கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்?

Loading

[Lipstick Under My Burkha என்ற இந்திப் படத்தை விமர்சித்து E. P. றஹ்மத் எழுதிய கட்டுரை Round Table India தளத்தில் பிரசுரம் ஆகியிருந்தது. அதன் தமிழாக்கத்தை கீழே தருகிறோம்.]

“லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா” எனும் (இந்தித்) திரைப்படம் “பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்காகவே” எடுக்கப்பட்ட ஒன்று. “ஒடுக்கப்பட்ட பெண்” என்பதற்கான சவர்ண வரையறைகளைக் கொண்ட பிரச்சாரத் திரைப்படம் அது. பார்ப்பன ஆணாதிக்கக் கதையாடல்களின் வழியே தனிப்பட்ட சுதந்திரத்தையும் பாலியல் விடுதலையையும் உறுதிபடுத்திக் கொள்ளும் பெண்களின் கதையை படம் சித்தரிக்கிறது. அத்தோடு அதில் இஸ்லாமோ ஃபோபியாவையும் நிரப்பிவிடுவதன் மூலம் முஸ்லிம் ஆண்களை ஒடுக்குமுறையின் குறியீடாகவும், பெண் வெறுப்பின் குறியீடாகவும் காட்டியிருக்கிறது.

பெண்கள் தொடர்பான இந்த சர்ச்சைக்குரிய திரைப்படத்தை உங்களில் பலர் பார்த்திருக்கலாம். போபாலில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் வாழும் நான்கு பெண்களின் வாழ்க்கை சம்பந்தமான படம் இது. அவர்களின் தனிப்பட்ட மற்றும் பாலியல் சுதந்திரம் சார்ந்த வேட்கைகளையும், அவற்றுக்கான தடைகளைத் தகர்ப்பது குறித்தும் அது பேசுகிறது. அந்த நான்கு கதாப்பாத்திரங்களில் ஒன்று, ரெஹானா அபிதி. பர்தா உடையணிந்த ஒரு கல்லூரி மாணவி; தையல்காரரின் மகள். இன்னொன்று, ஷிரீன் அஸ்லம். மூன்று குழந்தைகளுக்குத் தாயாக இருப்பவர்; கணவருக்குத் தெரியாமல் கடை ஒன்றில் விற்பனைப் பெண்ணாகப் பணிபுரிபவர். ஒப்பனை நிலையம் வைத்திருக்கும் லீலா, தன் அன்றாட வாழ்க்கைக்குப் போராடிவருவதற்கு மத்தியில் பாலியல் சார்ந்த கற்பனையில் வாழ்பவர். மற்றொரு கதாப்பாத்திரம் உஷா பர்மார். 55 வயதான விதவை. ஓர் இளம் நீச்சல் பயிற்சியாளர் மீது காதல் கொள்வதோடு தன் பாலியல் வேட்கையையும் அவரிடம் வெளிப்படுத்துகிறார்.

ஆணாதிக்கம், பெண் விடுதலை ஆகியவற்றில் நாம் அக்கறைகொள்வது மிகவும் அவசியம்தான். ஆனால், இதுபோன்ற விவகாரங்களை எப்படி அணுகுவது? இவற்றுக்கு எதன் அடிப்படையில் முகங்கொடுப்பது? என்பது முக்கியமானது. இந்தச் செயல்பாடு கண்ணியம், மனித உரிமைகள், பாலின சமத்துவம் அல்லது பெண் விடுதலை முதலான மதிப்பீடுகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளதா? ஆணாதிக்கச் சிந்தனைப் போக்கிலிருந்து முற்றிலும் விலகி நிற்கிறதா? போன்ற சில அடிப்படைக் கேள்விகள் கவனிக்கத்தக்கன.

