தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – சிறிய யாத்திரை (பகுதி 2)

Loading

[ஹஜ் உள்ளிட்ட இஸ்லாமிய வழிபாடுகள் விசயத்தில் அவற்றின் வழிமுறைகளை விளக்கி ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டிருப்பதை நாமறிவோம். ஆனால் அவற்றின் நோக்கம், தத்துவம், உணர்வு என்று வரும்போது வெகு அரிதானவற்றை மட்டுமே நம்மால் பார்க்க முடிகின்றது. அந்த வகையில் அலீ ஷரீஅத்தி எழுதிய ஹஜ் எனும் ஆக்கம் அற்புதமானவொன்று. அதன் மொழிபெயர்ப்பை  ‘மெய்ப்பொருள்’ தளத்தில் தொடராக வெளியிட்டு வருகிறோம். அதில் மூன்றாவது பதிவு கீழே. மொழிபெயர்ப்பு: பண்ணாமத்துக் கவிராயர்]

நிய்யத்: எண்ணத்தை பிரகடனம் செய்தல்

பெரியதொரு மாற்றத்தின், புரட்சியின் ஆரம்பமான மீக்காத்தில் பிரவேசிப்பதற்கு முன் நீ உனது நிய்யத்தை (எண்ணத்தை) பிரகடனம் செய்தல் வேண்டும். இந்த நிய்யத் எதை உள்ளடக்கியுள்ளது? உன்னுடைய இல்லத்திலிருந்து மக்களின் இல்லத்திற்கு, வாழ்விலிருந்து காதலுக்கு, அகம் என்பதிலிருந்து அல்லாஹ்வுக்கு, அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரத்துக்கு இனப் பாகுபாட்டிலிருந்து சமத்துவத்துக்கு, நேர்மைக்கு, சத்தியத்துக்கு, ஆடையுடுத்தி இருப்பதிலிருந்து நிர்வாணத்திற்கு, அன்றாட வாழ்விலிருந்து நித்திய வாழ்வுக்கு, சுயநலம், தான்தோன்றித்தனம் ஆகியவற்றிலிருந்து பக்திக்கு, பொறுப்புக்கு ‘இடம்பெயர்தலுக்கான’ நிய்யத் இது. தொகுத்துரைப்பதாயின், இது இஹ்றாம் நிலைக்கு மாற்றம் பெறுவதாகும்.

எனவே, உனது நிய்யத் வலுவாகப் பிரகடனம் செய்யப்படல் வேண்டும். ஈத்தம் விதைகள் போன்று உனது ‘கூட்டுக்குள்’ இருந்து நீ வெளிப்பட வேண்டும். பூரண பிரக்ஞையுடன் உன் இதயத்தில் நம்பிக்கையிருக்க வேண்டும். காதல் நெருப்பால் உன் இதயம் ஜோதிமயமாக வேண்டும்.

‘சுடர் விடு, மேலும் சுடர் விடு’. உன்னைப் பற்றி யாவற்றையும் மறந்து விடு. கடந்த காலத்தில் உனது வாழ்க்கை ‘அலட்சியம்’, ‘அறியாமை’ நிரம்பியதாய் இருந்தது. உயர்வாழ்வின் சகல அம்சங்களிலும் நீ நிர்க்கதியாக இருந்தாய். உனது அலுவலகப் பணியிலும் கூட பழக்கம் காரணமாகவோ அல்லது நிர்பந்தம் காரணமாகவோ வேலை செய்யும் ஒரு அடிமையாகி விட்டிருந்தாய். இப்போது இந்தப் போக்கை உதறியெறி. அல்லாஹ்வை பற்றி, மக்களை பற்றி, உன்னை பற்றி உண்மையான உணர்வு கொள். புதியவொரு பணியை, புதியவொரு திசையை, புதியவொரு ‘அகத்தை’ தேர்ந்தெடு.

மீக்காத்தில் பிரார்த்தனை

மீக்காத்திலிருந்து ஹஜ்ஜுக்கு ஆயத்தமாகும் போது, என்ன செய்ய வேண்டும்? ஏன்? என்பதை நீயறிவாய். இஹ்றாம் உடையில், எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு முன்னால் போய் நிற்கும் வகையில் நீ இஹ்றாம் துஆவை ஓதுவாய். சொல்:

அல்லாஹ்வே, இனியும் நான் சிலையை வணங்குவோனல்ல. இனியும் நான் நம்றூதின் அடிமையல்ல.அல்லாஹ்வே, நான் உன் முன்னால் இப்றாஹீமை போல் நிற்கிறேன். ஒடுக்குமுறையாளனாக (ஓநாயாக) அல்ல. நயவஞ்சகனாக (நரியாக) அல்ல. பதுக்குவோனாக (எலியாக) அல்ல. மறுமையில் உன்னை சந்திக்கும்போது நான் என்ன ஆடையணிந்திருப்பேனோ அதே ஆடையணிந்த ‘மனிதனாக’ நான் உன் முன் நிற்கிறேன்.

