தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: என்றும் மாறாதது (பகுதி 1)

Loading

[சையித் குதுப் எழுதிய ‘அல்கசாயிஸ் அல்தசவ்வுர் அல்இஸ்லாமி வ முகாவிமதுஹு’ என்ற அறபு புத்தகத்தை மொழிபெயர்த்து ‘இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ என்ற பெயரில் மெய்ப்பொருள் தளத்தில் தொடராக வெளியிட்டு வருகிறோம். அதில் பன்னிரண்டாவது பகுதி கீழே.]

“தூதரே! நீரும் உம்மைப் பின்பற்றியவர்களும் இயற்கை மார்க்கமான இஸ்லாத்தின் பக்கம் உங்களின் முகத்தை திருப்பிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் படைப்பில் எவ்வித மாற்றமுமில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.” (திருக்குர்ஆன் 30:30)

இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் முதல் தனித்தன்மையிலிருந்தே மற்ற தனித்தன்மைகள் அனைத்தும் பிறப்பெடுக்கின்றன. அது இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டமாகும். அதனைப் பெற்று அதன்படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே மனிதனின் பணியாகும். அது மனிதச் சிந்தனையின் உருவாக்கமோ குறிப்பிட்ட காலத்திற்கு அல்லது இடத்திற்கு மட்டும் உரியதோ அல்ல. அது மனிதனைப் படைத்த இறைவனிடமிருந்து மனிதனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடையாகும்.

அதிலிருந்து வெளிப்படும் மற்றொரு தனித்தன்மை ‘என்றும் மாறாத நிலையான கண்ணோட்டத்தைச் சுற்றிய இயக்கமாகும்’. இந்தக் கண்ணோட்டம் கால, இட மாற்றத்திற்கேற்ப மாற்றமடையாதது, வளர்ச்சியடையாதது. மனித வாழ்வின் சில வெளிப்படையான விஷயங்களும் சூழலின் வடிவங்களும் மாறலாம். அவை நிலையான இந்த கண்ணோட்டத்திற்கு உட்பட்டேயிருக்கும்.

இது வாழ்வின், சிந்தனையின் இயக்கத்தை முடக்கும் ஒன்றல்ல. அதனை செயல்படத் தூண்டி முன்னோக்கி நகர்த்தக்கூடிய ஒன்றாகும். ஆயினும் செயல்பாடும் நகர்வும் நிலையான இந்தக் கண்ணோட்டத்தைச் சுற்றியே அமைகிறது. இது இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மட்டுமல்ல, இந்தப் பிரபஞ்சம் முழுவதும் செயல்படும் விதியாகும்.

இந்தப் பிரபஞ்சத்தின் பருப்பொருள் அணுவாக இருக்கட்டும் அல்லது அது வெடிக்கும்போது புறப்பட்ட கதிராக இருக்கட்டும் அல்லது எந்த வடிவமாக இருக்கட்டும் அதன் இயல்பு நிலையானது. ஆயினும் அது இயங்கக்கூடியது. அது மாறக்கூடிய, வளர்ச்சியடையக்கூடிய வடிவங்களை அமைத்துக் கொள்கிறது.

அணு நிலையானது. அதனை நிலையான வட்டப்பாதையில் எலக்ட்ரான்கள் (Electrons) சுற்றிவருகின்றன. ஒவ்வொரு கோளுக்கும் நட்சத்திரத்திற்கும் வட்டப்பாதை இருக்கிறது. அந்த வட்டப்பாதையைச் சுற்றியே அது இயங்குகிறது. அதன் இயக்கம் ஓர் ஒழுங்கிற்கும் வரையறைக்கும் உட்பட்டது.

மனிதனின் இந்த மனிதத்தன்மை அவன் ஒரு படைப்பாக இருப்பதால் வெளிப்பட்ட ஒன்றாகும். அதில் அல்லாஹ்வின் ரூஹ் இருப்பதால் அவன் மற்ற படைப்புகள் அனைத்தையும்விட வேறுபட்ட, தனித்தன்மைவாய்ந்த படைப்பாகிவிட்டான். மனிதனின் இந்த மனிதத்தன்மை நிலையானது. ஆனால் அவன் விந்திலிருந்து கருவாகி பல்வேறு கட்டங்களைக் கடந்து முதுமையை அடைகிறான். மனிதத்தன்மையின் மூலத்தோடு நெருக்கமாவது மற்றும் தூரமாவதற்கேற்ப அவன் உயர்வடைகிறான், தாழ்வடைகிறான். ஆயினும் இந்தக் கட்டங்கள் அவனை நிலையான மனிதத் தன்மையிலிருந்து விடுவித்துவிடாது. அவனது சாய்வுகள், ஆற்றல்கள், முன்னேற்பாடுகள் அனைத்தும் அவனது மனிதத் தன்மையிலிருந்து வெளிப்படக்கூடியவைதான்.

