மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 8) – மரியம் ஜமீலா
பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் முயற்சியின் பலனாக, 1969, பிப்ரவரி இறுதியில் ஜனாதிபதி அய்யூப் கான், முக்கிய எதிர்க் குழுக்களோடு ஒரு வட்ட மேசை மாநாட்டை ராவல்பின்டியில் நடத்த ஒப்புக் கொண்டார். மேலும் வயதுவந்தோர் வாக்குரிமை அடிப்படையில் நியாயமான ஜனநாயகப்பூர்வ தேர்தல் நடத்தியபின் தன் பதவியைத் துறந்து பாராளுமன்ற முறையை மீளமைக்க ஒப்புக் கொண்டார். மேலும் 1965 செப்டம்பர் இன் இந்தியா பாகிஸ்தான் போரின்போது விதிக்கப்பட்ட அவசரகால நிலையை ரத்து செய்து, அரசியல் போட்டியாளர்களைக் கைது செய்து மனப்போக்கில், விசாரணையின்றி நீண்டகாலம் சிறையிலடைக்க அனுமதித்த ‘பாகிஸ்தான் பாதுகாப்பு சட்டங்களை’ ரத்து செய்வதாகவும் அறிவித்தார். அப்போது நாடே குதூகலித்தது. பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் ஐந்து கட்சிகளும், 1956 இன் அரசியல் சாசனத்தை மீளமைக்கக் கோரின. அதுவே 1962 இல் அய்யூப் உருவாக்கிய அரசியல் சாசனத்தைவிட இஸ்லாமிய தேசத்திற்கு உறுதியான அடிப்படையாகத் திகழ்ந்தது.
துரதிர்ஷ்டவசமாக, இடதுசாரிக் குழுக்கள், குறிப்பாக ஸுல்ஃபிகர் அலி பூட்டோவால் வழிநடத்தப்படும் மக்கள் கட்சியும், மௌலானா பஹ்ஷானியின் தலைமையிலான சீன ஆதரவு தேசிய அவாமி லீக்கும் வன்முறையில் இறங்கி இத்திட்டம் செயல்படுவதற்காக ஒத்துழைக்க மறுத்து விட்டனர். அவர்கள் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வன்முறை தூண்டும் பிரச்சாரம் செய்து, கம்யூனிச வழியில் ஒரு புரட்சியைத் தூண்ட இயன்ற அளவு முயன்றனர். மாணவர்களின் கிளர்ச்சியால் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் ஆறு மாத காலம் மூடப்பட்டன; வேலை நிறுத்தத்தால் தொழில்துறையும் வணிகமும் ஸ்தம்பித்தது; வன்முறை, தீவைப்பு மற்றும் கொலைகள் நாட்டையே –குறிப்பாக கிழக்குப் பாகிஸ்தானை- உலுக்கின. சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்ட நிலையில் ஜனாதிபதி அய்யூப் கான் ராஜினாமா செய்தார். பின்னர் ஜெனரல் யஹ்யா பதவியைக் கையிலெடுத்து, 1969 மார்ச் 25இல் இராணுவச் சட்டத்தை பிரகடனம் செய்தார். நாட்டில் ஜனநாயகத்தை மீளமைக்க நடக்கவிருக்கும் தேசியத் தேர்தல்களுக்கு ஆயத்தமாக மௌலானா மௌதூதி ஒரு எட்டுப் புள்ளி அரசியல் அறக் கோட்பாடுகளை வரைந்தார். பத்திரிகைகளில் வெளியான அதன் பிரதி பின்வருமாறு:
- பாகிஸ்தான் என்னும் கருத்தியலுக்கு எதிராகவும், இஸ்லாமிய ஜனநாயக வாழ்க்கை ஒழுங்கு மற்றும் பாகிஸ்தானின் கட்டொருமைப்பாட்டுக்கு எதிராகவும் எவரும் எதுவும் பேசவோ, செயல்படவோ கூடாது.
