளனர். உதாரணமாக இவ்வறிஞர் தனது உரையில், சவூதி ஆட்சியாளர் “தினமும் அரை மணிநேரம் தொலைக்காட்சியில் தோன்றி பொதுமக்கள் முன்னிலையில் விபச்சாரம் செய்தாலும் கூட, மக்களை அந்த ஆட்சியாளரின் பால் ஒன்றுகூட்ட வேண்டுமே தவிர, அவருக்கு எதிராகத் தூண்டிவிடக் கூடாது” என்று கூறியுள்ளார்.

இமாம் சுதைஸின் சமீபத்தைய பிரசங்கம், முஸ்லிம்களுக்கு ஒருவிதக் கெடு விதிப்பதாக உள்ளது. பட்டத்து இளவரசரை இறைவன் அருளிய சீர்திருத்தவாதியாக ஒப்புக்கொண்டு அவரது சொல், செயல் எல்லாவற்றையும் நம்பி ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லாவிட்டால் நீங்கள் இஸ்லாத்தின் எதிரிகளாகக் கருதப்படுவீர்கள் என்ற பாணியில் அது அமைந்துள்ளது. இந்தப் பிரசங்கத்தை முஸ்லிம் அறிஞர்கள் முக்கியமாகச் சமூக ஊடகங்களில் சிறுமைப்படுத்திக் கோபக் கணைகளை வெளிப்படுத்தியுள்ளனர். பற்பல அரபி மொழி நகைச்சுவை நிகழ்ச்சிகளும், யூடியூபில் வரும் அரட்டைக் காட்சிகளும் இதைக் கிண்டலடித்துக் கண்டித்துள்ளனர்.

கஷோக்ஜியின் படுகொலை பற்றி இளவரசர் முஹம்மதின் அப்பட்டமான பொய்க் கதையை பணிந்து ஏற்றுக்கொள்ளுமாறும்; ஏராளமான, மதித்துப் போற்றப்படுகிற இஸ்லாமிய அறிஞர்களின் சிறைவைப்பு உட்பட, எதிர்த்துப் பேசும் பலரையும் கடத்துவது, கடுங்காவலில் வைப்பது, கொடுமைக்கு ஆளாக்குவது போன்றவற்றை இயல்பாக எடுத்துக்கொள்ளுமாறும்; ஏமனில் அவரது ஈவிரக்கமற்ற கொடூரப் போர் தொடுப்பையும், அரபுலகில் மக்களாட்சிக் கனவுகளுக்குக் குழிதோண்டும் நடவடிக்கைகளையும், எகிப்தில் அடக்குமுறைச் சர்வாதிகாரத்துக்குத் தரும் ஆதரவையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுமாறும் மஸ்ஜிதுல் ஹராமின் இமாம் முஸ்லிம்களுக்கு அறைகூவல் விடுக்கிறார், மேலும் பட்டத்து இளவரசரை இறைவன் அனுப்பிய சீர்திருத்தவாதி என்றும் சித்தரிக்கிறார், இந்த அவலத்தை நாம் என்னவென்று சொல்வது?! மக்காவில் நபிகளாரின் (ஸல்) புனிதப் பிரசங்க மேடைக்குக் களங்கம் விளைவிக்கப்படுகிறது.

மக்கா, மதீனாவின் ஆட்சிக் கட்டுப்பாடு மூலம் மார்க்க அறிஞர்களின் பீடமும், மன்னராட்சி அரசும் எண்ணெய் வளத்தில் கொழிக்கும் பணத்தை வீசியெறிந்து அந்த ராஜ்ய எல்லைகளுக்கு அப்பால் தங்கள் மேலோட்டமான, இறுக்கமான இஸ்லாமிய விளக்கமுறைகளின் செல்வாக்கை விரிவுபடுத்த முனைகின்றனர். இந்தப் பட்டத்து இளவரசரும், இவருக்கு இணங்கிநடக்கும் சவூதியின் மார்க்க அறிஞர்களும் உயர்த்திப் பிடிக்கும் குறிப்பிட்ட வகையான அந்த விளக்கமுறைக்கு பெரும்பாலான முஸ்லிம்கள் ஆதரவு அளிப்பதில்லை. அவர்கள் எப்போதும் சகிப்புத்தன்மை மிக்கதும், மனசாட்சிக்கு இடம்கொடுப்பதுமான அறநெறி இஸ்லாத்தையே விரும்புகின்றனர்.

கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறைச் செயல்களுக்கு வெள்ளையடிக்க மஸ்ஜிதுல் ஹராமை பயன்படுத்துவதன் மூலம், இளவரசர் முஹம்மது மக்கா-மதீனாவிலுள்ள புனிதத் தலங்கள் மீதான சவூதிக் கட்டுப்பாடு மற்றும் அறங்காவலுக்கான அங்கீகாரத்தையே கேள்விகுள்ளாக்கி இருக்கிறார்.

(காலித் எம். அபூ எல் பழ்லு, லாஸ் ஏஞ்சலஸின் கலிபோர்னியா பல்கலையில் சட்டப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்; மேலும், “இறைவனுடன் தர்க்கம்: நவீன யுகத்தில் ஷரீஆவின் மீட்டெடுப்பு” என்ற படைப்பை இயற்றியுள்ளார்)

(நன்றி: தி நியூயார்க் டைம்ஸ்)

(தமிழில்: புன்யாமீன்)

Related posts

Leave a Comment