தொடர்கள் மொழிபெயர்ப்பு 

காரிருள் (பகுதி 1) – சையித் குதுப்

Loading

[சையித் குதுப் எழுதிய ‘இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ (‘கசாயிஸ் அத்-தசவ்வுர் அல்-இஸ்லாமி’) நூலின் முதல் அத்தியாயத்தின் முதல் பகுதியை இந்தப் பதிவில் தருகிறோம். முன்னுரைப் பதிவுகளைப் பார்க்க: பதிவு 1, பதிவு 2, பதிவு 3]

“முகங்குப்புற நடந்து செல்பவன் நேர்வழி பெற்றவனா? அல்லது நேரான வழியில் சீராகச் செல்பவனா?”

இஸ்லாம் உலகிற்கு வந்தபோது கொள்கைகள், கண்ணோட்டங்கள், தத்துவங்கள், புராணங்கள், யூகங்கள், பழக்கவழக்கங்கள், புனிதங்கள் ஆகியவற்றின் குவியல்கள் மண்டிக்கிடந்தன. சத்தியம் அசத்தியத்தோடு, சரியானவை தவறானவையோடு, மார்க்கம் மூடநம்பிக்கைகளோடு விரவிக்கிடந்தன. இந்த குவியல்களுக்கிடையே அகப்பட்டுக்கொண்ட மனித மனம் யூகங்களிலும் காரிருளிலும் தடுமாறித் திரிந்து கொண்டிருந்தது. எதன்மீதும் அது நிலையாக இருக்கவில்லை. இந்தக் குவியல்களின் பாதிப்பால் மனித சமூகம் வீழ்ச்சியையும் சரிவையும் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

அது அந்தக் காரிருளில் ஒளியோ வழிகாட்டியோ இன்றி தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்தக் காரிருள்தான் மனித சமூகத்தை அப்பியிருந்த கண்ணோட்டங்கள். அவை மனிதனின் இறைவன் யார்? அவனது பண்புகள் என்னென்ன? அவனுக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் என்ன தொடர்பு? தான் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? என எந்தக் கேள்விக்கும் தெளிவான பதிலை அளிக்கவில்லை. அவற்றினால் மனித சமூகத்தில் தீமைகளே வேகமாக வளர்ச்சியடைந்தன.

மனித மனம் இந்தப் பிரபஞ்சத்தைக் குறித்து, தன்னைக் குறித்து, தான் படைக்கப்பட்டதன் நோக்கம் குறித்து எந்தவொரு தெளிவான கண்ணோட்டத்தையும் அறிந்திருக்கவில்லை. அதனால் தன் இறைவனைக் குறித்து, தன் கொள்கையைக் குறித்து உறுதியான, தெளிவான ஒரு விசயத்தைப் பெறாதவரை எந்தவொன்றின் மீதும் நிலையாக இருக்க முடியாது.

மேற்கத்திய சிந்தனையாளர்கள் கூறுவதுபோல – கிழக்கில் உள்ள சிலரும் அவர்கள் கூறுவதை கிளிப்பிள்ளைகள்போல ஒப்புவிக்கிறார்கள் – மத ரீதியான சிந்தனை இடைப்பட்ட நூற்றாண்டுகளில் மட்டும் ஆதிக்கம் செலுத்திய ஒன்றல்ல. எல்லா நிலையிலும், எல்லா காலகட்டங்களிலும் மனித வாழ்வோடு, மனித உள்ளத்தோடு தொடர்புடைய இரண்டு அடிப்படையான விசயங்கள் இருக்கின்றன. அவை:

