இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் (பகுதி 2) – சையித் குதுப்
[சையித் குதுப் எழுதிய ‘இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ (‘கசாயிஸ் அத்-தசவ்வுர் அல்-இஸ்லாமி’) நூலுக்கான முன்னுரையின் இரண்டாவது பகுதியை இந்தப் பதிவில் தருகிறோம். முன்னுரையின் முதற்பகுதியைப் பார்க்க: பதிவு 1]
இங்கு ஒரு அடிப்படையான விசயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். நாம் இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகளை தேடிச் செல்வதன் நோக்கம் வெறுமனே பண்பாட்டை அறிவதோ இஸ்லாமிய நூல்களில் ஒன்றை அதிகப்படுத்துவதோ அல்ல. நிச்சயமாக மூளைவிளையாட்டுக்குப் பயன்படும் இதுபோன்ற வெற்று அறிவை நாம் நோக்கமாகக் கொள்ளவில்லை. இதுபோன்ற அற்ப நோக்கத்திற்காக நாம் பெருமுயற்சி செய்ய மாட்டோம்.
நாம் இந்த அறிதலுக்குப் பின்னால் இயக்கத்தை விரும்புகிறோம். இந்த அறிவு நம்மை உந்தித் தள்ளும் சக்தியாக உருமாற வேண்டும் என்று விரும்புகிறோம். மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தைச் செயல்படுத்த அவனது உள்ளத்தை விழிப்படையச் செய்ய விரும்புகிறோம். மனித சமூகம் தம் இறைவனின் பக்கம், அவன் அவர்களுக்கு வழங்கிய வழிகாட்டலின் பக்கம், அவன் அவர்களுக்கு அளித்த கண்ணியமான வாழ்க்கையின் பக்கம் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறோம். வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்த நோக்கம் நிறைவேறியுள்ளது. மீண்டும் அப்படிப்பட்ட ஒரு சமூகம் தோன்றினால் அது மனித சமூகத்தை நன்மையின் பக்கம், வளர்ச்சியின் பக்கம் கொண்டு செல்லும்.
இஸ்லாமிய வரலாற்றின் ஓட்டத்தில் தூய்மையான இஸ்லாமியக் கண்ணோட்டத்திலிருந்து வெளிப்பட்ட இஸ்லாமியப் பண்பாடு பிற கலாச்சாரங்களோடு சேர்ந்து வாழும் சூழ்நிலையும் உருவானது. அவை இஸ்லாம் வெற்றிகொண்ட நாடுகளில் ஏற்கனவே இருந்த கலாச்சாரங்கள்.
வெற்றிகொண்ட அந்த நாடுகளில் முஸ்லிம்கள் போராட்ட வாழ்வைக் கைவிட்டு செல்வச் செழிப்பில் திளைக்கலானார்கள். அச்சமயத்தில் அரசியல் பிரச்சனைகளும் பல்வேறு சிந்தனைப் பள்ளிகளால் கருத்து வேறுபாடுகளும் தோன்ற ஆரம்பித்தன. அரசியல் பிரச்சனைகளில் சில அலீ மற்றும் முஆவியாவின் காலத்திலேயே தோன்றிவிட்டன. முஸ்லிம்கள் அரபி மொழியில் பெயர்க்கப்பட்ட கிரேக்க மெய்யிலையும் கிருஸ்தவ இறையியலையும் படிக்கலானார்கள். முஸ்லிம்களின் இந்த ஈடுபாட்டால் மனித சமூகத்தை வழிகேடுகளிலிருந்து விடுவிப்பதற்காகத் தோன்றிய தூய இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் வழிகேடுகளும் விசித்திரமான கருத்துகளும் புகுத்தப்பட்டன. இத்தகைய வழிகேடுகளிலிருந்து தூய்மையான இஸ்லாமியக் கண்ணோட்டம்தான் மனித ஆற்றலை ஆக்கப்பூர்வமான வழியில் பயன்படுத்துகிறது. தேவையற்ற விசயங்களில் அவனது ஆற்றல் வீணாகாமல் பாதுகாக்கிறது.
இத்தகைய வழிகேடுகளால் ஏற்பட்ட பாதிப்பை இஸ்லாமிய அறிஞர்களில் ஒருபிரிவினர் எதிர்கொண்டார்கள். அல்லாஹ்வைக் குறித்தும், அவனது பண்புகளைக் குறித்தும், விதி, மனிதனின் செயல்கள், பாவம், பாவமன்னிப்பு ஆகியவற்றைக் குறித்தும் நடைபெற்ற விவாதங்களில் அவர்கள் மறுப்புரைகளையும் தெளிவுரைகளையும் வழங்கினார்கள். ஹவாரிஜ், ஷியா, முர்ஜீஆ, கதரிய்யா, ஜபரிய்யா, முஃதஸிலா, சுன்னிய்யா என பல்வேறு பிரிவினர் தோன்றினர்.