நீ அல்லாஹ்வுக்கு அடிபணிந்து அவனின் அடிமையாவதற்கு விருப்பம் கொண்டுள்ளாய் என்பதே இதன் அர்த்தம். அல்லாஹ்வை தவிர எவருக்கும், எதற்கும் எதிராக நீ கலகம் செய்வாய். அத்தியாவசிய கடமைகளை நிறைவேற்றுவதற்கு நீ தயார் என்பது காட்டப்படுகின்றது. இந்நிலை வழக்கமான தொழுகைக்கு புறம்பான ஒன்றல்ல. ஆனால் இம்முறை இறைவனுடன் அதை விட அதிக அன்னியோன்யமான உரையாடலாகத் தெரிகிறது. அல்லாஹ்வின் பிரசன்னத்தை உணர முடிவது போல் இருக்கிறது.

உலகங்கள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் அளவிலாக் கருணையாளன்; இணையிலாக் கிருபையாளன். தீர்ப்பு நாளின் அதிபதி. (திருக்குர்ஆன் 1:2-4)

இவ்வாறு சொல்: அருளாளனே, கருணை மிகுந்தோனே, நண்பர்-பகைவர், நல்லவர்-தீயவர், விசுவாசிகள்-அவிசுவாசிகள் என்ற எல்லைகளையும் தாண்டிச் செல்லும் கருணையும் மாட்சிமையும் மிக்கவனே… யா அல்லாஹ், நான் உன்னையே வணங்குகிறேன். நீயே வணக்கத்துக்கு பாத்திரமானவன். இறுதித் தீர்ப்பு நாளின் சொந்தக்காரனும் எஜமானனுமான உன்னையன்றி வேறு எஜமானனை நான் தெரிந்தெடுக்கவில்லை.

உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடத்திலேயே உதவி தேடுகிறோம். (திருக்குர்ஆன் 1:5)

ஓ எங்கள் ஒரே அன்பே! ஓ எங்கள் ஒரே உதவியே! எங்கள் அறியாமையால் நாங்கள் திசைமாறிப் போனதை பார்! ஒடுக்குமுறையாளர்களால் நாங்கள் தவறாக இட்டுச் செல்லப்பட்டதை பார்! எங்கள் பலவீனத்தால் நாங்கள் கட்டுண்டு கிடப்பதை பார்!

எங்களுக்கு நேர்வழியைக் காட்டுசத்தியத்தின், நிஜத்தின், சௌந்தர்யத்தின், பரிபூரணத்தின், பேரன்பின், நன்மையின் பாதையைக் காட்டு. (திருக்குர்ஆன் 1:6)

(அது) நீ அருட்கொடை புரிந்தவர்களின் வழி. கோபத்திற்கு ஆளானோரின் அல்லது வழிதவறியோரின் வழியல்ல. (திருக்குர்ஆன் 1:7)

சத்தியம், உணர்வு, உண்மை, அழகு, பரிபூரணம், காதல், நன்மை ஆகியவற்றின் வழி அது.

மீக்காத்தில் மறுமையின் வெண்ணிற உடையில் ஒவ்வொரு ருகூஉம் அச்சத்தாலும் பேராசையாலும் தூண்டப்படும் பாவங்களை மறுத்து மன்னிப்பு கேட்கின்றது. இவை உன் வாழ்நாளில் செய்யப்பட்டவை. ஒவ்வொரு சுஜூதும் அதிகார மன்றங்களில் செய்யப்பட்டவைகளுக்காக பாவமன்னிப்பு கேட்கின்றது.

மீக்காத்தில் செய்யப்படும் பிரார்த்தனை, அல்லாஹ்வை தவிர வேறெதற்கும் சுஜூது செய்யவோ ருகூஉ செய்யவோ மாட்டேன் என்று அல்லாஹ்வுக்கு செய்து கொடுக்கும் வாக்குறுதியாகும்.

அவனின் அடியாரும் தூதருமான முஹம்மதே, உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!

அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்தவர்கள் மீதும், நற்செயல் புரிந்தவர்கள் மீதும் சாந்தி உண்டாவதாக!

உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!