  1. மனிதன் -அவனது இயல்பின்படி- பரந்து விரிந்த இந்தப் பிரபஞ்சத்தில் முக்கியத்துவமற்ற, வீணான ஒன்றாக இருக்க முடியாது. இந்தப் பிரபஞ்சத்தோடு அவனை இணைக்கக்கூடிய, இங்கு அவனது இருப்பிற்கு உத்திரவாதம் அளிக்கக்கூடிய, இங்கு அவனது இடத்தை அறிவிக்கக்கூடிய வலுவான ஒரு தொடர்பு அவசியமாகும். அவனைச் சுற்றிக் காணப்படும் படைப்புகளின் இயல்பையும் அவற்றுக்கிடையே அவனது இடத்தையும் தெளிவுபடுத்தக்கூடிய ஒரு கொள்கை மிகவும் அவசியமாகும். இது அவன் வாழும் காலம் மற்றும் சூழலோடு தொடர்பில்லாத இயல்பான தேவையாகும். இந்த வலுவான தொடர்பும், தெளிவும் இன்றி மனித மனம் எவ்வாறெல்லாம் தட்டழிந்து திரிந்தது என்பதை இந்தப் புத்தகத்தின் பின்வரும் பக்கங்களில் அறிந்துகொள்ளலாம்.
  2. மனிதனின் கண்ணோட்டத்திற்கும் சமூக அமைப்பிற்குமிடையே என்றும் அறுபடாத உறுதியான தொடர்பு உண்டு. அவனது சமூக அமைப்பு, இந்தப் பிரபஞ்சத்தைக் குறித்தும் அதில் மனிதனின் நிலை மற்றும் அவன் படைக்கப்பட்ட நோக்கம் குறித்தும் தெளிவுபடுத்தக்கூடிய அந்த விளக்கத்திலிருந்தே வெளிப்படும் ஒன்றாகும். இந்த விளக்கத்தின் அடிப்படையில் அல்லாமல் கட்டமைக்கப்படும் சமூக அமைப்பு வாழத் தகுதியற்ற செயற்கையான சமூக அமைப்பாக இருக்கும். அது நிலைத்திருக்கும் காலகட்டம் மனிதனுக்குத் துன்பம் மிகுந்த, அதற்கும் அவனது இயல்புக்குமிடையே மோதல் நிகழும் காலகட்டமாகத்தான் இருக்கும். அது இயல்பான தேவை மட்டுமல்லாமல் அமைப்பியல் ரீதியான தேவையும்கூட.

நூஹிலிருந்து ஈசா வரை வந்த இறைத்தூதர்கள் அனைவரும் இந்த உண்மையை மக்களுக்குத் தெளிவுபடுத்தினார்கள். அவர்களின் இறைவனைக் குறித்து அவர்களுக்குச் சரியான முறையில் அறிமுகம் செய்தார்கள். இந்தப் பிரபஞ்சத்தில் மனிதனின் நிலையையும் அவன் படைக்கப்பட்ட நோக்கத்தையும் தெளிவுபடுத்தினார்கள். மனிதனின் பலவீனம், அவனது இச்சைகள், சமூக அரசியல் சூழலின் அழுத்தங்கள் ஆகியவை இந்த உண்மையை மூடிமறைத்துவிட்டன; இதனைவிட்டும் அவனைத் திசைதிருப்பிவிட்டன; மனித சமூகத்தின்மீது குவியலாகப் படிந்துவிட்டன. அனைத்தையும் உள்ளடக்கிய, பரிபூரணமான புதியதொரு மார்க்கத்தால் மட்டுமே இந்தக் குவியல்களை அகற்றி, காரிருளைப்போக்கி வெளிச்சத்தை ஏற்படுத்த முடியும் என்றாகிவிட்டது. அதனால் மட்டுமே அவர்களின் கண்ணோட்டத்தைத் தூய்மைப்படுத்தி அதனடிப்படையில் மனித வாழ்வை நிலைநிறுத்த முடியும். உலகம் முழுவதிலும் வழிகெட்ட கொள்கைகளைப் பின்பற்றுவோர் அந்த மார்க்கத்தைக் கொண்டு, அந்த தூதரைக் கொண்டு மட்டுமே நேர்வழி பெற முடியும் என்றாகிவிட்டது.

அல்லாஹ் கூறுகிறான்,

“யூதர்கள், கிருஸ்தவர்கள், இணைவைப்பாளர்கள் ஆகியோரிலுள்ள நிராகரிப்பாளர்கள் தாங்கள் ஒன்றுபட்டுள்ள நிராகரிப்பை தெளிவான ஆதாரம் தங்களிடம் வரும்வரை விட்டுவிடக்கூடியவர்கள் அல்ல. இந்த தெளிவான ஆதாரம் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தூதராவார். அவர் பரிசுத்தமான வேதங்களை ஓதிக் காட்டுகிறார்.” (98:1,2)