முதலில் படத் தயாரிப்பாளர்கள் முஸ்லிம்கள் பற்றியும் இதர விலக்கப்பட்ட சமூகங்கள் பற்றியும் கொண்டுள்ள பார்ப்பனிய முற்சாய்வுகளில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும். வழக்கம்போல அவர்கள் பெண்களின் பாலியல் விடுதலை என்கிற பெயரில் தலித்-பகுஜன் பெண்களுடைய உடலில் விளையாடியிருக்கிறார்கள். படத்தயாரிப்பாளர் பிரகாஷ் ஜாவும் இயக்குநர் ஆலன்க்ரிதா ஸ்ரீநிவாஸ்தவாவும் தங்களுடைய நோக்கத்தை அடைய பெரும் சிரத்தை மேற்கொண்டுள்ளனர் என்பது தெரிகிறது. ‘கொடூரமான ஒடுக்குமுறையில்’ அகப்பட்டுள்ள அடித்தள சாதி/வர்க்க/முஸ்லிம் பெண்களின் போராட்டத்தைத் தங்களின் பல முன்முடிவுகளின் அடிப்படையில் சித்தரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஓர் அடித்தள வர்க்க/சாதி/முஸ்லிம் பெண் தன் மேட்டுக்குடி, உயர்சாதி நண்பர்களைக் கவர்வதற்கு ஜீன்ஸ் அணியவும், அவர்களுடன் விருந்தொன்றில் கலந்துகொள்வதற்காக ஒரு நல்ல ஆடையைத் திருடவும் வேண்டியிருக்கிறது. இன்னொரு முஸ்லிம் பெண், தான் பணிபுரிவதை மறைக்கிறாள்; ஒவ்வொரு இரவும் உறங்குவதற்கு முன் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறாள்; குழந்தைகளை உற்பத்தி செய்யும் இயந்திரமாக மட்டுமே நடத்தப்படும் ஒடுக்குமுறை சூழலில் வாழ்கிறாள். கிட்டத்தட்ட முஸ்லிம் குடும்பங்கள் குறித்த இந்து வலதுசாரிகளின் வழக்கமான பிரச்சாரம்தான் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம், ஒடுக்குமுறையின் வடிவம் எனும் மோசமான சித்திரத்தை முஸ்லிம் ஆண்களுக்கு வழங்குகிறது. மனைவியை வல்லுறவுக்கு உள்ளாக்குவது தவிர்த்த வேலைகள் எதுவும் இல்லாதவராக, ஆணுறை பயன்படுத்தக்கூட தெரியாதவராக, பல பெண்களுடன் தொடர்பில் இருப்பவராக முஸ்லிம் ஆண் கதாப்பாத்திரம் காட்டப்படுகிறது. ரெஹானா அபிதியின் அப்பாகூட ரொம்பவும் அதிகாரம் செலுத்தக்கூடியவராகவும் அன்பையும் பாசத்தையும் தராதவராகவும் இருக்கிறார். அதாவது, ஒரு முஸ்லிம் பெண்/குடும்பம்கூட நல்ல வாழ்க்கை வாழவில்லை. என்னவொரு பரிதாபகரமான கதை!

படத்தில் எல்லோரும் நல்லபடியாக நடித்திருக்கிறார்கள். அதை நான் விளக்க விரும்பவில்லை. அது எனக்கு முக்கியமும் இல்லை.

இத்திரைப்படத்தில் கவனமாக இஸ்லாமிய வெறுப்புக் கருத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை சராசரி இந்தியப் பார்வையாளர்களிடம் (குறிப்பாக இன்றைய அரசியல் சூழலில்) நல்ல வரவேற்பைப் பெற்றுத்தரக் கூடியவை. இப்படத்தில், ஷிரீன் அஸ்லமின் கணவர் ‘சவுதியிலிருந்து வந்திருப்பது’ அவரை ‘முரடர்’ ஆக்கியிருக்கிறது. ஒரு காட்சியில், தன் பையிலிருந்து ஷிரீன் கைத்துப்பாக்கியை வெளியில் எடுக்கும் சந்தர்ப்பத்தில் அவருடைய புர்கா அவருக்குத் தீவிரவாத சாயலைக்கூட ஏற்படுத்துகின்றது. முஸ்லிம் ஆண்களை பெண் அடக்குமுறையின் குறியீடாய்ச் சித்தரிப்பதன் மூலம் படத்தயாரிப்பாளர்கள் எந்த அளவுக்கு ஒடுக்குமுறைக்கான சவர்ண வரையறைகளை உள்வாங்கியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

சமூக ரீதியில் பார்த்தால் மேற்குறிப்பிட்ட நான்கு பெண் கதாப்பாத்திரங்களும் உயர்சாதி எனும் வகைப்பாட்டின் கீழ் வருவதில்லை. லீலா அநேகமாக ஒரு அடித்தள சாதி/வர்க்க பின்புலமுள்ளவரே. தன் பாலியல் கற்பனைகள் சார்ந்த உலகில் உழல்பவர், பொய் சொல்லி சம்பாதிப்பவர், அவரின் அம்மா வாழ்வாதாரத்துக்கு வழியின்றி பல ஆண்டுகளாக உடல் ஓவியத்துக்கு நிர்வாணமாக அமர்ந்து வருகிறார். உண்மையில் இவையெல்லாம் பகுஜன் பெண்களைப் போகப் பொருளாய் அணுகும் பார்ப்பன ஆணாதிக்கக் கருத்தோட்டங்களையே வலியுறுத்துகின்றன. ஆனால், துரதிருஷ்டவசமாக பாலியல் விடுதலை என்கிற பெயரால்!