அதே போன்று கிரேக்க மெய்யியல் மற்றும் இறையியல் குறித்த விவாதங்களினாலும் முஸ்லிம் சிந்தனையாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். எந்த அளவுக்கெனில் இஸ்லாமியக் கண்ணோட்டம் கிரேக்க மெய்யியல் இன்றி முழுமையடையாது என்று கருதலானார்கள், தற்காலத்தில் மேற்கத்திய சிந்தனையால் பாதிக்கப்பட்டவர்கள், மேற்கத்திய சிந்தனையே உயர்ந்த சிந்தனை என்று எண்ணுவதைப்போல. எனவே அவர்கள் கிரேக்க மெய்யியலைப் போன்று ‘இஸ்லாமிய மெய்யியலை’ உருவாக்க முனைந்தார்கள். அரிஸ்டாட்டிலின் இறையியலை அடிப்படையாகக் கொண்டு ‘இல்முல் கலாம்’ என்று சொல்லப்படக்கூடிய தர்க்கவியலை தோற்றுவித்தார்கள்.
மனிதனின் அறிவு, உணர்வு, ஆன்மா என மனிதனின் ஒட்டுமொத்த பகுதிகளையும் விளித்து உரையாடும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தை அதன் பரிபூரணத்துவத்திற்கேற்ப தனிப்பட்ட வடிவில் எடுத்துரைப்பதற்குப் பதிலாக இரவலாகப் பெற்ற கிரேக்க மெய்யியல் வடிவில் அதனை எடுத்துரைத்தார்கள். கிரேக்க மெய்யியலிலிருந்து சில கண்ணோட்டங்களையும் அதனோடு இணைத்து இரண்டு கண்ணோட்டத்திற்குமிடையே கருத்தொற்றுமையை, ஒத்திசைவை உருவாக்க முனைந்தார்கள். அதிலுள்ள சொல்லாடல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட கிரேக்க மெய்யியலிருந்து பெறப்பட்டவையே.
கிரேக்க மெய்யியலுக்கும் தூய இஸ்லாமியக் கண்ணோட்டத்திற்கும் இடையே காணப்பட்ட என்றுமே ஒட்டாத இடைவெளி – வலிந்து செய்யப்பட்ட இந்த முயற்சிகளினால் அது இஸ்லாமிய மெய்யியல் தோற்றம் பெற்றாலும், இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தூய்மையை அது களங்கமடையச் செய்தது. அசலை விட்டுவிட்டு மேம்போக்கான சில விசயங்களின்பால் கவனத்தைத் திருப்பியது.
இவ்வாறு தோற்றம்பெற்ற இஸ்லாமிய மெய்யியலும் தர்க்கவியலும் இஸ்லாத்தின் இயல்புக்கும் அதன் வழிமுறைக்கும் முழுக்க முழுக்க மாற்றமானது. எனது இந்த வாசகம், இஸ்லாமிய மெய்யியல் அல்லது பொதுவான மெய்யியலில் ஈடுபாடுகொண்ட பலரை திகைப்படையச் செய்யலாம் என்பதை நான் அறிவேன். ஆயினும் நான் உறுதியாகக் கூறுகிறேன், இஸ்லாம் கூறும் கண்ணோட்டத்தை இஸ்லாமிய மெய்யியல், தர்க்கவியல் என்று சொல்லப்படக்கூடிய வழிகேடான கருத்துகள் மற்றும் கண்ணோட்டங்களிலிருந்து முழுமையாக விடுவித்து திருக்குர்ஆனிலிருந்து நேரடியாக இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகளையும் அடிப்படைகளையும் பெறாதவரை நாம் தூய்மையான இஸ்லாமியக் கண்ணோட்டத்தைப் பெற முடியாது. நாம் இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகளை பிற கொள்கைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதில் தவறேதுமில்லை. ஆனால் இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படைகள் குர்ஆனிலிருந்தே நேரடியாகப் பெறப்பட வேண்டும். அது முழுக்க முழுக்க அதற்கேயுரிய தனிப்பட்ட வடிவில்தான் எடுத்துரைக்கப்பட வேண்டும்.
நான் மேற்குறிப்பிட்ட விசயங்களிலிருந்து மூன்று முக்கியமான அடிப்படைகளைப் புரிந்துகொள்ளலாம்.