மனித சமூகத்தை மண்டிக் கிடக்கும் இந்தக் குவியல்களை, அவற்றால் ஏற்பட்ட விளைவுகளை அறியாமல் அவற்றில் அகப்பட்டு தடுமாறிக் கொண்டிருக்கும் மனித சமூகத்தை காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை, இந்த மார்க்கத்தின் அவசியத்தை யாராலும் உணர்ந்துகொள்ள முடியாது. இஸ்லாம் உலகிற்கு வந்தபோது அவை மனித மனதில் துருவாக படிந்துகிடந்தன. இறைமார்க்கங்கள் என்று தம்மை அழைத்துக்கொண்ட கொள்கைகளும் மாற்றத்திற்கும் தவறான விளக்கங்களுக்கும் உட்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் ஊடுருவிய மெய்யியல், சிலைவழிபாடு, புராணங்கள் ஆகியவற்றால் அவை சிதைக்கப்பட்டிருந்தன.

இந்த நூலில் அந்தக் கொள்கைகளையெல்லாம் எடுத்துரைப்பது நம்முடைய நோக்கமல்ல. இஸ்லாம் கூறும் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகளையும் அடிப்படைகளையும் எடுத்துரைப்பதே நம்முடைய நோக்கம். யூத மற்றும் கிருஸ்தவ கண்ணோட்டங்களிலிருந்தும் அன்றைய அரேபியாவில் பரவியிருந்த அறியாமைக்கால கண்ணோட்டங்களிலிருந்தும் சில உதாரணங்களை மட்டும் இங்கு காண்போம்.

யூதர்களின் மதம் சிலைவழிபாட்டுக் கண்ணோட்டங்களாலும் இனவாத அழுக்குகளாலும் நிரம்பியிருந்தது. அவர்கள் இஸ்ராயீலின் மக்கள். யஅகூபு இப்னு இஸ்ஹாக் இப்னு இப்ராஹீமே ‘இஸ்ராயீல்’ என்று அழைக்கப்படுகிறார். அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தூய ஏகத்துவத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களில் முதலாமவர் யூதர்களின் தந்தை இஸ்ராயீல் ஆவார். அவர் தம் தந்தை இப்ராஹீமிடமிருந்து இதனைக் கற்றுக்கொண்டார். பின்னர் இறைத்தூதர் மூசா (அலை) ஏகத்துவ அழைப்போடு, அதனடிப்படையில் அமைந்த ஷரீஅத்தையும் கொண்டுவந்தார். ஆயினும் அந்த மக்கள் கால ஓட்டத்தில் வழிதவறினார்கள். சிலைவழிபாட்டுக் கண்ணோட்டங்களை தம்மோடு இணைத்துக் கொண்டார்கள். தங்களின் வேதங்களில் இறைவனைக் குறித்த கட்டுக்கதைகளையும் தவறான கண்ணோட்டங்களையும் இணைத்துக் கொண்டார்கள். அவை இறைமார்க்கத்தையோ வேதத்தையோ பெறாத சிலைவழிபாட்டாளர்கள் மற்றும் கிரேக்கர்களின் கண்ணோட்டங்களைவிட்டு எவ்வகையிலும் வேறுபட்டவையாக இருக்கவில்லை.

அவர்களின் தந்தை இப்ராஹீம் (அலை) கொண்டுவந்த ஏகத்துவக் கொள்கை தூய்மையானதாகவும் அனைத்தையும் தழுவியதாகவும் பரிபூரணமானதாகவும் திருக்குர்ஆன் சித்தரித்துக் காட்டுவதுபோன்று சிலைவழிபாட்டை கடுமையாக எதிர்க்கக்கூடியதாகவும் இருந்தது. இப்ராஹீம் தம் பிள்ளைகளுக்கு அதையே இறுதி உபதேசமாக வழங்கினார். யஅகூபும் மரணமடைவதற்கு முன்னால் அதையே தம் பிள்ளைகளுக்கு இறுதி உபதேசமாக வழங்கினார். திருக்குர்ஆன் கூறுகிறது:

“தூதரே! அவர்களுக்கு இப்ராஹீமின் சம்பவத்தை எடுத்துரைப்பீராக. அவர் தம் தந்தை ஆசரிடமும் சமூகத்திடமும் கேட்டார்: “நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?” அவரது சமூகத்தார் கூறினார்கள்: “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம். அவற்றை வணங்குவதில் நிலைத்திருப்போம்.”