இத்தொடர்கள் யாவும் குறிப்பது ‘அண்மையை’, ‘சேய்மையை’ அல்ல. அல்லாஹ், இப்றாஹீம், முஹம்மத், மக்கள், சுவர்க்கம், மறுமை, விமோசனம், விடுதலை, மெய்க்காதல் போன்றவை மீக்காத்தில் பிரசன்னமாய் இருக்கின்றன. நிறமற்ற இஹ்றாம் ஆடையை அணிந்து நீ புதிய பிறவி எடுக்கின்றாய்… புனர்ஜீவன் பெறுகின்றாய்! அல்லாஹ்வின் கட்டளையை நிராகரித்த ஷைத்தான் இனியும் உன்னை ஏமாற்ற முடியாது. அந்நியன் என்ற உணர்வு உன்னை விட்டுப் பறந்து விடும். பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டு நீ அல்லாஹ்விடம் மீள்கிறாய். இப்போது நீ விடுதலை பெற்று விட்டாய். பொறுப்பை ஏற்றுக் கொண்டாய்.

குறிப்புகள்

  1. நம்றூத் – கானானின் மகன். ஆதியாகமம் X.8-ல் சொல்லப்பட்டிருப்பது போல் கூஷ்ஷின் மகனல்ல. பார்க்க. திருக்குர்ஆன், அல்பகறா அத்தியாயம், 2:260 மற்றும் அல்அன்பியா, 21:68-69

முஹர்ரமாத்: சில செயல்களை தவிர்த்துக் கொள்ளல்

இஹ்றாமில் இருக்கும்போது நீ சிலவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. உன்னுடைய வர்த்தகமும் அந்தஸ்து, வர்க்கம், இனம் முதலியவற்றை ஞாபகமூட்டும் சகலமும் இவற்றுள் அடங்கும். சாராம்சத்தில் மீக்காத்துக்கு முந்திய வாழ்க்கையைச் சேர்ந்த லௌகீக விவகாரங்கள் யாவும் தடைசெய்யப்பட்டுள்ளன. செய்யக் கூடாத செயல்களின் பட்டியல் பின்வருமாறு:

  • கண்ணாடியில் உன் சாயலை பார்க்காதே. தற்காலிகமாக ‘உன்னை’ மறந்து விடு.
  • கடந்த காலத்தின் குதூகலமான நாட்களை நினைவுபடுத்தும் வகையில் வாசனைகளை உபயோகிக்காதே. இப்பொழுது ஆன்மிகச் சூழலில் இருக்கிறாய். உன்னிடமிருந்து பேரன்பின் நறுமணம் வீசட்டும்.
  • யாருக்கும் கட்டளைகள் பிறப்பிக்காதே. சகோதரத்துவத்தை கைக்கொள்.
  • பிராணிகளுக்கும் பூச்சிகளுக்கும் இம்சை புரியாதே. ஒரு சில நாட்களுக்கு ஈசாவை போன்று வாழ்!
  • மரக்கன்றுகளை முறிக்காதே, பிடுங்காதே. இயற்கையின் மீது சாந்தத்தை கடைபிடிப்பதன் மூலம் ஆக்கிரமிப்பு எண்ணங்களை கொன்று விடு.
  • வேட்டையாடாதே. பிறவுயிர்கள் மீது கருணை காட்டு.
  • உடலுறவில் ஈடுபடாதே. உண்மையான காதலின் தூண்டலைப் பெறு.
  • திருமணம் முடிக்காதே. அல்லது திருமண வைபவங்களில் கலந்து கொள்ளாதே.
  • அலங்காரம் செய்து கொள்ளாதே. உன்னை உன் இயல்பான கோலத்தில் அறிந்து கொள்.
  • நேர்மையீனமாய் இராதே. வாக்குவாதம் செய்யாதே. சாபமிடாதே. அகந்தை கொள்ளாதே.
  • இஹ்றாம் ஆடையை தைக்காதே. மனித வித்தியாசங்களை தவிர்த்துக் கொள்.
  • ஆயுதங்களை சுமக்காதே. மீறியும் தேவைப்பட்டால் அதனை இஹ்றாமுக்கு உள்ளே வை.
  • நிழலில் தங்காதே, வெயிலில் இரு.
  • தலையை மூடாதே.
  • முகத்தை மறைக்காதே.
  • காலணிகளோ காலுறைகளோ அணியாதே. வெற்றுக் காலில் இரு.
  • அலங்காரப் பொருட்களை உபயோகிக்காதே.
  • தலைமயிர் வெட்டாதே.
  • நகம் வெட்டாதே.
  • இரத்தம் வெளியேற விடாதே. (உதாரணமாக, வெட்டிக் கொள்ளாதே).