- இஸ்லாமிய உலகை வந்தடைந்த கிரேக்க மெய்யியல் மற்றும் கிருஸ்தவ இறையியல் முஸ்லிம்களிடையே தோன்றிய பல்வேறு பிரிவுகளுக்கும் அவற்றுக்கிடையே தோன்றிய தர்க்கங்களுக்கும் காரணமாக அமைந்திருக்கின்றன. பிற்காலத்தில் கிரேக்க மெய்யியலிருந்து அளிக்கப்பட்ட விளக்கங்கள் அவர்களிடையே பெரிய அளவில் கருத்து வேறுபாடுகளைத் தோற்றுவித்துள்ளன.
- கிரேக்க மெய்யியலுக்கும் இஸ்லாமியக் கண்ணோட்டத்திற்கும் இடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்ட முயற்சிகள் கிரேக்க மெய்யியலின் இயல்பைக் குறித்த, அது சிலை வழிபாட்டுடன் கொண்டுள்ள ஆழமான தொடர்பைக் குறித்த அறியாமையினால் ஏற்பட்ட ஒன்றேயாகும். கிரேக்க மெய்யியல் புராணங்களால் நிரம்பியிருந்த சிலைவழிபாட்டின் தொட்டிலில்தான் வளர்ச்சியடைந்தது. அது சிலைவழிபாடு மற்றும் புராணங்களிலிருந்தே தம் அடித்தளங்களைப் பெற்றுக் கொண்டது. ஆகவே ஏகத்துவம் எனும் அடித்தளத்தைக் கொண்டுள்ள இஸ்லாமியக் கண்ணோட்டத்திற்கும் கிரேக்க மெய்யியலுக்குமிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முனைவது வீணான ஒன்றேயாகும். ஆனால் கிரேக்க மெய்யியலில் ஈடுபாடுகொண்ட முஸ்லிம்கள், மெய்யிலாளர்கள் ஒருபோதும் சிலைவழிபாட்டாளர்களாக இருக்க வாய்ப்பில்லை என்றே கருதினார்கள். அதனால்தான் மெய்யியலாளர்களின் கூற்றுகளுக்கும் இஸ்லாமியக் கொள்கைக்குமிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முனைந்தார்கள். இந்த முயற்சியே ‘இஸ்லாமிய மெய்யியல்’ என்று அழைக்கப்படலாயிற்று.
- உஸ்மான்(ரலி) கொலை செய்யப்பட்ட பிறகு இஸ்லாமிய உலகில் தோன்றிய பிரச்சனைகள் திருக்குர்ஆன் வசனங்களுக்கு அளிக்கப்பட தவறான விளக்கங்களால் நியாயப்படுத்தப்பட்டன. கிரேக்க மெய்யியலும் இறையியலும் அவர்களின் பல்வேறுவகையான கருத்துகளை வலுப்படுத்தக்கூடியவையாக இருந்ததனால் அந்த கருத்துவேறுபாடுகளின் நிழலில் அவை வளர்ச்சி பெற்றன. நாம் இவ்வகையான கருத்து வேறுபாடுகளை, குழப்பங்களை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் அடிப்படைகளை உறுதியான திருக்குர்ஆனின் வசனங்களிலிருந்தே பெற வேண்டும். இந்தக் கருத்து வேறுபாடுகளை நாம் வரலாற்று ரீதியாகவே அணுக வேண்டும்.
••••••••••••••
மேற்கத்திய சிந்தனைப் பள்ளிகள் தமக்கேயுரிய தனித்துவமான வழியில் தம்மை அமைத்துக் கொண்டன. அவை ஆரம்பத்தில் சிலைவழிபாட்டுடன் கூடிய கிரேக்க மெய்யியலிருந்தே தமக்கானதைப் பெற்றுக் கொண்டன. பின்னர் இறுதியில் கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிராக தம்மை ஆக்கிக் கொண்டன.
இந்த சிந்தனை எழுச்சிக் காலம்தொட்டே கத்தோலிக்க திருச்சபையின் கண்ணோட்டங்களுக்கு முரண்பட்டே வந்தது. பின்னர் முழுக்க முழுக்க கத்தோலிக்கத் திருச்சபையின் எதிரியாகவே தம்மை ஆக்கிக் கொண்டது.