இப்ராஹீம் கேட்டார்:

“நீங்கள் உங்கள் சிலைகளை அழைக்கும்போது உங்களின் அழைப்பை அவை செவியேற்கின்றனவா? அல்லது நீங்கள் அவற்றிற்குக் கீழ்ப்படிந்தால் அவை உங்களுக்குப் பலனளிக்கின்றனவா? அல்லது மாறுசெய்தால் தீங்கிழைக்கின்றனவா? அவர்கள் கூறினார்கள்: “மாறாக எங்களின் முன்னோர்கள் இவ்வாறு செய்வதைக் கண்டோம். நாங்கள் அவர்களைப் பின்பற்றுகிறோம்.”

இப்ராஹீம் கேட்டார்:

“நீங்கள் வணங்கும் தெய்வங்களையும் உங்கள் முன்னோர்கள் வணங்கியவற்றையும் குறித்து நீங்கள் சிந்தித்தீர்களா? அவையனைத்தும் எனக்கு எதிரிகள். ஏனெனில் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனைத்தவிர மற்றவை அனைத்தும் பொய்யானவை. அவனே என்னைப் படைத்தான். இவ்வுலக மற்றும் மறுவுலக நன்மையின்பால் அவனே எனக்கு வழிகாட்டுவான். எனக்குப் பசியெடுத்தால் அவனே எனக்கு உணவளிக்கிறான். நான் தாகித்தால் அவனே எனக்கு நீர் புகட்டுகிறான். நான் நோய்வாய்ப்பட்டால் அவனே எனக்குக் குணமளிக்கிறான். அவனைத்தவிர யாராலும் எனக்குக் குணமளிக்க முடியாது. என் தவணை நிறைவடைந்தால் அவனே என்னை மரணிக்கச் செய்கிறான். நான் மரணித்தபிறகு அவனே எனக்கு உயிரளிப்பான். கூலிகொடுக்கப்படும் நாளில் அவனே என் பாவங்களை மன்னிப்பான் என்று நான் நம்புகிறேன்.”

இப்ராஹீம் தம் இறைவனிடம் பிரார்த்தித்தவராகக் கூறினார்:

“என் இறைவா! எனக்கு மார்க்கத்தில் ஞானத்தை வழங்குவாயாக. என்னை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து நல்லவர்களுடன் சேர்த்தருள்வாயாக. எனக்குப் பிறகு வரக்கூடியவர்களிடம் எனக்கு உண்மையான பெயரை ஏற்படுத்துவாயாக. அருட்கொடைகள் நிரம்பிய உயர்ந்த சுவனத்தைப் பெறக்கூடிய நம்பிக்கைகொண்ட உன் அடியார்களில் என்னையும் ஆக்குவாயாக. அங்கு என்னை வசிக்கச் செய்வாயாக.  என் தந்தையை மன்னித்துவிடுவாயாக. அவர் இணைவைத்து சத்தியத்தைவிட்டும் வழிகெட்டவர்களில் ஒருவராக இருக்கின்றார். மக்கள் விசாரணைக்காக எழுப்படும் மறுமைநாளில் என்னை வேதனையால் இழிவுபடுத்திவிடாதே.

உலகில் மனிதன் சேகரித்த செல்வங்களோ அவனுக்கு உதவிசெய்த பிள்ளைகளோ அந்த நாளில் அவனுக்குப் பயனளிக்காது. ஆயினும் தூய்மையான உள்ளத்துடன் அவனிடம் வந்தவர்களைத்தவிர. ஏனெனில் அவன் அல்லாஹ்வின் பாதையில் செலவழித்த செல்வங்களைக்கொண்டு அவனுக்காக பிரார்த்தனை செய்யும் பிள்ளைகளைக்கொண்டு பயனடைவான்.” (26:69-89)