- எந்தக் கட்சியும், தலைவரும், பொறுப்பான தொண்டரும் பொதுவிடத்தில் தங்கள் தலைவர்களை அவமதிக்கக் கூடாது. குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தின் போது பிற கட்சிகள் அல்லது வேட்பாளர்களுக்கு எதிராக எவரும் தவறாகவோ இழிவாகவோ பேசக்கூடாது. மேலும் அவர்களுக்கு எதிராக பழிப்புரைகளும் ஆற்றக்கூடாது.
- எல்லா கட்சிகளும் பொதுக் கூட்டங்கள் நடத்தவும், ஊர்வலங்கள் மற்றும் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் உரிமை பெற்றுள்ளன. ஆனால் எவரும் பிற கட்சியின் கூட்டம், ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் தலையிட உரிமை பெறமாட்டார். தேர்தலின் போது இத்தகைய செயல்களில் ஈடுபடும் எந்தவொரு கட்சியையும் வேட்பாளரையும் தகுதியிழக்கச் செய்யும் வகையில் தேர்தல் சட்டம் அமைக்கப்பட வேண்டும்.
- மக்களின் ஜனநாயக விருப்பங்களுக்கு எதிராக, வன்முறையாலும் பலத்தாலும் மாற்றத்தைக் கொண்டு வரும்பொருட்டு ஜனநாயகமல்லாத புரட்சிகர வழிமுறைகளைப் பரப்ப எந்தக் கட்சியும் தனிமனிதரும் அனுமதி பெறமாட்டார். இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றும் எந்தக் கட்சியும் தனிமனிதரும் செயல்படவும் அரசியல் கட்சியை ஒருங்கிணைக்கவும் உரிமை பெறமாட்டார்.
- ஒவ்வொரு கட்சியும், தனிமனிதரும் தேர்தலை புறக்கணிக்கும் உரிமையை பெறுவார். எனினும் ஏதாவது கட்சி அல்லது தனிமனிதர், தேர்தலை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்றும், பிறரை அதில் பங்கு கொள்வதிலிருந்து தடுப்போம் என்றும் வாக்குச் சாவடிகளை இயங்க விட மாட்டோம் என்றும் கூறினால், அவர்கள் அரசியலில் ஈடுபடுவது தடை செய்யப்படுவதோடு அவர்கள் தகுதியிழக்கப் பட வேண்டும். மேலும் அத்தகைய செயல்கள் நீதிமன்ற அதிகாரத்திற்குற்பட்ட குற்றச் செயலாக ஆக்கப்பட வேண்டும்.
- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் தேர்தலின் போதும், அனைத்து கட்சி வேட்பாளர்களும் பின்வரும் செயல்களிலிருந்து முழுமையாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்:
- பணம் அல்லது பிற கவர்ச்சிப் பொருள்களால் வாக்குகளை வாங்குவது.
- அதிகார பலப்பிரயோகம் அல்லது கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மூலம் அச்சுறுத்தி வாக்குகளை சேகரிப்பது.
- வாக்காளர்களின் இன, மொழி, பிராந்திய பிரிவுவாத முற்சார்புகளை தூண்டுவது.
- தான் அதிகாரத்திற்கு வரும் நிலையில் பின்வரும் செய்கைகளிலிருந்து தவிர்ந்து கொள்வதாக ஒவ்வொரு கட்சியும் உளப்பூர்வமாக பிரகடனம் செய்ய வேண்டும்.
- அதிகாரத்தையும் வளங்களையும் தங்கள் கட்சியின் நலனுக்காக துஷ்பிரயோகம் செய்வது.
- வானொலி, தொலைக்காட்சி, செய்தி நிறுவனங்கள் மற்றும் செய்தித் தாள்கள் போன்ற பிரச்சார இயந்திரங்களை தங்களுக்கு ஆதரவாகவும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் துஷ்பிரயோகம் செய்வது.