திருச்சபையின் கொள்கைகள் ஒருநாள்கூட உண்மையான கிருஸ்தவத்தை பிரதிபலித்ததில்லை. கிருஸ்தவத்தில் சிலை வழிபாடுகொண்ட ரோமானியர்களின் பிரவேசத்தால் அது கடுமையான சிதைவுக்கும் மாற்றத்திற்கும் உள்ளானது. ரோமானியர்கள் தங்களின் சிலை வழிபாட்டை கிருஸ்தவத்தில் புகுத்தினார்கள். திருச்சபை இந்த மாற்றங்களையும் இணைப்புகளையும் -பல்வேறுபட்ட மக்களையும் சிந்தனைப் பள்ளிகளையும் ஒன்றிணைக்கும்பொருட்டு- ஏற்றுக் கொண்டது. திருச்சபை இறைவனிடமிருந்து பெற்ற உண்மையான கிருஸ்தவத்தை பிரதிபலிப்பதற்குப் பதிலாக தமக்கென வகுத்துக் கொண்ட கண்ணோட்டங்களை பிரதிபலிக்கத் தொடங்கியது.
பிழையான இந்த கண்ணோட்டங்களை திருச்சபை சுவீகரித்துக் கொண்டதன் விளைவு, அவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு அவற்றைத் தவறெனக் கூறிய அறிவியலாளர்களையும் ஆய்வாளர்களையும் தமக்கு எதிரிகளாக ஆக்கிக் கொண்டது. திருச்சபையின் கொள்கைகளுக்கு எதிராக கருத்து கூறிய அவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். அவர்களை அடக்கி ஒடுக்குவதற்கு திருச்சபை தம்முடைய எல்லா அதிகாரங்களையும் பயன்படுத்திக் கொண்டது.
அந்த நாளிலிருந்துதான் மேற்கத்திய சிந்தனை, அன்றைய நாளில் பரவியிருந்த திருச்சபையின் கண்ணோட்டங்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக மதங்கள் கூறும் கண்ணோட்டங்கள் அனைத்தையும் எதிர்க்கத் தொடங்கியது. திருச்சபையின் மீது கொண்ட வெறுப்பு ஒட்டுமொத்த மதங்களுக்கு எதிரான வெறுப்பாக உருமாறியது. மேற்கத்திய சிந்தனை தமக்கென புதிய சிந்தனைப் பள்ளிகளை உருவாக்கிக் கொண்டது. அதன் அடிப்படையான நோக்கம், மதங்களை நிராகரிக்க வேண்டும், திருச்சபையின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதாகியது.
இந்தப் புத்தகத்தை வாசிப்பவர், நாம் மேற்கத்திய சிந்தனைகளையோ அதைப்போன்ற மற்ற சிந்தனைகளையோ இரவலாகப் பெற வேண்டியதில்லை என்பதைக் கண்டுகொள்வார்.
••••••••••••••
நாம் இந்தப் புத்தகத்தில் ‘இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகளையும் அடிப்படைகளையும்’ நேரடியாக திருக்குர்ஆனிலிருந்தே -அதன் நிழலில் நீண்ட காலம் வாழ்ந்த பிறகு- பெறுவோம். நம்மால் இயன்றவரை மனித சமூகத்திற்கு அல்லாஹ்வின் வார்த்தைகள் அருளப்பட்டபோது, அது அவனது வழிகாட்டலைப் பெற்றபோது இருந்த சமூக, அரசியல் சூழ்நிலைகளையும், அதற்கு முன்னர் அது எவ்வகையான வழிகேடுகளில் எல்லாம் தடுமாறித் திரிந்து கொண்டிருந்தது என்பதையும் காணலாம்.
திருக்குர்ஆனிலிருந்தே நேரடியாகப் பெறக்கூடிய நம்முடைய வழிமுறையில் அதனை முன்தீர்மானிக்கப்பட்ட மதிப்பீடுகளைக் கொண்டோ அறிவுப்பூர்வமான அல்லது உணர்வுப்பூர்வமான மதிப்பீடுகளைக் கொண்டோ அணுக மாட்டோம்.
திருக்குர்ஆன் அருளப்பட்டதன் நோக்கம், அல்லாஹ் நாடிய சரியான மதிப்பீடுகளை நிர்ணயிப்பதற்காகத்தான். அந்த மதிப்பீடுகளைக் கொண்டே மனிதனின் கண்ணோட்டங்களும் அவனது வாழ்வும் நிலைபெற வேண்டும்.
அவை அகிலாத்தாரை விட்டும் தேவையற்ற, மகத்துவமிக்க அல்லாஹ்வால் அருளப்பட்டவையாகும். மனிதர்கள் அறியாமைக்கால கண்ணோட்டங்கள், கொள்கைகள் என அனைத்து வகையான வழிகேடுகளிலிருந்தும் நீங்கி அல்லாஹ் ஒருவனிடமிருந்தே வழிகாட்டுதலைப் பெற வேண்டும். சத்தியத்திற்கு முன்னால் மனிதர்களின் யூகங்களும் அனுமானங்களும் எப்பயனையும் அளிக்காது.