“தன்னைத்தானே மூடனாக கருதிக்கொண்டு, இழிவை ஏற்றுக்கொண்டவனே இப்ராஹீமின் மார்க்கத்தை விட்டு வேறு மார்க்கங்களின் பக்கம் செல்வான். நாம் இவ்வுலகில் இப்ராஹீமை தூதராகவும், உற்ற நண்பராகவும் தேர்ந்தெடுத்துக் கொண்டோம். மறுமையில் அவர், உயர்ந்த அந்தஸ்தைப் பெற்ற நல்லவர்களுடன் இருப்பார். அவர் அல்லாஹ்வுக்கு விரைந்து அடிபணிந்ததால் அவன் அவரை தேர்ந்தெடுத்துக் கொண்டான். இறைவன் அவரிடம் ‘எனக்காக வணக்க வழிபாட்டை உரித்தாக்கிக்கொள். எனக்கு அடிபணி’ என்று கூறியபோது ‘அடியார்களைப் படைத்து, வாழ்வாதாரம் வழங்குகின்ற, அவர்களின் விவகாரங்களை நிர்வகிக்கின்ற அல்லாஹ்வுக்கு நான் அடிபணிந்துவிட்டேன்’ என்று பதிலளித்தார்.

இந்த வார்த்தையைத்தான் இப்ராஹீம் தம் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தினார். இந்த வார்த்தையைத்தான் யஅகூபும் தம் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தினார். இருவரும் தங்கள் பிள்ளைகளிடம் கூறினார்கள், “அல்லாஹ் உங்களுக்கு இஸ்லாம் என்னும் மார்க்கத்தை தேர்ந்தெடுத்துள்ளான். எனவே மரணிக்கும்வரை இதனைப் பற்றிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவர்களாக இருங்கள்.

யஅகூபுக்கு மரணவேளை நெருங்கியபோது நீங்கள் அங்கே இருந்தீர்களா? அப்போது அவர் தம் பிள்ளைகளிடம் கேட்டார், “நான் மரணித்த பிறகு நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” அதற்கு அவர்கள், “உங்கள் இறைவனும் உங்கள் முன்னோர்களான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமான ஒரே இறைவனையே நாங்கள் வணங்குவோம். அவனுக்கு யாரையும் நாங்கள் இணையாக்க மாட்டோம். நாங்கள் அவனுக்கு மட்டுமே அடிபணிந்தவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.” (2:130-133)

பின்வந்த தலைமுறையினர் இந்த தூய ஏகத்துவக் கொள்கையிலிருந்து தடம்மாறினார்கள். அவர்கள் அந்த வழிகேட்டில் நிலைத்திருந்த சமயத்தில்தான் மூசா (அலை) மீண்டும் தூய ஏகத்துவத்தைக் கொண்டு வந்தார்.

மூசா கொண்டுவந்த இந்த ஏகத்துவத்தையும் அதிலிருந்து அவர்கள் எவ்வாறு தடம்மாறினார்கள் என்பதையும் திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:

“இஸ்ராயீலின் மக்களே! “நீங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும், அவனைத்தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது; தாய்தந்தையர், உறவினர், அநாதைகள், ஏழைகள், தேவையுடையவர்கள் ஆகியோருடன் நல்லமுறையில் நடந்துகொள்ள வேண்டும்; நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும்போது மக்களிடம் கடினமான வார்த்தைகைளைப் பிரயோகிக்காமல் நல்ல வார்த்தைகளைக்கொண்டு அவர்களோடு பேசுங்கள்; ஸகாத்தை முறையாக அளித்துவிடுங்கள்” என்று நாம் உங்களிடம் உறுதியான வாக்குறுதி வாங்கியதை நினைவுகூருங்கள். ஆயினும் நீங்கள் அளித்த வாக்குறுதியை மீறி பின்வாங்கிச் சென்றீர்கள்.

“நீங்கள் ஒருவரையொருவர் கொல்லக்கூடாது; உங்களில் சிலர் சிலரை தங்களின் ஊர்களிலிருந்து வெளியேற்றக்கூடாது” என்று நாம் உங்களிடம் உறுதியான வாக்குறுதி வாங்கியதை நினைவுகூருங்கள். இதுகுறித்து நாம் உங்களிடம் வாங்கிய வாக்குறுதிக்கு நீங்களே சாட்சிகளாக இருந்து ஒத்துக் கொண்டீர்கள்.