- பிற கட்சியினர் மற்றும் தனி மனிதர்களை தங்கள் பக்கம் கவரும் பொருட்டு, வழி-அனுமதிகள் (route-permits), உரிமங்கள் மற்றும் பிற அரசாங்க ஆதரவுகள் மூலம் லஞ்சம் கொடுத்து அவற்றை முறையற்ற வழிகளில் பயன்படுத்துவது.
- சொந்தக் கட்சியின் நலனுக்காக, செய்தி மற்றும் பிற ஊடகங்கள் மீது கடிவாளமிடுவது.
- இஸ்லாமிய அடிப்படை மற்றும் பாகிஸ்தானின் கட்டொருமைப்பாட்டில் நம்பிகையில்லாத, மக்களின் ஜனநாயக விருப்பங்களுக்கு மாற்றமான ஒரு முறையை நிறுவ விரும்பும் எந்த ஒரு கட்சியையும் தேர்தலில் பங்குபெற அனுமதிக்கப்படக்கூடாது (20)
1970, டிசம்பர் தேசியத் தேர்தல்களில் பிராந்திய அரசியல் கட்சிகள் வெற்றி பெற்றால், பாகிஸ்தான் சிதைவுறுவது தவிர்க்க முடியாததாகிவிடும் என மௌலானா மௌதூதி சரியாக கணித்தார். இராணுவத்தின் படுவீழ்ச்சியைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அக்கணிப்பின் உண்மையை உணர்த்தின. கிழக்குப் பாகிஸ்தானின் பல்லாயிரக்கணக்கான வங்காளியல்லாதோரையும் ஒன்றுபட்ட பாகிஸ்தானை ஆதரித்தோரையும் உயிர் பலிவாங்கிய பிரிவினைவாதிகளின் கலகங்களை இராணுவத்தால் கூட அடக்க முடியவில்லை. ‘பங்களா தேஷ்’ என்ற முழக்கத்தை ஓங்கிய மார்க்சிய, ஹிந்து ஆதிக்கங்களை எதிர்த்துப் போரிடுவதற்கு அது எத்தகைய வழிமுறைகளையும் கொண்டிருக்கவில்லை. இறுதியாக, 1971, டிசம்பரில் பிரிட்டன் மற்றும் ரஷ்யாவின் வெளிப்படையான ஆதரவோடு இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழ், கிழக்குப் பாகிஸ்தானை மேற்குப் பகுதியிலிருந்து துண்டிப்பதில் அவர்கள் வெற்றி பெற்றனர்.
1970, அக்டோபர் 24 இல் லாஹுரின் சன்த் நகரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் மௌலானா மௌதூதி இவ்வாறு உரையாற்றினார்:
“ஆயுதப் படையினர் கூட இந்நாட்டை ஒன்றுபட்டதாக தக்க வைக்கும் நிலையில் இல்லை என்று என் நாட்டினரை உறுதியாக எச்சரிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். பிரிவினை இயக்கம் தொடர்ந்து பலமடைந்தால், கிழக்குப் பாகிஸ்தானை மேற்குப் பாகிஸ்தானோடு இணைந்திருக்குமாறு யாரும் நிர்பந்திக்க முடியாது என்பதை சிந்திக்கும் ஆற்றல் சிறிதாவது இருக்கும் எவரும் புரிந்து கொள்ள முடியும. இவ்விரு பகுதிகளும் இணைந்து பாகிஸ்தானாக உருவானது இராணுவ பலத்தாலன்றி சகோதரத்துவ இஸ்லாமிய பிணைப்புகளாலும், இஸ்லாத்தின் பொதுவான பாரம்பரிய உணர்ச்சிகளாலுமே ஆகும்.