அதேசமயம், முஸ்லிம் பெண்களின் அவஸ்தைகளை மதத்தோடு தொடர்புபடுத்திவிட்டு, ஏனைய சமூகத்துப் பெண்களின் அவஸ்தைகளை வெறும் சமூக வழக்கங்களின் (Tradition) பகுதியாக மட்டுமே ஆக்கிவிடுவது இஸ்லாமோ ஃபோபியாவின் உச்சத்தை எடுத்துக்காட்டுகின்றது.

படத்தின் தலைப்பே அதனளவில் முன்முடிவுகளைக் கொண்டதுதான். அது புர்காவை அடக்குமுறைக்கும் உதட்டுச்சாயத்தை விடுதலைக்கும் அடையாளப்படுத்துகின்றது. இந்தக் கருத்தும்கூட பார்ப்பன ஆணாதிக்கத்தின் உற்பத்திதான். முழுப் படமும் பாலியல் விடுதலையைப் பற்றி பேசுவதை விடவும் பெண்களைப் போகப் பொருளாகவும் அழகின் வடிவமாகவுமே காட்சிபடுத்துகின்றது.

தலித்-பகுஜன்களுக்கு ‘பெண் விடுதலை’ என்பது அதனளவில் ஆழமான அர்த்தத்தைத் தரக்கூடியது. பார்ப்பன உயர்சாதிப் பெண்ணியவாதிகள் தங்களின் சமூக நிலையிலிருந்து இறங்கிவந்து விளிம்புநிலைப் பெண்களின் நிலைப்பாடுகளையும் அவர்களின் பெண்ணியம் சார்ந்த புரிதலையும் கற்றுணர வேண்டும். சவர்ண பெண்ணியவாதிகளுக்கு உதட்டுச்சாயத்தைப் பயன்படுத்துவது புரட்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் இதுவே விளிம்புநிலைப் பெண்களுக்கு முற்றிலும் முரணாக ஆகிவிடலாம்.

கடத்திச் செல்லப்பட்டு சந்தையில் விற்கப்படும் விளிம்புநிலைப் பெண்கள் (தேவதாசிப் பெண்கள் உட்பட) வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு வலுக்கட்டாயமாகப் பூசிக்கொள்ளும் உதட்டுச்சாயம் எப்படி அவர்களுக்கு விடுதலையின் குறியீடாய் ஆகமுடியும்? அது அவர்களுக்கு ஒடுக்குமுறையின் குறியீடு இல்லையா? இப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உங்கள் தரப்பிலிருந்து என்ன கருத்தைக் கொண்டுசெல்ல முனைகிறீர்கள்?

இது பெண்ணியத் திரைப்படமா? உண்மையில் பார்ப்பன கதையாடல் ஆணாதிக்கத்துக்கு முகங்கொடுப்பதில்லை. ஏனெனில் பார்ப்பனியம் என்பதே ஆணாதிக்கத்தையும் உள்ளடக்கமாகக் கொண்டதுதான். கவனமாக அடித்தள சாதி/வார்க்க பெண் கதாப்பாத்திரங்களைத் தேர்வு செய்வதோடு, வெறுப்பூட்டும் வகையில் இஸ்லாமோ ஃபோபியாவையும் கலந்துகட்டுவது என்பதுகூட ஓர் ஆணாதிக்கப் பிரயத்தனம்தான்.

இது ஒரு துணிச்சலான படமா? துணிச்சல் என்று சொல்லிக்கொள்ள படத்தில் ஒன்றுமில்லை. உயர்சாதியினருக்கு தலித், பகுஜன் பெண்கள் வாழ்வின் பக்கம் தங்கள் கேமராவைத் திருப்புவது எளிதான காரியம்தான். ஒடுக்குமுறையாளர்கள் ஒடுக்கப்பட்டவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்களுடைய வாழ்வை வரையறுக்கலாம், அவர்களைப் பற்றி என்ன தீர்ப்பு வேண்டுமானாலும் வழங்கலாம். உண்மையில், சவர்ண பெண்ணியவாதிகள் ஒருநாளும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வை வாழ்ந்திருக்க மாட்டார்கள். ஆனால் தங்களின் பார்ப்பன ஆணாதிக்கத்தை மறைத்துக்கொண்டு விளிம்புநிலைச் சமூகத்துப் பெண்களின் வாழ்க்கை குறித்து விளக்கமளிக்கவும், வரையறுக்கவும், தீர்ப்பளிக்கவும் சலுகை பெற்றிருக்கிறார்கள்.