பிறகு நீங்களே இந்த வாக்குறுதிக்கு மாறாக நடந்தீர்கள். உங்களில் சிலர் சிலரைக் கொலைசெய்தார்கள். எதிரிகளுக்கு உதவும்விதமாக உங்களிலுள்ள ஒரு பிரிவினரை அநியாயமாக அவர்களின் ஊர்களிலிருந்து வெளியேற்றுகிறீர்கள். அவர்கள் உங்கள் எதிரிகளிடம் கைதிகளாகப் பிடிப்பட்டால் பிணைத்தொகை கொடுத்து மீட்கிறீர்கள். அவர்களை ஊர்களிலிருந்து வெளியேற்றுவதே உங்களுக்குத் தடைசெய்யப்பட்டிருந்ததே? கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தவ்ராத்தில் கூறப்பட்ட ஒருபகுதியை ஏற்றுக்கொண்டு, அவர்களைக் கொலைசெய்யக்கூடாது, ஊரிலிருந்து வெளியேற்றக்கூடாது என்று தவ்ராத்தில் உள்ள மறுபகுதியை மறுக்கிறீர்களா? வேதத்தின் சில விஷயங்களை ஏற்றுக்கொண்டு சில விஷயங்களை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவருக்கு இவ்வுலகில் இழிவைத்தவிர வேறொன்றும் கிடைக்காது. மறுமையில் அவர்கள் கடுமையான வேதனையின் பக்கம் தள்ளப்படுவார்கள். நீங்கள் செய்யும் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. மாறாக அவன் அவற்றை நன்கறிவான். அவற்றிற்கேற்ப உங்களுக்கு கூலியும் வழங்குவான்.   (2:83-85)

“உங்களிடம் வந்த தூதர் மூசா தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அதற்குப் பின்னரும் அவர் இல்லாத சமயத்தில் காளைக்கன்றை வணங்கக்கூடிய தெய்வமாக நீங்கள் ஆக்கிக் கொண்டீர்கள். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவற்றை ஆக்கி அநியாயக்காரர்களாகி விட்டீர்கள். அந்த அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன்.

”நாம் உங்களிடம் உறுதியான வாக்குறுதி வாங்கிய சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள். உங்களை அச்சமூட்டுவதற்காக உங்களுக்கு மேலே மலையை உயர்த்தினோம். நாம் கூறினோம், “நாம் உங்களுக்கு வழங்கிய தவ்ராத்தை முழு  ஈடுபாட்டோடு பற்றிக் கொள்ளுங்கள். கட்டுப்பட்டவாறு செவிசாயுங்கள்.” “எங்கள் செவிகளால் கேட்டு செயல்களால் மாறுசெய்தோம்” என்று கூறினீர்கள். உங்களின் நிராகரிப்பினால் காளைக்கன்றின் மீதுள்ள மோகம் உங்கள் உள்ளங்களில் நிலைகொண்டுவிட்டது. தூதரே! நீர் கூறும், “நீங்கள் உண்மையிலேயே  அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் உங்களின் இந்த ஈமான் உங்களுக்குக் கட்டளையிடுவது எவ்வளவு மோசமானது! (2:92,93)

மூசா (அலை) அவர்களிடையே இருந்தபோதே அவர்களின் வழிகேடு தொடங்கிவிட்டது. அவர்கள் எடுத்துச் சென்ற எகிப்திய பெண்களின் நகைகளிலிருந்து சாமிரி உருவாக்கிய காளைக்கன்றை அவர்கள் வணங்கியது, சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தினரைக் கடந்து சென்றபோது ‘அவர்களிடம் இருப்பதுபோன்று எங்களுக்கும் ஒரு சிலையை உருவாக்கித்தாரும்’ என்று மூசாவிடம் வேண்டியது என அவர்களின் வழிகேடுகள் மூசா (அலை) அவர்களிடையே இருந்தபோதே தொடங்கிவிட்டன.