நிகழ்கால உலகை மாற்ற வேண்டும், அதனை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்பதற்காக இயங்கும் மனிதனின் ஆசை உண்மையானது, நிலையானது. அது முதலில் பிரபஞ்ச இயக்கத்திலிருந்தும் பின்னர் அவனது இயல்பிலிருந்தும் வெளிப்படும் ஒன்றாகும். இந்த கிலாஃபத் – பிரதிநிதித்துவம் எதார்த்த உலகை வளர்ச்சியின்பால் கொண்டு செல்வதற்கான இயக்கத்தை வேண்டுகிறது. ஆனால் இந்த இயக்கத்தின் வடிவங்கள் வேறுபடலாம், வளர்ச்சியடையலாம்.

இவ்வாறு நிலையான இந்த கண்ணோட்டத்தைச் சுற்றிய இயக்கம் இறைவனின் படைப்புகளில் ஆழமான ஒரு தன்மையாக வெளிப்படுகிறது. பின்னர் அது இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் இயல்பில் ஆழமான ஒன்றாக வெளிப்படுகிறது.

இந்தக் கண்ணோட்டத்தின் மாறாத்தன்மைக்கு இங்கு சில உதாரணங்களை எடுத்துரைக்கின்றோம். (இதுகுறித்து இரண்டாம் பாகத்தில் விரிவாகக் காண்போம்)

இறைவனோடு தொடர்புடைய உண்மைகள் யாவும் நிலையானவை, மாறாத அர்த்தங்கள் உடையவை. அவை மாற்றத்திற்கோ வளர்ச்சிக்கோ உட்படாதவை. அல்லாஹ்வின் இருப்பு குறித்த உண்மைநிலை, அவனது நிரந்தரத்தன்மை, அவனது ஏகத்துவம், அவனது ஆற்றல், அவனது நாட்டம், படைப்புகளை அவன் பரிபாலிக்குமுறை… இதுபோன்ற அவனது பண்புகள் அனைத்தும்.

இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் அல்லாஹ்வின் படைப்பாகும் என்ற உண்மை நிலையானது. அல்லாஹ் நாடியதால் அவை தோன்றின.  இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்தப் பொருளுக்கும் எந்த உயிரினத்திற்கும் படைப்பதிலோ நிர்வகிப்பதிலோ பாதுகாப்பதிலோ எந்தப் பங்கும் இல்லை. இறைவனுக்குரிய செயல்களில் படைப்புகளுக்கு எந்தப் பங்கும் இல்லை.

வணக்க வழிபாடு அல்லாஹ்வுக்கே உரியது என்ற உண்மையும் நிலையானது. இந்த வரையறை மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானது. அவர்களில் இறைத்தூதர்களும் உள்ளடங்குவார்கள். இறைவனுக்கு மட்டுமே உரிய இந்த வணக்க வழிபாட்டில் யாருக்கும் எந்தப் பங்கும் இல்லை.

அல்லாஹ்வின்மீதும் அவனது வானவர்கள்மீதும் அவன் இறக்கிய வேதங்கள்மீதும் அவன் அனுப்பிய தூதர்கள்மீதும் மறுமைநாளின்மீதும் நன்மையும் தீமையும் அல்லாஹ்விடமிருந்தே வருகின்றன என்ற விதியின்மீதும் நம்பிக்கைகொள்வது நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான அடிப்படையான நிபந்தனையாகும். அவ்வாறு நம்பிக்கைகொள்ளாமல் செய்யப்படும் நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது என்றும் மாறாத உண்மையாகும்.