அத்தகைய பிணைப்புகளும் உணர்ச்சிகளும் தொடர்ந்து நீடித்தாலன்றி, கிழக்குப் பாகிஸ்தானியர்கள் –அல்லது குறைந்தபட்சம் அவர்களில் செயல்பாடுமிக்க பெரும்பான்மையினர்- இவ்வொற்றுமையை விரும்பினாலன்றி இப்பகுதிகள் ஒன்றாக நீடிக்க முடியாது. இப்பிணைப்புகளை அறுத்துவிட விரும்புபவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெற்றுவிட்டால் ஆயுதப் படையினரும் அவர்களைக் கட்டுப்படுத்தும் நிலையில் இருக்கமாட்டார்கள். இத்தகைய பிளவுண்டாக்கும் மனப்பான்மைகள் பரவலாவது, முடிவாக ஆயுதப்படையினரையே பாதிப்புக்குள்ளாக்கும்; பின்னர் அவர்கள் அரசாங்கத்தின் செயல்திறன் மிக்க ஆயுதமாக நீடிக்கமாட்டார்கள்.
இஸ்லாத்தின் பெயரிலேயே பாகிஸ்தான் இயக்கம் துவக்கப்பட்டிருந்தாலும், இஸ்லாமிய அரசை நிறுவுவதே முஸ்லிம்களின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இஸ்லாமிய அரசின் இன்றியமையாத முக்கியப் பண்புகளை, அத்தகையதோர் அரசை உருவாக்குவது எவ்வாறு என்பதை ஜமாத்தே இஸ்லாமி தவிர பிற கட்சிகள் ஏதும் விவரித்ததுண்டா? ஜமாத்தே இஸ்லாமி, இத்துறையில் செய்த முயற்சிகள் மட்டுமே, பாகிஸ்தானை ஒரு மதச்சார்பற்ற அரசாக எதிர்நோக்கியவர்களின் கனவுகளை சுக்குநூறாக்கியது.
பாகிஸ்தானை நாம் அடைந்தது, ஒரு முதல் படி மட்டுமே. பிரிவினையின் போது, அதிகபட்சமாக ஒருவர் நினைத்ததெல்லாம், ஒரு ஷேகுல் இஸ்லாத்தை வைத்துக் கொள்வது, ஒரு தாருல் இஃப்தா, தாருல் கஸா மற்றும் அவ்காஃப் அமைச்சகத்தை நிறுவுவது மட்டுமே. ஒரு நவீன அரசில் பிற விஷயங்களோடு, திருடனின் கையை வெட்டுவதும் நடைமுறை சாத்தியமான முன்மொழிவுதான் என்று சட்டவியலாளர்களும், தொழில்முறையாளர்களும், நீதித்துறை நிர்வாகத்தோடு தொடர்புடைய எவரும் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. சுன்னாவும் ஃபிக்ஹும் விவாதிக்கப்படுவதைக் கேட்டால் அவர்கள் அமைதியிழந்தனர். குர்ஆன்தான் எல்லாச் சட்டங்களுக்கும் மூலம் என்று ஒப்புக்கொண்டதோடு, தங்கள் விருப்பப்படி அதைப் புரிந்து கொண்டு இஸ்லாத்தின் ஒரு நவீன பிரதியை உருவாக்குவதற்கு மட்டுமே அவர்கள் தயாராக இருந்தனர்.
இஸ்லாம், பிரத்யேகமான ஒரு அரசியல் சாசனத்தையும் பொருளாதார அமைப்பையும் கொண்டுள்ளது என்றும், அது சமகால மனிதனின் பிரச்னைகளைத் தீர்க்க வல்லது என்றும் கூறப்பட்டால், கற்றறிந்த வர்க்கத்தின் பெரும்பாலனவர்கள் முற்றிலும் ஆச்சரியமடைந்தனர். மத அடிப்படையிலான ஒரு அரசை இருபதாம் நூற்றாண்டில் நிறுவுவதற்கு பெரும்பாலான அரசியல் தலைவர்கள் வெட்கப்பட்டனர். ஜமாத்தே இஸ்லாமி மட்டுமே 23 ஆண்டுகளாக கற்றவர்கள் மத்தியில் இருந்த சந்தேகங்களை ஒவ்வொன்றாக முழுமையாகக் களைந்தது. ஒரு அரசின் நீதிமன்றம், பாராளமன்றம், காவல்துறை, பாதுகாப்புத்துறை, வருவாய் மற்றும் நிதிநிலை அமைப்பு, வணிகம் மற்றும் தொழில்துறை என அனைத்துத் துறைகளும் இஸ்லாத்தின் கட்டளைகள்படி ஒழுங்கு செய்யப்படாதவரை அதை முழுமையான இஸ்லாமிய அரசு என்று கூறமுடியாது என்பதை அவர்களுக்கு அது உணர்த்தியது.