“மூசா தம் கைத்தடியால் கடலை அடித்தபோது அது பிளந்துவிட்டது. இஸ்ராயீலின் மக்களை நாம் அதனை கடக்கச் செய்தோம். அவர்கள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தை கடந்துசென்றபோது மூசாவிடம் கூறினார்கள்: “மூசாவே! இவர்களுக்கு சிலைகள் இருப்பதைப்போல எங்களுக்கும் ஒரு சிலையை ஏற்படுத்தித் தாரும்.” மூசா அவர்களிடம் கூறினார்: “நீங்கள் அறியாத மக்களாக இருக்கிறீர்களே! சிலைகளை வணங்கும் இவர்கள் அதன் காரணமாக அழிந்துவிடுவார்கள். அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்கி அவர்கள் செய்துகொண்டிருக்கும் வணக்க வழிபாடுகள் அசத்தியமாகும்.” (7:138,139)

அதேபோன்று திருக்குர்ஆன் அவர்களின் அதிகமான வழிகேடுகளையும் தவறான கண்ணோட்டங்களையும் எடுத்துரைக்கிறது:

“யூதர்கள் கூறுகிறார்கள், உசைர் இறைவனின் மகன் என்று.” (9:30)

“யூதர்கள் கூறினார்கள், “நன்மைகளை வழங்குவதைவிட்டும் அல்லாஹ்வின் கை தடுக்கப்பட்டுள்ளது.” அறிந்துகொள்ளுங்கள், அவர்களின் கைகள்தான் நன்மையான செயல்களை செய்வதைவிட்டும் மற்றவர்களுக்கு வழங்குவதைவிட்டும் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியதனால் அல்லாஹ்வின் அருளிலிருந்து விரட்டப்பட்டுவிட்டார்கள். அல்லாஹ்வின் கைகள் விரிந்தே இருக்கின்றன. அவன் தான் நாடியவாறு செலவு செய்கிறான்….”  (5:64)

“அல்லாஹ் எங்களிடம் கடன் கேட்கும் ஏழை. நாங்கள்தாம் செல்வந்தர்கள்” என்று கூறிய யூதர்களின் பேச்சை அல்லாஹ் செவியுற்றுவிட்டான். இந்த இழிவான பேச்சை அவர்களின் செயல்களை பதிவிடும் பதிவேட்டில் நாம் எழுதிவிடுவோம். இவர்களின் முன்னோர்கள் இறைத்தூதர்களை அநியாயமாகக் கொலைசெய்ததை இவர்கள் ஏற்றுக்கொண்டதையும் நாம் எழுதுவோம். “நரகத்தில் எரியக்கூடிய வேதனையைச் சுவையுங்கள்” என்று நாம் அவர்கள் அனைவரிடமும் கூறுவோம்.” (3:181)

“நீங்கள் கூறினீர்கள், மூசாவே! நாங்கள் அல்லாஹ்வைக் கண்கூடாகக் காணும்வரை உம்மை நம்ப மாட்டோம், என்று.” நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே உங்களை பேரிடி பிடித்துக் கொண்டது.” (2:55)

அவர்களின் இனவாத அழுக்குகளுக்கு உதாரணம், அவர்கள் இறைவனை அவர்கள் சமூகத்து இறைவனாகக் கருதினார்கள். அவர்களைத்தவிர மற்றவர்களுடன் நேர்மையாக நடந்துகொள்ளத் தேவையில்லை என்றும் மற்றவர்களின் விசயத்தில் இறைவன் தங்களைக் குற்றம்பிடிக்க மாட்டான் என்றும் கருதினார்கள். அவர்களின் இந்த நடத்தையை திருக்குர்ஆன் எடுத்துரைப்பதைப் பாருங்கள்:

“வேதக்காரர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் பெரும்செல்வத்தையே நம்பி ஒப்படைத்தாலும் அதனை முறையாக திருப்பி அளித்துவிடுவார்கள். அவர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் குறைவான செல்வத்தை நம்பி ஒப்படைத்தாலும் அவர்களிடம் தொடர்ந்து வற்புறுத்திக் கேட்டாலன்றி தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை திருப்பி அளிக்க மாட்டார்கள். அவர்களின் இந்த நடத்தைக்குக் காரணம், “அரபுக்கள் விஷயத்தில் நாம் குற்றம்பிடிக்கப்பட மாட்டோம். ஏனெனில் அல்லாஹ் அவர்கள் விஷயத்தில் செய்யப்படும் பாவங்களை நமக்கு ஆகுமாக்கித் தந்துள்ளான்” என்ற அவர்களின் தீய எண்ணம்தான். இவர்கள் அறிந்துகொண்டே அல்லாஹ்வின்மீது அபாண்டமாக இட்டுக்கட்டுகிறார்கள்.” (3:75)

அவர்களின் திரிக்கப்பட்ட வேதங்களில் இறைவனைக்குறித்து இடம்பெற்றுள்ள பண்புகள் கிரேக்கர்களின் சிலைக்கடவுள்களை விட்டும் எவ்வகையிலும் உயர்ந்ததாக இல்லை.