தன் மார்க்கத்தைத்தவிர அல்லாஹ் வேறெதையும் ஏற்றுக்கொள்ள மாட்டான். இஸ்லாம் என்பது வணக்க வழிபாட்டை அவனுக்கு மட்டுமே உரித்தாக்குதல், அவனுடைய விருப்பத்திற்கு கட்டுப்படுதல் மற்றும் அவனுடைய சட்டத்தின்படி தீர்ப்பளித்தலாகும். அதுதான் அவன் விரும்பும் மார்க்கம். இந்த உண்மை என்றும் மாறாதது.

மனிதன் பூமியிலுள்ள மற்ற படைப்புகள் அனைத்தையும்விட கண்ணியப்படுத்தப்பட்ட படைப்பாகும். அவனை அல்லாஹ் பூமியில் தன் பிரதிநிதியாக நியமித்துள்ளான். அவனுக்காக பூமியிலுள்ள அனைத்தையும் வசப்படுத்தித் தந்துள்ளான். இந்த பூமியில் மனிதனைவிட உயர்ந்த படைப்பு என்று எதுவுமில்லை. இது என்றும் மாறாத உண்மையாகும்.

மனிதர்கள் அனைவரும் ஒரே தாய்-தந்தையிலிருந்து வந்தவர்கள். அதனால் அவர்கள் அனைவரும் சமமானவர்கள். இறையச்சம் மற்றும் நற்செயலின்மூலமாகவே அவர்கள் தங்களிடையே சிறப்பைப் பெற முடியும். பரம்பரை, செல்வம், இனம் மற்றும் இன்னபிற உலகியல் மதிப்பீடுகளைக் கொண்டு அவர்கள் சிறப்படைய முடியாது. இது என்றும் மாறாத உண்மையாகும்.

மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம், அவன் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்பதே. இபாதத்தின் முழுப் பொருளின்படி அவன் வணக்க வழிபாட்டின் எல்லா வகைகளையும் அவனுக்கு மட்டுமே உரித்தாக்க வேண்டும். சிறிய விசயம் பெரிய விசயம் என எல்லாவற்றிலும் அவனிடமே தீர்வு தேட வேண்டும். தனது எண்ணம், செயல் என எல்லாவற்றின்மூலமும் அவனையே முன்னோக்க வேண்டும். அவன் வகுத்துத் தந்த மார்க்கத்தின்படி பூமியில் ஆட்சி செய்ய வேண்டும். இது என்றும் மாறாத உண்மையாகும்.

மனிதனை ஒன்றிணைக்கக்கூடியது இறைக்கொள்கையான இஸ்லாமேயாகும். இனமோ சமூகமோ நாடோ நிறமோ பொருளாதார, அரசியல் நலன்களோ அல்லது வேறு உலகியல் மதிப்பீடுகளோ அல்ல. இது என்றும் மாறாத உண்மையாகும்.

இந்த உலகம் சோதனைக் களமும் செயல்படும் இடமுமாகும். மறுமையே விசாரணை செய்யப்பட்டு கூலி வழங்கப்படும் இடமாகும். மனிதன் அவனது ஒவ்வொரு இயக்கத்திலும் செயலிலும் அவனுக்கு வரக்கூடிய நன்மை மற்றும் தீமைகளிலும் அருட்கொடையிலும் தீங்கிலும் சோதனைக்குள்ளாக்கப்படுகிறான்.

இதுபோன்ற அடிப்படைகள் – நாம் இவற்றைக்குறித்து இரண்டாம் பாகத்தில் விரிவாகக் காணலாம் – அனைத்தும் நிலையானவை, என்றும் மாறாதவை. வாழ்வின் வெளிப்படையான விஷயங்களும் சூழலின் வடிவங்களும் இதைச் சுற்றியே இயங்குகின்றன.

எதார்த்த வாழ்வின் பகுதிகள் விசாலமடையும்போது, மனித அறிவின் களம் விசாலமடையும்போது, இந்த அடிப்படைகள் வெளிப்படும் வெளியும் விசாலமடைகிறது. ஆனால் அவற்றின் மூலம் என்றும் மாறாதது. அதன் வட்டத்திற்குள்தான் இந்தப் புரிதல்களும் பொருள்களும் இயங்குகின்றன.