எந்தவகையான தீர்மானிக்கப்பட்ட மதிப்பீடுகளைக் கொண்டும் இறைவேதத்தை மதிப்பிட முடியாது. நாம் நம்முடைய மதிப்பீடுகளை இறைவேதத்திலிருந்தே பெற்றுக்கொள்வோம். அந்த மதிப்பீடுகளைக் கொண்டே நம்மிடம் இருக்கும் கண்ணோட்டங்களையும் நிர்ணயங்களையும் மதிப்பிடுவோம். இதுதான் திருக்குர்ஆனிலிருந்து நாம் பெறக்கூடிய சரியான வழிமுறை.
••••••••••••••
இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் அடிப்படைகளை எடுத்துரைப்பதற்கு மெய்யியலின் வடிவத்தைப் பெற நாம் ஒருபோதும் முயற்சிக்க மாட்டோம். ஏனெனில் பேசுபொருளுக்கும் அது எடுத்துரைக்கப்படும் வடிவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எடுத்துரைக்கப் பயன்படுத்தப்படும் வடிவத்தால் பேசுபொருள் பாதிப்படைகிறது. அது பேசுபொருளின் இயல்பை மாற்றிவிடுகிறது. அதன் இயல்பும் வரலாறும் பேசுபொருளின் இயல்பிற்கும் வரலாற்றிற்கும் முற்றிலும் மாறானவை. திருக்குர்ஆனில் கூறப்பட்டவாறு இந்தக் கண்ணோட்டத்தின் இயல்பைப் புரிந்தவரால்தான் நாம் கூறுவதை தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.
இந்த விசயத்தில் இஸ்லாமியக் கண்ணோட்டத்தை மெய்யியல் வடிவில் எடுத்துரைத்த கவிஞர் இக்பாலுடன் நான் முரண்படுகிறேன்.
இஸ்லாமியக் கண்ணோட்டம் அதன் தனித்துவமிக்க வழிமுறையால் மனிதனின் அறிவு, உணர்வு, ஆன்மா என ஒட்டுமொத்த மனிதனையும் விளித்து உரையாடுகிறது. அது உயிரோட்டமிக்க, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வழிமுறை. அது மெய்யியலைப் போன்று மனிதனின் அறிவை மட்டும் விளித்து உரையாடுவதில்லை. மெய்யியல் வாக்கியத்திற்குள் உண்மையை மட்டுப்படுத்த முயற்சிக்கும். இஸ்லாமியக் கண்ணோட்டம் வாக்கியத்திற்குள் மட்டும் அடங்கிவிடாது. அதற்கு அப்பாலும் அது உணர்த்திக் கொண்டேயிருக்கும்.
மெய்யியலுக்கு மனித வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தப் பங்கும் இல்லை. உண்மையான கொள்கை மனித சமூகத்தை காரிருளிலிருந்தும் வழிகேடுகளிலிருந்தும் விடுவித்து நேரான பாதையில் வளர்ச்சியை நோக்கி கொண்டு சென்றது போன்று மெய்யியலுக்கும் உண்டு என்று யாராலும் கூறிவிட முடியாது.
ஆகவே உண்மையான கொள்கை அதற்கேயுரிய தனித்துவமிக்க வழிமுறையைக்கொண்டுதான் எடுத்துரைக்கப்பட வேண்டும். அதனை மெய்யியல் வடிவில் எடுத்துரைக்க முனைவது அதனை அழித்துவிடும். அதன் ஒளியை அணைத்துவிடும்.
தம் இயல்புக்கு மாற்றமான இந்த வழிமுறையால் எடுத்துரைக்கப்படும் கொள்கை குறைபாடுகளும் சிக்கல்களும் நிறைந்ததாக வெளிப்படுகிறது. ‘இஸ்லாமிய மெய்யியல்’ என்று சொல்லப்படக்கூடியதை உருவாக்க வேண்டும் என்றோ மெய்யியலின் வடிவத்தில் இஸ்லாத்தை எடுத்துரைக்க வேண்டும் என்றோ நான் விரும்பவில்லை. இதனால் இஸ்லாத்திற்கு எந்தக் குறைபாடும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. மாறாக தூய முறையில் எடுத்துரைக்கப்படும் இஸ்லாம்தான் தனித்தன்மைகளையும் சிறப்புகளையும் பெற்றிருக்கும்.