ஜமாத்தும் அதன் எழுத்துப் பணிகளும், தேசிய வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் நுழைந்து இஸ்லாத்தின்படி நம் வாழ்க்கையை எப்படி மறுகட்டமைப்பு செய்வது என்றும், நவீன காலத்தில் இஸ்லாத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்றும், உலகளாவிய அளவில் இஸ்லாம் எப்படி வழிகாட்டியாகத் திகழ முடியும் என்பதையும் மனமேற்கும்படியான வாதங்களுடன் எடுத்துரைத்தன. ஜமாத்தும் அதன் எழுத்துக்களும், மேற்கத்தியக் கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும் அதன் வாழ்க்கைத் தத்துவத்தையும், பொருள்முதல்வாதம் மற்றும் கம்யுனிசத்தையும் நுணுக்கமான பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, கற்றறிந்த வர்க்கத்தின் நலனுக்காக, அவற்றின் பலவீனங்களையும் பிழைகளையும், அவைகளை ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் துயரமான விளைவுகளையும் மிக விரிவாக வெளிப்படுத்தின.
இதன் பலனாக, அவர்களில் பெரும்பாலனவர்கள் –அவர்கள் அரசாங்கப் பணிகளிலோ, சட்டத்துறையிலோ, கல்வி நிறுவனங்களிலோ அல்லது வாழ்வின் வேறு எந்த துறையில் இருப்பினும்- இன்று இஸ்லாமிய வாழ்வின் மேன்மையில் பற்றுறுதி மிக்கவர்களாக உள்ளனர். இன்றும் கூட மேற்குப் பாகிஸ்தானில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் இஸ்லாமிய ஒழுங்கை புதுப்பிக்க தங்கள் உயிரையும் துறக்கத் தயாராக உள்ளனர். இந்நாட்டில் இஸ்லாத்தை நிலைநாட்ட இத்தகைய ஒரு களத்தை உருவாக்கியவர்கள் என்று வேறு ஏதாவது கட்சியைக் காட்ட முடியுமா? இருபது ஆண்டுகளாக இவ்வாறு தொடர்ந்து செய்த முயற்சிகள் இல்லாது போயிருந்தால் நிலைமை எவ்வாறு மாறியிருக்கும் என்று யாராவது மதிப்பிட முடியுமா?
ஜமாத்தே இஸ்லாமி பகட்டுக்காக இவற்றையெல்லாம் சொல்லவில்லை. எனினும் நான் சொல்வதனைத்தும் சிறிதும் மிகைப்படுத்தப்படாத மறுக்க முடியாத உண்மைகளாகும். நமது அறிவுசார் வர்க்கத்தினரிடையே இன்று பரவலாக நிலவும் –மேலும் நமது உலமாக்கள் கூட பேசும்- ஒரு இஸ்லாமிய அமைப்பின் தெளிவான கருதுகோள், ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னர் அவ்விரு பிரிவினரின் எழுத்துக்களில் காண முடியவில்லை. மதச்சார்பற்றவாதம், சோஷலிசம், பொருள்முதல்வாதம் ஆகியவற்றுக்கெதிரான வாதங்களும் ஜமாத்தே இஸ்லாமியின் எழுத்தாக்கங்கள் உருவாக்கியவையே; வேறு எந்த கட்சியாலும், மனிதராலும் அல்ல. நம் எதிரிகள், இவற்றை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும் இதுதான் உண்மை என்பதை தம் உள்ளங்களில் அறிவர்.”
குறிப்புகள்
(20) தி பாகிஸ்தான் டைம்ஸ், லாஹுர், 1969, ஜுன் 15, பக் 3