மனிதன் இந்தப் பூமியில் பிரதிநிதியாக ஆக்கப்பட்டுள்ளான் என்பது என்றும் மாறாத உண்மை. அதில் அவன் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறான். பூமியை உழுது விவசாயம் செய்யக்கூடியவனாக வெளிப்படுகிறான். அவன் வாழ்க்கையின் சூழலும் அனுபவமும் அந்தக் கட்டத்தில் அவனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக விவசாயத்தையே ஆக்கியது. அதேபோல் அவன் அணுவைப் பிளப்பவனாக, பிரபஞ்சத்தின் இரகசியத்தை கண்டறிவதவதற்காக செயற்கைக்கோளை அனுப்புபவனாக வெளிப்படுகிறான். இதுவும் அதுவும் இவற்றிற்கு இடையிலுள்ளவையும் இவற்றிற்கு பின்னால் வரக்கூடியவையும் பூமியில் அவனுக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவத்தின் வெவ்வேறு வடிவங்கள். அவை எப்போதும் கூடுதலுக்கும் விசாலத்திற்கும் உட்பட்டவை. ஆனால்  பூமியில் அவனுக்கு வழங்கப்பட்ட கிலாஃபா – பிரதிநிதித்துவம் எந்நிலையிலும் மாறாதது. அதன் மாறாத தேட்டம், மனிதனுக்கும் இறைவன் வகுத்த வழிமுறைப்படி அவனுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவத்திற்குமிடையே எதுவும் தடையாக அமைந்து விடக்கூடாது என்பதையும் இந்தப் பூமியில் மனிதனின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வண்ணம் அவனைவிட எதுவும் உயர்த்தப்பட்டு விடக்கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது. இந்த உலகிலுள்ள எல்லா பொருள்களையும்விட மனிதனே உயர்ந்தவனாவான். அவனே அவற்றிற்குத் தலைவனாவான்.

மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம், அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்பதே. அது அவன் அல்லாஹ்வின்பால் முன்னோக்கும் அனைத்து செயல்களிலும் வெளிப்படுகிறது. அவற்றை வரையறுத்துக் கூற முடியாது. அவை வளர்ச்சியடையக்கூடிய பிரதிநிதித்துவத்தின் தேட்டத்தைச் சார்ந்தது. அது வாழ்க்கையின் ஒவ்வொரு விவகாரங்களிலும் அல்லாஹ் வகுத்துத்தந்த வழிமுறைப்படி தீர்ப்பளிப்பதில் வெளிப்படுகிறது. அந்த விவகாரங்களை வரையறுத்துக் கூறமுடியாது. அது வளர்ச்சியடையக்கூடிய பிரதிநிதித்துவத்தின் தேட்டத்தைச் சார்ந்தது. ஆனால் நோக்கம் என்றும் மாறாதது, நிலையானது. மனிதன் தன் ஒவ்வொரு செயலைக்கொண்டும் அல்லாஹ்வை முன்னோக்கவில்லையெனில், அவன் வகுத்துத்தந்த வழிமுறைப்படி ஒவ்வொரு விவகாரத்திலும் தீர்ப்பை வேண்டவில்லையெனில் அவன் மாறாத இந்த உண்மையை வீணாக்கி படைப்பின் நோக்கத்தைவிட்டும் வெளியேறிவிட்டான். அவனது செயல்கள் வீணானவையாகவே கருதப்படும். அவை ஏற்றுக்கொள்ளப்படாது.

இவ்வாறு இந்த அடிப்படைகள் அறிவிக்கும் வெளி விசாலமாகிறது. அவை வெளிப்படும் வடிவங்களுக்கேற்ப வேறுபடுகின்றன. ஆயினும் அது இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் என்றும் மாறாதது, நிலையானது. மாற்றத்திற்கோ வளர்ச்சிக்கோ உட்படாதது; மனிதனின் இயக்கத்தையும் உயிரோட்டமான வளர்ச்சிகளையும் வரையறுக்கக்கூடியது. அது ஐரோப்பிய வாழ்க்கையில் நிகழ்ந்ததுபோன்று வழிகாட்டுதலின்றி மீறிச் செல்லக்கூடியதல்ல. ஐரோப்பா மதத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டபோது ஏமாற்றமளிக்கும் ஒளியும் போலியான செழிப்புமுடைய நிராசையான இந்த விளைவை வந்தடைந்தது. அது துர்பாக்கியத்தையும் குழப்பத்தையும் நிம்மதியின்மையையும் தன்னுள் மறைத்துக் கொண்டது.