பழைய ஏற்பாட்டின் ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்தில் ஆதம் விலக்கப்பட்ட கனியைப் புசித்தபிறகு நிகழ்ந்ததாக பின்வருமாறு வந்துள்ளது:

“பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலவுகிற கர்த்தருடைய சப்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்போது ஆதாமும் அவன் மனைவியும் கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளிந்துகொண்டார்கள். அப்போது கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு, ‘நீ எங்கே இருக்கின்றாய்?’ என்றார். அதற்கு அவன், நான் தேவனுடைய சப்தத்தைத் தோட்டத்தில் கேட்டு, நான் நிர்வாணியிருப்பதனால் பயந்து ஒளிந்துகொண்டேன்’ என்றான்.

அப்போது அவர், நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கிய விருட்சத்தின் கனியைப் புசித்தாயா’ என்றார்….

பின்பு கர்த்தர், இதோ மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போன்று ஆனான், இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவ்விருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்ய வேண்டும் என்று, அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல் செய்ய ஏதேனு தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.”

அதே ஆதியாகமமத்தில் வெள்ளம் வந்த காரணம்குறித்து பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

“மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவங்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது, தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தர்யமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிவுசெய்தார்கள். அப்போது கர்த்தர் என் ஆவி என்றைக்கும் மனுஷனோட போராடுவதில்லை, அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.

அந்நாட்களில் இராட்சதர் பூமியில் இருந்தார்கள். பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோட கூடுகிறதனால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகள் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.

மனுஷனுடைய அக்கிரமம் பூமியில் பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும் கர்த்தர் கண்டு, தாம் பூமியில் மனிதனைப் படைத்ததற்காக வருத்தப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. அப்போது கர்த்தர், நான் படைத்த மனிதனைப் பூமியின்மேல் வைக்காமல், மனிதன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாகிறவைகளை நிக்கிரம் பண்ணுவேன். நான் அவர்களைப் படைத்தது எனக்கு வருத்தமாயிருக்கிறது என்றார். நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.”

ஆதியாகமம் பதினொன்றாவது அதிகாரத்தில் பின்வருமாறு வந்துள்ளது:

“பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது. மக்கள் கிழக்கேயிருந்து பிரயாணம் பண்ணுகையில் சிநெயார் தேசத்தில் சமபூமியைக் கண்டு அங்கே குடியிருந்தார்கள். அப்போது அவர்கள், நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். கல்லுக்குப் பதிலாக செங்கல்லும் சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.

பின்னும் அவர்கள், நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப் போகாதபடிக்கு நமக்கு ஒரு நகரத்தையும் வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.

மனுஷபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் காண கர்த்தர் இறங்கினார். அப்போது கர்த்தர், இதோ ஜனங்கள் ஒரே கூட்டமாய்  இருக்கிறார்கள், அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது. அவர்கள் இதைச் செய்யத் தொடங்கினார்கள். இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபட மாட்டாது என்று இருக்கிறார்கள். நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு அங்கு அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம்’ என்றார். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப் போகப் பண்ணினார். அப்போது நகரம் கட்டுவதை விட்டுவிட்டார்கள்.

பூமியெங்கும் வழங்கிய பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதன் பெயர் பாபேல் எனப்பட்டது. கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப் போகப் பண்ணினார்.”

சாமுவேல் 2 அதிகாரம் 24-ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

“அப்போது கர்த்தர் இஸ்ரவேலில் அன்று காலமே தொடங்கி குறித்த காலம்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார், அதனால் தாண் முதல் பெயெர்செபா மட்டுமுள்ள மக்களில் எழுபதினாயிரம் பேர் செத்துப்போனார்கள். தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை அதன்மேல் நீட்டியபோது கர்த்தர் அந்தத் தீங்குக்கு வருத்தப்பட்டு ஜனங்களைக் கொல்கிற தூதனை நோக்கி, ’போதும். இப்போது உன் கையை நிறுத்து என்றார்…’’

Related posts

Leave a Comment