ஹஜ் துவங்கிவிட்டது. அல்லாஹ்வை நோக்கி விரைந்து செல். இஹ்றாம் நிலையில் சொல்: ‘லப்பைக்.’ அல்லாஹ் உன்னை அழைத்து விட்டான். அவனது அழைப்பை ஏற்றே நீ இங்கு வந்திருக்கிறாய். எனவே, முழுமையாக அவனுக்கு அடிபணிந்து விடு.

புகழ், ஆசிகள், இராஜ்ஜியம் உனக்கே.

உன்னைப் போன்று யாருமில்லை.

உலகின் நேர்மையற்ற, சுரண்டுகிற, சர்வாதிகாரம் படைத்த வல்லரசுகளை எதிர்த்து மக்கள் கோஷமிடுகின்றனர். ‘லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்.’ எல்லோரும் எல்லாவிடங்களிலும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுடன் உரையாடுகின்றனர். மனிதா, கற்பனை செய்து பார். காந்த வெளியில் இருக்கும் இரும்புத் துகள் போன்றவன் நீ. மிஹ்றாஜுக்கு1 செல்லும் வழியில் வானத்தில் பறந்து செல்லும் பத்து லட்சம் வெண்பறவைகள் மத்தியில் நீ இருப்பது போன்று தென்படுகிறது.

நீ கஅபாவை நெருங்குகிறாய். நெருங்க நெருங்க பரபரப்பு அடைகின்றாய். காயமுற்ற வனவிலங்கொன்று கூண்டிலிருந்து தப்ப முயல்வது போன்று உனது இருதயம் மார்புக் கூட்டோடு மோதிக் கொள்கிறது. தசைத் தோல் உன்னை நெருக்குவது போல் உணர்கிறாய்.

அல்லாஹ்வின் உணர்வு முழுச் சூழலையும் நிரப்பியுள்ளது. உன் கண்களில் முட்டித் ததும்பும் கண்ணீரை உன்னால் தடுக்க முடியவில்லை. உன் இதயத்தை, தசையுடலை, சிந்தனையை, புலன்களை அல்லாஹ்வின் மாட்சிமை ஆட்கொள்கிறது. ஒவ்வொரு பாறையும் மணற்குன்றுகளும் பள்ளத்தாக்கும் பாலையும் தொடுவான் விளிம்பும் அல்லாஹ்வின் மாட்சிமையை உணர்த்துகின்றன. நீ காண்பது அல்லாஹ்வையன்றி யாரையுமன்று. அவன் ஒருவனே ‘உள்ளவன்’; மற்றவை யாவும் நுரைதிரை போன்றவையே. அவன் மட்டுமே உண்மை; அவனல்லாதவை யாவும் பொய், மாயை.

ஹஜ்ஜின் வெவ்வேறு அம்சங்களை நிறைவேற்றும்போது நீ உன்னிலிருந்து விலகிச் செல்வதை உணர்கிறாய். அல்லாஹ்வை நோக்கி நகர்வதை உணர்கிறாய். பரபரப்பின் காரணமாக ஒரு திசையில் ஏகுமாறு மட்டுமே வலியுறுத்தப்படுவதாக நீ உணர்கிறாய். திரும்பிச் செல்ல உனக்கு உரிமையில்லை. இவ்வுலகமே அடித்துக் கொள்ளுமோர் இதயம் போல் தோன்றுகிறது. அல்லாஹ் எங்கும் நிறைந்திருக்கிறான்.

அடுத்து மக்காவை அண்மிக்கிறாய். ஹறம் பிரதேசத்தை காட்டும் அடையாள அறிவிப்பு காணப்படுகின்றது. அப்போது உனக்கு பாதுகாப்புணர்வு ஏற்படுகின்றது. ஹறம் பிரதேசத்தில் சண்டையிடல், வேட்டையாடல், மரக்கன்றுகளை பிடுங்குதல் எதுவும் அனுமதிக்கப்பட்டில்லை. நபி முஹம்மது (ஸல்) அவர்கள் விக்கிரகங்களிடமிருந்து கஅபாவை விடுவிப்பதற்காக மக்காவை கைப்பற்றியபோது இச்சட்டம் விதியாக்கப்பட்டது. அப்போதிருந்து இச்சம்பிரதாயம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சில செயல்களுக்கு அப்பிராந்தியத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளன.

ஹறம் பிரதேசத்தை நெருங்கியதும் ‘லப்பைக்க’ என்ற முழக்கம் சடுதியாக மறைந்துவிடும். எங்கும் மௌனம் ஆட்சி புரியும். இது உன் வருகையை உணர்த்துகிறது. விருந்தோம்புபவன் (அல்லாஹ்) இங்கிருக்கிறான். இது அவனது இல்லம். யாவரும் அமைதியுறுகின்றனர். ஆனால் ஒவ்வொருவரது இதயமும் அன்பினால் தூண்டப்படுகிறது.