மனிதன் தனக்குத் தோன்றக்கூடிய எண்ணங்கள், சிந்தனைகள், கண்ணோட்டங்கள் மற்றும் தன் வாழ்க்கையில் எதிர்கொள்ளக்கூடிய சூழல்கள், தொடர்புகள் ஆகியவற்றை மதிப்பிடுவதற்கு என்றும் மாறாத நிலையான மதீப்பிட்டைப் பெற்றுள்ளான். அந்த நிலையான மதீப்பிட்டைக் கொண்டு அவன் எந்த அளவு சத்தியத்திற்கு நெருக்கமாக அல்லது தூரமாக இருக்கிறான் என்பதை அறிந்துகொள்கிறான். ஆகவே அவன் பாதுகாப்பான வட்டத்திற்குள் இருக்கிறான். தடுமாறி வழிகாட்டலில்லாத இருளுக்குள் விலகிச் சென்றுவிடுவதில்லை.

அது மனித சிந்தனையை ஒழுங்குபடுத்தும் வரையறையைப் பெற்றுள்ளது. அது இச்சைகளால், தாக்கங்களால் தடுமாறிவிடாமல் மனிதச் சிந்தனையைக் கட்டுப்படுத்துகிறது. என்றும் மாறாத இந்த வரையறை மட்டும் இல்லையென்றால் எது அதனைக் கட்டுப்படுத்த முடியும்? மனித சிந்தனையை ஒழுங்குபடுத்துவது எவ்வாறு சாத்தியமாகும்?

மனிதனின் மனதையும் வாழ்வையும் பாதுகாப்பதற்கு அவை நிலையான என்றும் மாறாத ஒரு வட்டத்திற்குள் இயங்குவது மிகவும் அவசியம். அவ்வாறு இயங்கும்போது பிரபஞ்சத்தில் காணப்படும் வெளிப்படையான மாறாத விதிகளைப்போன்று அவையும் தம் பாதையில் கடந்து செல்லும்.

தற்காலத்தில் அதன் தேவை இன்னும் அதிகமாகிவிட்டது. மனித குலம் நிலையான இந்த மூலத்தை விட்டுவிட்டு அதன் வட்டத்திலிருந்து வெளியேறிவிட்டது. தன் வட்டப்பாதையில் வெளியேறிச்சென்றால் ஒரு கோளுக்கு என்ன நிகழுமோ அதைத்தான் மனித சமூகமும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அது தன்னைத்தானே அழித்துக் கொள்வதோடு இந்தப் பிரபஞ்சத்தையும் அழித்துவிடும்.

“சத்தியம் அவர்களின் மனஇச்சைகளைப் பின்பற்றியிருந்தால் வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கிடையிலுள்ள அனைத்தும் அழிந்து போயிருக்கும்” (23:71)

இன்று மனித சமூகத்தைப் பீடித்துள்ள மயக்கத்திற்கு உட்படாத விழிப்பு நிலையிலுள்ள அறிவாளி, மனித சமூகம் தம் கண்ணோட்டங்களிலும் அமைப்புகளிலும் கலாச்சாரங்களிலும் பழக்கவழக்கங்களிலும் செயல்களிலும் தடுமாறித் திரிவதைக் காணும்போது, அது தம் ஆடைகளைக் களைந்து பைத்தியக்காரனைப்போன்று கிழித்து எறிவதைக் காணும்போது, மனநலம்பிறழ்ந்தவனைப்போன்று அது செயல்படுவதைக் காணும்போது, அது தன் ஆடைகளை மாற்றுவதைப்போல சிந்தனைகளையும் கொள்கைகளையும் மாற்றுவதைக் காணும்போது, அது வலியால் கத்துவதையும் பைத்தியத்தைப்போன்று சிரிப்பதையும் யூகங்களுக்குப் பின்னால் ஓடுவதையும் தன்னிடமுள்ள மதிப்புவாய்ந்த பொருளை விட்டுவிட்டு கற்களையும் குப்பைகளையும் சேகரிப்பதையும் காணும்போது… நிச்சயமாக அது சாபம்தான், அது உற்பத்தியைப் பெருக்குவதற்கு மனிதனைக் கொன்று இயந்திரமாக மாற்றுகிறது, அது மனிதனின் அழகியல் உணர்வுகளை, உயர்ந்த பண்புகளை சில பெருமுதலாளிகளின், சினிமா தயாரிப்பாளர்களின் இலாபத்திற்காக அழித்தொழிக்கிறது என்பதை அறிந்துகொள்வார்.