எனது அடுத்த கேள்வி இதுதான்: உயர்சாதிப் பெண்கள் பாலியல் விடுதலை அடைந்துவிட்டார்களா? அல்லது ஒடுக்கப்படுகிறார்களா? பிறகு ஏன் இவர்கள் மோசமான பார்ப்பன ஆணாதிக்கத்தை மறைக்க முயல்கிறார்கள்? ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை? எதற்காக இந்த சவர்ண லிபரல் பெண்ணியவாதிகளின் கேமராக்கள் தலித், முஸ்லிம் பெண்களின் வாழ்வின் பக்கமே கவனம் குவிக்கின்றன? அருவருக்கத்தக்க வகையில் முஸ்லிம் பெண்கள் உடலில் ஆட்டம்போட அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? உயர்சாதிப் பெண்களின் பாலியல் வாழ்வை அவர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை? காப் பஞ்சாயத்துக்குக் கீழும், பிருந்தாவனத்திலும் உள்ள பெண்களைப் பற்றி பேச அவர்களுக்கு ஏன் துணிவில்லை?

உயர்சாதிப் பெண்களில் அன்றாடம் தாக்கப்படுபவர்கள், தங்கள் வீட்டு ஆண்களின் பாலியல் இன்பத்துக்காக பலமுறை கருக்கலைப்புச் செய்தவர்கள், தாய் வீட்டுக்குப் போக அனுமதிக்கப்படாமல் தங்களுடைய சமூக அந்தஸ்தைக் காத்து நிற்கும் பெண்களெல்லாம் இருக்கிறார்கள். தங்களின் கணவர் பல பேரிடம் தொடர்பில் இருந்ததன் விளைவால் HIV-க்கு ஆட்பட்டவர்களும்கூட இருக்கவே செய்கிறார்கள். அண்டை வீடுகளிலுள்ள உயர்சாதிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் அழுகுரல்களை பலமுறைக் கேட்டிருக்கிறேன்.

ஆனால், ஏன் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களின் கதைகள் மட்டுமே இங்கே உலாவுகின்றன? அதிலும் வல்லுறவுக்கு ஆட்பட்ட முஸ்லிம் பெண்கள், காஷ்மீரின் பாதி விதவைகள், கலவரக்காரர்களால் தாக்கப்பட்டு கணவரை இழந்த அபலைகள் என யாருடைய கதைகளும் படமாக்கப்படுவதில்லையே. ஏன்? அதற்கு என்ன காரணம்?

வகுப்புக் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இராணுவத்தினரால் வன்முறைக்கும் ஆட்கடத்தலுக்கு ஆளானவர்களுக்கும் உதட்டுச்சாயத்தால், ஜீன்சால் விடுதலை சாத்தியமா? முஸ்லிம்கள் மீதான தப்பெண்ணம், வன்முறை, பாரபட்சம் போன்றவற்றில் இருந்து அவர்களுக்கு எப்போது விடுதலை?

இறுதியாக ஒன்று. ஏற்கனவே பெருமளவில் இஸ்லாமோ ஃபோபியாவும் வெறுப்பும் நிலவும் இன்றைய சூழலில் இந்தப் படம் முஸ்லிம் ஆண்கள் மீதான பாகுபாட்டையும் பகையையும்தான் கூர்மைபடுத்தும். யூடியூபில் இந்தத் திரைப்படதுக்கான விமர்சன வீடியோக்களுக்கு வந்துள்ள பின்னூட்டங்களைச் சற்று பாருங்கள். முஸ்லிம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எதிரான வசைகளால் அவை நிரம்பியிருக்கின்றன. இப்படம் என்ன கருத்தை பெருவாரியான மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளது என்பதை இதன் மூலம் எளிதில் உணர முடியும்.

மூலம்: Why Not Janeu Under My Kurta?

தமிழில்: நாகூர் ரிஸ்வான்.

Related posts

One Thought to “‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்?”

  1. நியாஸ்

    பெண்ணியத் திரைப்படமா?

    கடத்திச் செல்லப்பட்டு சந்தையில் விற்கப்படும் விளிம்புநிலைப் பெண்கள் (தேவதாசிப் பெண்கள் உட்பட) வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு வலுக்கட்டாயமாகப் பூசிக்கொள்ளும் உதட்டுச்சாயம் எப்படி அவர்களுக்கு விடுதலையின் குறியீடாய் ஆகமுடியும்? அது அவர்களுக்கு ஒடுக்குமுறையின் குறியீடு இல்லையா? இப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உங்கள் தரப்பிலிருந்து என்ன கருத்தைக் கொண்டுசெல்ல முனைகிறீர்கள்?
    மிக அருமையான கட்டுரை அதிலும் மேற்குறிபிட்ட வரிகள் சிந்தக்க கூடியவை
    இதில் சவர்னம் என்ற பதம் பயன்படுத்த படுகிறது அதன் பொருள் எனக்கு விளங்க வில்லை நண்பர் ரிஸ்வான் விளக்கினால் நன்றாக இருக்கும்.

Leave a Comment