மக்கமாநகர் எல்லாப் பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட ஒரு பிரம்மாண்டமான தாழியை போன்று காணப்படுகிறது. ஒவ்வொரு பள்ளத்தாக்கும், வீதியும், நடைபாதையும் இம்மாபெரும் இல்லத்தின் தரையை நோக்கிக் கொண்டிருக்கின்றது. கஅபா இதன் மையத்தில், ஒரே இயல்புள்ள மக்கள் வெள்ளம் கீழ்நோக்கி மஸ்ஜிதுல் ஹறாமை நாடிப் பாய்ந்து செல்லும் ஒரு வெள்ளை நதி போன்று தென்படுவதை நீ காண்பாய். இம்மகா நதியில் நீ ஒரு துளி என்ற உணர்வு ஏற்படும்.

நீ கஅபாவை நெருங்க நெருங்க அதிகமதிக மகோன்னதங்களை அனுபவிப்பாய். பாறைகளிலிருந்து (கஅபாவை நோக்கி) இறங்கிச் செல்லும்போது நீ அல்லாஹ்வை சமீபிக்கிறாய். எளிமை, கீழ்ப்படிதல் இவற்றின் மூலமாக மட்டுமே நீ மகோன்னதத்தை, கண்ணியத்தை அணுக முடியும். இறுதியில் உன்னத உயர்வை எய்த முடியும். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், நீ அல்லாஹ்வை வானத்தில் தேடவில்லை. தத்துவ சாஸ்திரங்களின் ஊடாகத் தேடவில்லை. இத்தேடல் இந்த மண் மீதே நடைபெறுகிறது. சடப்பொருளின் ஆழத்திலும் இன்னும் கற்களிலும் கூட அவனை காண முடியும். அவனை பார்க்க வேண்டுமானால் நீ நேர்வழியில் இருக்க வேண்டும் என்பதை எப்பொழுதும் நினைவில் வை. எனவே நேர்வழியை காண உன்னை நீ பயிற்றுவிக்க வேண்டும். இந்த ‘காட்சி’ மனித இனத்தின் விதியை குறிக்கின்றது. அவன் பூமியில் ஆழத்தில் இறங்குவதையும் (புதைக்கப்படுவதையும்) அல்லாஹ்வை நோக்கி மேலே எழுவதையும் (மறுமையில் எழும்புவதையும்) இது குறியீடாக உணர்த்துகின்றது.

இப்போது நீ கஅபாவுக்கு இன்னும் அருகாமையில் இருக்கின்றாய். மௌனம், விசாரணை, அன்பு ஆகியவை ஆட்சி செலுத்துகின்றன. ஒவ்வொரு கணமும், நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டிலும் உனது அன்பும் அச்சமும் அதிகரிக்கின்றது. அல்லாஹ்வின் பிரசன்னம் மென்மேலும் அழுத்துகின்றது. உன் கண்கள் அகல அகல விரிந்து கிப்லாவில் நிலைக்கின்றன. உனக்கு மூச்சு முட்டுகின்றது. இதயத்தில் ஆசைகள் பொங்குகின்றன. உதடுகளோ மௌனத்தில் லயிக்கின்றன. பலவீனமான தோள்களும் இளகிய மார்புகளும் இந்த நெருக்கடியை எப்படி சமாளிக்குமென நீ யோசிக்கிறாய்.

பள்ளத்தாக்கில் இறங்கும்போது நீ மூர்ச்சையடையப் போவது போல் உணர்கிறாய். ஆனால் இப்போது கஅபா தென்படுகிறது. முஸ்லிம்கள் தொழுகையின் போது நோக்குகின்ற தளமான கஅபா உயிர்த்திருத்தல், விசுவாசம், அன்பு, வாழ்க்கை ஆகியவற்றின் நடுநாயகமாக விளங்குகிறது. மரணத் தருவாயில் அவதியுறும் நோயாளியின் படுக்கைகள் வைக்கப்படுவது இத்திசைியலேயே. மரணித்தவர்கள் அடக்கம் செய்யப்படுவதும் இத்திசையிலேயே.

குறிப்புகள்

மிஹ்ராஜ் – விண்ணேற்றம். முஹம்மது நபியின் விண்வெளிப் பயணம். அது ‘இஸ்றா’ – இரவுப் பயணம் என்றும் அழைக்கப்படுகிறது.

Related posts

Leave a Comment