நீங்கள் அவர்களின் முகத்தைப் பார்த்தால்.. அவர்களின் பார்வையும், சிந்தனைகளும் கருத்துகளும், செயல்களும் அவர்கள் வெருண்டோடுவதைப்போலவே ஒரு தோற்றத்தை உங்களுக்கு ஏற்படுத்தும். அவர்கள் வெருண்டோடுகிறார்கள். எதன்மீதும் அவர்கள் உறுதியாக நிலைத்திருக்க மாட்டார்கள். எதைக்குறித்தும் அவர்களிடம் சரியான பார்வை கிடையாது. உண்மையில் அவர்கள் தங்களைவிட்டே வெருண்டோடுகிறார்கள். எதிலும் நிலைத்திருக்காத, தடுமாற்றம் நிறைந்த தங்களின் மனங்களைக் கண்டு அவர்கள் வெருண்டோடுகிறார்கள். அவர்களின் மனம் நிலையான எந்தவொன்றைச் சுற்றிலும் செயல்படுவதில்லை. மனித சமூகத்தால் இந்த பிரபஞ்சத்தின் அமைப்பைவிட்டு தனித்து இயங்க முடியாது. எந்தவொரு வழிகாட்டியும் இன்றி நிலைதடுமாறும் அது நிம்மதியாக வாழ முடியாது.

நிலைதடுமாறும் இந்த மனித சமூகத்தைச் சுற்றிக் காணப்படும் பெருமுதலாளிகள், சினிமாகாரர்கள், அவர்களின் தாகத்தையும் தடுமாற்றத்தையும் இன்னும் அதிகப்படுத்தும் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியவர்களே இலாபமடைகிறார்கள். இந்த மனித சமூகம் களைப்படைந்து நிலையான மார்க்கத்தை தேர்ந்தெடுக்க நினைக்கும்போதெல்லாம்  அதற்குத் தடையாக வந்து மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள் இவர்கள்.

வளர்ச்சி, முன்னேற்றம், புதுமை, கட்டுப்பாடற்ற வாழ்க்கை போன்ற கோஷங்களை எழுப்பி மனித சமூகத்தை நேரான பாதையைவிட்டும் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக இது மனித சமூகத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி.

ஒவ்வொரு அமைப்பும் கண்ணோட்டமும் மதிப்பீடுகளும் கட்டுப்பாடற்று வளர்ச்சியடைகின்றன என்ற சிந்தனை, பிரபஞ்சம் மற்றும் இயற்கையின் உருவாக்கத்தில் காணப்படும் முரணியக்கச் சிந்தனை ஆகியவற்றிலிருந்தே குழப்பங்கள் பிறப்பெடுக்கின்றன. அவை ஒவ்வொரு கண்ணோட்டத்திற்கும் அமைப்பிற்கும் மதிப்பீட்டிற்கும் இருப்பின் உரிமையை, இருப்பின் நியாயத்தை அளிக்கின்றன. ஒரு கண்ணோட்டத்தை, அமைப்பை, மதிப்பீட்டை உரசிப் பார்க்கும் உரைகற்களையல்ல.

மேற்கத்திய சிந்தனை – திருச்சபையைவிட்டு வெருண்டோடுவதில், அதனைவிட்டு முற்றிலுமாக நீங்க வேண்டும் என்ற ஆசையில் – “என்றும் மாறாதது” என்ற சிந்தனையை நிராகரித்து “வளர்ச்சியடைதல்” என்ற சிந்தனையை ஏற்றுக்கொண்டது. அதற்கு மதத்தையும் கொள்கையையும்கூட விதிவிலக்காகக் கொள்ளவில்லை. மாறாக மதத்தின் மாறாத்தன்மையினால்தான் அதிலிருந்து வெளியேற வேண்டும், தப்பிச் செல்ல வேண்டும் என்று அவர்கள் நாடினார்கள். முந்தைய பக்கங்களில் எடுத்துரைக்கப்பட்டுள்ள மேற்கத்திய சிந்தனையின் வரலாற்றலிருந்து அதனது இந்த அணுகுமுறையை நம்மால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களின் இந்த நிலைப்பாட்டின் காரணமாக நாம் அவர்களைக் குறைகூறவில்லை. அவர்களின் இந்த நிலைப்பாடு தவறானதாக இருந்தாலும் அவர்கள் ஆரம்ப காலம்தொட்டே சிலைவழிபாடுகளினாலும் புராணங்களினாலும் திரிக்கப்பட்ட ஒரு மதத்தைத்தான் எதிர்கொண்டார்கள். அதே சமயத்தில் திரிக்கப்பட்ட மதத்தின் பெயரால் அறிவுக்கும் சிந்தனைக்கும் எதிராகப் போர்தொடுத்த அநியாயக்கார திருச்சபையை எதிர்கொண்டார்கள்.

நாம் மேற்கத்தியர்களின் இந்த நிலைப்பாட்டைக் குறைகூறவில்லை. ஆயினும் அது மீறிச் சென்றதற்கான, எந்த அடிப்படையும் இல்லாத, எந்தக் கட்டுப்பாடும் இல்லாத “வளர்ச்சியடைதல்” என்னும் சிந்தனையைத் தமதாக்கிக் கொண்டதற்கான உண்மையான காரணத்தை அறிவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அது அறிவியல்பூர்வமான நிரூபிக்கப்பட்ட உண்மையல்ல. அது அநியாயக்கார திருச்சபையின் பிடியிலிருந்து வெளியேற விடுபட வேண்டும் என்ற ஆசையும் கட்டுப்பாடற்ற மனஇச்சையுமாகும்.

டார்வின் – தன் பரிணாமக் கொள்கையின்மூலம் – இந்தப் பிரபஞ்சத்தின் மேலோட்டமான ஒன்றையே ஆராய்ச்சி செய்தார். அது வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் அல்லாமல் அதன்பிறகே தொடங்குகிறது. அது வாழ்க்கையின் மூலத்தை நோக்கியோ அதனை இயக்கும் நாட்டத்தை நோக்கியோ செல்லவில்லை. ஒரு பேச்சுக்கு அதனை சரியென ஒத்துக் கொண்டாலும் – தற்போது அதன் அடித்தளத்தையே தகர்க்கும் ஆய்வுகள் வெளிவந்துவிட்டன – அதுவும் இந்த பரிணாம வளர்ச்சிக்குப் பின்னால் அதனை இயக்கும் நிலையான நாட்டம் இருப்பதையும் அது தற்செயலாக அல்லாமல் நிர்ணயிக்கப்பட்ட ஒருதிட்டத்தின்படியே முழுமையடைகிறது என்பதையும் உறுதிப்படுத்துகிறது. ஒழுங்கின்படி இயங்குவது பிரபஞ்சத்தின் விதிகளுள் ஒன்றாகும். நாம் ஏற்கனவே கூறியவாறு பிரபஞ்சத்தின் இயக்கம் தாறுமாறானது அல்ல. நிலையான ஒரு வரையைறையைச் சுற்றியே அதன் இயக்கம் முழுமையடைகிறது.

‘அறிவியல் வழிமுறையோ’ ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் உண்மைகளோ டார்வினை இறைவனைவிட்டுத் தூரமாக்கவில்லை. அறிவியல், தான் நாடியதைச் செய்யக்கூடிய அனைவரையும் அடக்கியாளும் மாபெரும் சக்தி இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்கின்றது. ஆனால் அவர் இறைவனைவிட்டும் திருச்சபையை விட்டும் வெருண்டோடினார். எனவேதான் அனைத்தையும் “இயற்கை” என்றார். அவரது கூற்றுப்படி அதுவும் எல்லையில்லா ஆற்றலுடையது. பின்னர் எதுவும் நிலையானது அல்ல என்ற அவரது யூகத்தையும் அதனுடன் இணைத்துக் கொண்டார். அவரது ஆய்வு வாழ்வின் எல்லாப் பகுதிகளையும் அல்லாமல் மேலோட்டமான சில விசயங்களையே சுற்றி வந்தது. (பார்க்க, இஸ்லாத்திற்கும் சடவாதத்திற்கும் மத்தியில் மனிதன் – முஹம்மது குதுப்)

“நிலையான மையத்தைச் சுற்றிய இயக்கம்” என்னும் விதியை மார்க்சிய சிந்தனைப் பள்ளியே கடுமையாக எதிர்த்தது. ஏனெனில் வெளிப்படையான இந்த உண்மையை ஏற்றுக்கொண்டால் அவர்களது சிந்தனைப் பள்ளியின் அடிப்படையே தகர்ந்துவிடும். அவர்களின் பரிணாமக் வளர்ச்சிக்கொள்கை சுக்குநூறாகிவிடும்.

ஜெர்மானிய மெய்யிலாளர்களான நீட்சே மற்றும் ஹெகலின் முரணியக்கக் கொள்கையை மார்க்ஸ் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அவர் அவர்கள் இருவரைப்போன்று சிந்தனைத் தளத்திலோ மதத்தளத்திலோ அல்லாமல் பொருளாதாரத் தளத்தில் அதனைப் பயன்படுத்தினார். அவரது பார்வையில், ஒவ்வொன்றும் அதன் எதிர்மறையை உள்ளடக்கியுள்ளன, ஒவ்வொன்றும் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறது. இதுதான் முரணியக்கக் கொள்கையின் பொதுவான கண்ணோட்டம். ஆனால் மார்க்ஸ் அதனை முதலாளித்துவத்தின்மீது கட்டமைக்கப்பட்ட சமூகங்களின் வீழ்ச்சிக்கு ஆதாரமாக ஆக்கினார். மார்க்சின் கருத்துப்படி, முதலாளித்துவம் வீழ்ச்சியடைந்து அதன் எதிர்மறையான சோஷலிசமாக மாறும். அதுதான் தொழிலாளர்களை உள்ளடக்கிய கம்யூனிச சமூகமாகும்.

முரணியக்கக் கொள்கையின்படி அது தனக்கு எதிர்மறையான ஒன்றாக மாறுவதோடு மட்டும் நின்றுவிடாது. மாறாக அவையிரண்டும் இணைந்த வேறொன்றாகவும் மாறும். பின்னர் புதிய ஒன்று அதன் எதிர்மாறாக, பின்னர் அவையிரண்டும் இணைந்த புதிய ஒன்றாக… இப்படியே மாறிக்கொண்டே செல்லும். இதன் அடிப்படையே மாற்றம்தான். மார்க்சியம் சமூகம் மாறுவதை எதிர்பார்த்து நின்றது. ஆனால் அது சோஷலிச சமூகத்தின் வீழ்ச்சியைக்குறித்து, தனக்கு எதிரான ஒன்றை தனக்குள்ளேயே உள்ளடக்கியுள்ளதைக் குறித்துப் பேசவில்லை. அவர்களின் கருத்துப்படி, ஒவ்வொன்றும் அதன் எதிர்மறையை உள்ளடக்கியுள்ளன, ஒவ்வொன்றும் தன்னைத்தானே அழித்துக்கொள்கின்றன.

இதன் விளைவுகளைப்போன்று, நிரந்தரமான ஒழுங்குகளை நம்புபவர் காணப்படாத ஒன்றை ஏற்றுக்கொள்கிறார். சில ஒழுங்குகள் நிகழ்காலத்திற்கு மிக அவசியம், அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நம்பும் இவர்கள் நிகழாத ஒன்றை ஏற்றுக்கொள்கிறார்கள். ஒவ்வொன்றும் மாறக்கூடியது என்றும் நம்பும் ஒருவன் அது பாதுகாக்கப்படவும் வேண்டும் என்று கூறுவது அறியாமையின் வெளிப்பாடேயன்றி வேறில்லை.

ஹெகலின் முரணியக்கக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே மார்க்சியம், ஒவ்வொரு பொருளும் முரண்பட்ட இரு ஆற்றல்களை ஒருசேரக்கொண்டுள்ளது என்று கூறுகிறது. ஒன்றிற்கு ‘வாதம்’ மற்றொன்றிற்கு ‘எதிர்வாதம்’ என்று கூறப்படும். ஒவ்வொன்றும் ஒன்றையொன்று தகர்த்து மூன்றாவது புதிய ஒன்றைத் தோற்றுவிக்கிறது. அதற்கு ‘வாதமும் எதிர்வாதமும் ஒருங்கிணைந்தது’ என்று கூறப்படும். பின்னர் அதுவும் வீழ்ந்து அதற்கு எதிரான புதிய ஒன்று தோன்றுகிறது. அப்போது வாதமும் எதிர்வாதமும் மீண்டும் தோன்றுகிறது. பின்னர் அவையிரண்டும் ஒன்றிணைந்து புதிய ஒன்றைத் தோற்றுவிக்கிறது. இவ்வாறு முடிவேயின்றி சென்றுகொண்டிருக்கிறது.

Related posts

Leave a Comment